நிலைத்து நிற்குமா நவம்பர் 27? இன்றையவடிவமைப்பே… நாளைய நிர்மாணம்.

  • Prem
  • November 28, 2018
63shares

ஒளியின்நினைவு அந்தகாரங்களை உறுத்தும். அந்தவகையில் பருத்தித்துறையில் நடந்த மாவீரர் நினைவேந்தல் நிகழவுக்காக முன்னின்று பணிபுரிந்தவரின் வீட்டின் மீது கடந்த நள்ளிரவு இனம்;தெரிந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டது.

ஏனெனில் இந்த ஒளியின் நினைவை தமது மேலாதிக்கநிலைக்கு ஒரு அச்சுறுத்தலாக, சுதந்திரதாயகம் என்ற தமிழர்களின் நிலைப்பாட்டுக்குரிய அடையாளமாகவே கொழும்பில் குடிகொண்டுள்ள அந்தகாரம் நோக்கிக்கொள்கிறது.

இதனையும் விட 2009 மே 18 உடன் தம்மால் துடைக்கபட்டதாக கூறப்படும் ஒரு கருத்தியல் மீண்டும் மீண்டும் வெளிப்படுவதால் எழும் விரக்தி நிலைச்சீற்றமாக கூட இதுவரலாம்.

எனினும் இவ்வாறன அச்சுறுத்தல்களையும் தாண்டி பல இடங்களில் நினைவேந்தல்கள் நடத்தப்பட்டன. ஈகிகளின் நினைவை ஏந்தும் சமூகத்துக்கே தமது விடுதலைகுறித்து சிந்திக்க அல்லது எதிர்காலத்தில் அதனை அனுபவிப்பதற்குரிய அருகதையுள்ளது என்பதை தமிழர்தாயகமும் அதன் புலம்பெயர்மக்கள் கூட்டமும் நவம்பர் 27 இல் மீண்டும் ஒரு முறை நிருபித்தது.

இந்த நிலையில்தான் பருத்தித்துறையில் ஒரு நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று நடத்தியவரின் வீடு கடந்த நள்ளிரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சீப்பை ஒளித்துவிட்டால் மணமகளை சிங்காரிக்க முடியாது அதனால் கலியாணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல நிகழ்வுகளை குழப்பிவிட்டால் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து இப்போதைக்கு தியாகிகளின் நினைவை அகற்றவிடலாம் என தெற்கு நினைத்தால் அது மிகப்பெரியஅபத்தம்

ஆனால் எப்போதைக்கும் இவ்வாறுதான் அபத்தநிலை இருக்கும் என்பதையும் எதிர்பார்ப்பதும் சவாலானது. ஏனெனில் தமிழ்மக்களின் வரலாற்றில் நீண்ட காலத்துக்கு இந்தத்தியாகம் குறித்தபேசுபொருள் நிலைத்திருக்கவேண்டுமானால் அதற்குரிய நினைவுறுத்தும் பொறிமுறையொன்றே தேவை.

விடுதலையாடிகளை நினைவுகூரும் மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்து விட முடியாது என இப்போதைக்கு சொல்லலாம் ஆனால் எப்போதைக்கும் அதனை சொல்லிவிட்டுமட்டும் இந்த நினைவுறுத்தும் நாளை எதிர்காலத்துக்கு நீட்சிப்படுத்த முடியாது.

ஏனெனில் கால ஓட்டத்தில்2009 மேயுடன் உறைநிலைப்பட்ட இந்த விடுதலைப்போராட்ட காலத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சமூகம் மூப்பு மிகுந்த சமூகமாக மாறிவருகின்றது.

2040 ஆம் ஆண்டளவில் தெற்காசியாவில் அதிக அளவில் மூதாளர்களை கொண்ட நாடாக இலங்கையே இருக்கும் என்பதால் அதற்குள் ஈழத்தமிழினமும் அடங்கும் அன்றைய காலகட்டத்தில் இலங்கைத்தீவில் 4 பேரில் ஒருவர் மூதாளர்களாகவே இருப்பார்கள்.

இதனால் விடுதலைப்போராட்ட காலத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சமூகம் மூப்படைவதற்கு முன்னர் இவ்வாறான ஒரு பொறிமுறை அமைக்கப்படாவிட்டால்

இன்னும் 2030 வருடங்களில் புனிதத்துக்குரிய மாவீரர் நாள் கருத்தியல் தமிழர்தாயகத்தில் எப்படியிருக்கும் என நினைத்தால் அன்றைய நிலைமை அநேகமாக சவாலாகவே இருக்கும்

இந்த நிலை புகலிடநாடுகளில் விரவியுள்ள தமிழ் சமுகத்துக்கும் பொருந்தும் இதனைவிட புகலிடதேசங்களுக்குரிய இன்னொரு சவாலாக அந்தந்த நாடுகளின் மையசக்தி பின்புலமும் தமிழ்சமுகத்தின் சந்ததியை இழுத்துக் கரைக்கும் அதன் சவால் உபரியானது. ஆனால் இது இயல்பானது.

இன்றிருப்பதைபோல எதிர்காலத்தில் முகநூல் கணக்குகளும் யூரியூப்போன்ற காணொளி வலைத்தளங்களும் எமது தேசியத்தை மையப்படுத்திய தொடர்பாடல்களுக்கு எவ்வளவு தூரம் இடமளிக்கும் என்பதும் தெரியாது. இப்போதே யூரியூப்போன்ற காணொளி வலைத்தளங்களில் உள்ள தமிழர்களின் ஆயுதவழி போராட்ட காணொளிகள் அழிக்கப்படுவதாக தெரிகிறது.

ஆகையால் தான் நினைவுறுத்தும் பொறிமுறை ஊடாக காலாதிகாலமாக நிலைக்கத்தேவைப்படும் நினைவேந்தலை தக்கவைத்திருக்க வேண்டிய ஒரு தேவையுள்ளது.

எது எப்படியோ2009 மே 18 க்கு முன்னான கடந்த வரலாற்றுக்காலமே தமிழ்மக்களுக்கு இப்போதும் அரசியல் அத்திவாரமாக உள்ளது.

ஈழத்தமிழினத்தை ஒரு நிலையான சமுதாயமாக நிமர்ந்து நிற்கவைக்கும் பாறைப்படுக்கையும் இதுதான். இந்த பாறைப்படுக்கையில்தான் எமக்குரிய கதாநாயகர்களும் அவர்களின் உன்னதமான செயல்களும் எண்ணங்களும் படிமங்களாக உள்ளன.

இந்தப்படிமத்தில் வெற்றிகள், தோல்விகள் எதிரிகள், எல்லாம் பதிவாகியிருக்கின்றது. கடந்தகாலமே எங்களுக்கு அரசியல் துணிச்சலை தருகிறது, அதுவே நம்மை பாதுகாக்கிறது. கடந்த காலத்தில் தமிழினம்செய்த தியாகங்களால் எதிர்காலத்தில் அதே இனத்தை பாதுகாக்கவும் முடியும்

ஆனால் இப்போது தமிழினம் வாழ்வது2009 மே 18 க்குப்பின்னான காலம். ஆனால் இதுவும் தொடர்ந்து நகரக்கூடியகாலம். அதாவது இன்றைய சமகாலம் விரைவில் கடந்தகாலமாக மாறும். எமது கடந்தகாலம் எவ்வாறு சமகாலத்தை தீர்மானித்ததோ இதே சமகாலம்தான் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகின்றது.

ஆகையால் இந்த நேரத்தில்தான் தமிழினம் மிகவும் அவதானமாக சிந்திக்க வேண்டும்; எதனை விதைத்தீர்களே அதனையே அறுப்பீர்கள் இது விலியத்தில் வரும் வார்த்தைகள.;

அதுபோல தற்போது தமிழினம் எதனை வடிவமைக்கிறதோ அதுவே நாளையநிர்மாணமாகும் இதுவே நவம்பர் 27 என்ற நினைவுறுத்தும் அடையாளம் தசாப்தங்கள் கடந்து நீண்டு நிலைத்து நிற்குமா என்ன வினாவுக்கும் இதுவே விடையாகும.;

இதையும் தவறாமல் படிங்க