நிர்வாண உலகமும்...! இலங்கைத்தீவின் தற்போதைய நிலையும் !!

50shares

இலங்கைத்தீவின் அரசியல் தட்பவெப்பம், ஒஸ்றேலியா முதல் அமெரிக்கா வரை ஆட்கொண்டுள்ள வேளை, உலகின் அகலமானதும் அழகானதுமான வீதியில் உலகத் தலைவர்கள் அணிவகுத்திருந்தனர்.

சிரியாவிலும், ஜெமெனிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவிப்பொதுமக்கள் கொத்துக் கொத்தாக, கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் தமது உயிர்களை இரையாகிக் கொண்டிருக்கும் வேளையில்தான், உலக அமைதிக்கான ஊர்வலம் என இந்த உலகத் தலைவர்கள் ஊர்வலம் போயிருந்தனர்.

முதலாம் உலகப் போரை நிறைவுக்கு கொண்டுவந்த ஒப்பந்தத்தின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள், பிரென்சு அரசுத் தலைவர் எமானுவல் மக்ரோன் தலைமையில் தலைநகர் பரிசில் நொவெம்பர் 11 அன்று இடம்பெற்றிருந்தது.

பிரென்சு தேசத்துக்காக உயிர்நீத்த அடையாளம் தெரியாத ஆயிரம் ஆயிரம் படைவீரர்களுக்காக, நெப்போலியனால் நிறுவப்பட்ட 'ஆர் டு திறியோம்ப்' எனப்படும் நினைவுச் சதுக்கத்திலேயே இந்நிகழ்வுகள் நடந்திருந்தன.

அமெரிக்கா, ரஸ்யா, ஜேர்மனி, பிரித்தானியா, துருக்கி என உலகின் 70 நாடுகளைச் சேர்ந்த உலகத் தலைவர்கள் கொட்டும் மழைக்கு அணிதிரண்டிருந்தனர்.

உலக அமைதிக்கான நாள் என இதனை இந்த உலகத் தலைவர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்க, தமது அமைதியையும் வாழ்வையும் பறித்த இந்த உலகத் தலைவர்களுக்கு எதிரான போராட்டங்கள், தலைநகர் பரிசின் இன்னுமொரு பகுதியான 'றிப்பப்பளிக்' சதுக்கத்தில் நடந்து கொண்டிருந்தது.

'தேசப்பற்று அல்லது தேசபக்தி என்பது வேறு. தேசியவாதம் என்பது வேறு. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானவை. உலகில் பல நாடுகள் இன்று தேசியவாதம் என்ற மனப்போக்கை கடைபிடித்து வருகின்றன' என பிரென்சு அதிபர் எமானுவல் மக்ரோன் உரையாற்றிக் கொண்டிருந்தார். 'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே - அமெரிக்கர்களுக்கே முதலிடம் என முழங்கும் அமெரிக்க அதிபர் ரம்ப் அமைதியாக யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

மறுபுறம் சிறிலங்கா அரசாங்கம் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் உறுதி செய்யவதோடு, மனித உரிமைகள், நீதி மற்றும் நல்லிணக்கத்தை பின்பற்ற வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் இலங்கையின் அரசியல் தட்பவெப்பம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.

சிரியாவிலும் ஜெமெனிலும் ஆக்கிரமிப்பு யுத்தம் ஒன்றை நடாத்திக் கொண்டிருக்கும் இரத்தம் தோய்ந்த கரங்களோடுதான் இந்த வல்லாதிக்க சக்திகள் தமக்கிடையே கரங்களைக் கோர்த்தவாறு உலக அமைதிக்காக ஊர்வலம் போயிருந்தனர்.

சிறிலங்காவின் எந்த அரசியலமைப்பையும் எந்த ஜனநாயகத்தினையும் கொண்டு தமிழர்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பு யுத்தங்களையும் இனப்படுகொலையையும் நடத்தினார்களோ, இரத்தம் தோய்ந்த அந்த அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்துமாறு உலக அமைதிக்கான இந்த தலைவர்களே ஒயாது அறிக்கைவிடுகின்றார்கள்.

இதுதான் உலகம். இதுதான் உலக அரசுகள். இதுதான் உலக அரசியல்.

இந்த அரசுகள் நிர்வாணமானவை. இவர்களுக்கு தமது நலன்களைத் தவிர வேறொன்றும் தெரிவதில்லை. நலன்களை அடைவதற்காக போரையும் செய்வார்கள், அமைதியையும் போதிப்பார்கள். நலன்களின் நிமிர்த்தம் எந்த ஆடைகளையும் போட்டுக் கொள்வார்கள். தேவை ஏற்பட்டால் நிர்வாணமாகவும் ஊர்வலம் போவர்கள். இவர்களின் நிர்வாணம் 'ஜனநாயகம்-அமைதி-நல்லிணக்கம்' போன்ற கவர்சிச் சொற்கள் மறைக்கப்பட்டு விடும்.

அவ்வாறுதான் பரிசின் பெருவீதியில் இந்த அரசுத்தலைவர்கள் தமது நிர்வாணத்தை 'உலக அமைதிக்கான ஊர்வலம்' என்ற பெயரில் மறைத்திருந்தனர். இதனைத்தான் இலங்கைத்தீவை மையப்படுத்திய விவகாரத்திலும் இந்த அரசுகள் ' ஜனநாயகம் - அரசியலமைப்பு' என தமது நிர்வாணத்தை மூடிறைக்கின்றன.

ஆனால் இன்று இந்த சர்வதேச சக்திகள் இலங்கை விவகாரத்தில் நிர்வாணப்பட்டு அவமானப்பட்டு நிற்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம் யாரை நல்லாட்சி நாயகர் என புகழ்ந்தார்களோ, அவரே இந்த மேற்குலக சக்திகளின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு, வில்லனை கதாநாயகனாக்கி விட்டார். இங்குதான் இந்த மேற்குலக சக்திகள் அவமானப்பட்டு நிற்கின்றன.

இந்தோ-பசுபிக் பூகோள அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத்தீவு என்பது இச்சக்திகளுக்கு ஒரு மூலோபாய மையம்.

தமது மூலோபாயங்களை அடைவதற்கான தந்திரோபாயமாகத்தான், மனித உரிமை மீறல், போர்குற்றச்சாட்டுக்களை கையில் எடுத்து, ஆட்சி மாற்றத்தினைக் கொண்டு வந்திருந்தன.

நல்லாட்சி, நல்லிணக்கம், நிலைமாறு கால நீதிகான செயற்பாடென பலவிதமான கவர்ச்சி சொல்லாடல்களை ஒன்றுக்குபத்து தடவை சொல்லிக் கொண்டிருந்த நிலையில்தான் தென்னிலங்கை அரசியலின் நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன.

அமெரிக்கக் கழுகு எதிர் சீன டிராகன் ஆகிய சக்திகளுக்கு இடையிலான போட்டிக்களமாக இலங்கைத்தீவு மாறிவிட்டது.

இலங்கைத்தீவு தற்போது இலங்கையர்களிடம் இல்லை என்பதே யாதார்த்தம்.

கடந்த காலங்களில் சிறிலங்காவின் ஆட்சியாளர்களது அரசியல், ஜனநாயக நடத்தைகள் குறித்து தமிழர் தரப்புக்கள் பல தடவை எடுத்துக்கூறிய போதெல்லாம் அவற்றையெல்லாம் அசட்டை செய்வதுபோல், சிறிலங்கா என்பது தேர்தல் முறைமையக் கொண்ட ஒரு சனநாயக நாடு என்ற அந்தஸ்தையும் அங்கீகாரத்தையுமே இந்த சர்வதேச சக்திகள் கொடுத்து வந்துள்ளன.

தமிழர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்தை மனிதாபிமானத்துக்கான போர், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என பல்வேறு பெயர்களில், சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் தேசம் மீது நடாத்திய ஆக்கிரமிப்பு யுத்தங்களையும், இனப்படுகொலையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்த உலகம், இன்று தென்னிலங்கையின் அரசியல் தப்புத்தாளாங்களை பதட்டத்தோடு பார்கின்றது. புதறியடிக்கின்றது.

உலக நியாயாதிக்க சட்டங்களுக்கு அமைய போர்குற்றங்கள் புரிந்தவர்களுக்கு எதிரான பயணத் தடை, சொத்து முடக்கம் என பல்வேறு சர்வதேச தடைகளையும் அனைத்துலக விசாரணையையும் தமிழர்கள் தமக்கான நீதிக்காக கோரிய பொழுதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், இன்று தம்மை நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கின்றனர்.

யாரை யாhர் அவமானப்படுத்துவது. தமிழர்களின் நியாயமான போராட்டத்தை ஒரு பயங்கரவாதமாhக சித்திரித்து தமிழர்களை அவமானப்படுத்தி முள்ளிவாய்க்காலில் இந்த உலகமே நிர்வாணப்படுத்தியிருந்தது.

இன்று தாம் சிங்களப் பேரினவாதப்பூதத்திடம் அவமானப்பட்டு நிர்வாணப்பட்டு நிற்கும் நிலையில் கொதித்து எழுகின்றனர்.

போரை நிறுத்தச் சொல்லி பரிசின் வீதிகளில் மட்டுமல்ல உலக வீதிகள் எங்கும் தமிழர்கள் அழுதுபுரண்ட போது, அமைதிகாத்தவர்கள், இன்று சிரயாவிலும் ஜெமெனிலும் குண்டுகளை வீசியவாறு உலக சமாதானத்துக்காக ஊர்வலம் போகின்றனர். கூடவே இலங்கையை தமது வழிக்கு கொண்டுவர தடைகளையும் போட எச்சரிக்கின்றனர்.

ஏன்என்றால் இவர்கள் நிர்வாணமானவர்கள்.

இதுதான் உலகம். இதுதான் உலக அரசுகள். இதுதான் உலக அரசியல்.

இதற்குள்தான் ஈழத்தமிழர்களுக்கும் தமக்கான நீதியையும் உரிமையையும் வென்றெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

அரசுகளின் அரசியல் சதுரங்கத்தில் அரசற்ற இனமாகிய ஈழத்தமிழினத்துக்கு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆண்டுகள் எட்ட இருக்கின்ற இவ்வேளையில், இந்தோ-பசுபிக் பூகோள அரசியலில் தமிழர்கள் ஒரு தரப்பாக தம்மை மாற்றிக் கொள்வதற்கான ஒரு வாய்பாக இலங்கைத்தீவின் தற்போதை நிலை தோற்றுவித்துள்ளது.

இந்த பூகோள அரசியலை முன்னுணர்ந்தே இலங்கைத்தீவில் தமிழீழமே தமிழர்களின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் உரிய தீர்வென தெட்டத் தெளிவான நிலைப்பாட்டை தலைவர் வே.பிரபாகரன் முன்வைத்திருந்தார்.

தீர்க்க தரிசனமான அந்தப்பார்வை ஏற்படுத்தப் போகும் தாக்கத்தினை, இன்றைய இந்தோ-பசுபிக் பூகோள அரசியலில் இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள இருதுருவ சர்வதேச சக்திகளின் அரசியல் ஊடாக புரிந்து கொள்ளலாம்.

ஐ.பி.சி தமிழ் பத்திரிகையின் 21வது பதிப்பில் வெளிவந்த கட்டுரை. எழுத்து : சுதன்ராஜ்

இதையும் தவறாமல் படிங்க