அரசியல் இழுபறிக்கு நாளை தீர்வு! நம்பிக்கையா? ...நம்பி…கை வைப்பா?

  • Prem
  • November 22, 2018
43shares

தலைக்குத்தலை பெரியதனம் ஆனால் உலைக்குத்தான் அரிசியில்லையாம் இவ்வாறு ஒரு பழமொழி உண்டு! அது போலவே இலங்கையில் இரண்டு தலைகளும் யானே பிரதமர் …யானே பிரதமர் என செப்பினாலும் சிறிலங்கா என்ற தேசத்துக்கு கடந்த 3 வாரங்களாக அரசாங்கம் இல்லை.

நாளைக்காலை மீண்டும் ஒரு சிறிலங்கா நாடாளுமன்றம் கூடிக்கொள்ளும் போது அரசாங்கமற்ற இந்த இழுபறி நிலைக்கு ஒரு தீர்வுவருமென்ற நம்பிக்கையில் நம்பி கை வைப்போரின் வகிபாகம் இன்றளவில் மிகச்சிறியதே!

ஒருவேளை நாளை இவ்வாறு ஒரு சுமுகநிலை ஏற்பட்டால் கொழும்பில் உயர்ந்து நிற்கும் ஆசியாவின் அதிசய தாமரைக்கோபுரத்தடாகத்தை விட இதுவே அதிசயமாகலாம்.ஆனால் தற்போதைய நிலையில்; அதியங்களுக்கு அறிகுறிகள் இல்லை இழுபறிகளே நிரந்தரம். இப்போது பிரதமரின்செயலாளருக்குரிய நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்துவதற்குரிய பிரேரணைகுறித்து அதிகமாக பேசப்படுகிறது.

நிதி தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே இருப்பதால் கடந்த 15 ஆம் திகதி முதல் அரசாங்க நிதியை செலவிட பிரதமரின் செயலாளருக்கு எந்த அதிகாரமும் கிடையாதென ரணில் மேற்பார்த்த ஐக்கியதேசியமுன்னணி வாதிடுகின்றது.

எதிர்வரும் 29 ஆம் திகதி இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கவிருப்பதாகவும் அது கூறுகின்றது.

ஆனால் மறுபுத்தே நடக்காது! ஜம்பம் பலிக்காது!! பாணியில் இந்தப்பிரேரணையை 29ஆம் திகதி விவாதத்துக்கு எடுக்கும் கதை எல்லாம் இங்கு நடக்காதென மைத்திரி மகிந்த தரப்பு வாதிடுகின்றது.

நாளை மீண்டும் நாடாளுமன்றம் கூடவிருந்தாலும் மைத்திரி அறிவுறுத்திய இந்த நாடாளுமன்றத்தெரிவுக்குழுவுக்கு மைத்திரி மகிந்த தரப்பைத்தவிர நேற்றுவரை வேறு எந்தக்கட்சியும் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பகிரங்கப்படுத்தவில்லை. ஆகமொத்தம் இலங்கையின் இப்போதைய நிலையை அனக்கி (anarchy )எனப்படும் அரசின்மை சார்ந்த அரசியல் கோட்பாட்டுடன் சிலர் தொடர்புபடுத்திப்பேசுவதை நோக்க முடிகிறது. அதில் ஓரளவு காரணங்கள் இருக்கலாம்.

ஏனெனில் அனக்கி எனப்படும் அரசின்மையானது அரசை அல்லது அதிகாரத்தை மட்டுப்படுத்தும் நகர்வை அல்லது அதனை இல்லாமல் செய்யும் நகர்வுடன் தொடர்புடையது. ஆட்சியாளர் இன்றி எனபொருள்படக் கூடியவகையில் கிரேக்கமொழியில் உருவாகிய இந்த அனக்கி என்ற பதமானது தமிழில் சமஸ்கிரதச்சொல்வழிவந்த அராஜகம் என குறிப்பிடப்பட்டாலும் இந்த அர்த்தம் எவ்வளவு தூரம் சரியானது என்பதிலும் ஒரு வினா இருக்கலாம்.

எது எப்படியோ ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் இந்த அனக்கி( anarchy) குறித்து நேற்று சிறிலங்காஅரசியலின் இரண்டு முக்கிய முகங்கள் பேசியுள்ளன. முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரநாடு"பொருளாதார அராஜகத்தின்"விளிம்பில் உள்ளதென்றார். அதாவது economic anarchy என்ற பதத்தை பிரயோகித்தார்.

அதேபோல ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கா பெரியண்ணன் வீட்டின் தி ஹிண்டு நாளிதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் நாட்டின் தற்போதைய anarchy and instability எனப்படும் அராஜகம் மற்றும் உறுதியற்ற தன்மைக்கு மைத்திரிதான் காரணம் என குற்றஞ்சாட்டினார். ஆகமொத்தம் முக்கிய அரசியல்தலைகள் அனைத்தும் இந்த அனக்கி குறித்துப்பேசியுள்ளன.

ஒரு சிறியதிருடன் சிறையில் அடைக்கப்பட்டான் ஆனால் ஒரு பெரிய மலைக்கள்ளன் ஒரு தேசத்தின் ஆட்சியாளராக இருக்கிறான் என்றார் சீனத்தத்துவஞானி யுவாஞ்சி.

இப்போது சிறிலங்காவில் அனக்கி எனப்படும் அரசின்மையற்ற நிலைகுறித்து பேசப்பட்டாலும் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் சீனத்தத்துவஞானி யுவாஞ்சி சொன்னகருத்தையும் இங்கு நீங்கள் அவதானிக்லாம்.

அதெல்லாம் சரிதான் அரசின்மையற்றநிலை; அடுக்கதிகார ஆட்சி நிலைகளை விடுமைய்யா இலங்கையில் அடுத்து என்ன என்பது தானேயைய்யா இங்கு விசயமே என கடுப்பாகின்றீர்கள். எது எப்படியோசிறிலங்கா நாடாளுமன்றத்தில் நாளை என்ன நடக்கும் என்பதில் யாருக்குமே துல்லியமான விடைகள் தெரியவி;ல்லை. இதற்குள் அடிதடிகள் நடக்குமா என்பது வேறு ஒரு திகில் பொதிந்த வினா.

அதுவரை தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரனாவது போல அரசியல்வாதிகள் கருத்துக்கந்தசாமிகளாகி மாறி சொல்லும் கருத்துக்களைகண்டு சகிப்பதைத்தவிர வேறு வழியில்லை.

அந்தவகையில் மஹிந்த பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தநகர்வு, அரசியலமைப்பின்படி இடம்பெற்றுள்ளது என்பதை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ள்தாக ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்தஅமரவீர சொன்னார்.

அவர் கூறுவது கூறியது போலவே அப்படிஇடம்பெற்றால் ஏன் இவ்வளவு சவால்களை யானைகள் தமது தரப்பு மீது தொடுக்கின்றன என்பதில் அவருக்கும் விடையில்லை.மைத்திரி மகிந்த தரப்பில் மட்டும் இந்தக் கருத்துக்கந்தசாமி பிரச்சனையில்லை.மாறாக யானைகளின் தரப்பிலும் அது உள்ளது.

இதனால்தான் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் சரியான விளக்கம் இல்லாமல் கருத்து தெரிவிப்பதில் இருந்து விலகி இருக்குமாறு தனது சொந்தக்கட்சியின் உறுப்பினர்களுக்கு ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறாயின் இதுகுறித்து தமிழர் தரப்பில் ஏதாவது கருத்துக்கள் உண்டா? உண்டு முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனிடமிருந்து அது வந்துள்ளது நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பத்தைத்தீர்க்க மைத்திரி தலைமையில் மஹிந்தவும் ரணிலும்கூட்டரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதும்,தற்போதைய நாடாளுமன்றத்தின் மிகுதிக்காலம் வரை இவ்வாறான ஒரு தேசிய கூட்டரசாங்கத்தை அமைத்து முக்கியமான விடயங்களுக்கு ஏன் பரிகாரம் தேட முடியாதென்பதும் அவரது வினாவும் பரிந்துரையுமாகியது.

ஆனால் கொழும்புஅதிகாரமைத்தை மையப்படுத்தி அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகூறும் அவர் தமிழ்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செல்லமுடியாமல் தானும் ஒரு புதிய கட்சியை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பகிரங்கங்கப்படுத்தியதை மறந்துவிட்டாரோ என்னவோ?

இதையும் தவறாமல் படிங்க