இலங்கையில் தலையீடு வேண்டாம்! ஒக்ஸ்போர்ட்டில் மைத்திரியாக மாறிய ரணில்!!

  • Prem
  • October 09, 2018
32shares

மாட்டுக்கு மாடு சொன்னால் கேட்காது மணி கட்டின மாடு சொன்னால் தான் கேட்குமாம் என்பது ஒரு பழமொழி ஆனால் தமிழ் மக்களின் விடயத்தில் சிறிலங்காவின் ஆட்சியதிகாரத்தலைகள் மணி கட்டின மாடுகள் சொன்னாலும் கேட்குமா என்பது ஒரு வினா.

அந்தவகையில் காற்று மழை போன்ற இன்றைய காலநிலை சீர்கேடுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ராஜதந்திர முகம் ஒன்று இலங்கைத்தீவில் தென்பட்டது.

அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தின் ஆசியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்திய விவகாரங்கயை கையாளும் முதன்மை பிரதிச்செயலாளர் அலிஸ் வெல்ஸ் தான் இன்று இலங்கையில் நின்றார்.

கடந்த வாரம் பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாயபணியக இராஜாங்க செயலாளர் மார்க்பீல்ட் இலங்கையில் நின்ற நிலையில் இப்போது அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள ராஜதந்திரி அலிஸ் வெல்ஸின் முறை வந்துள்ளது.

இந்த இரண்டு முகங்களுமே இலங்கை தொடர்பான ஜெனிவாத்தீர்மானத்துக்கு அனுசரணை வழங்கிய நாடுகளின் முகங்கள்.

அந்த வகையில் ராஜதந்திரி அலிஸ் வெல்சும் சிறில்ங்காவின் புதிய அரசியமைப்பின் உருவாக்க வேகம், மனித உரிமை நிலவரங்கள் ரான்சிஷனல் ஜஸ்ரிஸ் எனப்படும் நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உட்பட்ட விடயங்களிலும் கண்வைப்பார் என கூறப்படுகிறது.

ஆமேன்! அவ்வாறே ஆகுக!. ஆனால் நேற்று மாலை ஒக்போர்ட் யூனியனில் உரையாற்றிய ரணிலும் போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக தலையீடு அவசியமற்றது என்றார்.

ஆயினும் அலிஸ் வெல்ஸின் இலங்கைப்பயணத்தின் முதன்மை நோக்கம்; தமிழர்களின் உதிரப்பழிக்குரிய நீதியை பெற்றுத்தரும் நகர்வு அல்ல.

மாறாக வோசிங்டனுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்புத்தூண்டிலில் சிக்கியுள்ள இரையின் அளவை கணிப்பிடுவதாகும்

அதாவது நீங்கள் அறிந்தது அறிந்தபடியே இலங்கையின் அமைவிடக் கடற்பரப்பு மற்றும் அதற்கு அப்பால் உள்ள இந்து - பசுபிக்வலயங்களில் சீன ஆளுமையை மட்டுப்படுத்தி தமக்குரிய ஆளுமைநிலை உடன்பாடுகளை உறுதிப்படுத்துவதாகும்.

அண்மைக்காலமாக இலங்கையில் அதீத நாட்டம்கொள்ளும் ஜப்பான். இல்லையென்றால் இலங்கைகடற்பரப்பை வாஞ்சிப்பதாக நோர்வேயில் ரணில் சகிதம் செய்தி சொன்ன நோர்வே; பிரதமர் அர்னா சோல்பேர்க் வெளிப்படுத்திய செய்தியின் உள்ளடக்கத்துடன் சேர்த்துத்தான் பிரித்தானிய மார்க்பீல்ட் அல்லது அமெரிக்க அலிஸ் வெல்ஸ் ஆகியோரின் பயணங்களையும் நோக்கவேண்டும்.

இவர்கள் அனைவரும் கொழும்பின் சுருதியை பொறுத்தே ஈழத்தமிழர் விடயங்களில் தமது வாத்திய ஒலிகளை ஏற்ற இறக்கமாக பயன்படுத்த முனைவார்கள்.

ஆனால் இன்றுவரை ஈழத்தமிழர்விடயங்களில் இவர்களின் வாத்திய ஒலிகள் ஏறுமுகமாவதை நல்லாட்சி எனப்படும் கொழும்பு அதிகாரமையம் கச்சிதமாகவே கையாண்டுவருகிறது.

இதன் அடிப்படையில் ரணில் நேற்றிரவு பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் யூனியன் அரங்கில் வழங்கிய உரையை அல்லது முற்பகல் வேளையில் லண்டன் பங்குச்சந்தையின் நேற்றைய நாளை ஆரம்பித்து வைத்த நகர்வுகளில் காணலாம்

நேற்று மாலை ஒக்போர்ட் யூனியனில் உரையாற்றிய ரணில் கடந்த மாத இறுதியில் ஐ.நா பொதுச்சபையில் மைத்திரி உரையாற்றியதை பிரதியெடுத்து போர்க் குற்றங்கள் தொடர்பான பொறுப்புக்கூறும் நகர்வுகளில் அனைத்துலக தலையீடு அவசியமற்றது என்றார்.


தற்போதைய நிலையில் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளில் அனைத்துலக அரங்கின் பங்களிப்பு அவசியமென நாம் கருதவில்லை இதனால் இது தேவையில்லை எனவும் ரணில் இடித்துரைத்தார்.

அவர் இவ்வாறான இடித்துரைப்பை செய்த நிலையில் வெளியே ரணிலின் பயணத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து போராடியவர்களில் சிலரை பிரித்தானிய காவற்துறை கைசெய்து தடுத்துவைத்தது

இந்த நகர்வுகளுக்கு முன்னர் நேற்று முற்பகல் லண்டன் பங்குசந்தையிலும் ரணில் சில ஆதாயங்களை கொள்வனவு செய்தார். இதனால் இலங்கையின் அபிவிருத்திக்கும் முதலீட்டுக்கும் லண்டன் பங்குச்சந்தை உதவி செய்யத்தயார் என்ற செய்தி அவருக்கு வழங்கப்பட்டது.

இந்தநிகழ்வில் உரையாற்றிய ரணில் பொருளாதார அபிவிருத்தியின் ஊடாக இலங்கை மக்களுக்கு அனுகூலங்களை வழங்க துரிதநடவடிக்கை எடுக்கப்போவதாக உறுதியளித்தார்.

இலங்கைத்தீவின் பொருளாதாரம் சுழல்சிக்கலில் மாட்டுப்பட்டிருப்பதால் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் பெரும் சவால்கள் எதிர்நோக்கப்படுவது யதார்த்தம்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் கடும்வீழ்ச்சி இலங்கையின் வரலாற்றில்,முன்னெப்போதும் இல்லாதஅளவுக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று அதன் வீழ்ச்சி மேலும் அதிகரித்து 172.34 ரூபாவாகியது.

இவ்வாறான வீழ்ச்சி நாட்டின் ஏற்றுமதிகளை அதிகரிக்கவேண்டும் என்ற ஞான நிலையுடன் ரணிலும் மைத்திரியும் அண்மைய நாட்களில் வெளிநாடுகளுக்கு ஓடியோடி திரிவதை அவதானிக்க முடிகிறது.

நேற்றும் இன்றும் சீஷெல்ஸ் நாட்டில் நின்ற மைத்திரி கூட அதன் சுகாதார துறையில் கண்வைத்துஇலங்கையிலிருந்து அதற்குரிய ஏற்றுமதிகளில் மேலதிக நகர்வுகளை எடுக்க முயற்சித்தார்.

அந்த வகையில சிறிலங்காவின் லங்கா ஹொஸ்பிற்றல் மருத்துவமனையின் புதிய கிளை ஒன்று சீஷேல்ஸில் மைத்திரியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இனி சீஷெல்ஸின் சுகாதாரத்துறைக்குரிய ஏற்றுமதிகள் இலங்கையில் இருந்து இடம்பெறலாம்.

ஆனால் இலங்கையில் தமிழ்மக்களின் நிலை தொடர்ந்தும் கையறு நிலையில் இருப்பதை தமிழ் அரசியல் கைதிகளுக்கு மறுக்கப்படும் நீதி; தொடர்ந்தும் அறைந்து கூறுகின்றது

இலங்கையில் தற்போது 107 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தாலும் அரசியல் கைதிகள் என யாரும்இல்லை. பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதான குற்றவாளிகள்தான் சிறைகளில் உள்ளதாக சிறிலங்காவின் அமைச்சர் தலதா அத்துகோரள கடந்தவாரம் கூட தெரிவித்தார்

அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் நடத்தும் உண்ணாநிலைப்போராட்டம் இன்றும் ஒருவாரத்தில் ஒருமாதகாலத்தை கடக்கப்போகின்றது.

கடந்த மாதம் 14ஆம் திகதி இவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் கொழும்பு மெகசின் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 43 பேரும் கடந்த 3 ஆம் திகதி முதல் தமதுஉண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று வரை நல்லாட்சி அசையவில்லை. இந்தநிலையிலேயே இன்று இதற்குரிய நீதியைக்கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலையை நோக்கிய நடைபயணத்தை ஆரம்பித்தனர்.

பல்கலைக்கழகவளாகத்திலிருந்து இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகிய இந்த நடைபவனி, கிளிநொச்சி- வவுனியா ஊடாக அநுராதபுரம் சிறைச்சாலை வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது

இது வெறும் நடைபவனி அல்ல! மாறாக கொழும்புஅதிகார மையத்தை அறவழியில் துளைத்தெடுக்க கூடிய ஒரு எதிர்ப்பயணமே!!

இதையும் தவறாமல் படிங்க
`