ஜே.யாரின் உத்தரவால் அதிர்ந்த உருத்திரா ராஜசிங்கம்! கறுப்பு யூலை தடங்கள்…

  • Prem
  • July 30, 2018
110shares

யாழ்நகரப்பக்கமாக 23 ஆம் திகதி இரவு பாரிய குண்டுச்சத்தம் ஒன்று மக்களுக்கு கேட்டது. ஆனால் இப்படி ஒரு பெரிய தாக்குதல் திருநெல்வெலியில் நடத்தப்பட்டமை குறித்து திருநெல்வேலிக்கு அப்பால் வசித்த மக்களுக்கு தெரியவில்லை.

இதனால் அதிகாலை வேளையில் தமது கடமைகளுக்கு புறப்பட்டவர்கள் முதலாவது பேருந்துக்கு வழமைபோல காத்திருந்தனர்.

அந்தவகையில் தான் மாதகலில் இருந்து மாதல்- யாழ் வழித்தடத்தில் இயக்கபடும் 787 இலக்க பேருந்து அதிகாலையில் புறப்பட்டது.அதன் சாரதிக்கோ அல்லது நடத்துனருக்கோ இரவு நடந்தசம்பவங்கள் குறித்து தெரியவரவில்லை.

அவ்வாறு இயக்கபட்ட பேருந்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான தனியார் கல்வி நிறுவனங்கள்;( விக்னாரியூட்டறி மாஸ்டர் இன்ஸ்ரிரியூட் போன்ற ரியூசன் சென்டர்கள்) காலைவேளையில் நடத்தும் க.பொ.த உயர்தரப்பரீட்சை (ஏ. எல்) பிரத்தியேக வகுப்புக்கு செல்லவேண்டிய மாணவர்களும் அதில் ஏறியிருந்தனர்.

அடுத்தமாதமான ஒகஸ்றில் பரீட்சை இடம்பெறுவதால் இறுதிநேர மீட்டல் வகுப்புக் இடம்பெற்ற மாதம் அது.

ஆனால் உயர்தரபரீட்சையில் சித்தியடையும் கனவுடன் இருந்த தம்முடன் கூடவே துர்விதி ஒன்றும் பயணஞ்செய்வதையோ அல்லது தம்மில் சிலரது வாழ்வை மாதகல் முகாம் படையினர் கொடுரமாக முடிக்கப்போவதையோ அவர்கள் அப்போது அறியவில்லை.

இந்த துர்விதிக்குரிய பேருந்து மானிப்பாய் ஊடாக சென்றபோது நல்லவெளிச்சம் பரவியிருந்தது. அந்தவேளை மானிப்பாய் மத்திய சந்தை பகுதியால் வந்த மாதகல் முகாம் படையினர் அதனை திடிரென வழிமறித்தனர்.

தமது முகாமில் இருந்து சென்ற 4-4 பிராவோ அணி கண்ணிவெடியில் சிக்கியதால் அப்பாவிகளை பழிவாங்கும் வன்மம் அந்த அணியில் குடிகொண்டிருந்தது.

படையினர் தமது வண்டியை மறித்தவுடன் அவர்கள் ஏதோ வழமைபோல சோதனை செய்வதற்குத்தான் அதனை வழிமறிப்பதாக பயணிகள் நினைத்தனர்.

ஆனால் வெறிகொண்ட படையினர் வண்டிக்குள் ஏறி அதில் இருந்தவர்களை இறக்கினர். அதில் இருந்த 9 மாணவர்களை வரிசையாக நிற்கவைத்து அவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டனர்.

தமக்கு என்ன நடக்கின்றது என்பதை அறிய முன்னரே அவர்கள் மீது சூடுகள் விழுந்தன. ஓடமுற்பட்ட அனைவரும்; ஒருவரோடு ஒருவர் பின்னிப்பிணைந்து விழுந்தனர்.

சந்தைக்கு முன்னாலிருந்த மல்லிகா ஸ்ரோர்ஸ் என்ற கடையின் முன்பக்க கதவுகளுடன் பின்னிப்பிணைந்த நிலையில் மேற்படி மாணவாகளின் உடலங்கள் மிக கோரமாக உதிர வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. (இந்தப்பத்தியாளர் தனது வாழ்வில் கண்ட முதலாவது பெரிய கோரக்காட்சியும் இதுதான்)

6பேர் அந்த இடத்தில் மிக குருரமாக கொல்லப்பட்டனர். மூவர் படுகாயமடைந்திருந்தனர். இந்தக்கொடுமையை செய்தபின்னர் அங்கிருந்து அகன்றது மாதகல்ராணுவஅணி.

இதேபோல பலாலி,படைத்தளத்தில் இருந்து வெளியேறிய ஒரு அணி படைத்தளத்தின் முன் தடுப்புக்கதவை தமது வாகனத்தால் உடைத்தெறிந்து விட்டு யாழ்.நகர்ப்பக்கமாக பயணித்தது

யாழ் நகர்ப்பக்கமாக வெறியுடன் சென்ற இந்த அணி கண்ணில் தென்பட்ட தமிழ்மக்களை சுட்டுக்கொன்றது.

இதன்பின்னர் கண்ணிவெடி வெடித்த இடத்துக்கு சென்று அங்கிருந்த வீடுகளில் இருந்தவர்களை சுட்டுக்கொன்றது. வீடுகளையும் ,வணிக நிறுவனங்களையும் அடித்து நொருக்கி தீயிட்டது

அங்கிருந்த வீடொன்றில்; வசித்த முதிய தம்பதியை கூட படைத்தரப்பு விட்டுவைக்கவி;லலை. இருவரையும் சுட்டுக்கொன்றது பின்னர் உடலங்களை உள்ளே போட்டு அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தியது.

பலாலி முகாமில் இருந்த படையினர் இந்த குருரமான படுகொலைகளை மேற்கொண்ட நிலையில் வல்வெட்டித்துறையிலும் பெரிய மனிதவேட்டையும் தீயிடல் சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

கொழும்பில் தமிழ்மக்கள் மீது பெரும் வன்முறைகள் வெடிக்க முன்னரே யாழ்ப்பாணத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற நர வேட்டைகள் இவை.

இந்தக்கொடுரங்களின் உச்சக்கட்டமாக ஒரு 10 வயது சிறுவன் ஒருவன் மிக கொடுரமாக தலையில் சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.

கல்வியங்காட்டுப் பகுதியியை சேர்ந்த இந்த சிறுவன் பாண்வாங்குவதற்காக சென்றவன். பெரிய சைக்கிளை ஒடுவதற்கு அவனுக்கு கால்கள் எட்டாது. இதனால் சைக்கிளின் பார் பகுதிக்கு கீழால் தனது கால்களை செலுத்தி தத்தித்தத்தி ஓடியபடி பாண்வாங்கிக் கொண்டு சென்ற இவனை விதி மறித்தது.

10வயது சிறுவன் எனக்கூடப்பார்க்காமல் மிக கொடுரமாக தலையில் சுட்டுக்கொன்றனர். சின்னஞ்சிறு மூளைசிதறிய நிலையில் தான் வாங்கிக்கொண்டு சென்ற பாணுடன் அந்த சிறுவன் தனது சைக்கிளுடன் கிடந்தான்.

இவ்வாறான வெறியாட்டத்தில் சில மணிநேரங்களில் மட்டும் திருநெல்வேலி மானி;ப்பாய் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய இடங்களில் 51 பேர் இவ்வாறு படுகொலையுண்டனர்;. 100 க்கு மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இதனைவிட 100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் வீடுகளும் தீயிடப்பட்டன. யாழ்ப்பாணம் இவ்வாறு 24 ஆம்திகதி காலைமுதல் கொலைக்களமாக மாறிய நிலையில்கொழும்பில் அதேதினம் காலை சிறிலங்காவின் உயர்மட்ட படைத்துறை அதிகாரிகளுடன் வோட் பிளேஸில் உள்ள தனது தனிப்பட்ட வதிவிடத்தில் அவசரமான பாதுகாப்பு மாநாடொன்றை கூட்டினார் அரச தலைவர் ஜேயார் ஜெயவர்த்தனா.

அந்த மாநாட்டில் தான் தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினை வழங்கப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் ஜேயார் சில உத்தரவுகளை பிறப்பித்தார் அந்த உத்தரவுகளில் ஒன்றே கறுப்பு யூலை படுகொலைகளின் நிகழ்ச்சிநிரலை தொழினுட்பரீதியில் தீவிரப்படுத்தியது.

அந்த உத்தரவு என்ன? …

தடங்கள் தொடரும்…..

இதையும் தவறாமல் படிங்க