யாழ்ப்பாணம் என்ன பாங்கொங்கா ? குற்றவாளிக் கூண்டில் புலம்பெயர் தமிழர்கள் !!

91shares

'வெளிநாட்டுக்கு வந்து பார்க்கும் போதுதான் தெரிகின்றது இங்கு நீங்கள் படுகின்ற கஸ்டம். ஆனால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருகின்றவர்களின் நடத்தைகளில் அது தெரிவதில்லை. ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல் நடப்பார்கள்' - இது சமீபத்தில் இலங்கையில் இருந்து பிரான்சுக்கு வருகை தந்திருந்த ஒரு ஊடகர் ஒருவர் கூறிய கருத்து.

இவ்வாறான கருத்து புதிதல்ல. பலதடவைகள் பலரும் கூறியிருக்கின்றனர். இதேவேளை யாழ்பாணத்தில் இளைஞர்களிடத்தில் அதிகரித்துச் செல்கின்ற சமூகச் சீர்கேடுகளுக்கு பின்னால் புலம்பெயர் தமிழர்களின் பணம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களும் தொடர்சியாக கூறப்பட்டே வருகின்றன.

குற்றவாளிக்கூண்டில் புலம்பெயர் தமிழர்கள் காணப்படுகின்றனர்.

தாயகத்தில் இருந்து அரசியல்வாதிகள், கல்வியாளர்கள் என பலரும் இக்குற்றச்சாட்டை முன்வைத்து வரும் நிலையில், இது குறித்த ஒரு திறந்த ஆய்வு புலம்பெயர் தமிழ்சூழலில் நடத்தப்பட்டுள்ளதா ?

இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும் நிலையில் தொடங்கியுள்ள கோடைகாலத்தை தாயகத்தில் கழிப்பதற்கு பலரும் அங்கு செல்லத்தயாராகி வருகின்றனர். விமானமுற்பதிவுகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து செல்வதனை புள்ளிவிபரங்கள் ஊடாக அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக தாயகத்தில் புலம்பெயர் தமிழர்களின் நடத்தைகள் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டை பார்போம்.

போர் காரணமாக ஊர்திரும்ப முடியாதவர்கள், தற்போது கிடைத்து ஒரு அமைதிச்சூழலில் ஊர் திரும்ப முனைவது இயல்பான ஒன்று. ஒருமுறையேனும் மண்ணைத் தரிசித்துவிட்டு திரும்ப வேண்டும் என வேணவா பலரிடத்தில் காணப்படுகின்றது. ஆனால் ஒப்பீட்டளவில் இது குறைவானதாகவே உணரமுடிகின்றது.

தாயகம் என்ற நோக்கு நிலையில் இருந்து விலகி, ஊர் செல்லுதலை தாய்லாந்துக்கும், சிங்கப்பூருக்கும், மொறிசியசுக்கும் சென்று திரும்புகின்ற ஒரு உல்லாச மனநிலையில் அனைத்தையும் அணுகும் போதுதான் யாவும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. இவ்வாறு சென்றுவருபவர்களின் பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள பதிவுகளில் இதனை நன்கு காணக்கூடியதாக உள்ளது.

சமீபத்தில் கிளிநொச்சியில் மிகமோசமாக சாவடிக்கப்பட்ட சிறுத்தையின் சம்பவத்தை இவ்விடத்தில் பொருத்திப் பார்கலாம். தமிழர் தேசத்தின் தேசிய விலங்காக சிறுத்தை உள்ள நிலையில், அதனை மிகமோசமாக கொன்றுவிட்டு, அத்துடன் நின்று செல்பி எடுத்த மனநிலை என்பது பெரும் இனப்படுகொலையை சந்தித்த சமூகத்தின் பொறுப்பான செயல் அல்ல.

இச்சம்பவத்துக்கு வேறுபுற காரணிகள் இருந்தாலும், இந்த செல்பி மனிநிலை சமூகத்தில் ஆளப்படிந்துள்ள பெரும் கறையை வெளிக்காட்டி நின்றது.

இதுபோலத்தான் தாயகப்பயணத்தை ஒரு உல்லாச பயணமாக அணுகின்ற புலம்பெயர் தமிழர்களில் ஒரு தொகுதியினர் தங்கள் செல்பிகள் ஊடாக பொறுப்பற்ற போக்கை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நடத்தைகள்தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது.

இடம், பொருள், ஏவல் என்பதற்கு அப்பால் நாம் கடந்து வந்த இரத்தம் தோய்ந்த பாதை என்பது அனைவருக்கு பல கடமைகளையும், பொறுப்புக்களையும் முன்வைத்து காத்து நிற்கின்றது.

இதனைச்சரிவர உணர்ந்த பலரும் தமது தாயகம் நோக்கிய பயணங்களை பெறுமதியுல்லாதாக மாற்றிவருவதோடு, சமூகம் சார்ந்தும், தேசம் சார்ந்து பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் சற்று ஆறுதல் அளிக்கின்ற விடயங்கள்.

மறுவளம் சமீபத்திய காலங்களில் யாழ்பாணத்தில் இளைஞர்களிடத்தில் அதிகரித்துச் செல்கின்ற போதை பழக்கம், வன்முறைகள் போன்ற பல்வேறு சமூகசீர்கேடுகளின் பின்னால் புலம்பெயர் தமிழர்கள் அனுப்புகின்ற பணம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கபட்டுள்ளது.

ஏலவே வடமாகாண முதலமைச்சரும் இதனை முன்வைத்திருந்தார்.

யாழ்பாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகளுக்கு புலம்பெயர் தமிழர்களை குற்றச்சாட்டிவிட்டு, தமக்குள்ள சமூகப் பொறுப்பை தாயக அரசியல் பிரதநிதிகள் ஒதுங்கிவிடுவதாகவே கருத வேண்டியுள்ளது. அதுபோல் புலம்பெயர் தமிழர்களும் இவ்விடயத்தில் அசட்டை செய்வதாகவே கருத வேண்டியுள்ளது.

ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஒரு தேசத்தில், ஆக்கிரமிப்பாளன் எத்தகைய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவான் என்பது தெளிவு. அவ்வகையில் தோற்றத்துக்கு தமிழர் தாயகத்தில் இயல்பு நிலை இருந்தாலும், தமிழர் தேசம் என்பது சிங்கள அரினது ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்பதனை மறந்துவிடக்கூடாது.

தமிழர்களின் அரசியல் தளத்தை பலவீனப்படுத்த, தமிழ்மக்களிடத்தில் சமூகபிரச்சனைகளையும், சமூகச்சீர்கேடுகளையும் ஏற்படுத்துவது என்பது அரசின் மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரல். ஆனால் இதனை நாம் ஒரு அரசியல் பிரச்சனையாக அரசியல்வாதிகள் மட்டத்தில் அணுகமுடியாது.

மாறாக இது ஒரு சமூகப்பிரச்சனை. தமிழ் சமூகத்தினுள் ஆளஊடுருவும் சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை நன்குணர்ந்து, சமூகமட்டத்தில் இதனை எதிர்கொள்வதற்குரிய செயற்திட்டங்களை வகுக்க வேண்டியது அனைவரதும் கடமையாகவும் உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூகசிந்தனையோடு இதனை அணுகும்போதுதான் தமிழர்களின் எதிர்கால அரசியல் இருப்பு பலமானதாக அமையும். இதற்கான திறந்த உரையாடல்களையும் ஆய்வுகளையும் தாயகத்திலும் சரி, புலம்பெயர் தேசங்களிலும் சரி நாம் அனைவரும் ஆற்ற வேண்டிய காலம் இது.

- எழுத்து : சுதன்ராஜ்

ஐ.பி.சி தமிழ் பத்திரிகையின் 16ம் பதிப்பில்

இதையும் தவறாமல் படிங்க