மகிந்த நாளை பதவிஇறங்குகிறார்! ரணில் பிரதமராகிறார் பராக்…பராக்!

  • Prem
  • December 14, 2018
62shares

ஜனநாயக சோசலிஷக் குடியரசு என்ற அடையாளத்தில் நிறைவேற்று அதிகாரத்தில் காலத்தையோட்டிக்கொள்ள முனையும் முதன்மைத்தலையாரியின் மீது அதன் உச்சநீதிமன்றம் ஒரு கூரிய வாளை செருகியமை உலகறிந்தவிடயம்

ஆனால் செருகலின் முக்கிய அதிர்வாகவும் மைத்திரியின் பலிக்கடாவாகவும் தனது அதிகார ஆசைக்குரிய ஆப்பு நிலையாகவும் மஹிந்த இன்னும் சில மணிநேரங்களில் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

விரைவில் (எதிர்வரும் 16) ஞாயிறு சட்டபூர்வமான ஒரு பிரதமராக ரணில் பதவியேற்கவுள்ளதாகவும் மைத்திரியே அவருக்கு இந்த அழைப்பை விடுத்ததாக கொழும்பு பட்சிகள் கூறுகின்றன.

ரணில்பிரதமரானால் ஒரு மணிநேரமேனும் பதவியில் இருக்க மாட்டேன் முன்னர் சவடால் விட்ட அதே மைத்திரியே இவ்வாறு ஒரு அழைப்பு விடுத்திருக்கும் நிலையை அவதானித்தால் ரணில் 5வது முறையாக பதவி ஏற்ற ஒருமணிநேரத்தில் மைத்திரியும் பதவிவிலகவேண்டுமல்லவா?

இல்லையென்றால் மகிந்த தன்னை கொலைசெய்யமுயல்வார் என 2015இல்தான் சொன்ன பொய்க்கதைபோல இதுவும் ஒரு போலிஅரசியல்கதை என நக்கலாக கூறி அவர் சிரிக்கவேண்டும். இதில் அவர் எதனை தெரிவுசெய்வார்? இது ஒரு வினா.

எது எப்படியோ இன்று மாலை மைத்திரிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றபின்னர் மகிந்தவின் பதவிவிலகல் உறுதியானது.

நாளை நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையொன்றை நிகழ்த்திவிட்டு மகிந்த தனது பிரதமர் பதவியில் இருந்து விலகும் நகர்வை அவரது புதல்வன் நாமலும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனாவும் உறுதிப்படுத்தினர்.

இந்த நகர்வுகளை மைத்திரிபால சிறிசேன என்ற மனிதரின் ஈகோ என்பபடும் தன்னிலை அகங்காரம் இல்லையென்றால் அவரது அந்தகாரஅதிகாரம் மீதான ஒரு செருகலாகவும் எடுக்கலாம்.

மைத்திரிதனக்காக மகிந்தவை பலியாக்கினாலும் இந்த நகர்வுகளுக்கு முக்கிய காரணம் நேற்றும் இன்றும் சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய அதிர்வுகள்.

நவம்பர் 9இல் அரசதலைவர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்தமை நாட்டின் அரசியலமைப்புக்கு முரணான சட்டவிரோத நகர்வு என நேற்று உச்சநீதிமன்றம் சொன்னது

பிரதம நீதியரசர் நலின் பெரேராவால் எழுதப்பட்ட இந்த முழுமையான தீர்ப்பு, உச்சநீதிமன்றத்தால் இன்று நாட்டு மக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்பட்டது.அதேபோல மீண்டும் இன்று அதே உச்சநீதிமன்றத்தில் மஹிந்த தரப்புக்கு மூக்குடைவுவந்தது.

குறிப்பாக பிரதமர் பதவியில் மஹிந்த நீடிப்பதற்கு எதிராக,மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவைநீடித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 16,17 மற்றும் 18ஆம் திகதிகளில், இந்த எடுத்துக்கொள்வதாக அறிவித்தது.

இந்த விசாரணையில் மகிந்தசார்பு முகமென அறியப்பட்ட உச்ச நீதிமன்ற நீதியரசர் சாந்தினி ஈவா வனசுந்தர பங்கெடுத்தாலும் ஏகமனதாக இந்த முடிவு வந்தது.

கடந்த ஓக்டோபர் 26 இல் இடம்பெற்ற இந்த மல்லின சதுரங்க ஆட்டத்தில் எல்லாப்பக்கமும் செக்மேற்றுக்கு ஆளான மகிந்தவுக்கு வேறுவழியில்லை. வீட்டுக்குப்போகிறார்

ஆனால் ரணில்தரப்பின் எதிர்காலஆட்டம் தான் அவரை அரசியல் ரீதியில் விடாதுகறுப்பாக சுற்றவைக்குமா? புதிய புதுத்தேர்தல் ஒன்றுடன் மேலும் பலமடையவைக்குமா? இல்லை அவரை அரசியல் எதிர்காலமற்ற நிலைக்குள் தள்ளுமா என்ற விடயங்களை முடிவுசெய்யும்.

ஆகமொத்தம் அடுத்தவாரம் புதியதொரு அரசாங்கம் அமைக்கப்படும் எனச்சொன்ன மைத்திரியின் வாக்குக்பலிக்கப்போவது மட்டுமல்ல இதன்பின்னர் மகிந்த மைத்திரி அணிகளும் கலகலத்து கடகடக்கப்போகின்றன.

ரணிலின் அமைச்சரவை உருவானால் அதிலிடம்பிடிக்க இனி அங்;கிருந்து சில முகங்கள் இங்கு தாவிவரக்கூடும். சில முகங்கள் மக்களுக்கு சேவை எனவும் கரணமடிக்கக்கூடும் (வியாழேந்திரன்?)

சரி இனிமேல் ரணில்அரசாங்கத்தை அமைத்தால் இரா. சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவியின் நிலை என்ன?

ரணில் அரசாங்கத்தை மையப்படுத்திய தமிழ்தேசியகூட்டமைப்பின் அதிர்வுகள் எவ்வாறு இருக்கும்? போன்ற வினாக்கள் உள்ளன.

ஏற்கனவே ரணிலுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைஉள்ளதென நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத்தீர்மானத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தமை தெரிந்தவிடயம்.

ஆனால் ரணிலுக்கு கூட்டமைப்பு ஆமென் சொன்ன விடயம் மற்றும் அதனை மையப்படுத்திய பேச்சுகள் இணக்கப்பாடுகள் தற்போது விவாதப்பொருளாகியுள்ளது. ரணிலுக்கு, கூட்டமைப்பு நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்ததா? நிபந்தனையின்றி ஆதரவுஅளித்ததா? என்ற விவாதங்கள் வருகின்றன.

கூட்டமைப்பிள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தனும், சாந்தி சிறீஸ்கந்தராஜாவும், நிபந்தனைகளின் அடிப்படையில், இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்பட்டதென்கிறார்.

ஆனால எந்;தவொரு முன் நிபந்தனையையும் தமது தரப்பு முன்வைக்கவில்லையெனவும் நாட்டின் உறுதித்தன்மையை கணக்கில் எடுத்து இந்த முடிவை எடுத்தோம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்

இதேபோல கூட்டமைப்புடன், எழுத்துமூலமாக எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லையென யானைகள் கூறின இதனை ஐ.தே.கவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவும் தவிசாளர் கபீர் காசிமும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

எந்தவிதமான எழுத்துமூலஉடன்பாடு இல்லாமலேயே, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு அளித்திருப்பதை நோக்கமுடிகிறது. எது எப்படியோ குழிக்குள் விழுந்த யானையை அருகில் இருந்த வீட்டுக்காரர்கள்( தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வீட்டுச்சின்னத்தை நினைவுகொள்க தூக்கிவிட்டுள்ளனர்.)

ஆனால் வெளியில்வந்த யானைஅரசாங்கத்தில் இருந்து எதிர்காலத்தில் வீட்டுக்காரரை ஆசீர்வாதிக்குமா? அல்லது மிதிக்குமா? இதனையும் எதிர்காலத்தில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் தவறாமல் படிங்க