வடக்கின் வெள்ளநிலவரம்! சேவைசார் அரசியலுக்குரிய (இயற்கை)அழைப்பு!!

  • Prem
  • December 24, 2018
55shares

மனுக்குலமீட்பர்களில் ஒருவரான யேசுக்கிறிஸ்துவின் பிறப்புக்குரியதாக அடையாளப்படுத்தப்படும் கிறிஸ்மஸ் காலமிது.களிப்புப்புரியதாக இந்தக்காலம் இருந்தாலும் உலகின் இயங்கியல் விதியின்படி பலருக்கு இந்த களிப்பை அனுபவிக்கமுடிவதில்லை.

அந்தவகையில் தமிழர்தாயகத்தின் கணிசமான வகிபாகமும் இந்தோனேசியர்களில் ஒருபகுதியும் இயற்கை அவலங்களை அனுபவிக்கும் காலமாக சமகாலநாட்கள் கடக்கின்றன. ஆனால் இவர்களை தற்போது வாட்டும் இந்த இன்னல்காலமும் கடந்து போகும்.

இந்தோனீசியாவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அவலத்தைப்போலதிகிலூட்டும் உயிர்பலிக்குரிய பேரழிவுகளை தமிழர் தாயகத்தின் வெள்ளநிலவரம் ஏற்படுத்தவில்லை. இது ஒரு ஆறுதல்.

எனினும் நீண்டகால துன்பங்களைச்சுமந்த விளிப்புநிலைமாந்தரை இந்தபெருமழை மீண்டும் ஒரு முறைதுன்பத்தில் தள்ளியுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்குக்கு என்ன காரணம். முதல்காரணம் கடந்த 21 ஆந்திகதியிரவு வடக்கேஅசாதாரணமான முறையில்கொட்டித்தீர்த்த 370 மில்லிமீற்றர்மழையின் அளவு.

இண்டாவதுகாரணம் வெள்ள நிலவரம்காரணமாக வடக்கின் முக்கிய குளங்களின் வான்கதவுகள் ஏககாலத்தில் திறக்கபட்டகாரணம்.

குறிப்பாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதன்முழுக்கொள்ளவை எட்டியதால்; வேறுவழியின்றி முன்னெச்சரிக்கையாக அதன்அனைத்து வான்கதவுகளும்( 14 வான்கதவுகள்) முழுமையாகத்திறக்கப்பட்;டன அதேபோல வேறுசில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டதால் பல இடங்களை வெள்ளநீர்சூழ்ந்தது.

இதனால் கிளிநொச்சி, மிகமோசமான பாதிப்புகளை எதிர்நோக்கியது. கிளிநொச்சி மட்டுமல்ல முல்லைத்தீவு, மன்னார், வவுனியா யாழ்ப்பாணம் என வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார்60,345 பேர் பாதிக்கப்பட்டனர். குடும்ப ரீதியாக18,500க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. 157வீடுகள் சேதமடைந்துள்ளன. 52 நலன்புரி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கிழக்கிலும் சில இடங்களில் வெள்ளப்பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழ்தாயகத்தின் இந்த இன்னல்நிலை மீண்டும் ஒரு முறை நிவாரண உதவிகளுக்குரிய பெரும்தேவையையும் அவ்வாறான உதவிகள் வழங்கப்படவேண்டியதற்குரிய பொறுப்பையும் உருவாக்கியுள்ளது

இவ்வாறான தேவையும் பொறுப்புமே ஐ.பி.சி குழுமம் உட்பட்ட சில நிவாரண குழுக்களை அவசரகளப்பணியாற்ற வைத்துள்ளது.சிறிலங்கா அரசதரப்பில் மைத்திரியின் பணிப்புரைகள் வடமாகாண ஆளுநர், இராணுவ முகங்கள் மற்றும் அரசாங்க அதிபர்களின் பொறிமுறையூடாக சென்றன.

சிறிலங்கா படைத்தரப்பு ஆரம்பகட்ட மீட்புப்பணிகளில் ஈடுபட்டதான அரசாங்க தகவல் திணைக்கம் அறிக்கையிட்டது.

இதேபோல ரணிலின் அரசாங்கத்தரப்பில் இருந்து சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று கிளிநொச்சிக்கு சென்றார்.

வெள்ள நிலவரம் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றை கிளிநொச்சி மாவட்டசெயலகத்தில் நடத்திய அவர் அதன்பின்னர் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்து தருவதாக உறுதியளித்தார். அத்துடன் நீங்கள்எங்களுக்கு உதவியதால் நிச்சயம் நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என (கூட்டமைப்பின்)அரசியல் செய்நன்றி பூடகத்தையும் சொன்னார்.இறுதியாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கோரும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படுமென்றார்.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுடன் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முக்கிய முகங்களும் பிரசன்னமாகியிருந்தனர். எதுஎப்படியோ கூட்டமைப்பின்அரசியல் உதவியுடன் தெற்கின் அரசியல் குழப்பங்கள் கொஞ்சம் தணிந்திருப்பதால் ரணிலின் அரசாங்கஅமைச்சரால் இன்று அங்கு செல்லமுடிந்தது. தெற்கைப்பொறுத்தவரை அரசியல் குழப்ப தூவான சாரலடிப்புகள் இருக்கின்றன.

புதியஅரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கவேண்டிய அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பான இழுபறிகளாக அல்லது சிறிலங்காவின் உண்மையான எதிர்க்கட்சித்தலைவர் மகிந்தவா? அல்லது இரா.சம்பந்தனா? என்ற இழுபறிகளாக இவை தொடர்கின்றன.

எனினும் ஒப்பீட்டு ரீதியில் தெற்கின் அரசியல் நிலவரம் கொஞ்சம் தணிவுக்கு வந்ததோற்றப்பாடு தெரிகிறது.

இதனால் கொழும்பில் மைத்திரி மற்றும் ரணில்தரப்புக்களாக இருக்கும் அணிகள் வடக்கின் இயற்கை அனர்த்த நிலவரங்களில் இப்போதைக்கு கொஞ்சம் அதிக கவனிப்புக்களை செய்யலாம். அதன்பின்னர் அரசியல்வாதிகள் தத்தமது சோலிகளைப் பார்கச்சென்றுவிடுவார்கள்.

குறிப்பாக அடுத்தவாரம் பிறக்கவுள்ள புதிய ஆண்டில் தெற்கின் அரசியல் வாதிகளுக்கு முக்கியசோலிகள் காத்துள்ளன.

இதில் 2019 ஐ எப்படி கடந்து செல்லது என ரணிலுக்கு ஒரு சோலி உண்டு. மறுதரப்பில் ரணில் இவ்வாறு ஒருவருடத்தைக்கழிப்பதற்குள் அவரது அரசாங்கத்தை எப்படி கவிழ்ப்பது என மஹிந்தவுக்கு இன்னொரு சோலி உண்டு.

ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் நிலவரங்களில் மட்டுமல்ல. அனர்த்தங்களிலும் கையறு நிலைகளும் சவால்கள் உண்டு.

குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டவுடனேயே பல இடங்களில் உடனடியாக வெள்ளம் சூழ்ந்துகொள்ளும் அவலம் போருக்குப்பின்னான வடக்கின் உள்கட்டமைப்பின் பலவீன யதார்த்தம்.

பெருமழைபொழிந்தால் வெள்ளநிலவரம் வராதா? இதென்ன முடிச்சுப்போடும் விமர்சனம் என நினைக்கவேண்டாம்.

போருக்குப்பின்னான வடக்கின் உள்கட்டமைப்பு குறித்த டமாரங்கள் அடிக்கப்பட்டபோது அதன் பலவீனயதார்த்தம்.

இப்போதும் வெள்ளம் ஊடாக வெளிப்பட்டிருப்பதால் இந்த நிலவரங்கள் ஒரு முறை வடக்கே மேற்கொள்ளப்பட வேண்டிய முறையான அபிவிருத்திகுறித்தும் மக்கள் தேவைசார்ந்த அரசியல் சேவைகுறித்தும் அறைந்து சொல்லியிருக்கிறது.

ஆம்! சிலவேளைகளில் இயற்கை மனிதருக்கு சில பாடங்களைக் கற்பிக்கும் ஆசானாகவே இருக்கிறது.

இதையும் தவறாமல் படிங்க