உச்சத்தீர்ப்பால் யானைகளுக்கு மகிழ்ச்சி! ஆனால் ஆட்சிக்குப்பொருத்துவது எப்படி?

  • Prem
  • December 13, 2018
47shares

அரைக்கிறவன் ஒன்றை நினைத்து அரைக்கிறான். ஆனால் குடிப்பவனோ ஒன்றை நினைத்துக்குடிக்கிறான். இது ஒரு பழமொழி.

அதுபோல சிறிலங்காவின் உச்சநீதிமன்றவளாகபாதுகாப்புக்கு என அதிகளவு காவலர்கள் நிலைநிறுத்தப்பட்டநிலையில் தீர்ப்பைஅறிவதற்கென ஏராளமான மக்கள் நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த நிலையில் மாலை 4 மணிக்கு வழங்கப்படுமென அறிவித்த தீர்ப்புசற்றுதாமதமாக வந்தது.

அதாவது லேட்டா வந்தாலும் தீர்ப்பு லேட்டஸ்ராகவே வந்தது. கடந்த நவம்பர் 9 ஆம் திகதி அரசதலைவர் மைத்திரிபாலசிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்குமாறு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதம் இது நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என இறுதித்தீர்ப்பு வெளியானது.

அரசியலமைப்பின்படி நான்கரைவருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, அரசியலமைப்புக்கு விரோதமானது என தீர்ப்பில் தெரிவித்த பிரதமநீதியரசர் அந்தக்காலத்துக்கு முன்னர் அரசதலைவர் ஒருவர் முற்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைக்கவேண்டுமாயின் அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தத்தீர்ப்பு வெளியானதும் எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே இதற்காகவே கடந்த 5வாரங்களுக்கு காத்திருந்த ஐக்கியதேசியக்கட்சியானைகள் நீதிமன்றவளாகத்தை அதகளப்படுத்தி பெரும்மகிழ்ச்சியுடன் பிளிறின. வெடிகள் கொளுத்தப்பட்டன. மறுபுறத்தே தீர்ப்பில் உடன்பாடு இல்லை ஆனால் தீர்ப்பை மதிக்கவேண்டுமே என சலித்த நாமல் ராஜபக்ச நாட்டில் உச்சநீதிமன்றத்தைவிட வேறு உயர்நீதிமன்றம் இல்லையே என விரக்தியுற்றார்.

ஆனால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பை முன்னிறுத்தி சில வினாக்கள் உள்ளன. இந்த தீர்ப்பை சிறிலங்காவின் ஆட்சிஅதிகாரத்துக்குப் பொருந்திக்கொள்வது எவ்வாறு? ரணிலுக்குப்பிரதமர் பதவி கிடையாதென்ற மைத்திரியின் அழுங்குப்பிடியை இந்தத்தீர்ப்பு என்ன செய்யக்கூடும்?

இதனைவிட நாடாளுமன்றில் பெரும்பான்மையைக்கொண்டுள்ளதரப்புக்கு, பிரதமர் பதவியை வழங்கத்தயார் ஆனால் அது ரணிலுக்கு இல்லை என்ற மைத்திரியின் நிலைப்பாட்டில் இனி யானைகள் மேற்பார்த்த ஐக்கிய தேசியமுன்னணியின் எதிர்வினை எவ்வாறு இருக்கும்? என்ற வினாக்களும் இதில் அடக்கம்.

ஆகமொத்தம் இலங்கைத்தீவில் அரசியல்அரங்கத்தில் சற்றேறக்குறைய கடந்த 7 வாரங்களாக ஏற்பட்டகொந்தளிப்புநிலை அதன்இறுதிக்கட்டத்தில் மக்களுக்கு சலிப்பையும் பொருளாதாரத்துக்கு வலிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில் இன்னொரு அதிரடி வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் சிறிலங்கா உச்சநீதிமன்றம் இந்தத்தீர்ப்பை வழங்கியிருப்பதை அவதானிக்கவேண்டும்

அதுவும் ஆண்டுஇறுதி விடுமுறைக்காக நாளை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக மூடப்படும்நிலையில் இந்தத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வழங்கப்பட்ட இந்ததீர்ப்புடன் இலங்கைத்தீவின் அரசியல் கொந்தளிப்பு நிலை சட்டுப்புட்டென ஒருமுடிவுக்குவந்துவிடப்போவதில்லை என்ற முக்கியமான யதார்த்தத்தை உள்வாங்குவதுதான் இங்கு முக்கியமான விடயமாகிறது.

மைத்திரி நாடாளுமன்றத்தைக் கலைத்தநகர்வு அரசியல் அமைப்பின்படி செல்லாது எனத்தீர்ப்பு வந்திருப்பதால் மைத்திரி இதனை சரியாக உள்வாங்காமல் விட்டால் இந்த இப்போதுள்ள சிக்கல் தொடர்ந்து செல்லவே செய்யும்

ஏனெனில் எக்காரணம் கொண்டும் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லையென கூறிய மைத்திரி யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டுமென நாடாளுமன்றமோ நீதிமன்றமோ தனக்குக் கூற முடியாதெனவும் எனவும் அகந்தைகொண்டிருப்பது தெரிகிறது

அவரது இந்தஅகந்தையை உடைத்து நாடாளுமன்றில் யாரைப் பிரதமராக நியமிக்கவேண்டும் தாமே முடிவுசெய்யமுடியுமென நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டதரப்பு விரும்பினால் வேறுவழியில்லாமல் இதில் நீதியை தேட மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றத்தைத்தான் நாடவேண்டும்

ஆனால் இந்தவிடயத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய அரசதலைவர் ஒருவர் மீது சாட்டையைச்சொடுக்குவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்ற உபரி விவாதமும் இதிலிருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்

இலங்கைத்தீவில் என்றல்ல உலகளாவிய ரீதியில் நீதியின் அடையாளமாக ரோமர்களின் தொன்மையியலில் உள்ள ஜ ஸ் ரீசியாதேவதைஅல்லது கிரேக்கர்களின் தொன்மையியலில் வரும் தேமிஸ் தேவதைஆகியனவே ஒன்றுபட்டுள்ளன.

இந்த இரண்டுஉருவங்களும் ஏறக்குறைய ஒன்றுதான் துணியொன்றால் கட்டப்பட்ட கண்கள். ஒரு கரத்தில் சமநிலையில் உள்ள தராசு. மறுதரத்தில் வாள் ஆகிய இதில் உள்ளன. அதாவது நீதி வழங்கப்படும்போது பக்கச்சார்பற்று வழங்கப்படவேண்டுமென்பதே இதன் கருத்தியல்.

ஆனால் இலங்கையில் தமிழ்மக்களுக்கு கிட்டவேண்டிய நீதிக்கும் ஜ ஸ் ரீசியாதேவதையின் உருவத்துக்கும் தொலைதூரம். இதனை தமிழ்மக்கள் துல்லியமாக அறிவார்கள். எது எப்படியோ சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் வழங்கிய இந்தத்தீர்ப்பை இப்போது அரசியல் அரங்கின் ஒருபகுதி வெற்றிவியூகமாக கொண்டாடுகிறது. மறுபகுதி கறுவியபடி கூக்காட்டிக்கொள்கிறது.

இலங்கைத்தீவின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்புப்பதிவை கொண்ட இந்த வழக்கில் வழங்கப்படும் தீர்ப்புக்காக உள்நாட்டுச்சுதேசிகள் கொண்டிருந்த ஆர்வத்தைவிட வெளியில் இருந்த விதேசிகள் கொண்டிருந்த எதிர்பார்ப்பும் ஆவலும் தூக்கலாக காணப்பட்டதென்பதில் ஐயமில்லை.

இதில் காரணம் இல்லாமல் இல்லை. ஏனெனில் இந்து சமுத்திரத்தை மையப்பபடுத்திய தமது நலன்களை உறுதிப்படுத்த சீனா எதிர் மேற்குலகு என்ற அரங்கம் மேற்கொள்ளும் ஆதிக்கம் சார்ந்த போட்டியும் இந்த ரணில் எதிர் மைத்திரி மகிந்த ஆட்டத்தில் உள்ளமை மறைபொருளான விடயமல்ல.

இதனால்தான் சிறிலங்கா நாடாளுமன்ற பார்வையாளர் திறக்கபட்டவேளைகளில் அதனை ராஜதந்திரிகள் நிறைத்தனர். நாட்டின் அரசியல்நெருக்கடிக்கு விரைவான தீர்வுவேண்டிய அறிக்கையிட்டனர். ஏன் மேற்குலக ராஜதந்திரிகள் ரணிலின் அலரிமாளிகை கூட்டங்களிலும் தென்பட்டிருந்தனர்.

ஆனால் இந்தத் தீர்ப்புக்குப்பின்னால் வரவேண்டிய நடைமுறைசாந்த விடயங்களே இப்போதுள்ள உடனடி சவாலாகின்றது. யதார்த்தமாக நோக்கினால் இலங்கைத்தீவில் இப்போது இடம்பெறுவது மக்களுக்கான அரசியலை மீட்கத்துடிக்கும் போராட்டம் அல்ல! மாறாக இது அதிகாரத்தை தக்கவைப்பது யார் என்ற மோதலின் அடிப்படையான விடயமாகும்

இந்த ஆட்டத்தில் மைத்திரியின் நாடாளுமன்ற கலைப்பு முனைப்பு சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தீர்ப்பை உள்வாங்காமல் மைத்திரியின் அகந்தை ஆட்டங்கள் தொடர்ந்தால் நாட்டை கந்தையாக்கும் அரசியல் அதிர்வுகள் தொடரவே செய்யும்.


இதையும் தவறாமல் படிங்க