மைத்திரி- ரணிலின் நிவாரணஅரசியலும்! கட்சித்தலைமையகத்தில் தொங்கும் பூட்டும்!!

  • Prem
  • December 27, 2018
22shares

இயற்கைவழங்கும் பாடங்களை மனிதர்கள் சரிவரக்கற்றுக்கொள்ளவேண்டும். இது இற்றைக்கு 14 வருடங்களுக்கு முன்னர் இலங்கைத்தீவை பேரழிவு மிக்க ஆழிப்பேரலை ஒன்று வாரிச்சுருட்டிய பின்னர் சிறிலங்காவின் அப்போதைய அரசதலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உதிர்த்த வார்த்தைகள்.

இலங்கைத்தீவின் அன்றையபேரவலத்தின் கரும்புள்ளி இன்னமும் மாறவில்லையென்பதை நேற்றையஆழிப்பேரலை நினைவேந்தல்சோகம் வெளிப்படுத்தியது.

2004 டிசம்பர் 26க்குப்பின்னர் கடந்த பதினான்கு வருடகாலத்தில் எத்தனையோ இலங்கையிலும் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

உண்மையில் அன்றைய ஆழிப்பேரலை அனர்த்தம் எவ்வாறு இந்தோனேசியாவின் ஆச்சே சுதந்திரப்போராட்டத்தக்கு ஒரு அரசியல் தீர்வை வழங்கியதோ அதேபோல இலங்கையில் தமிழ்மக்களுடைய அரசியல் கோரிக்கைகளுக்கும் அதே பேரவலம் ஒரு சமாதான தீர்வை வழங்கியிருக்கவேண்டும்.

அழிப்பேரலை பேரவலகாலத்தில் உருவாகியமனிதாபிமானத்தையும் ஐக்கியத்தையும் மேலும் திரளவிடாமல் தெற்கின்அரசியல்வாதிகள் தமது வழமையாக அந்தகாரங்களை கச்சிதமாக செய்து முடித்தனர்.

இயற்கை வழங்கும் பாடங்களை மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென சுனாமி ஞானம் உரைத்த சந்திரிகாவால் கூட தமிழர்தாயகத்துடனசெய்துகொள்ளபட்ட பி-ரொம் (P-TOMS)அல்லது Post-TsunamiOperational Management Structure எனப்படும் ஆழிப்பேரலைக்குபின்னான கட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த முடியவில்லை.

தற்போது இலங்கையர்களின் ஜனநாயகத்துக்காக பாடுபடுவதாக காட்டிய ஜே.வி. பியும் ஜாதிக ஹெல உறுமயவும் அன்று இதே கட்டமைப்பை மையப்படுத்தி செய்த மூன்றாந்தர அரசியலால் எல்லாம் பாழானது.

2005 யூன் மாதம் ஆழிப்பேரலை புனரமைப்பு கட்டமைப்பை மையப்படுத்தி தமிழர்தாயகத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பி-ரொம் உடன்பாட்டில் ஒப்பமிடத்தயாரான போது சந்திரிகாஅரசாங்கத்தில் இருந்து சடுதியாக விலகிய ஜே.வி.பி அதனை ஆட்டம்காணவைத்தது

பி-ரொம் கட்டமைப்புசாத்தியமானால் அது பிற்காலத்தில் தமிழர்களின் தனியரசை அங்கரிக்கும் வழியை திறந்துவிடும் என்ற காரணத்துடன் இந்த சக்திகள் அன்று குத்தி முறிந்தன.

ஒரு கட;டத்தில் இந்த சக்திகள் சிறிலங்காவின் உச்சநீதிமன்றத்துக்கு சென்று பி-ரொமுக்கு தடையும்வாங்கியிருந்தன. இறுதியில் சுமார் 3 பில்லியன் அமெரிக்கா டொலர் நிதியில் தமிழர்தாயகத்தில் ஆழிப்பேரலை புனரமைப்பை மேற்கொளும் செய்யும நகர்வு தெற்கினால் முடக்கபட்டது. இதன் பின்னர் மீண்டும் விரிசலும் முரண்பாடுகளும் தலைதூக்கி 5 வருடங்களில் முள்ளிவாய்க்கால் வரை தமிழ்மக்களை குருரமாக காலம் நகர்த்தியது.

ஆழிப்பேரலை புனரமைப்பு பிற்காலத்தில் தமிழர்களின் தனியரசை அங்கரிக்கும் என்ற ஒரேயொரு காரணத்துடன் தெற்கு செய்த அன்றைய குயுக்தி இலங்கைத்தீவை பின்னோக்கித்தள்ளிவிட்டது.

இப்போது மீண்டும் வடமாகாணத்தின் வெள்ளநிவாரணங்களுடன் தெற்கின் அரசியல் ஆதாயநிகழ்ச்சிநிரல்கள் தெரிகிறது.

வடக்கின் வெள்ளத்தினால் மக்களுக்கு பெரும்இழப்புகள் ஏற்பட்டுள்ளன. ஏராளமான கால்நடைகள் பலியாகின. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கையும் அழிவடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களும் இடம்பெயர்ந்தனர். மொத்தமாக பல பில்லியன் ரூபாவுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் முதலில் தனது ராணுவவலையமைப்பு வடமாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு அரசதலைவர் மைத்திரி வெள்ள நிவாரண உதவிகளை கையாண்டார்.

அதன் பின்னர் அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு பூட்டுபோட்டுவிட்டு பண்டிகைகால சுற்றுலாவுக்காக தாய்லாந்துக்குப் பறந்தார்.

மைத்திரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்கு பூட்டுபோட்டமைக்கு காரணம் இல்லாமல் இல்லை. சிறிலங்கா சுதந்திரக்கட்சி பொதுஜனபெரமுன ஆகிய தரப்புகளுக்கு இடையேயான தற்போதைய குளறுபடியான அரசியல்நிலவரங்களின் பின்னணியில் தான் நாட்டில் இல்லாதவேளை யாராவது சுதந்திரக்கட்சியின் தலைமையகத்துக்குள் நுழைந்து தில்லாலங்கடிகளை செய்துவிடக்கூடாதென்பதற்காக முன்னெச்சரிக்கையாக மைத்திரி இதனைச்செய்தார்

ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்ற வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹனலக்ஸ்மன் பியதாஸ சில காரணங்களை சொல்கிறார்.

கட்சியின் தலைமையகம் மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லையெனக்குறிப்பிடும்அவர் தலைமையக பணியாளர்களுக்கு வருடாந்தவிடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பணிக்குதிரும்பியதும் தலைமையகப்பணிகள் ஆரம்பிக்கப்படுமென்கிறார். பணிகள் ஆரம்பிக்கபடுமென அவர் கூறும் அந்தநாள் மைத்திரி தாய்லாந்தில் இருந்து நாடுதிரும்பிய பின்னர் வரும் நாளாகும்.

சரி இந்தவிடயத்தை விடுங்கள் தமிழர்தாயகத்தின் வடபுலத்து வெள்ளநிவாரணங்களை பொறுத்தவரை மைத்திரி முதலில் அதனைக்கையாண்ட நிலையில் இப்போது ரணிலின் முறை வந்துள்ளது.

அதனடிப்படையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ளஅவல நிலைமைகளை ஆய்வுசெய்வதற்காக ரணில் நாளை (28) வடக்குக்கு செல்கிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டு சற்றேறக்குறைய ஒருவாரத்தில் ரணிலின் இந்தபயணம் இடம்பெறுகிறது. எனினும் மைத்திரியின் நகர்வுகளாகட்டும் அல்லது ரணிலின் நகர்வுகளாகட்டும யார் குற்றினாலும் அரிசியானால் சரியென்பதாக பாதிக்கபட்டமக்களுக்கு நிவாரணங்கள் சென்றடைந்தால் அது பிரயோசனமானதே.

ரணில்அரசாங்கத்தைப்பொறுத்தவரை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் உதவியுடன் தாம் மீண்டும் அரங்கேற்றப்பட்டதால் தமிழ்பேசும் மக்களுக்கு நன்றி பாராட்டவேண்டிய ஒரு சந்தர்ப்பமாக இந்த வெள்ள நிலவரங்கள் மாறியுள்ளன.

இதனால் ரணிலின் நாளைய கிளிநொச்சி பயணத்தில் நிவாரணம் வழங்கும் நகர்வுகளில் சில துரிதங்கள் வெளிப்படலாம்.

வடமாகாண அபிவிருத்தி அமைச்சும் ரணிலின் கைகளில் இருப்பதால் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்தபடி இதற்கான விசேட நிகழ்ச்சிநிரல் ஒன்று உருவாகலாம். ஆனால் இந்த நிகழச்சிநிரல் மறுபுறத்தே வடமாகாணசபை போன்ற தமிழ்மக்களின்; நிர்வாக அலகுகளை உரசவே செய்யும்

ஆகமொத்தம் இயற்கைவழங்கும் பாடங்களை மனிதர்கள் சரிவரக் கற்றுக்கொள்கின்றார்களோ இல்லையோ இயற்கைவழங்கும் பாடங்கள் சார்ந்த தெற்கின் அரசியல்நிரலை தமிழர்களும் அறியவேண்டியது அவசியமே! இது 2004டிசம்பர் சுனாமிக்கும் பொருந்தும் 2018டிசம்பர் வெள்ளத்துக்கும் பொருந்தும்.

இதையும் தவறாமல் படிங்க