வெடியோசையால் புலிகள்குறித்து பதறிய தளபதியும் ஊரடங்கை பிறப்பிக்காத ஜேயாரும் கறுப்புயூலை தடங்கள்…..

  • Prem
  • August 02, 2018
38shares

யாழ்ப்பாணத்தில் படைத்தளபதி திஸ்ஸவீரதுங்கா தங்கியிருக்கும் போதே படைத்தரப்பின் வெறியாட்டம் தீவிரமானது. தமிழ்மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களின் மீது படையினர் ஆக்ரோசமாக தமது வன்முறைகளை அவிழ்த்துவிட்டனர்.

திருநெல்வெலியில் கண்ணி வெடி தாக்குதல் இடத்தை பார்வையிடுவதற்கு யூலை 25 ஆந் திகதியன்று தளபதி திஸ்ஸவீரதுங்க சரத்முனசிங்க சகிதம் சென்றவேளை ஏற்கனவே படையினர் அந்தப்பகுதியில் செய்த கொடுரங்களின் சாட்சியங்களை வெளிப்படையாகவே அவர் கண்டார்.

ஆனால் அது குறித்து அவர் எந்தவித கரிசனையை அல்லது இவ்வாறான கொடுரங்களை உடனடியாக நிறுத்துவதற்கு எந்தவிதமான நகர்வுகளை அவர் எடுக்க முனையவுமில்லை.

இதற்கிடையே திஸ்ஸவீரதுங்கவின் ராணுவகுழு திருநெல்வேலி சந்திக்கு அருகே நின்றபோது இன்னொரு சம்பவம் அங்கு இடம்பெற்றது.

அந்தப்பகுதியில்; இன்னமும் தமது வெறியை கட்டுப்படுத்த முடியாமல் படையினர் அட்டகாசங்களை செய்வது திஸ்ஸவீரதுங்க குழுவுக்கு தெரியவில்லை.

இந்தநிலையில் திருநெல்வேலி சந்திக்கு அருகில் உள்ள சில இடங்களிலிருந்து வெடியோசைகள் கேட்டன. இந்தவெடியோசைகளை கேட்டு பதற்றமடைந்த திஸ்ஸவீரதுங்க விடுதலைப்புலிகள் தான் தாக்குதலை தொடுக்க வந்துவிட்டதாக அஞ்சினார்.

ஆனால் இது புலிகளின் வேலையல்ல தமதுதரப்பின் வேலை என்பதை அறிந்த சரத்முனசிங்க தம்முடன் நின்ற படையினர் சிலரை அந்தப்பகுதியின் நாலாபுறமும் அனுப்பி அதிகாரிகள் வந்திருப்பதாக சிங்களத்தில் உரத்துக்கத்துமாறு அவர்களை பணித்தார்.

உயரதிகாரிகளின் பணிப்பின் படியே அருகிலுள்ள இடங்களுக்கு ஓடிச்சென்ற படையினர் இதனை சிங்களத்தில் உரத்துக்கத்திக்கூறினார்.

இதனையடுத்து வெடியோசைகள் தணிந்தன. இந்த சம்பவம் இடம்பெற்ற பின்னர் இலகுகாலாட்படையின் பிளற்ருன்தரஅதிகாரியாக ரஜீவவீரசிங்கவுடன் இணைந்து சரத் முனசிங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மரமொன்றின் பின்னால் பதுங்கியிருந்த படைஉறுப்பினர் ஒருவர் இந்த இருவரையும் இலக்குவைத்து தனது துப்பாக்கியை திருப்ப முனைந்தார்.

இதனை ரஜீவ வீரசிங்கவும் சரத்முனசிங்கவும் அவதானித்துவிட்டனர்.

வளர்த்தகடா ஒன்று தமது மார்பிலேலே துப்பாக்கி ரவையை பாச்சப்போகும் நிலையை சடுதியாக உணர்ந்த அவர்களும் தத்தமது கைத்துப்பாக்கிகளை உருவினர்.

இதற்கிடையே அதிகாரி ரஜீவவீரசிங்க அந்தபடை உறுப்பினரை யாரென இனங்கண்டுவிட்டார். இதனையடுத்து அவரது பெயரை உரத்து கூறி அதட்டி உடனடியாக மரத்துக்குப்பின்னால் இருந்து வீதிக்கு வருமாறு உத்தரவிட்டார்.

வேறு வழியின்றி மேற்படி படை உறுப்பினர் வெளியே வந்தார். அவர் தனித்து நிற்கவில்லை மேலும் சிலபடையினரும் அங்கு நின்றனர்.

உடனடியாக இவர்கள் அனைவரையும் கைது செய்யுமாறு பணித்த தளபதி திஸ்ஸ வீரதுங்க அவர்களின் இராணுவத்தகுதி நிலைகளை உடனடியாக நீக்குவதாக அந்த இடத்தில்வைத்து அறிவித்தார்.

அத்துடன் அவர்கள் அனைவரையும் இராணுவகாவற்துறையிடம் ஒப்படைத்து அநுராதபுரத்திலுள்ள இராணுவ காவற்துறை தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். படைத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவின் எடுத்த இந்த நகர்வில் ஒரு விடயத்தை அவதானிக்கலாம்.

இதே படையினர் திருநெல்வேலிப்பகுதியில் தமிழ்மக்கள் மீது வெறியாட்டம் ஆடியிருந்தனர். ஆனால் அதற்காக அல்லாமல் மாறாக தம் மீது துப்பாக்கிகளை திருப்பமுனைந்தார்களே என்ற சீற்றத்தால் மட்டும் இந்த நகர்வு இடம்பெற்றது

இதேபோலவே மாதகல் மற்றும் வல்வெட்டித்துறை முகாம்களில் இருந்து புறப்பட்டு தமிழின வேட்டையை நடத்திய படையினர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மாறாக அவ்வாறானவர்கள் மறைமுகமாக உயர் மட்டத்தினால் ஊக்குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொழும்பு நிலவரங்களை நோக்கினால்

கனத்தை மயானத்தில் இருந்து புறப்பட்ட சுமார் பத்தாயிரம் காடையர்கள் பொரளை பகுதியிலுள்ள தமிழர்களின் வணிக நிலையங்களையும் வதிவிடங்களையும சூறையாடியதுடன் அவற்றுக்கு தீமுட்டினர்.

கொழும்பில் வெடித்த கறுப்புயூலை வன்முறையின் முதலாவது தீயிடல்களுக்கு பொரளை சந்தியை அண்மித்திருந்த தமிழர்களின் வணிகநிலையங்களே முதலில் இலக்காகின. துடுப்பாட்ட மற்றும் தடகள தமிழ் ஒன்றியமும் தப்பவில்லை.


பொரளையில் வெறியாட்டதை முடித்தபின்னர் இந்த காடையர் குழு அணிகளாக பிரிந்து மருதானை தெமட்டகொட திம்பிரிகாசய கிருலப்பனை வெள்ளவத்தை பம்பலப்பிட்டி என கொழும்பில் தமிழர்கள் வசித்த இடங்களை நோக்கிப்பாய்ந்தது.

கட்சி மற்றும் தொழிற்சங்க வேறுபாடுகள் இன்றி சிங்கள இனவாதத்தின் அனைத்து தரப்புகளும் பாதாள உலக கும்பல்களும் தமிழ்மக்களை குறிவைத்து பாய்ந்தன. சிறிலங்காவின் முக்கிய தொழிற்சங்கமான ஜாதிக சேவகசங்கமயவின் உறுப்பினர்களும் பரவலாக வன்முறைகளில் ஈடுபட்டனர்.

ஆனால் இவ்வாறு தமிழர்கள்மிக குருரமாக குறிவைக்கப்பட ஜேயாரோ ஊரடங்கு சட்டம் எதனையும் உடனடியாக பிறப்பிக்காது வழமை போல தமிழ் மக்கள் மீதான இனச்சங்காரத்துக்கு ஆதரவளிக்க வன்முறைகள் மிகத்தீவிரமடைந்தன.

இந்த நிலையில் தான் அப்போதைய தொழிற்துறையமைச்சரும் இனவாதியுமான சிறில்மத்யூ கொழும்பு கோட்டைப்பகுதியை நோக்கி தனது காடையர் அணியுடன் விரைந்தார்.

அவரது கும்பல்செய்த அந்த அழிவு….

தடங்கள் தொடரும்…

இதையும் தவறாமல் படிங்க