தமிழ் செயற்பாட்டாளர்களின் கைதும்... வெஸ்ற்மினிஸ்டர் ஆசனங்களின் எதிர்வினையும்

  • Prem
  • October 10, 2018
63shares

இலங்கைத்தீவில் இருப்பதாக கூறப்படும் நல்லாட்சியின் இரண்டு பக்க முகங்களான மைத்திரியும் ரணிலும் தத்தமது வெளிநாட்டுப்பயணங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிவிட்டனர்.

ரணில் தனது நோர்வே மற்றும் பிரித்தானிய பயணங்களை முடித்துக்கொண்டு இன்று காலை தனது குழுவுடன் நாடு திரும்பினார். ரணிலை அடுத்து மைத்திரியும் தன்னுடைய சீசெல்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பினார்.

இனி இருவரும் மேற்கொள்ளக்கூடிய அடுத்தகட்ட வெளியகச் சுற்றுப்பயணங்களுக்கு இடையில் மகிந்த- மைத்திரி இடையிலான இடைக்கால அரசாங்கம் குறித்தபேச்சுகள் அதற்குஎதிரான ரணில்தரப்பு வியூகங்கள் என உள்ளக அரசியல்கள் தீவிரம் பெறக்கூடும்.

ஓப்பீட்டுரீதியில் மைத்திரியின் சீசெல்ஸ் பயணத்தை விட ரணிலின் பிரித்தானிய பயணம்தான் அதிர்வுகளை உருவாக்கிறது.குறிப்பாக நேற்று முன்தினம்(08.10 2018) அவர் ஒக்ஸ்போர்ட்ஒன்றிய அரங்கில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக சமூகத்துக்கு மத்தியில் ஆற்றியஉரை ஒரு அதிர்வு.

அதேபோல சற்றேறக்குறைய ரணில் அந்த உரையை வழங்கியவேளை வெளியே எதிர்ப்பை வெளியிட்ட தமிழர்களில் ஐவருக்கு எதிராக பிரித்தானிய காவற்துறை எடுத்த எதிர்வினைகளும் இன்னொரு அதிர்வு.

குறிப்பாக ரணிலுக்கு எதிரானஎதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்தின் உறுப்பினர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட்ட சில செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதும் இந்த அதிர்வுகள் வெளிப்பட்டன.

கைது நடவடிக்கைக்கு எதிராக முதலில் தொழிற்கட்சித்தரப்பில் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர் அமைப்பின் தலைவர் சென். கந்தையாவிடமிருந்து இதற்குரிய கண்டன அறிக்கை ஒன்றும் வெளிப்பட்டது

அதுபோல தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர்களுக்கான அனைத்துகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய உள்துறையமைச்சர் சஜீத் ஜாவிட்டுக்கு இதுதொடர்பான முறையீட்டு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பினர். அந்தக்கடிதத்தில் பிரித்தானியாவில் ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ள சாத்வீக ஒன்று கூடல் உரிமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான எதிர்வினைகளையடுத்து நேற்றிரவு யோகலிங்கமும் அவர்களுடன் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆயினும் அவர்கள் மீதான விசாரணைகள் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்றுமாலை யோகலிங்கத்தின் வீட்டை பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு காவற்துறை அதிகாரிகள் தீவிரமான சோதனையிட்டு சில பிரசுரங்களை அங்கிருந்து எடுத்துச்சென்ற நகர்வும் இடம்பெற்றது

இந்தநிலையில் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றிய ரணில்போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு தலையீடு தேவையில்லை இலங்கை நீதித்துறையால் அது விசாரணை செய்யபடும் என்றார்

பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த ரணில் தமது நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்க பிரச்சனைகளுக்கு தீர்வுகண்டது. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வுவழங்கியது. இராணுவத்தின் கைகளில் இருந்த தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகம்> நீதித்துறை மற்றும் காவற்துறை உட்பட பொது நிறுவனங்களின் சுதந்திரம்> உறுதிப்படுத்தப்பட்டதான வழமையான பல்லவியை இசைத்தார்.

அத்துடன் ஜெனிவா தீர்மானங்களை மைய்பபத்திய நிலைமாற்றுகால நீதி மறுசீரமைப்பு, புனர்வாழ்வு ஆகியவை முன்னேறியுள்ளன. இந்த முன்னேற்றங்கள் குறித்து 2019மார்ச்சில் நாம் ஜெனீவாவுக்கு அறிக்கையிடக்காத்திருக்கின்றோம் என்றார்.

ஆனால் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் ரணில் இதனைத்தெரிவித்த அதே சமகாலத்தில் நியூயோர்க்கில் இருந்து ஹியூமன் ரைட்ஸ் வோச் எனப்படும் அனைத்துலக மனித உரிமை; கண்காணிப்பகம் ஒரு எங்களால் ஏன் வீடு செல்ல முடியாது என்ற அர்த்தத்தில் என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக 80 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்ட இந்த அறிக்கையில் வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை இன்னும் அரசாங்கம் முழுமையாக சீரமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு என்ற போர்வையும் அவ்வாறான போர்வையில் நகர்த்தப்படும் இராணுவத்தின் வணிகநோக்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை அற்ற செயற்பாடுகளாலும், பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நீதி கிட்டவில்லை என்பதையும் மனித உரிமைக்கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

இந்த வருடம் முடிவடைவதற்கு முன்னர் பொதுமக்களுக்குரிய காணிகளை விடுவிக்கும்படி கடந்தவாரம் மைத்தரி கூறியநிலையிலும் ரணிலின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரைக்கு மத்தியிலும் மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் இந்த இடித்துரைப்பு வெளிவந்துள்ளது.

ஆயினும் மகிந்த மைத்திரி இடையிலான இடைக்கால அரசாங்கம் குறித்தபேச்சுகளில் ஆதாரம் இருக்குமானால் அதற்கு சேதாரம் ஏற்படாமல் இருக்க இந்த வருடமுடிவுக்குள் காணிவிடுவிப்பு போன்ற நகர்வுகளில் மைத்திரி ஆர்வப்படவும் கூடும். ஆனால் இது சற்றுப்பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.

இதற்கிடையே சிறிலங்கா பொதுஜனபெரமுன எனப்படும் மஹிந்தாவாதிகளின் தாமரை மொட்டின் கீழ் உள்ள 40 க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41 பேரும், நேற்று மாலை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் வதிவிடத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

இலங்கைத்தீவில் எதிர்கொள்ளக்கூடிய தேர்தல்கள் குறித்து இவர்கள் தமக்கிடையில் குசுகுசுத்ததாக தெரிகிறது.

தேர்தல்கள் நெருங்கிவந்தால் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமது வாக்குவங்கி சார்ந்த பிடிமானக்கேள்விகள் உள்ளன.

அந்தவகையில் கடந்தபெப்ரவரி 10 இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களம் யானைக்கும் கைக்கும் சாதகமாக இருக்கவில்லை.

அதேபோல மஹிந்தாவாதிகளின் தாமரைமொட்;டும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை இதனால் தெற்கில் முத்தரப்பு தேர்தல் சடுகுடுக்களும் அதேபோல வடக்குகிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை உரசக்கூடியமாற்றுத்தலைமை பெயரிலான தமிழ் சடுகுடுக்களும் இடம்பெறவே செய்யும்

இதுவும் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயம்.

இவ்வாறான பின்னணிகளுடன் தான் அரசியலமைப்புச்சபைக்கு புதியவர்களை நியமிப்பது குறித்த நகர்வுகள் தீவிரப்படுகின்றன. புதிய அரசியலமைப்பு என்ற வண்டி காற்றுப்போய் நின்றாலும் அரசியலமைப்புச்சபைக்கு புதியவர்களை நியமிக்கும் நகர்வுகளுக்கு குறைச்சல் இல்லை

ஆதிலம் நாட்டில் அரசியல் கைதிகள் என யர்ரும் இல்லையென பெரும் கண்டுபிடிப்பை கூறிய சிறிலங்காவின் நீதிஅமைச்சர் தலதா அத்துகோரளவின் பெயரும் இந்த முறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனது நியமனத்துக்குப்பின்னர் தமிழர்களுக்கு அரசியல் பிரச்சனை என ஒன்று இல்லையென அவர் கூறாமல் இருந்தால் சந்தோஷம்

எது எப்படியோ அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கவேண்டிய புதியஉறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் சபாநாயகர், கரு ஜயசூரியவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதால் இந்த வாரத்துக்குள் அரசியலமைப்புச் சபை புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுவிடுவார்கள்.

பத்து உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்புச் சபையில் இந்தமுறை எதிர்கட்சிதலைவர் என்ற அடிப்படையில் இரா.சம்பந்தன் மற்றும் கொழும்புப்பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் செல்வகுமாரன் ஆகிய தமிழ் முகங்கள் மட்டுமே உள்ளன..

ஆனால் அரசியலமைப்புச்சபை போன்ற நகர்வுகளுக்கு இடையே தமிழர்களுக்கு ஏதாவது ஏறுமுகப்படக்கூடுமா?

நிச்சயமாக. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைச்சாலையில் உண்ணாநிலைப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்அரசியல் கைதிகளில் மூவர் தான் சுகயீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த நிலைமை ஏறுமுகப்பட்டு நேற்று ஐந்து தமிழ்அரசியல் கைதிகள் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்;டனர்.

ஏற்கனவே 3 தமிழ்அரசியல் கைதிகள் தமது கோரிக்கைகளுக்கு நீதிகிட்டாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அந்த தொகை 5 ஆக அதிகரித்தமை நல்லாட்சிக்காலத்தின் ஒரு உயர்வுதானே!

இதையும் தவறாமல் படிங்க
`