தாக்குதலால் அதிர்ந்த திஸ்ஸவீரதுங்காவும்.... மனிதவேட்டைக்கு புறப்பட்ட ராணுவமும்.கறுப்புயூலை தடங்கள்…..

  • Prem
  • July 27, 2018
107shares

வானொலி தொடர்புதுண்டிக்கபட்ட நிலையில் இருந்த 4-4 பிராவோ அணியை தேடி குருநகரில் இருந்து ஒரு ராணுவஅணி புறப்பட்டது. அந்த அணியில் பிரிகேடியர் பல்தசாரும் சரத்முனசிங்காவும் இருந்தனர்.

இதற்கிடையே புலிகளின் மீது கோண்டாவில் பகுதியில் ஒரு அதிரடித்தாக்குதலை நடத்தும் திட்டத்துடன் அனுப்பட்ட 4-4 சார்ளி அணிக்கு அவசரமான வானொலி செய்தியை அனுப்பிய பல்தசார் அந்ததாக்குதல் திட்டத்தை உடனடியாக கைவிடும்படி பணித்துடன் அந்த அணியையும் திருநெல்வேலிப்பக்கமாக வரும்படி கூறினார்.

எங்கே 4-4 சார்ளி அணி புலிகள் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தப்போய் அதுவும் 4-4 பிராவோபோலஅதிரடியாக புலிகளிடம்மாட்டுப்பட்டுவிடுமோ என்ற அச்சமே இந்தபணிப்புக்குகாரணம்.

இவ்வாறான நகர்வுகளுடன் பிரிகேடியர் பல்தசாரும் சரத்முனசிங்காவும் தமது அணியுடன் திருநெல்வேலி தபால்பெட்டிச்சந்தியை அண்மித்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அவர்களின் ராணுவ வாழ்வில்அதுவரை கண்டிராத ஒரு அதிர்ச்சியான காட்சி.

சில மணிநேரத்திற்கு முன்னர் குருநகர் முகாமில் இரவு உணவை முடித்துக் கிளம்பிய அதே ராணுவ அணியை இப்படி ஒரு கோலத்தில் தாம்சந்திப்போமென அவர்கள் எதிர்பார்த்திருக்கவும் மாட்டார்கள்.

சிதிலமாக கிடந்தது ஒரு ஜீப். அதற்கு சற்றுத்தள்ளி முற்பகுதி பிளந்து நின்றது ஒரு றக் அவற்றை சுற்றி ஆங்காங்கே படையினரின் உடலங்கள் சிதறிக்கிடந்தன.

அணிப்பொறுப்பாளர் வாஸ்குணவர்த்தனாவின்; உடலம் ஒரு இடத்தில் குப்புறக்கிடந்தது.

ஆங்காங்கே கிடந்த உடலங்களையும் சிதிலங்களையும் சுற்றிப்பார்த்தார் சரத் முனசிங்கா.

குப்புறக்கிடந்த வாஸ்குணவர்த்தனாவின் உடலத்தை புரட்டினார். அவரது முகத்தின் வலப்பக்கத்தில் பெரியதுவாரமொன்று காணப்பட்டது.

அந்தவேளை யாரோ முனகும் சத்தம் கேட்டது. பல்தசாரும் சரத்முனசிங்காவும் தமது காதுகளை கூர்மையாக்கினர். அந்தச்சத்தம் றக் வண்டியின் கீழேயிருந்து வருவதை அவதானித்து பரபரப்படைந்தனர்.

பரபரப்படைந்த அவர்கள் வாகனத்தின் கீழே சென்று பார்க்குமாறு படையினரை பணித்தனர். வண்டியின் கீழே நுழைந்த படையினர் சார்ஜன்ட் திலகரட்னவை மீட்டுவந்தனர். அவரது கையின் ஒரு பகுதியையும் காலின் ஒருபகுதியையும் காணவில்லை. ஆயினும் குற்றுயிராக கிடந்தார்.

அவரை உடனடியாக வாகனமொன்றில் யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். ஆயினும் போகும் வழியில் அவர் மரணமடைந்தார்.

இந்த தாக்குல் இடம்பெற்ற போது அதிலிருந்து ராணுவத்தினர் இருவர் எப்படியோ தப்பியோடி இருந்தனர்.

ஒருவர் லான்ஸ் கோப்ரல் சுமதிபால. இரண்டாமவர் கோப்ரல் பெரேரா

தாக்குதலில் இரண்டு கால்களிலும் காயமடைந்த நிலையிலும் கோப்ரல் பெரேரா

கோண்டாவில் பேருந்துசாலை (டிப்போ) வரை ஒருவாறு சென்றுவிட்டார்.

அங்கிருந்து தான் தொலைபேசி ஊடாக பலாலி தளத்துக்கு இந்தத் தாக்குதல் குறித்து அறிவித்தார்.

அவர்தான் தாக்குதல் தப்பிய இன்னொரு படையினரான சுமதிபாலவுக்கும் இந்த இடத்தை அறிவித்தார்.

ஆயினும் கோப்ரல் பெரேரா பலாலி தளத்திற்கு அழைப்பை எடுப்பதற்கு முன்னரே தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற சரத்முனசிங்கா குழு துரிதமாக இயங்கியது

கொல்லப்பட்ட படையினரின் உடலங்களையும் உடல் பாகங்களையும் முதலில் சேகரித்த படைத்தரப்பு அவற்றை யாழ் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றது தாக்குதலில் சிக்கிய 2 வாகனங்களும்; குருநகர் முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டன

இந்த நகர்வுகள் இடம்பெற்ற பின்னர் இலங்கையின் வரலாற்றில் ஒரு பெரும் படுகொலைகளம் உருவாகும்வேளை ஆரம்பித்தது.

திருநெல்வேலியிலிருந்து திரும்பிய பிரிகேடியர் இந்த தாக்குதல் சம்பவத்தை கொழும்பு ராணுவ தலைமையகத்துக்கு அறிவித்ததும் இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கேட்டு அப்போதைய ராணுவத்தளபதியான லெப்டினட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்காவை உடனடியாக படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தார்.

புல் அல்லது எருது என்ற வர்ணிப்பைபெற்ற படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா அப்போதைய அரசதலைவர் ஜேயார் ஜெயவர்த்தனாவின் மருமகன் முறையானவர்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக தனது மாமனாரான ஜேயார் ஜெயவர்த்தனாவுக்கு அறிவித்தார் திஸ்ஸவீரதுங்கா மறுமுனையில் சீற்றப்பட்ட மாமனார் மருமகன் மீது ஏறிவிழுந்தர்.

சற்றுத்தளர்வடைந்த திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக மீண்டும் பிரிகேடியர் பல்தசாருக்கு தொடர்பை ஏற்படுத்தி தனது சீற்றத்தை அவர்மீது காட்டினார்.

திருநெல்வேலி தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஜேயார் ஜெயவர்தனாவுக்கு அறிவித்தபோது அவர் மீகவும் சீற்றமடைந்ததாக பல்தசாரிடம் வாய்விட்டுக்கூறினார் திஸ்ஸவீரதுங்கா.

இவ்வாறான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டுமென ஜேயார் ஜெயவர்த்தனா தன்னிடம் உத்தரவிட்டதாகவும் நாளை காலை தன்னை வந்து சந்திக்கும் படிபணித்தாகவும் திஸ்ஸ வீரதுங்கா

பல்தசாரிடம் குறிப்பிட்டார்.

இதன் பின்னர் குருநகர் முகாமில் பல்தசார் தலைமையில் அவசரமாக ஒரு கூட்டம் நடத்தப்பட்டது அதில் 3 முக்கிய முடிவுகள் எடுக்கபட்டன.

1தாக்குதலுக்கு பின்னான நிலைமையை கையாள்வது

2கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை ஒரு வியூகத்துடன் கையாளுவது.

3யாழ்நகரின் பாதுகாப்பை பலப்படுத்துவது

ஆகியனவே இந்த 3 முடிவுகள். இதனடிப்படையில் யாழ் வைத்தியசாலையிடம் ஒப்படைப்பட்ட படையினரின் உடலங்களை பொறுப்பேற்று கொழும்புக்கு அனுப்பும் பொறுப்பு ஏ. எவ் றேமன்ட் அந்திமகால சேவை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்ட்டது.

அப்போது யாழில் பிரபலமாக இருந்தது ஏ. எவ் றேமன்ட அந்திமகால சேவை நிறுவனம்;. அத்துடன் யாழ்நகரின் பாதுகாப்பு என்ற போர்வையில் 24 ஆந்திகதி அதிகாலையில் மேலதிக படையினரும் குவிக்கப்பட்டனர்.

பலாலி, மாதகல் மற்றும் வல்வெட்டித்துறை முகாம்களிலிருந்த சில படைஅணிகள் அப்பாவிகளை நரவேட்டையாடும் நோக்கில் புலர்ந்தும் புலராத அந்த அதிகாலை பொழுதில் வெறியுடன் புறப்பட்டனர்.

இந்த நிலையில் இரவு நடந்த சம்பவத்தை அறியாத வகையில் மாதல் யாழ் வழித்தடத்தின் 787 பேருந்து அதிகாலையின் முதல் பயணத்தை ஆரம்பித்தது

அது ஒரு வெறியாட்டத்தில் முடியப்போகும் பயணம் என்பது அதற்கு தெரியவில்லை….

தடங்கள் தொடரும்….

இதையும் தவறாமல் படிங்க