வடக்குக்கு ஒளியேற்ற “கூரே”பெற்றோமக்ஸ் விளக்கேதான் வேண்டுமா?

  • Prem
  • October 12, 2018
41shares

இலங்கைத்தீவின்நல்லாட்சியின் இரண்டு முகங்களான மைத்திரியும் ரணிலும் இப்போதெல்லாம் மக்களின் வரிப்பணத்தில் அடிக்கடி வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொன்கின்றனர்.

வரிப்பணத்தில்மேற்கொள்ளப்படும் இந்த ஊர் ஊலாத்தல் கருத்தியல் குறித்து இன்று கொழும்பில் வெளியான முக்கிய ஆங்கிலத்தினசரி ஒன்றும் தனது சிரிப்பு ஓவியப்பக்கத்தில் போட்டது.

மைத்திரி ரணில் ஆகியோரின் பயணச்செலவீனத்துக்கு தத்தமது சொந்தப் பணப்பைகளில் அடிவாங்கும் சாமானிய மக்களின் வரிப்பணம் உள்ளிடப்படுவதை சித்தரிக்கிறது இந்தச்சிரிப்பு ஓவியம்.

ஆனால் இலங்கையர்களுக்கு இதனைப்பார்த்தால் சிரிப்பாக சிரிப்பு வருமோ தெரியவில்லை. ஏனெனில் எரிபொருட்களின் புதியவிலை அதிகரிப்பு ஏற்றிவிட்ட பயணக்கட்டண அதிகரிப்பு கடுப்பில் மகாஜனங்கள் உள்ளனர்.

நேற்று உடனடியாகவே ஓட்டோ எனப்படும் முச்சக்கரவண்டிகளின் பயண கட்டணம் 10 ரூபாயால் இன்னும் எகிறிய கவலைஅவர்களுக்கு.

ஆயினும் இவ்வாறான ஏற்றங்கள் மற்றும் எகிறல்கள் உடாக சாமானியர்களின் வரிப்பணங்களில் இடம்பெறும் பெரிய தலைகளின் பயணங்கள் மட்டும் முடியமாட்டாது.

அந்தவகையில்அடுத்தவாரம் ரணில் விக்கிரமசிங்க பெரியண்ணனான இந்தியா வீட்டுக்குப் பயணப்படத்தயாராகின்றார்.

ரணிலின் டெல்லிவிஜயத்தில் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியுடனான சிறப்புச் சந்திப்பு ஒன்றும் காத்திருக்கிறது.

2019 ஐ பொறுத்தவரை பெரியண்ணன் வீட்டுக்கும் அதன் சின்னத்தம்பி இலங்கைவீட்டுக்கும் முக்கியமானது. ஏனெனில் அக்கரைக்கும் இக்கரைக்கும் இது தேர்தல் ராசிக்காலம்

அடுத்தவருடம்இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல இலங்கையிலும் சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தல்களமும் களைகட்டக்காத்திருக்கிறது.

பெரியண்ணனுக்குஇலங்கையில் இந்த நல்லாட்சி(?) போதுமா? இல்லை கொஞ்சம் மாற்றுத்தேவையா? என்பதை நாடிபிடித்து பார்க்கவேண்டிய பொறுப்பும் ரணிலுக்கு உரியது. இதனால் அடுத்த வாரத்தின் ரணில்- மோடி சந்திப்பு முக்கியதாகவே நோக்கப்படும். ஆனால் இலங்கையில் இப்போது பேசப்படும்

புதிய அரசியலமைப்புப் பேரவையால் தமிழ்மக்களுக்கு பலன்கள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதங்களை எழுதினேன் நேரில் கூறினேன் இவ்வாறு செய்தே களைத்துப் போய்விட்டடேன் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெரிதாக சலித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று தன்னை சந்தித்து கலந்துரையாடிய போது அவரது இந்த சலிப்பு நிலை வெளிப்பட்டது.

அத்துடன் இந்த நாட்டில் அரசியல் கைதிகள் இல்லை என கடந்தவாரம் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் தலதா அத்துக்கோரல கூறியகருத்தை கடுமையாக முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன் விமர்சித்தார்.

இந்த கருத்து மிக தவறானது. தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னார்.

இவ்வாறாக நிலையில் தமிழ் மக்களுக்கு இதுவரை பயன்படாத அரசமைப்புப் பேரவை இன்று தனது இரண்டாம்கட்ட ஆட்டத்தில்புதிய அரசமைப்புப் பேரவையாக இன்று முதன்முறையாகக் கூடிப்பேசியது.

ஆனால் இந்த முறையும் அதன் பணி றபர்ஸ்ராம் எனப்படும் ஒரு தலையாட்டும் பணியாக இருக்கும் போலவே தோன்றுகிறது.

இதனால் மைத்தரியின் புதிய பிரதம நீதியரசர் தெரிவுக்கு அது இன்று ஓ.கே சொல்லியது.

றிலங்காவின்பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில்

அவரது இடத்துக்கு மைத்திரியின் அடுத்த தெரிவாக இருந்த நீதியரசர் நளின் பெரேராவுக்கு புதிய அரசியமைப்புப்பேரவை அங்கீகாரத்தை வழங்கியது.

ஏனெனில் இந்தஅரசியலமைப்புப்பேரவையில் பிரதமர் சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் நிரந்தரத்தலைகளாக உள்ளனர். இதற்கு மேலதிகமாக மைத்திரியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவரின் அதாவது இரா. சம்பந்தனின் பிரதிநிதியாக ராஜபச்ச குடும்ப நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவும் ரணிலின் பிரதிநிதியாக, அமைச்சர் தலத்தா அத்துகோரளவும் உள்ளனர்.

அதேபோல குடிசார் செயற்பாட்டாளர்களாக பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட்யூசூப் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்டவிரிவுரையாளர் நாகநாதன் செல்வகுமாரன் ஆகியோரும் அனுமதிபெற்று விட்டனர் இந்த புதிய குழுமத்தின் ஆயுட்காலம், 3 வருடங்களுக்கு இருக்கக்கூடும்.

ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனின் பிரதிநிதியாக ராஜபக்சகுடும்ப நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இருந்தாலும் தமிழ்மக்களுக்கு இதில் உள்ள சிறப்பு நன்மையாது.?

இந்தவினாவுக்குசாதகமான பதில்கள் ஏதும்இல்லை. இதுவரை இந்த அரசியலமைப்புப்பேரவை பதவி நியமனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளுக்கு மட்டும் ஒத்தூதியதாகவே இருந்தது

இதனால்தான் இது குறித்த சர்ச்சைகளுக்கும் குறைவு இருப்பதில்லை. நேற்று கூட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இதனை மையப்படுத்தி கடும் தர்க்கம் இடம்பெற்றது.

இப்போது கூட இந்தக்கட்டமைப்பில் சிறிலங்காவின் நீதி அமைச்சர் தலத்தா அத்துகொரளவும் இருக்கிறார். அதேகட்டமைப்பின் ஊடாகத்தான் பிரதம நீதியரசரசரும் நியமிக்கப்படுகிறார்.

இதனால்தான் இதில் சுயாதீனத்தன்மை இல்லையென, மகிந்தாவாதிகள் கூடப்பாடு போடுகின்றனர் சிறிலங்கா காவற்துறை மா அதிபர் குறித்து அண்மைய நாட்களில் கடும் விமர்சனங்கள எழுந்தநிலையில், அவரை விசாரிக்கக்கூட இந்தக்கட்டமைப்பு கரிசனை காட்டவில்லை. என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாறன குற்றச்சாட்டுகள் மற்றும் கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு ஊடாகத்தான் குடிசார் செயற்பாட்டாளர்களுக்குரிய நியமனம் உறுதிப்படுத்தப்பட்டது.

சிறிலங்காவின்உள்ளக ஆட்டங்கள் இவ்வாறு இருக்க அதன் வெளியரங்க ஆட்டங்களும் பரபரப்பாக இடம்பெறுகின்றன.

குறிப்பாக சற்றும் மனந்தளராத பாணியில் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் மக்களுடன் சந்திப்புக்களை நடத்த வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தொடர்ந்தும் முயன்று வருகிறார். ஏற்கனவே லண்டன் சந்திப்புகள் பிசுபிசுத்தன. இந்த நிலையில் தனது செயலாளரான லட்சுமணன் இளங்கோவன் சகிதம் ஆங்கிலக்கால்வாயை கடந்த அவர் பிரான்ஸ் பரிஸில் புலம்பெயர் தமிழர்களைச் சந்திக்கப்பிரயத்தனப்பட்டார். அதுவும் பிசுபிசுத்தாகவே தெரிகிறது

ஆனால் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே தனது கரங்களில் வைத்திருக்கும் தாயகமக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றவேண்டிய பொறுப்புக்குறித்த சூத்திரம் யதார்த்தமானது.

போருக்குப்பின்னர்வடக்கு கிழக்கில் உட்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களின் அன்றாட வாழ்வை வளப்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அவரது துன்பியல் பாட்டு கருத்தியலும் ஏற்கப்படக்கூடியது.

ஆனால் எதிர்வரும் 24ம் திகதியுடன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வட மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த மாகாணசபைத்தேர்தல் இடம்பெறும் வரை ஆளுனர் ஊடாக கொழும்புஅதிகாரமையம் செய்யக்கூடிய தில்லால்கடிகள் இங்கு கேள்விக்கு உரியது. அது சரி வடக்கு மக்களுக்கு ஒளியேற்ற ஆளுநர் றெஜினோல்ட் கூரே என்ற பெற்றோமக்ஸ் விளக்கேதான் வேண்டுமா?

இதையும் தவறாமல் படிங்க