எனது நாயை கூட யாழில் புதைக்கமாட்டேன்! சீறிய திஸ்ஸவும் கனத்தை வன்முறைகளும்!! கறுப்புயூலை தடங்கள்…..

  • Prem
  • August 01, 2018
90shares

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் சேபால ஆட்டிக்கல தன்னை யாழ்ப்பாணத்தில் தங்குமாறு கோரியமை இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்காவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

24ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமையான அன்றுமாலையே படையினரின் உடலங்களுடன் கொழும்பு திரும்பவே அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால்தனது திட்டத்தை திட்டத்தை மாற்றும்வகையில் சேபால ஆட்டிக்கல நடந்தமை கோபத்தை ஏற்படுத்தியது.

சேபால ஆட்டிக்கல ஏன் இப்படி நடந்து கொண்டார்?

அதற்கு ஒரு காரணம் இருந்தது. படையினரின் இறுதிநிகழ்வுகள் நடத்தப்பட் இருந்த பொரளைபகுதியில் உள்ள கனத்தை மயானத்தை பார்வையிட்ட பின்னர்தான் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.

கனத்தை மயானத்தில் இறுதி நிகழ்வுகளுக்குரிய தயார்படுத்தல் நகர்வுகளை பார்வையிட சென்ற சேபால ஆட்டிக்கல அந்தஇடத்தை சூழ தீவிரமான ஒரு செயற்கை பதற்றம் நிலவுவதை அவதானிக்கத் தவறவில்லை.

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக தானிருந்த போதும் தனக்கு அப்பாற்பட்ட ஒரு வலையமைப்பு வெகுகச்சிதமான முறையில் வன்முறைகளுக்கு தயாராகி வருவதும் புரிந்தது.

இதனைவிட இன்னொருதரப்பு கடுமையாக அரசஎதிர்ப்புஉணர்வுடன் அங்கு நிலவியதையும் அவரால் அவதானிக்கமுடிந்தது.

இவ்வாறான ஒரு கொந்தளிப்புநிலை இருக்கும் போது படையினரின் உடலங்களுக்கு கொழும்பில் இறுதிநிகழ்வுகளை செய்வது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்பது அவருக்கு புரிந்தது

இதனால் படையினரின் உடலங்களை கொழும்புக்கு கொண்டு வருவதை தவிர்த்தால் என்ன என்பதை கூட சேபால ஆட்டிக்கல சிந்தித்தன் அடிப்படையில்;; மேலதிக நடவடிக்கைகளுக்காக தளபதி திஸ்ஸவீரதுங்காவை யாழ்ப்பாணத்தில் தங்குமாறு அவர்கோரினார்.

இதன்பின்னர் குருநகர் முகாமில் தங்கியிருந்த திஸ்ஸவீரதுங்காவை தொடர்புகொண்ட சேபாலஆட்டிக்கல கொழும்பில் நிலவும் அரச எதிர்ப்பு உணர்வை சமாளிப்பதற்காக படையினர் உடலங்களை யாழ்ப்பாணத்தில் புதைத்தால் அல்லது வவுனியாவில் எரியூட்டினால் என்ன என்பதில் திஸ்ஸ வீரதுங்காவின் கருத்தைக் கூட கேட்டிருந்தார்.

சேபாலஆட்டிக்கலவின் இந்த வினாவை கேட்டு சீற்றமடைந்த திஸ்ஸவீரதுங்கா தனது நாய் செத்தால் கூட யாழ்ப்பாணம் அல்லது வவுனியாவில் புதைக்கமாட்டேன் என்றார்.

திஸ்ஸவீரதுங்கா இவ்வாறு சீற்றப்பட்டதால் இதுகுறித்து நிச்சயமாக தனது மாமனாரான ஜேயாரிடம் அவர் வத்திவைப்பார் என்பதால் சேபாலஆட்டிக்கல தனது எண்ணத்தை கைவிட்டார்.

இதனைவிட கொழும்பில் தான் இறுதிநிகழ்வுகளை நடத்துவது என்ற விடயத்தில் ஆரம்பம் முதலே ஜேயார் உறுதியாகவும் இருந்தார்.

இதனால் படையினரின் உடலங்களை அன்றே கொழும்புக்கு கொண்டு செல்லும் நகர்வுகள் மீண்டும் துரிதமடைந்ததால் ஏ. எவ் றேமன்ட் அந்திமகாலச்சேவை நிறுவன பணியாளர்கள் அவற்றை பலாலிக்கு கொண்டுசென்றனர்.

உடலங்களை இரத்தமலானைக்கு காவிப்பறப்பதற்கு சிறிலங்கா வான்படையின் அவ்ரோ விமானமும் தயாராகவே நின்றது. எனினும் அவற்றை கொழும்புக்கு அனுப்புவதில் மீண்டும் ஒரிருமணிநேர தாமதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் முதலில் வனாத்தமுல்ல சேரிப்பகுதியில் இருந்து திரண்ட சுமார் 3000 பேர் கனத்தையில் இறுதிநிகழ்வுகள் நடாத்தப்பட ஒதுக்கப்ட்ட இடத்தை சென்றடைந்து காடையர்களாக அவதாரம் எடுத்தனர். நாரஹேன்பிட்டி படைமுகாமுகாமில் இருந்து சாதாரண உடைகளில் புறப்பட்ட ரஜரட்ட பிரிவினரும் காடையர்களுடன் கலந்து நின்றனர்

அரசதரப்பை பொறுத்த வரை மாலை 5 மணிக்குத்தான் கனத்தையில இறுதிநிகழவுகளை நடத்த அது திட்டமிட்டிருந்தது.

ஆனால் பலாலியிலிருந்து இரத்தமலானைக்கு படையினரின் உடலங்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட ஏற்பட கனத்தையை சுற்றி நின்ற

காடையர்களின் வெறி தீவிரமடைந்தது

படையினரின் உடலங்கள் அவர்களது உறவினர்களிடம் தனித்தனியாக ஒப்படைக்கபடவேண்டுமென அவர்கள் ஆக்ரோசமாக கத்தினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவற்துறை உதவி ஆணையாளர் கபூரை அங்கு வெட்டப்பட்டிருந்த ஈமக்குழி ஒன்றை நோக்கித்தள்ளினர். அத்துடன் அந்திமகாலச்சேவை நிறுவனம் கொண்டுவந்த இறுதிகிரியை பொருட்களை அடித்து நொருக்கினர்.

காடையர்களின் ஆக்ரோசம் பின்னர் வெறியாக மாறியதால் இறுதிக்கிரிகைகளில் கலந்துகொள்ள வந்த படையினரின் உறவினர்களும் மதச்சடங்குகளை நடத்த வந்திருந்த பிக்குகளும் சிதறி ஓடினர்.

காடையர்களை கட்டுப்படுத்துவதற்கு கண்ணீர்புகை குண்டு பிரயோகங்களும தடியடிகளும்,சாட்டுக்கு நடத்தப்பட்டன.

இதற்கிடையே யாழில் படையினர் மீது இன்னொரு கண்ணிவெடித்தாக்குதல் நடத்தப்பட்டதான வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. இதனால் காடையர்களின் திரட்சி 8 ஆயிரம் பத்தாயிரம் என கிடுகிடுவென உயர்ந்தது. காடையர்களின் ஆக்ரோசம் கண்டு காவற்துறையினரும் பின்வாங்கினர்.

இந்தநிலையில் பலாலியில் இருந்து படையினரின் உடலங்களுடன் புறப்பட்ட அவ்ரோ விமானம் இரவு 7 மணிக்குப்பின்னர் இரத்தமலானை விமானநிலையத்தில் தரையிறங்கியது.

ஆனால் கனத்தை கொதிநிலை கைமீறிப்போனதால் இறுதிக்கிரியை நிகழ்வுகளை மீளெடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ஜேயார் ஜெயவர்த்தனா படையினரின் உடலங்களை அவர்களின் உறவினர்களிடமே கையளி;ப்பதென்ற முடிவை இறுதியில் எடுத்தார்.

இதனால் இரத்தமலானை விமானநிலையத்தில் இருந்து இரவு 8. 30 மணிக்குப் பின்னர் மயானத்தை நோக்கி புறப்பட்ட உடலவாகனங்கள் அனைத்தையும் இராணுவத்தலைமையகத்துக்கு கொண்டுசெல்லும் படி பணிப்பு விடுக்கப்பட்டது.

இதற்குப்பின்னரே ஜேயார் கனத்தையில் இறுதிக்கிரியை நிகழ்வுகளை மீளெடுத்த செய்தி மயானசுற்றாடலில் திரண்டிருந்த கூட்டத்துக்கு அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் வேறென்ன? இரவு 10 மணியளவில் அங்கிருந்து கலைந் காடையர் கூட்டம் தமிழ்மக்களின் வணிக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை நோக்கி ஆக்ரோசமாக நகர்ந்து தமது திட்டமிட்ட வன்முறைகளை கச்சிதமாக திரும்பியது

கறுப்பு யூலை குருரங்கள் கொழும்பில் மிகத்தீவிரமாக வெடிக்க ஆரம்பித்தன.

இதேபோல யாழில் படைத்தளபதி திஸ்ஸவீரதுங்கா தங்கியிருந்த நிலையில் அங்கு படைத்தரப்பின் வெறியாட்டம் தீவிரமானது.

தடங்கள் தொடரும்….

000000000

இதையும் தவறாமல் படிங்க