சுமந்திரனுக்கு திரேசாமேயின் செய்தி என்ன? புதியஅரசியலமைப்புக்கும் பிரெக்ஸிற் கதிவருமா?

  • Prem
  • January 16, 2019
256shares

இலங்கைத்தீவின் பொதுஅரங்கில் புதிய அரசியலமைப்பு எனப்படும்; ஒரு பேசுபொருள் சுழல்கிறது இந்தசுழற்சி சஞ்சாரத்தை மையப்படுத்தி தமிழ் சிங்கள அரசியல் பரப்பில் சில கதைகள் சொல்லப்படுகின்றன.

தமிழ்பரப்பிலும் சுமந்திரன் போன்ற அரசியல்முகங்கள் சொல்லும் சிலபல கதைகள் உற்றுநோக்கல்களையும் விமர்சனங்களையும் தோகின்றது.

அதேபோல தமிழ்த்தேசியக்கூட்டமைப்பால் தான் மீண்டும் பிரதமராக கொலுவேற்றப்பட்ட புளுகத்துடன் தெற்கின்அரசியல் புனுகுப்பூனையான ரணில் சில சந்தோஷக்கதைகளைச்சொல்வதும் புதியஅரசியலமைப்பின் ஊடாக தமிழருக்கு அரசியல்தீர்வுவழங்குவதே தனது பிரதான கடமையென தமிழருக்கு சங்கல்பம் காட்டுவதும் சமகாலக்காட்சிகள்.

புதியஅரசியலமைப்பின் ஊடாகதமிழருக்கு அரசியல் தீர்வு என்ற விடயம் இருந்தாலும் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் 3 இல் இரண்டு பெரும்பான்மை பலம் அதற்குத்தேவைப்படுவதும் அதற்குப்பின்னர் றெபறண்டம் எனப்படும் இலங்கைதழுவி நடத்தப்படும் குடியொப்பவாக்கெடுப்பின் பச்சைக்கொடி முடிவு அதற்குத்தேவைப்படுவதும் யதார்த்தம்

இந்தநிலையில் இலங்கைத்தீவின் முன்னைய குடியேற்றஎஜமான்களில் இறுதிஎஜமானான பிரித்தானியாவிடம் இருந்து நேற்றிரவு வெளிப்பட்ட மிகமுக்கிய பிரெக்சிற் செய்தி இங்கு முக்கியமானது.

ஆகையால் அரிசிப்பொரியோடு திருவாதிரை என்பதாக பிரெக்சிற் படிப்பினையூடாக எதிர்காலத்தில் இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கு நேரக்கூடிய கதிகுறித்த மறைமுகசெய்தியையும் பார்ப்பது.(இது மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் போடும் முடிச்சு அல்ல)

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகிக்கொள்ளும பிரெக்சிற்; நடைமுறை குறித்து பிரித்தானியப் பிரதமர் திரேசாமே மேற்பார்த்த பிரித்தானிய அரசாங்கமும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த நவம்பரில் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தன

இந்தநிலையில் இந்த உடன்பாட்டை ஏற்கமறுத்து பிரித்தானிய நாடாளுமன்றம் நேற்றிரவு வழங்கிய தீர்ப்பு பிரித்தானியாவின் சமகால வரலாற்றில் ஒரு புதிய வரலாற்றுப்பதிவை உருவாக்கியுள்ளது.

1924 இல் பிரித்தானிய அரசாங்கம்(James Ramsay MacDonald ) சந்தித்த வரலாற்றுத்தோல்வியை விட மிகமோசமான தோல்வியை இந்தத்தீர்ப்பின் ஊடாக பிரதமர் திரேசாமே சந்தித்தார். குறி;ப்பாக திரேசாமேயின் கென்சவேட்டிவ்தரப்பைச் சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இணைந்து எதிராக வாக்களித்தனர். இதனால் பிரெக்சிற் தொடர்பான திரேசாமேயின் நிலைப்பாட்டுக்கு எதிராக 432 வாக்குகள் பதிவாகின.

மறுதரப்பில் அந்தோ பரிதாபம் பாணியில் 202 வாக்குகள் மட்டும் தெரசா மேக்கு கிட்டியது. இதனால் மேயின் சொந்தக்கட்சி வாக்குகள் உட்பட பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தால் அவர் வெஸ்மினிஸ்டர் வளாக மண்ணைக்கவ்வினார். பிரித்தானிய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு ஆளும் கட்சி அடைந்த மோசமான தோல்வியாக இந்ததோல்வி வரலாற்றுரீதியாக பதிவாகியது.

பிரெக்சிற் தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டில் இடம்பெற்ற குடியொப்ப வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிச்செல்வதென்ற முடிவு வெளிப்பட்ட பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகாலமாக இதனைமையப்படுத்தி நகர்ந்த திரேசா மேக்கு இது மிக பெரிய வீழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

நந்தவனத்தில் ஒரு ஆண்டி பாடலில் வருவதைப்போல அவரும் பிரெசெல்சும் நாலாறுமாதமாக செய்த தோண்டி இப்போது உடைக்கபட்டுவிட்டது.

இனி அடுத்து என்ன? மேயின் அரசியல் வாழ்வுக்கு முடிவுரை அல்லது பொதுத்தேர்தல் என்பது முதல் நோ டீல் எனப்படும் உடன்பாடற்ற கடும்போக்கு பிரெக்சிற் வரை சில சாத்தியப்பாடுகள் எஞ்சியுள்ளன.

இதற்கிடையே இந்த குழப்பங்களை முதலீடாக்கி அரசியல்; எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அரசியல் மீனைப்பிடிக்கமுயல்வது மிக முக்கியமான நகர்வு.

எது எப்படியோ தற்போதைய நிலவரப்படி பிரெக்சிற்றை எந்த அடிப்படையில் நகர்த்துவது என்பதில் தெளிவற்ற நிலையிருக்கிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்ற பிரித்தானியர்களின் ஜனநாயகமுடிவுக்கு மிக முக்கிய சோதனை வந்துள்ளது.

குறிப்பாக மேயின் கென்சர்வேடிவ் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலர் அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்களித்திருப்பதால்; முரண்பாட்டு நிலைகள் நீட்சியுறுகின்றன.

இந்தநிலைமை ஆங்கிலக்கால்வாயின் அக்கரையில் பெருநிலப்பரப்பில் உள்ள ஒன்றியத்துக்கும் மிகச்சங்கடத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகக்கட்டமைப்பின் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் லண்டன் அதிர்வுகளால் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதற்குரிய வகையில் எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. பிரெக்ஸிட் வேண்டாம் ஒன்றியத்தின் உறுப்புநாடாக பிரித்தானியா தொடரலாமென ஐரோப்பியஒன்றியப்பேரவையின் தலைவர் டொனால்ட்ரஸ்க் ஒரு மறுவாசிப்பை எறிந்திருக்கிறார்.

எதிர்வரும் மார்ச் 29 பிரெக்சிற்காலக்கெடுவாக இருப்பதால் ஒப்பந்தமொன்றை ஒன்றை எட்டுவதற்கான நேரம்மிககுறைவாக இருப்பதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேங் குளுட் யங்கர் எச்சரிக்கிறார்,

இதேபோல பிரித்தானியா தனக்கே உரித்தான தினாவெட்டு அணுகுமுறையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்ஸிட் தலைமை அனுசரணையாளர் மிசேல் பர்னிர் குறிப்பிட்டார்.

சரி இப்போதைக்கு பிரெக்சிற்றின் அடுத்தக்கட்ட நகர்வு எவ்வாறு இருக்ககூடும்?இதனை இப்போது துல்லியமாக கூறமுடியாது.

ஆனால் இந்த பிரெக்சிற் நிலவரத்தில் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பு குறித்து யானையின் தும்பிக்கையையும் நம்பிக்கையையும் சேர்த்துப்பிடிக்கும் முகங்களுக்கு ஒரு செய்தி நிச்சயமாகவே உண்டு.

ஆம்! திரேசா மேயும் ஐரோப்பிய ஒன்றியம் நாலாறுமாத பாணியில் வேண்டி செய்த பிரெக்ஸிற் தோண்டி பிரித்தானிய அரசியலில் கென்சவேட்டில் லேபர் லிபரஸ் டெமகிறட் எஸ் என் பி எனப்படும் ஸ்கொட்லாந்து தேசியகட்சி டியூபி எனப்படும் வடஅயர்லாந்துகட்சி என கட்சி பாகுபாடுகளை கடந்து தோற்கடிக்கபட்டுள்ளது.

இதேநிலை இலங்கையில் புதிய அரசியலமைப்பை மையப்படுத்தி விரைவில் வரலாம். அதாவது புதியஅரசியலமைப்பின் ஊடாக தமிழருக்கு அரசியல் தீர்வு என ரணில் சுமந்திரன் போன்ற முகங்கள் வெளிப்படுத்தும் புளுகு நிலைகூட எதிர்காலத்தில் தெற்கில் கட்சி பாகுபாடுகளை கடந்து தோற்கடிக்கபட்டலாம்.

ஆகக்குறைந்தது இவ்வாறு ஒரு கதிவராது என்பதற்கும் யாதொரு உத்தரவாதமும் இல்லை.

இதையும் தவறாமல் படிங்க