30 அமைச்சகங்களாம் ரணில்அனுமாருக்கு! அதில் 3 ஐ பறிக்குமாம் மைத்திரிபெருமாள் !!

  • Prem
  • December 18, 2018
158shares

அகப்பை பிடிப்பவன் நம்ம ஆளானால் அடிப்பந்தி என்ன? நுனிப்பந்தி என்ன? என ஒரு பழமொழி இருப்பதைப்போலவே இப்போது சிறிலங்கா அரசியலில் மகிந்த தனக்காக அகப்பை பிடிக்கும் பந்திக்காரனாக மைத்திரியை நோக்குவது தெரிகின்றது.

இதனால் அவ்வாறான பந்திக்காரனில் நம்பிக் கை வைத்து எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் அவர் அமர்ந்து விட்டார்.

மகிந்தவை பொறுத்தவரை பிரதமர் என்ற பலாக்காயாவது கிடைக்கவில்லை அதற்குப்பதிலாக எதிர்க்கட்சித்தலைவர் பதவி என்ற கிளாய்க்காயாவது கிட்;டட்டுமே என்ற நிலைப்பாடுபோலும்.

பிரதமர் என்ற முன்னரங்குக்கு ரணில்வந்தபின்னர் நாடாளுமன்றம் முதன்முறையாக கூடியபோது இவ்வாறான நிலைப்பாட்டுப்பின்னணிகள் தெரிந்தன.

சிறிஜயவர்த்தனபுரவளாகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த அரங்கக்காட்சிஇடம்பெறமுன்னர் இன்று காலை முதலே முக்கிய அரசியல் கட்சிகள் தத்தமது தரப்பில்; பரபரப்பான நிகழ்சிநிரல்களை நடத்திக்காட்டின. இந்த நிரல்களுக்குள் பரபரப்பான தாவல்களும் அடங்;கியிருந்தன.

இதில் தமிழர்களை கொஞ்சம் திரும்பிப்பார்க்கவைக்கும் ஒருகாட்சியாக தன்னிடமிருந்த எதிர்க்கட்சித்தலைவர் பட்டயத்தை இரா.சம்பந்தன் மகிந்தவிடம் இழந்தகாட்சி இருந்தது.

இதனைவிட மகிந்த மைத்திரி ஜோடிகளின் பந்தியில் இருந்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று யானைகளின் பக்கம்தாவிய இன்னொரு முக்கிய நகர்வும் இடம்பெற்றது.

விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன்செனவிரத்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோரே யானைகள் பக்கம் தாவி வரவேற்புடன் ஆசனமிட்டனர்.

இந்த தாவலுக்குப்பின்னர் வாய்திறந்த விஜித்விஜேமுனி சொய்சா மைத்திரியின் வெள்ளிக்கிழமை அதிரடிகளால் ஏற்பட்ட குழப்பங்களில் சிறுபான்மைக்கட்சிகளின் செய்த நகர்வுகளுக்கு பாராட்டுப்பத்திரத்தை வாசிக்கத்தவறவில்லை.

மஹிந்தவின் அதிகாரமையக்காலத்தில் தனக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்ட போதிலும் அவரைச் சுற்றி இருந்தஓநாய்களால் அதில் முறையாக நகர முடியவில்லையென மகிந்தாவாதிகளை முனி முனியென முனிந்த விஜேமுனி நல்லாட்சியில் பணியாற்றக்கிடைத்த வாய்ப்பே வாய்ப்பு எனவேறு புகழாரம் சூட்டினார். மகிந்ததரப்பை முனிந்து ரணில்தரப்புக்கு ஐஸ்வைத்த விஜேமுனிக்கு நிச்சயமாக அமைச்சுப்பதவி கிட்டிக்கொள்ளக்கூடும்.

ஆனால் அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தப்படி படி தேசிய அரசாங்கம் ஒன்று அமையாத போது அமைச்சரவையின் எண்ணிக்கை 30 பேராக வரையறுக்கப்பட வேண்டும் என்ற நியதி உள்ளது. இதனை இன்று ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கூட்டத்திலும் ரணில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

ஆகமொத்தம் இப்போதைக்கு இருப்பதோ 30 அமைச்சர்கள் என்பதால் ரணில் என்ன செய்வார்? இந்த 30 இல் கூட மைத்திரி தனக்காக பாதுகாப்பு சட்டம்ஒழுங்குத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுப்பதவிகளை அமுக்கிக்கொள்ளமுயலும் செய்திகளும் வந்துள்ளன

இதனால் 30 ஐ வைத்திருக்குமாம் ரணில்அனுமார் அதனை தட்டிப்பறிக்குமாம் மைத்திரிபெருமாள் என்பதாக இருக்கிறது நிலைமை.

மைத்திரி இவ்வாறு சில அமைச்சகங்களை தனது பொறுப்பில் அமுக்க முயல்வதால்தான் அமைச்சரவையின் நியமனம் இன்றும் இழுபட்டுச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே இந்தவிடயத்தில உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்களையுமாம் அரசியல் நட்பு என்பதைப்போல் மனோகணேசன் ரிஷாட்பதியூதீன் போன்ற தமிழ்பேசும் முகங்களும் மற்றும் மலிக் சமரவிக்ரமவும் உதவமுன்வந்தனர்

தேவை ஏற்பட்டால் தாம் அனைவரும் அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக இன்று காலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டத்தில் இவர்கள் பெரியமனது காட்டினர்.

ஆயினும் இந்தபெரியமனது காட்டல்களின் இறுதித்தீர்மானங்கள் எவ்வாறு வரும் என்பதை புதிய அமைச்சரவை பகிரங்கப்படுத்தப்படும்போது கண்டுகொள்ளலாம்.

இந்தநிலையில் மஹிந்தவை எதிர்க்கட்சித்தலைவராக சபாநாயகர் ஏற்றுக்கொண்ட விடயத்தில் உடனடியாகவே திமிறிய சுமந்திரன் நாடாளுமன்றத்தில் அதற்காக எதிர்ப்பை தெரிவித்தார். இதுதொடர்பான தீர்மானத்தை எடுப்பதற்கு நாடாளுமன்றத்தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.

அரசியல்களத்தின் விந்தையைப் பாருங்கள் நேற்றுவரை சுமந்திரனை பொறுத்தவரை சபாநாயகர் கருஜயசூரிய ஜனநாயகத்தை நிலைநாட்டத்துடித்த காவலன். ஆனால் இன்று அதே கருஜயசூரிய மஹிந்தவை எதிர்க்கட்சித்தலைவராக ஏற்றுக்கொண்டதும் அவர் மீது சுமந்திரனின் சுட்டுவிரல் நீட்டப்படுகிறது.

எது எப்படியோ ரணிலை கொலுவிருத்த தமிழ்தேசியக்கூட்டமைப்பு எறிந்த இந்த பூமராங்தடி இப்போது மறைமுகமாக இரா. சம்பந்தனின் எதிர்கட்சித்லைவருக்கு ஆப்பு வைத்திருக்கிறது.

ஆனால் சுமந்திரன் தரப்பு இதற்காக முன்வைக்கும் வாதம் சட்டப்படி நோக்கப்படக்கூடும்.எனினும் மகிந்தவின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை சபாநாயகர் அங்கீகரித்ததையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

எனினும் மகிந்தவை பொறுத்தவரை அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டாலும் கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் சிறிலங்கா பொது ஜன பெரமுன என்ற தாமரை மொட்டின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டிருப்பதால்; அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் தார்மீகம் இல்லைஎன சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால் இதற்கு பதிலளித்த சுசில் பிரேமஜயந்த,சிறிங்கா சுதந்திர கட்சி ஊடாக எவரும் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாகவே அவர்கள் தெரிவானதாகவும் கூறுகிறார்.

ஆகமொத்தம் சிங்கள தேசியக்கட்சிகளின் இந்த கொடுக்கல் வாங்களில் சுமந்திரனின் இந்தவாதம் நடைமுறையில் எவ்வளவு தூரம் பலனளிக்கக்கூடும்?

இவ்வாறான ஒரு ஐயம் மற்றும் பரபரப்புகளுடன் இன்றைய அமர்வு முடிவடைந்துவிட்டது. இனி புதியஅமைச்சரவை குறித்த ஒரு ஆடுகளம் உற்றுநோக்கலுக்குரியதாக மாறியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க