காதலர் தினமும் ரணிலின் வடமாகாண கொண்டாட்டங்களும்.

  • Prem
  • February 15, 2019
27shares

உலகம் கொண்டாடிய காதலர்தின அடையாளத்துக்கும் சிறிலங்கா பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் வடக்குப்பயணத்துக்கும் யாதொரு நேரடித்தொடர்பும் கிடையாது. ஆயினும் அவ்வாறாகவேனும், வடக்கின் மீது 3 நாள் தீவிர காதல் கொண்டு அங்கு சென்றிருக்கும் அவரது நோக்கத்துக்கு மறுபக்க வியாக்கியானங்களை வழங்கவும் முடியாது.

ஏனெனில் ஒருமித்த நாடோ அல்லது ஏக்கியராஜ்யக்கருத்தியலோ எதுவென்றாலும் இப்போதைக்கு அந்த மையப்புள்ளியில் அவர்தான் சிறிலங்கா ஜனநாயக சோசலிசகுடியரசின் பிரதமர்.

ஆகையால் அவருக்குஅந்தக்குடியரசின் எந்தப்பகுதிக்கும் செல்வதற்குரிய உரித்து இருக்கவே செய்யும். ஆனால் இலங்கைத்தீவில் இந்த ஆண்டில் முக்கிய தேர்தல்கள் இடம்பெறவிருப்பதால் ரணிலின் வடக்குப்பயணத்தை வலன்டையன் பயணமாக அடையாளப்படுத்தினாலும் அதிலும ஒரு காரணம் இருக்கவே செய்யும்.

ஏனெனில் எதிர்வரும் தேர்தல்களங்களில் தமிழ்பேசும் மக்களின் வாக்குகள் ஊடாகவே கொழும்புமையத்தில் தமது அரசியல் இருப்பை தக்கவைக்க முடியும் என்பது அவருக்குத்தெரியாத விடயமல்ல.

ஆனால் இந்த இருப்புக்குரிய வாக்குகளை தமிழ்மக்கள் அள்ளிவழங்க முடியாதவகையில் தமிழ்அரசியல் கைதிகளுக்கு கிட்டதாக விடுதலை, காணி விடுவிப்புநகர்வின் இழுத்தடிப்பு, வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த வழங்கப்படடாத பதில் ஆகிய விடயங்கள் இன்னமும்கொதிநிலையில் உள்ளன.

மறுபுறத்தே தமிழ்மக்களுக்கு அதிகமாக அரசியல் உறுதிப்பாடுகளை வழங்கி அதாவது தமிழ் மக்களுக்கு நிரந்தரஅரசியல் தீர்வை வழங்குவதாக கூறி அதனூடாக தெற்கில் சுமார் 70 வீதத்தில் உள்ள சிங்கள மகாஜனதாவின் வாக்குகளை இழக்கும் சுய காயப்படுத்தல் நகர்வையும் ரணில் செய்யத்துணியமாட்டார்.

இந்த நிலையில் இந்த 2 நிலைமைகளுக்கும் இடையிலான ஒரு தீர்வாக வடக்குக்கு சில சலுகைகளை வழங்க ரணில் முடிவெடுத்தன் ஒரு அடையாளமே அவரது 3 நாள் வடக்குப்பயணம்.

யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகள் எங்கும் சிறிலங்கா காவற்துறையும் அதிரடிப்படையும் விரவிநின்று சோதனைகளை மேற்கொண்ட பின்னணியுடன் யாழ்பாணத்துக்குச்சென்ற ரணில் உடனடியாகவே தனது நிகழ்ச்சி நிரல்களில் தீவிரமாக குதித்தார்.

அவருடன் கூடவே அர்ச்சுனா ரணதுங்க ராஜித சேனாரத்ன அகிலவிராஜ் காரியவசம் சாகல ரத்னாயக்கா வஜிர அபயவர்த்தன போன்ற அமைச்சு முகங்களும் வடக்கில் கூட்டாக களம் இறங்கியதை அவதானிக்கமுடிந்தது.

முதலில் கோப்பாய் பிரதேசசபையின் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைத்த ரணில், அந்தநிகழ்வில் மறக்காமல் மாவைசேனாதிராஜாவையும் தனக்கு அருகில்; நின்று நாடாவெட்டவும் வைத்திருக்கிறார்.

2015 இல் இருந்து நல்லாட்சி என கழிந்தசுமார் மூன்றரை வருடகாலஆட்சி தமிழ்மக்களை ஏமாற்றியதான விசனத்தை வெளியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மாவைசேனாதிராஜாவை காய்வெட்டாமல் அவரை நாடாவெட்டவைத்தமை ரணிலின் ஒரு சாணக்கியமாகவும் நோக்கப்படலாம்.

எது எப்படியோ எதிர்வரும் சனிக்கிழமை வரை மொத்தமாக மூன்று நாட்கள் வடக்கில் தங்கியிருக்கும் ரணில் குழாம் பல சலுகை நிகழ்வுகளை தமிழமக்களுக்கு காட்சிப்படுத்தப்போவது திண்ணம்.

ரணில் இன்று யாழில்கால்பதிக்க முன்னர் இந்தியாவால்45.27 மில்லியன் டொலர்செலவில் முன்னெடுக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித்திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதையும் அவதானிக்கவேண்டும.;

யாழ்ப்;பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்கள் என ரணில் குழாமுக்கு பல நிகழ்வுகள் காத்திருக்கின்றன. தமிழ்மக்களுக்குரிய வீடமைப்பு, அவர்களிள் மீள் குடியேற்றம், அவர்கள் வாழும் மாவட்டங்களின் அபிவிருத்தி என இந்த காட்சிப்படுத்தல்கள் உள்ளன.

இவைகாட்சிப்படுத்தல்களாக இருந்தாலும் மைத்திரியோ ரணிலோ யார் குற்றினாலும் இவ்வாறான அரிசிகள் தமிழ்மக்களுக்கு முறையாக கிட்டினால் அது வாய்ப்பானதே!

ஆனால் இவ்வாறாக யார்குற்றினாலும் தமிழருக்கு அரிசிவரக்கடவும் இந்தநிலையை தமிழ்மக்களுக்குரியஅரசியல்உரிமைக்கான மாற்றீடாக கொழும்பு அதிகாரமைய முகங்கள் காட்டினால் அது அரிசி குற்றும் நிலையல்ல மாறாக காது குத்தமுனையும் நிலையே!

இதையும் தவறாமல் படிங்க