ஒப்பரேஷன்பவான்- புலிகள்- ஜேயார் - இன்று 31 ஆம் வருடம்.

  • Prem
  • October 11, 2018
54shares

அத்திப்பூவைக் கண்டது யார்? ஆந்தைக்குஞ்சைக் கண்டது யார் என்பார்கள் அது போல என்ன இது? என நினைத்து இலங்கையர்கள்; ஆச்சரியமாக முழிக்கும் அல்லது விழிக்கும்வகையில் அவர்களுக்கு இன்னொரு நல்வாய்ப்பற்ற நாள் விடிந்தது.

ஒருமாதகாலப்குதியில் இரண்டாவது முறையாகவும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் யாருக்குத்தான் அது நல்லநாளாக அமையக்கூடும்.

புதிய எரிபொருள் விலைச்சூத்திரத்துக்கு அமைய எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாக சிறிலங்காவின் நிதியமைச்சு இந்தமுறையும் வக்காலத்து வாங்கியது.

சாமானியர்களுக்கு இந்த எரிபொருள் விலைச்சூத்திரங்கள் புரியாமல் விட்டாலும் அவர்களின் பணப்பைகள் சில யதார்த்தங்களை புரிந்து கொள்ளவே செய்யும்.

எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டால் இனியென்ன ஒரு டொமினோ ஆட்டத்தைப்போலவே இலங்கையில் அப்பம் முப்பழம் அமுது எல்லாமே அதிகரிக்கக்கூடும்.

30 நாட்களுக்கு இடையில் நடந்த இந்த இரண்டாவது விலையேற்றம் மக்களின் சீற்றத்தைப்பெற்றாலும் இவ்வாறு விலை அதிகரிப்பைத்தவிர நல்லாட்சித்தரப்பின் கஜானாவுக்கும் வேறு வழியும் இல்லை.

ஏனெனில் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதபடி இலங்கைத்தீவு இப்போது 4 ட்ரில்லியன் ரூபாவை( ட்ரில்லியனுக்கு எத்தனை பூச்சியம்?) கடன் சுமையாக சுமக்கிறது. நல்லாட்சியால் தான்; என்ன செய்ய முடியும்.

ஆயினும் அடுத்த வருடத்துக்குரிய வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகை 644 பில்லியன் ரூபாவாக இருந்தாலும் பாதுகாப்பு செலவீனங்களுக்கு குறைச்சல் இல்லை. இந்த வரவு செலவுத்திட்டத்தில்பாதுகாப்பு அமைச்சுக்கே அதிக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

கடந்தமுறை பாதுகாப்பு செலவீனத்;துக்கு 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது அதனைவிட அதிகமாக போர்ச்சூழல் அற்ற நாட்டுக்கு 306 பில்லியன் தேவைப்படுகிறது. அதாவது 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நிதியமைச்சர் மங்கள சமரவீர போன்றவர்களோ இவ்வாறான எரிபொருள் விலையேற்றங்களை இன்ரநசனல் விலையேற்றங்களால் வந்த வினைகள் என எதிர்வினைகளைக் கூறிச்சமாளிப்பது மட்டுமல்ல

ரணில் விக்கிரமசிங்க உள்ளவரை நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாது வீழ்ச்சியடைய இடமளிக்கப் போவதுமில்லை என வஞ்சக புகழ்ச்சிபாடுகின்றனர்.

இதனால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் என கூறும் ரணில்; போகிற போக்கில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கலந்துரையாடுவோம் எனக்குறிப்பிட்டு தமிழர்தரப்பையும் சமாளிக்க முனைகிறார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது ரணிலின் இந்த சமாளிப்பு நிலை வெளிப்பட்டது.

ஆனால் தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் இன்னமும் எவ்வளவு காலத்துக்குத்தான் இவ்வாறான சமாளிப்புகள் இழுத்தடிப்புகள் நகர்த்தப்படுமோ தெரியவில்லை.

இதற்கிடையே நல்லாட்சியின் சிக்கல்களை தனக்குரிய முதலீடாக மாற்றும் ஆதாயத்துடன் பரபரக்கும் மஹிந்தாவாதிகளும் தமக்கிடையில் தீவிரமான சந்திப்புக்களை நடத்திவருகின்றனர்

அந்த வகையில் இன்றுமாலையும்; ஒன்றிணைந்த எதிரணியின் பிரதிநிதிகளுக்கும் மஹிந்தவுக்கு இடையில் சிறப்புச்சந்திப்பொன்று இடம்பெற்றதாகதெரிகிறது.

நேற்று ஏற்கனவே இவ்வாறான ஒருசந்திப்பு ஜி. எல் பீரிஸ் வீட்டில் இடம்பெற்ற நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து புதியஇடைக்கால அரசாங்கம் ஒன்றைஅமைப்பதற்கான இரண்டாம் கட்டப்பேச்சுக்களின் வகைக்குள் இன்றையசந்திப்பு நடத்தப்பட்டதாக கொழும்புப்பட்சிகள் கூறின

இன்று இடம்பெற்ற இவ்வாறான சந்திப்புகள் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடிக்குமோ தெரியவில்லை ஆனால் ஒக்டோபர் 11 ஆந் திகதியாகிய இற்றைக்கு 31 வருடங்களுக்கு முன்னர் இலங்கைத்தீவின் வரலாற்றில் தமிழர் தாயகத்தில் ஒரு கசப்பான பதிவு எழுதப்பட்ட நாள் இன்று

அந்தத்தீவின் வரலாற்றில் அதிக நாட்களுக்கு ஊரடங்குச்சட்;டம் பிறப்பிக்கப்பட்ட கரும்புள்ளி நாள் இன்றையநாள்.

87 இன் இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தத்துடன் இலங்கையில் சென்ற இந்தியப்படையினர் தமது போர் பிரகடனத்தை செய்தபின்னர் யாழ்குடாவைக் கைப்பற்றும் வியுகத்துடன் முப்பத்து ஐந்து நாட்களுக்கு ஊரடங்குச் சட்டத்தைப்பிறப்பித்த நாள் இன்றைய நாள். இந்தியராணுவம் எங்களைக் காப்பாற்றும் என தமிழர் தாயக குடிமக்கள் கொண்டிருந்த ஆரம்பகால நம்பிக்கை அவ நம்பிக்கையாக யூ வடிவத்திருப்பம் எடுத்த நாளும் இது.

இந்தக்காலகட்டத்தில்தான் இந்தியப்படையினரின் ஒப்பரேசன் பவான் ராணுவ நடவடிக்கையும் அதற்கு எதிரான விடுதலைப்புலிகளின் நகர்வுகளும் சுழன்றடித்தன

ஒக்டோபர் 21 ஆம் திகதியன்று யாழ் மருத்துவமனையில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான படுகொலை உட்பட்ட பல படுகொலைக்களங்களின் முதற்புள்ளி இதுதான்.

இந்தியாவும் புலிகளும் மோதியதாக அல்லாமல் மோதவைக்கப்பட்ட இந்த கசப்பான வரலாற்றின் 31 வது வருடநினைவு கடந்தாலும் இன்னமும் தமிழர்கள் இனிப்பாக வரலாற்றை இலங்கையில் பெறவில்லை.

புராதனசீனர்களிடம் ஷெங்குமெய்க்கோள் ஒன்று உள்ளது.

இரண்டுபுலிகள்மோதிக்கொள்ளும்போது மலையுச்சியில் அமர்ந்து நீ அதனை பார்த்துக்கொண்டிருஎன்பதாக அதன் தமிழாக்கத்தை எடுத்துக்கொள்ளலாம்.

அவ்வாறாக 31 வருடங்களுக்கு முன்னர் இன்றைய நாளில் இலங்கைத்தீவில் இந்தியப்படையினரும் விடுதலைப்புலிகளும் மோதியபோது ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் அதனைத்தான் செய்தார்.

இரண்டுதரப்புக்களை மோதவைத்து மலையுச்சியில் இருந்து அதனை வேடிக்கை பார்த்த கைங்கரியம் அவருடையது.

1987 இல் இந்தோ- சிறிலங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது சிங்கள மகாஜனதாவுக்கு ஒரு செய்தியை கூறியஅவர் தாக்குவதற்காக ஓங்கிய கரத்தை அணைக்கும் கரமாக மாற்றினேன் என்றார். அதற்கு மேலாக இன்னொரு உபரிச்செய்தியையும்; சொன்னார்

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உறைவாளை சிறிகோத்தாவின் வாசலில் கட்டித்தொங்க விடுவேன் என்றார். இங்கு சிறிகோத்தா எனப்படுவது ஐக்கியதேசியக்கட்சியின் தலைமையகம் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாக்குநீரிணைக்கு அப்பால் உள்ள அசோகச்சக்கரத்தால் விடுதலைப்புலிகளைக் கையாள்வது, என்ற சூட்சுமத்துடன் தனக்குரிய எதிரிகளையும் மோதவிட்டு ஒரு வெற்றியைக்கண்டார் ஜெயவர்த்தன.

அதன் நீட்சிகளின் தாக்கம் இன்று ஈழத்தமிழர்களையும் கையறுநிலைக்கு தள்ளியிருக்கிறது. ஆயினும் புதியஅரசியலமைப்பின் ஊடாக தமிழருக்கு அதிகாரப்பகிர்வு செய்யப்படுமென கூறப்பட்டது.

ஆனால் அரசியல்கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு போன்ற நடைமுறைச்சாத்தியமான பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப்படாமல் அலைக்கழிப்புகளின் தொடர்ச்சிகள்இடம்பெறுகின்றன.

இதற்கும் அப்பால் இப்போதுதான் அரசியலமைப்புச் சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத மூவரை நியமிப்பதற்கு சிறிஜெயவர்த்தனபுர வளாகத்தின் அனுமதி கிட்டியதாக தெரிகிறது.

இதனடிப்படையில் இனிமேல்தான் பேராசிரியர் தனபால, ஜாவிட் யூசுப், செல்வகுமரன் ஆகியோர் அரசியலமைப்புச்சபையில் நியமிக்கப்படவுள்ளனர்.

இனி இவர்களும் ஏனையஉறுப்பினர்களும் கூடிப்பேசி புதியஅரசியலமைப்பு வருவதற்கு இடையில் இதனைக்பேசிக்கொண்டிருப்பது வண்டிக்குப்பின்னே குதிரையை கட்டும்நிலைக்கே ஒப்பாகக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க