2019- இலங்கை அரசியல் ராசிபலன்களும்! ஒருமித்த சுமந்திரன் மற்றும் ஏக்கிய கிரியெல்லக்களும்!!

  • Prem
  • January 01, 2019
119shares

நேரமாற்றவலையங்களுடன் உருளும் உலகப்பரப்பின் அனைத்து நாடுகளிலும் 2019ஆம் ஆண்டு குதூகலங்களுடனும் வாணவேடிக்கைகளுடனும் பிறந்துவிட்டது. வழமைபோலவே ஆலாபனைகளுடன் கூடிய சுபமான புத்தாண்டுச்செய்திகளும் 2019 க்குரிய எதிர்வுகூறல்களும் வந்துவிட்டன.

மேற்குல ஜோதிட குறிசொல்லிகள் சாதக பாதகமாக தமது ஆருடங்களை சொல்கின்றனர். புத்தாண்டின் முதல்நாளில் சூரியனும் சந்திரனும் ஒரே இராசியில் நிலைகொண்டன எனவும். எண்சாத்திரப்படி 2019இன் கூட்டுத்தொகை செவ்வாய்கிரகத்தின் ஆற்றல் எண்ணான 3 ஆக வருவதால் ஆற்றல் கொண்ட ஆண்டாக இந்த ஆண்டுமாறும் என்கிறார்கள்

2019 குறித்த இவ்வாறான ஆருடக்கதைகளின் பின்னணியில் இலங்கைத்தீவின் 2019ராசியைக் கொஞ்சம் பார்க்கலாம் இந்த ராசிப்பட்டியலில் மகிந்தவை விடுங்கள் அவர் வேறு லெவலிவ் உள்ளார் சீனஅரசதலைவர் அவருக்கு அனுப்பிய பிரத்தியேக புத்தாண்டுவாழ்த்து அட்டையை காவியபடி சீனத் தூதரே அவரிடம் நேரடியாக ஓடும் அளவுக்கு இன்னமும் சீனத்து சீமானாக அவர் உள்ளார்.

மகிந்த சீமானுக்கு அப்பால் இலங்கைத்தீவின் முதன்மைத்தலையாரி மைத்திரி முதல் எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்காக இன்னமும் முயலும் இரா.சம்பந்தன் வரையான அரசியல் முகங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்தன

அந்தவகையில் கடந்த காலத்தில்கைநழுவிய வாய்ப்புகளை அறிந்து அதன் மூலம் புதிய வழிகளுக்குள் செல்லக்கூடிய வாய்ப்புக்களை 2019வழங்குவதாக மைத்திரிகூறியுள்ளார்.

தனது அறிவுரைப்படியே நாட்டிலுள்ள சகல மாகாண ஆளுநர்களும் தத்தமது பதவிவிலகல் கடிதங்களை, தன்னிடம் வழங்கியிருப்பதால் இனிமாகாண சபைத் தேர்தலில் தனக்கும் மகிந்தவுக்கும் சாதகமான ஒரு சூழலை தோற்றுவிக்க ஆளுநர் பதவிகளிலும் அவர் சில சூட்சுமமாற்றங்களைசெய்வார். தனக்கு தோதானவர்களை ஆளுநர்களாக அவர் நியமிப்பார்.

மைத்திரி தனது வாழ்த்தை வழங்கமுன்னர் நேற்று கண்டிக்கு ஓடோடிச்சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு ஆசீர்வாதம் பெற்றிருப்பதையும் சொல்லவேண்டும். கடந்த 28 ஆந்திகதி ரணிலும் இவ்வாறாகவே செய்தார்

மைத்திரியுடன் 2019 இலும் பல இடங்களில் உரசல்படவேண்டிய இக்கட்டான நிலையில் உள்ள ரணிலும் கூட்டிக்கழித்துப்பார்த்து தனது வாழ்த்தை வழங்கினார்.

அனைத்து இலங்கையர்களுக்கும் சவால் மிகுந்த ஒரு வருடமாக 2019மாறும் என்பதே ரணில் வழங்கிய வாழ்த்துச்செய்தியின் மையப்புள்ளி.2018 இன் இறுதியில் அரசியில் ரீதியில் நொந்து நூடுல்ஸாகிய தான், மீண்டும் பிரதமர் ஆசனத்தைப்பிடித்தாலும் அரசாங்கம் ஒன்றை உருவாக்கிக்கொண்டாலும் அரசாங்கத்தை முறையாக நகர்த்தாவிட்டால்அவ்வாறான தோல்வியை மைத்திரி முதலிடாக்கிஇரண்டாம் கட்ட ஆட்டத்தைதவிரப்படுத்தும் நிலை ரணிலுக்கு சவாலானது.

இதனால்தான் 51 நாள் குழப்ப கதைச்சுருக்கத்தை தனது புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் சொன்னசொன்ன ரணில் இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில்வந்தால் அதனைத்தடுக்க அணிதிரளவேண்டுமென்ற அழைப்பை விடுத்தார்.

ஆகமொத்தம் 2019 இன் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை இடம்பெற உள்ள நிலையில் இந்த ஆண்டில் மைத்திரியின் இரண்டாம்கட்ட ஆடுகளத்தை எதிர்நோக்கும் நிலையை ரணில் உணர்வது அவரது செய்தியில் பளிச்சிடுகிறது.

அமைச்சர்களின் நியமனங்கள் இடம்பெற்றாலும் அவர்களுக்குரிய பொறுப்புகளை வெளிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை 10 நாட்களாக மைத்திரி இழுத்தடித்து கடந்தவாரம் வெளியிட்டபின்னர் இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே தமிழ்தேசியகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழங்கிய வாழத்துச்செய்தியில் இலங்கைத்தீவின் சமூகங்களை இன மத அடிப்படையில் பிரிக்கும் அரசியல் பிரிவினைவாதிகளுக்கெதிராக செயற்பட 2019இல்திடசங்கற்பம் கொள்ள வேண்டும் என்ற செய்தி இருந்தது.

இந்தசெய்தியின் 2019 இல் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிட்டும் என்பதான எந்தவர்த்தைப்பிரயோகங்களையும் அவர் செய்யவில்லை.2015 இல் இருந்து ஏற்கனவே இவ்வாறு சொல்லி கைகளை சுட்டுக்கொண்டவர் இரா. சம்பந்தன்

இதனால் இந்த முறை மிக அவதானமாக , பாதிக்கப்பட்ட சமூகங்கள் தமது நீண்டகால பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை மாறாக 2019இல் காணவேண்டும் என்றசெய்திமட்டும் இருந்தது.

இதனையும் விட பிரிக்கமுடியாத பிளவுபடாத ஒருமித்தநாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தர தீர்வைக்காண முன்வருமாறு அரசியல் மத குடிசார்சமூகங்களுக்கும் அவர் அழைப்புவிட மறக்கவில்லை. ஆனால் இரா. சம்பந்தனின் புத்தாண்டுச்செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒருமித்தநாட்டு என்ற பதம் குறித்து ஏற்கனவே யானைகளின் முக்கிய முகமான லக்ஸ்மன் கிரியெல்ல ஒரு முக்கிய பதில் வழங்கியிருப்பதை அவதானிக்கவேண்டும்.

தமிழமக்களிடம் கூட்டமைப்பின் முகமான சுமந்திரன் விற்பனை செய்ய முயலும் “ஒருமித்த நாடு” என்ற பதத்துக்கு புதிய அரசியல் அமைப்பில் எந்தவொரு இடத்திலும் இடமில்லை. ஒற்றையாட்சியைக்குறிக்கும் “ஏக்கிய ராஜ்ய” என்ற பதமே அரசியல் சாசனத்தின் மும்மொழிப் பிரதிகளிலும் பேணப்படும் என்பதே கிரியல்லவின் கிரிடச்செய்தி.

தற்போதைய அரசியல் களத்தில் சில சாதூய சுறுசுறுப்புகளுக்குரியதாக சுமந்திரன் என்ற ஒரு புத்தூக்கம் கொண்ட முகம் இருந்தாலும் நீண்ட நெடிய பதிவுகளைக் கொண்ட இலங்கையின் இனமுரண்பாட்டுத்தளத்தில் கொழும்புஅதிகாரமையம் அவ்வப்போது நகர்த்திய தில்லாலங்கடிகளுக்கு முன்னால் அவர் ஒரு பதின்மவயதுடையவர்.

இதனால் சாதுர்யச்சுறுசுறுப்பு கொண்ட சட்டவாளர்சுமந்திரன் என்ற குழந்தை ஏக்கிய” என்ற சொல்லை தமிழில் “ஒருமித்த” என குறிப்பிடுவோம் என வீரம்காட்டினாலும் இந்தவிடயத்தில் அப்பால்போய் விளையாடு குழந்தாய் எனவே தெற்கில் இருந்து செய்திகள் சொல்லப்படுகின்றன.

ஆகையால் இந்த ஏக்கிய -ஒருமித்த என்பதான குழப்பப்பதங்கள் குறித்து தமிழ்மக்களுக்கு உண்மைநிலையை கூறவேண்டிய பணியை சுமந்திரன் போன்றவர்களே செய்யவேண்டும்.

சரி இலங்கையிலிருந்து அதன் அரசியல் முகங்களின் வாழத்து அதிர்வுகளின் பின்னணி இவ்வாறானால் இலங்கைக்கான 2019வாழ்த்து மூகூர்த்தம் சாதகமாக இல்லையென்பதை நேற்றும் இன்றும் அங்கிருந்து கிட்டிய செய்திகள் கட்டியம் கூறியுள்ளன.

அமெரிக்க டொலருக்கு எதிராக 19 வீதத்தால் வீழ்ச்சியடைந்த இலங்கை ருபா இன்று ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில் இணைந்துள்ளமை அதற்கு பொருளாதாரரீதியில் கிட்டிய பாதக வாழ்த்துச்செய்தியாகியுள்ளது.

இதேபோல கொழும்பின் தெஹிவளை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இலங்கையில் அதிகளவு ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பம் என்ற நாசகாரபதிவும் உருவாகியுள்ளது.

2400 மில்லியன் ரூபா பெறுமதியில் 278 கிலோ நிறைகொண்ட இந்த போதைப்பொருளுடன் இரண்டு பங்களாதேஷ் பிரஜைகளும் கைதாகினர்இந்த வீடுதான் நீண்ட நாள்களாக இலங்கையில் ஹெரோயின் வினியோகத்தின் மத்திய கேந்திர நிலையமாக இருந்தமை இப்போதுதான் தெரிந்துள்ளது

ஆகமொத்தம் அரசியல் பொருளாதாரம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகிய தளங்களில் இலங்கைக்கு 2019 இன் ஆரம்பராசிபலன் சவாலே சமாளி என்பதாகவே தற்போது உள்ளது இதனை புத்தாண்டின் பெயரிலாவது ஆகக்குறைந்தது ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதையும் தவறாமல் படிங்க