முப்படைகட்டளைத்தளபதி இனி சபாநாயகரா? விடாது துரத்தும் சிறிலங்கா நாடகங்கள் !

  • Prem
  • November 21, 2018
111shares

பிட்டுக்கு மண்சுமந்த ஈசன் முதுகில் விழுந்த அடி இந்த உலகின் உயிர்கள் அனைத்திலும் விழுந்ததாகக்கூறும் அந்தக்கால புராணக்கதையைப்போலவே இந்தக்காலத்தில் இலங்கையில் மைத்திரி மகிந்த ரணில் நடத்தும் ஈகோ எனப்படும் தன்முனைப்பு விளையாடல்களால் இலங்கைக்கு கிட்டிவரும் அடி இப்போது பொருளாதாரத்தளம் உட்பட எங்கும் எதிரொலிக்கின்றது

மகிந்தவை பின்கதவு வழியால் கொலுவிருத்திய மைத்திரியின் நகர்வால் உருவாகிய இந்தக் கெடுகுடி ஆட்டம் ஏற்கனவே நாடாளுமன்ற அடிதடிகள் அமளி துமளிகள் மிளகாய்தூள் தண்ணி தெளிப்பு போன்ற தெளிவான ஜனநாயக பதிவுகளையும் பெற்றுவிட்டது.

இந்த அதிர்வுகள் இப்போது பிரதேச சபைகளுக்கும் தொற்றிவிட்டது. அந்த வகையில் இன்று பலப்பிட்டிய பிரதேச சபையில் இரண்டு தரப்புக்களும் அடிபட்டுக்கொண்டன.

மைத்;திரியின் ஜனநாயகவிரோத நகர்வுகள் குறித்து ஐ.தே.க யானைகள் பிளிற பதிலுக்கு சபாநாயகர் கருஜயசூரிவை மகிந்த மைத்திரி கூட்டணிமுகங்கள் காய அதுவே ஒருகட்டத்தில் அடிதடியாக மாறியது.

நாட்டின் உயரிய சட்டவாக்க சபையாகக்கருதப்படும் நாடாளுமன்றத்திலேயே சண்டித்தன அடிபாடுகள்இடம்பெறும்போது குட்டிமன்றங்களில் அதன் அதிர்வுகள்இடம்பெறுவதொன்றும் ஆச்சரியமானதல்ல.இந்த அடிபாடுகளுக்கப்பால் சபை அமர்வின் போதே அதன் உறுப்பினர்கள் ஆபாசகாணொளிகளைப் பார்வையிட்ட கண்ணுறாவிகளும் மேல் மாகாணசபை யில் நேற்றுஇடம்பெற்றன.

பெருநிதியைக்கொட்டி மேல் மாகாணசபைக்கு புதிய கட்டடம் ஒன்றையமைத்து அதற்கு அதிவேக இணையத்தொடர்பை வழங்கி முதலாவது அமர்வை நடத்த அந்த முதல் அமர்வில் அதுவும் முதலமைச்சரால் வரவு செலவுதிட்டம் சமர்ப்பிக்கபட்டவேளையில் உறுபபினர்கள் ஆபாச காணொளிகள் பார்த்து இன்புற்றனர்.

இவ்வாறு மக்கள் மன்றங்கள் சந்திசிரிக்க இந்த அதிர்வுகளின் தாக்கம் பொருளாதார ரீதியில் இலங்கையை அடிப்பது நிதர்சனமாகிவிட்டது. அந்தவகையில் இலங்கைக்கு அனைத்துல நாணய நிதியம் வழங்க உடன்பட்ட கடன்தொகையின் ஒரு தவணை நிதி முடக்கப்படுகிறது.

அரசியல் கொந்தளிப்பு நிலவும்நாடுகளை மையப்படுத்தி மேற்குலகம் அல்லது அதுசார்ந்த நிதிமுகமை நிறுவனங்கள் எடுக்கக்கூடிய இவ்வாறான நகர்வுகள். எதிர்பார்க்கத்தக்கதே!

பெருந்தொகையாக கடன்பட்ட நாடுகளில் இவ்வாறு நிதியும் நீதியும் இவ்வாறு கரியாக்கப்படுவதை அனைத்துலக நிதிமுகமை நிறுவனங்கள் சகிப்பதில்லை. இது இலங்கைக்கும் பொருந்தும். இதனால்தான் அனைத்துல நாணயநிதியம் இலங்கைக்கான கடன்தொகையை முடக்கத்துணிந்தது.

இவ்வாறான முடக்கங்களுடன் தொடரும் அதிர்வுகளால் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் ஒருமுறை வீழ்ச்சியடைந்து அதிகவரலாற்று வீழ்ச்சியாக பதிவானது. இதேபோல நாடுகளின் நிதிநிலைமையை கணிப்பிடும் உலகின் முன்னணி மூடீஸ் நிறுவனம், இலங்கையின் கடன்தரப்படுத்தலை மேலும் தரமிறக்கிய நகர்வும் இடம்பெற்றது. பி-1 என்ற நிலையில் இருந்து இப்போது இந்த சுட்டி பி-2 வுக்கு நகர்ந்துவிட்டது

ஆகமொத்தம் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் ஏற்பட்ட தற்போதைய அரசியல் குழப்பங்கள் நாட்டை, பொருளாதார படுகுழி விளிம்புவரை கொண்டுவந்துவிட்டது. இனி எப்போது வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படுமென்பதும் தெளிவாகத்தெரியவில்லை.

அவ்வாறு இடம்பெறாமல்விட்டால்,2019 புத்தாண்டு பிறக்கும்போது கூடவே இலங்கைக்கு கஷ்டமான ஆண்டு ஒன்று நிச்சயமாகவே பிறக்கும் அரசாங்கம் நிதியற்று முடங்கக்கூடிய நிலை எல்லாத்துறைகளிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தும்

ஆனால் இவ்வாறெல்லாம் சவால்கள் காத்திருந்தாலும் அடாது மழைபெய்தாலும் விடாதுநடத்தப்படும் நாடகங்கள்போல அரசியல்வாதிகளின் அரங்கக்காட்சிகள் தொடர்கின்றன.

அந்தவகையில் சபாநாயகர் கரு ஜயசூரியா மூலம் பிரதம நீதியரசர் சுனில் பெரேராவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாகவும் அதில்அரசியலமைப்பின் 37.2 சரத்தின்படி அரசதலைவருக்கு இருக்கும் அதிகாரங்களும் முப்படைகளுக்குரிய கட்டளைத்தளபதி பொறுப்பு ஆகியவற்றை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டுமென கோரப்பட்டதாகவும் சமூகவலைத்தளங்களில் வத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து இது போலியான செய்தியெனக்குறிப்பிட்ட கரு ஜயசூரியா தரப்புஇன்று இது தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றையும் செய்துள்ளது

இதற்கிடையே இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி முகமான வசந்த சேனாநாயக்கா கலந்து கொண்ட கூத்தும் இடம்பெற்றது. இந்த அரசியல் குழப்பங்கள் ஆரம்பித்தபோது ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்த தாவி மகிந்தபக்கம் சென்றவர் வசந்த சேனாநாயக்கா. ஆனால் பின்னர் மகிந்த அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தெரிந்தால் தனது பதவிதுறப்பதாக அறிவித்துவிட்டு பழையபடி ரணிலிடம் ஓடினார். ஆனால் இன்று மீண்டும் வசந்த சேனாநாயக்காவின் தலை அமைச்சரவைக்கூட்டத்தில் தெரிந்தது.

இந்தநிலையில் இந்தப்பிரச்சனைக்குள் சிக்கியதமிழ்மக்களின் நிலைமை குறித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சக சிறிலங்காவின் எதிர்க்கட்சித்தலைவர் என்றபொறுப்பில் இரா.சம்பந்தன் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளுக்கு தற்போது வாய்திறந்துசொல்லியுள்ளார்.

தற்போதைய நிலைமை தொடர்ந்தால் அதன் முழுப்பாதிப்பை தமிழ் மக்கள்; எதிர்கொள்வார்கள் என்பதும் இரா. சம்பந்தனின்எச்சரிக்கையாக வந்தது.அதாவது நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும், கேள்விக்குள்ளாகியதாக விசனப்பட்ட அவர் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மேற்குலகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத்தெரிவித்தார்.

இராசம்பந்தன் கூறியவிடயங்களை செவிமடுத்த இராஜதந்திர முகங்கள் தங்களால் என்ன செய்ய முடியுமோ, அதனை தாங்கள் செய்வோமென பதிலளித்துவிட்டு நகர்ந்தனர். இலங்கையின் அரசியல் குழப்பங்களில் மேற்குலம் என்ன செய்யும்? அதனை எப்படிச்செய்யும்? இல்லை இது ஒரு முத்தாய்ப்பு மட்டுமா? இவ்வாறு பலவினாக்கள் உள்ளன. ஆனால் விடைகள் தான் தெரியவில்லை.

இதையும் தவறாமல் படிங்க