ஜேயாரின் சீற்றத்தால் யாழ்விரைந்த வீரதுங்காவும் ரஜரட்டை ராணுவஅணி திட்டங்களும் கறுப்புயூலை தடங்கள்…..

  • Prem
  • July 31, 2018
52shares

திருநெல்வேலித்தாக்குதலுக்கு மறுநாள் சிறிலங்கா அரசதலைவர் ஜேயார் ஜெயவர்த்தனா தனது வோட் பிளேஸ் வதிவிடத்தில் ஒரு உயர்மட்ட ராணுவ மாநாட்டை கூட்டியிருந்தார்.

இந்த மாநாட்டுக்காக இராணுவத்தளபதி திஸ்ஸவீரதுங்க தலைமையில் கூடியிருந்த படைத்துறை உயரதிகாரிகளின் முகங்களில் ஜேயாரின் சீற்றத்துக்கு இலக்காகவேண்டிய அச்சம் தெரிந்தது.

அவர்களது ஊகம் ஏறக்குறைய சரிதான். அறையினுள் உள்ளே நுழைந்த ஜேயார் தனது மருமகனும் படைத்தளபதியுமான லெப்டினட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்காவை நோக்கி எடுத்த எடுப்பிலேயே சீற்றமான ஒரு வினாவை எறிந்தார்.

யாழில் என்ன நடந்து? என்பதே மாமனார் மருமகனை நோக்கித்தொடுத்தவினா. தன்னை நோக்கி எறிந்த இந்த வினாவின் அர்த்தத்தை புரிந்து கொண்டதாலேயோ என்னவோ தளபதி திஸ்ஸவீரதுங்கா ஒன்றுமே சொல்லாமல் மௌனம் காத்தார்.

திஸ்ஸ வீரதுங்கா இவ்வாறு மௌனம் காக்க… அவரது பதிலுக்கு மேலும் காத்திராத ஜேயார் இப்படிப்பட்ட தாக்குதல்கள் “என்னவிதப்பட்டும்” உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என உரத்துக்கத்தினார்

அத்துடன் உடனடியாகவே ராணுவத்தரப்புக்குரிய 2 உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.

தமிழ்மக்களுக்கு ஒரு படிப்பினை வழங்கப்படவேண்டுமென்ற நோக்கத்துடன் ஜேயார் பிறப்பித்த அந்த உத்தரவுகளில் ஒன்றே கறுப்பு யூலை படுகொலைகளின் நிகழ்ச்சிநிரலை தொழினுட்பரீதியில் தீவிரப்படுத்தியிருந்தது.

ஜேயார் பிறப்பித்த முதலாவது உத்தரவு படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக மாநாடு முடிந்தவுடன் யாழ்ப்பாணத்துக்கு செல்லவேண்டுமென இருந்தது.

இரண்டாவது உத்தரவு திருநெல்வேலியில் கொல்லப்பட்ட 13 படையினரின் இறுதிநிகழ்வுகள் முழுராணுவ மரியாதையுடன் கொழும்புகனத்தை மயானத்தில் நடாத்தப்பட வேண்டுமென்பதாக இருந்தது


படையினரின் இறுதிக்கிரிகைகளை ஒட்டுமொத்தமாக நடத்துவது சிங்களவர்களிடையே; சீற்றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்தை அந்தநேரத்தில் சில அதிகாரிகள் முன்வைக்க முனைந்தாலும் இதனை இறுதிநிகழ்வுகளை கொழும்பில் நடத்தியே தீர வேண்டுமென்பது ஜேயாரின் இறுக்கமான உத்தரவாக இருந்தது.

இந்த நிலையில் ஜேயார் கூட்டிய இந்தஅவசர பாதுகாப்பு மாநாட்டில் பங்கெடுக்க முடியாதநிலையில் சிறிலங்காவின் அப்போதைய காவற்துறை மாஅதிபர் ருத்திராராஜசிங்கம் நுவரெலியாவில் நின்றார்.

தமிழரான ருத்திராராஜசிங்கத்துக்கு ஜேயாரின் இந்த முடிவு அதிர்ச்சியளித்தது.பதற்றமான சூழ்நிலையில் படையினரின் இறுதிநிகழ்வுகளை ஒட்டுமொத்தமாக கொழும்பில் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால்

படையினரின் உடலங்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைத்து தனிப்பட்ட ரீதியில் இதனை நடாத்துவதே பொருத்தமானது என்பது அவரது நிலைப்பாடு

ஆனால் ஜேயாரின் இறுக்கமான முடிவுகளுக்கு முன்னால் ருத்திரா ராஜசிங்கத்தால் எதுவும் செய்ய முடியவில்லை.

இவ்வாறான ஒரு பதற்றமான சூழலின் பின்னணியில ஜேயாரின் உத்தரவுப்படி படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கா உடனடியாக அன்று மதியமே விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு புறப்பட்டார்.

பிற்பகல் வேளையில் பலாலி விமானநிலையத்தை சென்றடைந்த அவர் அங்கிருந்து உடனடியாக உலங்குவானுர்தியில் குருநகர் முகாமுக்கு சென்றடைந்தார்.

திஸ்ஸ வீரதுங்கா குருநகர் முகாமை சென்றடைந்தவேளை பலாலி படைத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஒரு ராணுவ அணி திருநெல்வேலியில் வெளியாட்டம் ஆடியது.

உயரதிகாரிகளின் உத்தரவை மீறி பலாலிமுகாமின் முன் தடுப்புக் கதவை தமது வாகனத்தால் உடைத்தெறிந்து விட்டு இந்த அணி புறப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்கிடையே கொழும்பு நாரஹேன்பிட்டியில் ராணுவ முகாமில் உள்ள ராணுவத்தின் ரஜரட்ட படைப்பிரிவு ஒரு திட்டத்தை போட்டது.

திருநெல்வேலி தாக்குதல் இடம்பெறுவதற்கு இரண்டுமாதங்களுக்கு முன்னர் அதாவது மே மாதம் 18 ஆந்திகதி உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்றபோது கந்தர்மடம் மற்றும் நல்லூர் வாக்களிப்பு நிலையஙகளின் மீ விடுதலைப்புலிகள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதலுக்குப்பின்னர் கந்தர்மடம் பகுதியில் பெரும் வன்முறைகளில் ரஜரட்டை பிரிவு ராணுவ அணிகளே ஈடுபட்டிருந்தன.

கந்தர்மட வெறியாட்டத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து மீளெடுக்கப்பட்ட ரஜரட்டை பிரிவு அனுராதபுரத்திலிருந்த அதன் தலைமையகத்துக்கு முதலில் மாற்றப்பட்டது.

அதன் பின்னர் அந்த பிரிவு பின்னர் கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள முகாமுக்கு அனுப்பட்டது.

ஏற்கனவே கந்தர்மடம் மற்றும் அனுராதபுர பகுதிகளில் தமிழக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட அதே ரஜரட்ட படைப்பிரிவு திருநெல்வேலி தாக்குதலை சாக்காக வைத்து கொழும்பில் தமிழமக்கள் மீது தாக்குல்களை மேற்கொள்வும் வியுகங்களை வகுத்தது.

இந்த நிலையில் தான் திஸ்ஸ வீரதுங்கா குருநகர் முகாமில் நின்றிருந்தார். அவர் யாழில் நிற்கும் போதே திருநெல்வேலி மானிப்பாய் வல்வெட்டித்துறை உட்பட்ட இடங்களில் படையினரால் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்ட்ட சம்பவங்களும் அவரது காதுகளுக்கு எட்டியே இருந்தது.

ஆயினும் ஒரு படைத்தளபதி என்ற முறையில் இறுக்கமான உத்தரவுகளை பிறப்பித்து இந்தப்படுகொலைகளை கட்டுப்படுத்துவதற்கு அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவி;ல்லை.

மாறாக ஜேயாரின் இறுக்கமான முடிவிற்கு அமைய கொல்லபட்ட படையினரின் உடலங்களை கொழும்பிற்கு கொண்டு செல்வதில்தான் அவர் தீவிர அக்கறை காட்டினார்.

படையினரின் உடலங்களை பலாலிக்கு அனுப்பும் நகர்வுகளை துரிதப்படுத்தும் படி பிரிகேடியர் பல்தசார் மற்றும் சரத்முனசிங்க ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பித்த திஸ்ஸவீரதுங்க மாலை 5 மணியளவில் மீண்டும் குருநகரிலிருந்து உலங்கு வானூர்தியில் பலாலிக்கு புறப்பட்டிருந்தார்.

தான்; மீண்டும் கொழும்புக்கு செல்லும்போது தன்னுடனேயே 13 படையினரின் உடலங்களும் கொண்டு செல்லப்படவேண்டுமென்பதே திஸ்ஸ வீரதுங்காவின் திட்டம்

ஆனால் திஸ்ஸவீரதுங்காவின் இந்தத்திட்டத்தை

சிறிலங்காவின் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல ஊடறுக்கமுனைந்தார். திஸ்ஸவீரதுங்காவை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்குமாறு சேபால ஆட்டிக்கல கோரியிருந்தார்.

ஆனால்; அன்றிரவு யாழப்பாணத்தில் தங்குவதை திஸ்ஸவீரதுங்கா விரும்பவில்லை.

எனினும்பாதுகாப்புச்செயலாளர் சேபால ஆட்டிக்கலவால் பிறப்பிக்பட்ட உத்தரவையும் மீறவும் வழியில்லை.வேறுவழியின்றி தனது பயணத்திட்டத்தை சடுதியாக மாற்றிய அவர் மீண்டும் பலாலியில் இருந்து குருநகருக்கு திரும்பினார்.

அரைமணிநேரத்துக்கு முன்னர் குருநகரிலிருந்து பலாலிக்கு புறப்பட்ட திஸ்ஸவீரதுங்கா உடனடியாக அதே உலங்கு வானூர்த்தியில் குருநகருக்கு திரும்பிய கண்ட குருநகர் படையினர் ஆச்சரியப்பட்டனர்

ஆனால் திஸ்ஸ வீரதுங்கவின் முகத்தில் ஒரு கடுகடுப்பான தன்மை காணப்பட்டதால் ஏதோ ஒரு விடயம் அவருக்கு பிடிக்கவில்லையென்பதை பல்தசாரும் சரத்முனசிங்கவும் கண்டுகொண்டனர்.

திஸ்ஸவீரதுங்காவை அன்றிரவு யாழ்ப்பாணத்தில் தங்கவைக்க சேபால ஆட்டிக்கல முயற்சித்ததன் காரணம் என்ன?

தடங்கள் தொடரும்………

இதையும் தவறாமல் படிங்க