மைத்திரி – ரணிலின் அமைச்சரவை“டிஜிற்றல்கேம்”! கூட்டமைப்பு பெறும் அனுபவபாடம்!!

  • Prem
  • December 20, 2018
60shares

டிஜிற்றல் கேம் எனப்படும் பல்வகை எண்ணியல் விளையாட்டுக்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மின்னணுமுறைகளின் இந்தச்சூட்சும விளையாட்டுக்கள் பலருக்கு சுவாரசியமாக இருக்கக்கூடும்.

இவ்வாறான ஒரு எண்ணியல் விளையாட்டு இன்று சிறிலங்காவின் புதிய அமைச்சரவை உருவாக்க அரசியல் விளையாட்டிலும் தெரிந்தது. ஆகமொத்தம் 29 பேரங்கிய இந்தஅமைச்சரவையின் எண்ணியல் விளையாட்டில் மைத்திரியும் ரணிலும் வெட்டியாடும் முக்கியஆட்டத்தை ஆடமுனைந்தனர். ஆனால் மைத்திரி இன்றும் தனது குயுக்தியினால் கொஞ்சம் முன்னேறினார்.

சிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆம் திருத்தத்தின்படி தனது அமைச்சரவையை மட்டுப்படுத்தவேண்டிய இக்கட்டான நிலையில் ரணில் இருந்தபோதும் 30 ஐ எடுக்குமாம் ரணில்அனுமார் அதில் 3 ஐ தட்டிப்பறித்ததாம் மைத்திரி பெருமாள். என்பதாக இதில் 3 அமைச்சகப்

பொறுப்புக்களை மைத்திரி தனக்காக பிடுங்கியிருப்பதாகத்தெரிகிறது.

பாதுகாப்பு சட்டம் ஒழுங்கு மற்றும் ஊடகத்துறைக்குரிய பொறுப்புகள் மைத்திரியால் அமுக்கப்பட்டமைக்குரிய ஆதாரங்கள் இப்போதைக்குத் தெரிகின்றன. இதன்படி சிறிங்காவின் முப்படைத்தரப்புகள் சிறிலங்காகாவற்துறை சிறிலங்காவின் தேசியதொலைக்காட்சிச்சேவையான ரூபவாஹினிக்கூட்டுத்தாபனம் மற்றும் ஏரிக்கரை (லேக்ஹவுஸ்) ஊடகக்குழுமம் ஆகியன மைத்திரியின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கும் அப்பால் மைத்திரியால்; நாளை நியமிக்கப்படவுள்ள அமைச்சகச் செயலாளர்களிலும் அவருக்குப்பிரியமானவர்கள் இடம்பிடித்தால் ரணிலின் திண்டாட்டங்கள் அதிகரிக்கும்.

ஆனால் 19 ஆம் திருத்தத்தின்படி அரசியலமைப்புச்சபையின் அங்கீகாரமின்றி, மைத்திரியால் எந்தவொரு நியமனத்தையும் தன்னிச்சையாக வழங்க முடியாதென்பது யதார்த்தம்;. பிரதமரின் ஆலோசனைப்படியே அவர் அமைச்சர்களை நியமிக்கவேண்டும். அவ்வாறே, அவர்களுக்குரிய துறைகளையும்ஒதுக்க வேண்டும்.

எனினும் இன்றைய அமைச்சரவையின் நியமனத்தில் இந்த விடயங்களும் முழுமையாக கைக்கொள்ளப்பட்டதாகத்தெரியவில்லை. இதனை ரணில் கடுமையாக எதிர்த்ததாகவும் தெரியவில்லை.

இந்தநிலையில் கபினற் தகுதி அமைச்சுக்களுக்குப் பொருத்தமானவர்கள் என யானைகள் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியால் நேற்றிரவு வழங்கப்பட்ட 35 பெயர்கள் அடங்கியபட்டியலில் ஆறு முகங்களை மைத்திரி தடாலடியாக கடாசியிருக்கிறார்.

யானைகளின் தரப்பில் இருந்து பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா, பாலித்த ரங்கே பண்டார ஆகியோரையும் அதேபோல அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எகிறயானையின் முதுகுக்குத்தாவிய, விஜித்விஜயமுனி சொய்சா, பியசேனகமகே, லக்ஷ்மன் செனவிரத்ன ஏ.எச்.எம். பௌசி ஆகியோரும் மைத்திரியால் கடாசப்பட்டனர்.

இந்த ஆறு முகங்களுக்கு அமைச்சகப்பொறுப்புகள் வழங்கப்படாதபோதிலும் ஏனையோருக்கு ஏறக்குறைய அவர்களின் முன்னைய பொறுப்புகளே வழங்கப்பட்டன.

இதில் ரவி கருணாநாயக்கவுக்கும் அமைச்சுப்பதவி கிட்டியது. மங்கள சமரவீரவுக்கும் முன்னைய நிதி மற்றும் ஊடகஅமைச்சுப் பதவி வழங்கப்பட்டது

இதேபோல வடக்கு கிழக்கை சேர்ந்த எந்த ஒரு தமிழ்முகமும் இந்த கபினற் தகுதி அமைச்சரவையில் உள்ளடக்கப்படாத விடயம் இன்னொரு முக்கிய விடயமாக பதிவாகியது. குறிப்பாக ஏற்கனவே இருந்த சுவாமிநாதனின் இடத்துக்கும் ஒருவரையும் காணவில்லை.

மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி,ஆகியன தற்போது பிரதமரான ரணிலின்கரங்களில் உள்ளது. ஒருவேளை விஜயகலாவுக்கு மீண்டும் ராஜாங்க அல்லது பிரதி அமைச்சு மட்டும் பின்னர் காத்திருப்பது போலத்தெரிகிறது.

மாறாக மலையக பூர்வீகதமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பில் இருந்து சில முகங்கள் கபினற்தகுதியில் உள்ளடக்கபட்டுள்ளன. ரவூப்ஹக்கீம், ரிஷாத் பதியூதீன், கபீர்ஹாசிம், அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசீம் ஆகிய 4 முஸ்லிம்முகங்களும் மனோகணேசன் பழனி திகாம்பரம் ஆகிய இரண்டு தமிழ் முகங்களும் இருந்தன.

இதில் தமக்குரியஅமைச்சகங்களை தியாகம் செய்வதாக பெருந்தன்மை காட்டிய ரிஷாத்பதியூதீன் மற்றும் மனோகணேசன் ஆகியோருக்கும் மீண்டும் இடங்;கள் கிட்டிக்கொண்டன. மீண்டும் நிதியமைச்சராக பதவியேற்ற மங்கள சமரவீர மீண்டும் எரிபொருள் விலைச்சூத்திரம் நடைமுறைக்கு வரும் என அறிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு அமைவாக உள்நாட்டிலும் எரிபொருள் விலையைநிர்ணயம் செய்யும்வகையில் இந்த விலைச்சூத்திரத்தின் உள்ளடக்கம் உள்ளது. முன்னர் மங்கள கொண்டுவந்த இந்த சூத்திரத்தை அந்த 51 நாள் கொலுவிருப்பில் மஹிந்த நீக்;குவதாக அறிவித்தார். ஆனால் விலைச்சூத்திரம் நீங்காதபோதிலும் பிரதமர்(?) பதவியில் இருந்து மகிந்த நீங்கிச்சென்ற சூத்திரமே கிட்டியது.

ஆகமொத்தம் சிறிலங்காவின் அரசியல்குழறுபடிகள் ஓரளவு தணிவுக்கு வந்து அமைச்சரவையும் உருவாக்கபட்டுவிட்டது. ஆயினும் தாழமுக்க மண்டலம் எதிரே காத்திருக்கிறது. இதுவரை இடம்பெற்ற நகர்வுகளில் தமிழர்தாயத்துக்கு கிட்டிய நன்மை யாதெனப்பார்த்தால் குறிப்பிடத்தக்க முன்னகர்வுகள் ஏதும் அதில் இருப்பதாக தெரியவில்லை.

வடக்குக்கிழக்குக்கு உரிய கபினற்தகுதி தமிழ்முகங்களோ அல்லது எதிர்க்கட்சித்தலைவர் பதவியோ இப்போதுஇல்லை. மாறாக நாட்டில் தற்போது இரண்டுஎதிர்க்கட்சித்தலைவர்கள் இருப்பதான கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தனின் விசனமும் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை மையப்படுத்தி அரசியலமைப்பை மீறும் வகையில் சபாநாயகர் அவசர தீர்மானத்தை எடுத்ததான அவரது குற்றச்சாட்டுமே எஞ்சியுள்ளது.

மஹிந்தவே எதிர்க்கட்சித் தலைவரென சபாநாயகர் கரு ஜயசூரிய உத்தியோகபூர்வமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். ஆயினும் மகிந்தவின் நியமனம் தொடர்பாக ஒரு ஒழுங்குப்பிரச்சினையொன்று எழுப்பட்டுள்ளதால் இந்தவிடயத்தில் நாளை சபாநாயகர் அறிவிக்கும் இறுதிமுடிவு உன்னிப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மஹிந்த சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினரே என்பதை உறுதிப்படுத்தும் கடிதமொன்றை அதன் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச இன்று சபாநாயகர் கரு ஜயசூரியாவிடம் கையளித்துள்ளார்.

இந்தக்கடிதத்தில் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகிக்க மஹிந்தவுக்கு எந்தவித சட்டச்சிக்கலும் இல்லை என்ற விடயம் குறிப்பிட்டப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அதேபோல 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியடைந்த உறுப்பினர்கள் அந்தஅணியிலேயே தொடர்ந்தும் அங்கம் வகிப்பதாக அதன்பொதுச்செயலாளரும் சபாநாயகருக்கு எழுத்துமூலமாக அறிவித்திருக்கிறார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் நாளை சபாநாயகர் அறிவிக்கும் இறுதிமுடிவு சிலவேளைகளில் ஜனநாயக ஆட்டங்களுக்குப்பின்னால் உள்ள யதார்த்தத்தையும் சிலவிடயங்களில் பங்காளர்களாக மாறுவதை விட பார்வையாளராக இருக்கும் அனுகூலங்களையும் கூட்டமைப்புக்கு அனுபவ பூர்வமாகபுரியவைக்கக்கூடும்.

இதையும் தவறாமல் படிங்க