ரணிலின் வடக்கு திக் விஜயமும்! பௌத்த பீடங்களுக்குரிய உறுதிமொழிகளும்!!

  • Prem
  • December 28, 2018
120shares

ஓக்டோபர் 26 என்ற கறுப்புவெள்ளிக்கிழமை ஊடாக தனது பிரதமர் ஆசனத்தைஇழந்திருந்த ரணில் இன்றைய டிசம்பர் 28 இல் முக்கியமான ஒரு திக் விஜயத்தை ஆரம்பித்திருக்கிறார்.

சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமராக ஜந்தாவது முறையாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டபின்னர் இவ்வாறு அவர் திக்விஜயம் செய்ய முன்னர் கண்டிக்கு சென்று அஸ்கிரிய மல்வத்து பீடங்களிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

அவ்வாறு அவர் அங்கு சென்றபோது அவர் வெறுங்கையுடன் செல்லவில்லை. மஹா சங்கங்களுக்குரிய பிரியத்துக்குரிய செய்திஒன்றையும் காவிச்சென்றார்.இனிவரும் காலத்திலும் நாட்டின் அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற செய்தியை வழங்கிவிட்டே அவர் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார்.

இவ்வாறு கண்டி அரசியல் ஆசீர்வாதங்களை முடித்தகையுடன் நேரடியாக வடக்கு பறந்த ரணில் வடக்கின் வெள்ள நிவாரண நகர்வுகளை மேலும் முடுக்கியிருக்கிறார்.

நாளை (29)மைத்திரியின் சொந்தமாவட்டமான பொலனறுவைக்கும் அதேபோல கடும்போக்கு வாக்காளர்கள் அதிகமுள்ள அநுராதபுரத்தின் சில இடங்களுக்கும் ரணில்; மறக்காமல் செல்வதை அவதானிக்கவேண்டும்

இவ்வாறு பொலனறுவ மற்றும் அநுராதபுரத்தையும் இதேசமகாலத்தில் எட்டிப்பார்க்காமல் விட்டால் தமிழர்சார்பு அனுதாபஅரசாங்கம் என்ற ஒரு முத்திரை தன்மீது குத்தப்பட்டுவிடும் என்பதால் ரணில் ஒரே பயணத்தில் சில மாங்காய்களை அடிக்கமுனைவது இயல்பானது.

ரணில் இப்போது பிரதமராக அரியணையில் இருந்தாலும் அவருக்கு வழங்கப்படும் குடைச்சல்களுக்கு குறையவில்லை. அந்தவகையில் இப்போது அவரது சொந்த அணியில் இருந்து புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பாலித ரங்கே பண்டாரவின் வடிவில் புதியஎச்சரிக்கை வந்திருப்பதை அவதானிக்கவேண்டும்

ஐக்கியதேசியக்கட்சியின் திருப்புமுனை(?) ரங்கே பண்டார எனபதாக அல்லது மகிந்ததரப்பின் குதிரைபேரஒலிப்பதிவை அம்பலப்படுத்திய ஹீரோ என எல்லோரும் தன்னை விளித்தாலும் ரணிலின் புதிய அமைச்சரவையில் தனக்கு இடம்வழங்கப்படாததால் விசனப்படும் பாலித ரங்கே,, யானையின் ஹீரோவான தான் இப்போது என்ன சீரோவா எனச்சீறுகிறார்.

அத்துடன்இன்னமும் ஒரு மாதத்துக்குள் தனக்கு அமைச்சுப்பதவியொன்று வழங்கப்படாவிட்டால் கடுமையான முடிவு ஒன்றை தான் எடுக்க வேண்டிவருமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

பாலித ரங்கே தனது வாயால் கூறிக்கொள்ளும் இந்த கடுமையான முடிவு என்னவாக இருக்கக்கூடும்? ஒன்றில் கட்சிக்குள் ரணிலுக்கு எதிராக கிளர்வது இல்லையென்றால் அணிதாவுவது ஆகிய தெரிவுகளில் ஏதாவது ஒன்றாகவே அது இருக்குமென்பது வெளிப்படையானது.

இதேபோல தமிழ் முற்போக்குகூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தரப்பிலும் ரணிலுக்கு மறைமுக அழுத்தங்கள் வருவதை இன்று இராதாகிருஷ்ணன் நடத்திய ஊடக மாநாடு வெளிப்படுத்தியது.

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில் அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில் தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறார் இராதாகிருஷ்ணன்.

இவ்வாறான அரசியல் குடைச்சல்கள் மட்டுமல்ல ரணிலின் அரசாங்கத்துக்கு பொருளாதாரசவால்களும் உள்ளன.

இதற்குரிய ஆதாரமாக இன்று அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான இலங்கை ரூபா மேலும் வரலாற்றில் அதியுச்சமான வீழ்ச்சியுற்ற நிலை அமைந்தது

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அண்மையில் சற்று ஏறுமுகப்பட்ட நிலையில் இன்று மீண்டும் அது வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நானாவித சவால்களின் பின்னணியில்தான் ரணிலின் இன்றைய வடக்கு திக்விஜயம் இடம்பெற்றது.

வடக்கின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளைப் பொறுத்தவரை மைத்திரி ரணில் ஆகிய இரண்டுதரப்புக்களுமே தமது நகர்வுகளை தமிழ்மக்கள் மத்தியில் அதிகமான விளம்பரப்படுத்தலுக்கு உள்ளாக்குவதை அவதானிக்கமுடிகிறது.

மைத்திரி ரணில் ஆகிய இருவருடைய ஊடகபிரிவுகளும்போட்டிபோட்டுக்கொண்டு இதனை நகர்த்துகின்றன.

ஆனால் கொழும்பு அதிகாரமையம் இவ்வாறு அதிக விளம்பரங்களை செய்தாலும் விளம்பரங்களே இல்லாதவகையில் தன்னார்வமாக தமிழ் அமைப்புகள் செய்துவரும் உதவிகள் இங்கு நினைவூட்டப்படவேண்டியதும் அவசியமானது.

வடக்கின் சமகால வெள்ளச்சேதாரங்களுக்கு குறுகிய காலத்தில் பெய்த அதிக மழை பொழிவு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளலாம். சில மணிநேரத்தில் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழைப்பொழிவை யாரும் எதிர்பார்க்கவில்லைத்தான் இதனால்தான் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வழமைக்கு மாறாக நிரம்பி வழிந்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 60 கிராமங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 77 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கடிக்கபட்டு பலரது வாழ்வாதாரம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம்ஏக்கர் பரப்பளவு நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. வியாபார நிலையங்களுக்குள் வெள்ள நீர் உட்சென்றதால் இனிவரும் நாட்களில் பொருளாதாரநெருக்கடி கழுத்தை நெரிக்கும். இதற்கும் அப்பால் மாணவர்களின் கற்றல் உபகரணங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின் அதிக பாதிப்புக்களை சந்தித்த கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய இரண்டு மாவட்டங்களில் மீள்குடியேற்ற பணிகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகநிலையில் இந்த அவலம் ஏற்படுள்ளதால் இந்த அவலத்தில் இருந்த அந்த மக்கள் மீட்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இவ்விதமான நிலைமைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு தேவையான வேலைத் திட்டங்களே இப்போது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய திட்டமாக மாறவேண்டும்

போருக்குப்பின்னராக உட்கட்டமைப்பு நிர்மாணத்தின்போது முன்னெடுக்கப்படுகின்ற ஒழுங்குமுறையற்ற அபிவிருத்தித் திட்டங்களே வடக்கின் பல பிரதேசங்களில் இந்தமுறைவெள்ளத்தில் மூழ்கடித்துள்ளமை ஆதாரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டு மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாதென அடம்பிடித்த தமிழ்அரசியல்வாதிகளும் இப்போது அதே இரணைமடு குளத்தின் நீர் கடலுக்குள் செல்வதை கண்ணார கண்டுவருகின்றனர்

இவ்வாறான நிலைமைகளுக்கு காணவேண்டிய தீர்வே மக்களுக்கு வழங்கப்படும் அன்றாடம்காச்சி நிவாரணங்களைவிட அதி அத்தியாவசியமாக இருக்கக்கூடும் ஆனால் இந்தமுறையாவது இந்த அதி அத்தியாவசிய தீர்வு கிட்டுமா? இதுவே இப்போதைய வினா.

இதையும் தவறாமல் படிங்க