தமிழர்களை உழவு இயந்திரத்துடன் வைக்கோல் போட்டு எரித்த கொடூரம்!

194shares

இன்று அம்பாறை உடும்பன் குளம் படுகொலை நினைவு தினம்.

“என்ர அப்பா அப்போது இறக்கவில்லையாம். அப்படியே காயத்துடன் தான் இருந்தவர். எங்கட உழவு இயந்திரத்திலேயே எல்லோரையும் போட்டு இராணுவம் எரித்துவிட்டது” என்கிறார் உடும்பன்குளம் படுகொலைச் சம்பவத்தில் காயங்களுடன் உயிர் தப்பிய சியாமளா...

சியாமளா கிணற்றடியில தண்ணி அள்ளிக்கொண்டிருந்தார். சியாமளாவின் கணவன் எங்களை “வாங்கோ சுரேன்” என்று வரவேற்று எங்களை இருக்கச்சொன்னார். சண்டை ஒன்றிலே அவரது இரண்டு கண்களும் இல்லை. “ எப்படி அண்ணை நாங்கள் தான் என்று தெரியும்” என்று கேட்க.

“தயாமோகன் அண்ணை நீங்கள் வருவீங்கள் என்று சொன்னவர்” என்று சொல்லின்கொண்டே மனைவியை கூப்பிடுகிறார். கிளிநொச்சி-முறிகண்டிப்பகுதிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டம். கிழக்கு மாகாணத்தில் இருந்து கருணாவின் பிரிவுக்கு பின்னர் வருகை தந்த பலர் அந்த வீட்டுத்திட்டத்திலேயே வசித்து வந்தனர்.

சியாமளாவிற்கு நான்கு வயதில் நடந்த அக்கொடூர நினைவுகளை கொடுத்திருந்தது. “அப்பம்மா சொல்லி சொல்லியே தனக்கு இக்கதை வடிவாத்தெரியும்” என்று சொல்லியிருந்தார். முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் தழும்பை அக்கொடூரத்தின் சாட்சியாக காண்பித்தார்.

அவரின் சாட்சியாக எழுதப்பட்ட இக்கட்டுரை 2007ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் வெளிவந்திருந்தது.

இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கிழக்கமாகாணத்திலேயே சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன

இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்திருந்த அதேவேளை பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் வீடுகளோடு சேர்த்தும் எரித்தும் கொன்றுள்ளனர். இந்தவகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கிறது.

இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிறிலங்கா இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் போயிற்று.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன் குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச்சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு அன்று சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் காடையர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் இருபத்தியொரு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்யமுடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்கமுடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும்.

உடும்பன்குளக் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் வயல் விதைப்புக்களிலும் அறுவடைகளிலும் தங்கள் குடும்பத்துடன் சென்று அருகில் உள்ள மலைகளில் உள்ள வடிகால் பகுதியினை அண்மித்து வாழ்ந்து வந்தார்கள். அக்காலப்பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம்,வெண்டி, கீரை போன்றவற்றைப் பயிரிட்டும் அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள்.

இவ்வாறு தங்கள் நிலங்களில் நிம்மதியாக வாழ்ந்த இம்மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

இப்படுகொலைச் சம்பவமானது தற்செயலாக வந்த இராணுவத்தினராலோ அல்லது பதில் நடவடிக்கை என்ற ரீதியிலோ இடம்பெறவில்லை. மாறாக இம்மண்ணில் இருந்து இவர்களை விரட்டுவதே இவர்களின் உள்ளார்ந்த நோக்கமாகும் என்பதை இம்மக்கள் பின்னாளில் அறிய முடிந்தது.

19.02.1986 அன்று காலை கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் இருந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்றது. அக்கிராமத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தங்களோடு முஸ்லிம் காடையர்களையும் இணைத்துக் கொண்டனர். கிராம மக்களில் கூடுதலானவர்கள் மாசி மாத அறுவடைக்காலம் என்பதால் வயல் வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். அன்றும் அப்படித்தான் வயல் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். வயல்களில் வேலை செய்த பல அப்பாவிப் பொதுமக்களை கைதுசெய்து கைகளையும் கண்களையும் கட்டி துன்புறுத்தினார்கள். ஆண்களுடைய உறுப்பை அறுவடை செய்யும் கத்தியால் வெட்டி, சித்திரவதை செய்திருந்தார்கள். பாதி உயிரோடு வைக்கோலை உழவு இயந்திரத்தில் போட்டு எரித்துவிட்டுச்சென்று விட்டார்கள்.

இக்கிராமப் படுகொலைச் சம்பவம் பற்றி அறிவதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரை அணுகினோம், இப்படுகொலைச் சம்பவத்தில் படுகாயமடைந்த சியாமளா என்ற சிறுமி (அன்று நான்கு வயது) தற்பொழுது இருக்கிறார். (அவருக்கு தற்பொழுது இருபத்தியேழு வயது) அவரிடம் கேட்டால் இச்சம்பவத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்கள்.

1986 ஆம் ஆண்டு நான்கு வயது என்று பாராமல் இராணுவத்தினரால் படுகாயப்படுத்தப்பட்ட அச்சிறுமி, தற்பொழுது முறிகண்டியில் உள்ளார். இச்சம்பவத்தில் தனது உறவுகளை இழந்த நிலையில் அப்பம்மாவின் அரவனைப்பில் வளர்ந்த தமிழ்ப்பிறை (சியாமளா) தன்னுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அப்பம்மாவிடம் அறிந்து கொண்டதை இவர் திரைப்படம் போல் எங்களிடம் கூறியுள்ளார்.

“நாங்கள் 1986 அம் ஆண்டு காலப்பகுதியில் அக்கரைப்பற்றில் வசித்து வந்தோம். எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் நிலம் உள்ளது. அதில் முழுதாக விவசாயம் செய்து வந்தோம். அறுவடைக்காலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திய பின் எங்கள் அப்பாவின் இரண்டு உழவு இயந்திரத்தில் நாங்கள் அனைவரும் உடும்பன் குளத்திற்குச் சென்று மலைகளில் வாடிகள் அமைத்து இருந்தோம்.

எங்களோடு அப்பப்பா அப்பம்மா அப்பா அம்மா மற்றும் இரண்டு சித்தப்பாமார் வேறு உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் எங்களுக்குத் தேவையான உணவுவகைகளைச் செய்வார்கள்.

இவ்வாறு அன்று வழமையான வேலைகளைச் செய்து கொண்டிருக்கையில், மதியம் உணவு உண்பதற்காக அப்பா எல்லோரையும் அழைத்து 'எல்லோரும் சாப்பிட்டு போங்க நான் சூடுகளுக்கு (அறுவடை செய்யப்பட்ட நெல்லுடனான வைக்கோல்) காவல் நிக்கிறன்" என்று சொன்னார். உடனே எல்லோரும் மலைகளுக்கு சென்றுவிட்டார்கள். அக்காலப்பகுதியில் எனது சித்தப்பா கோபால கிருஸ்ணன் (கண்ணா) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எடுத்து விட்டு இருந்தபடியால் அந்த இடைவெளியில் அவரும் எங்களோடு வந்தவர். அவர் மலையில் மறுபக்கத்தில் படுத்து நித்திரையாகி விட்டார்.

கிராமத்தை சுற்றிவளைத்த ஆமி, வயலுக்கு வந்து 'டேய் எங்க எல்லாரும்?" என்று கேட்க, அதற்கு அப்பா "எல்லோரும் மலையில் சாப்பிடினம்" என்று சொல்ல, ஆமியோடு வந்த முஸ்லிம் ஒருத்தன் அப்பாவை நன்றாகத் தெரிந்தவன். கத்தியால் வயிற்றில் குத்திவிட்டான். அப்பா 'கண்ணா ஓடு கண்ணா ஓடு" என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கத்தினார்.

அப்பதான் எல்லாரும் பார்த்தால், அப்பா இரத்த வெள்ளத்தில் அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் தூக்கிப் போட்டிருந்தார்கள். பின்னர், மலையில் இருந்த ஏனையோரையும் கைதுசெய்து வயலுக்குகொண்டு வந்தார்கள். அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி அடிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண்களை ஓடச் சொல்லி சொன்னவுடம் ஓடும் போதுதான் இராணுவத்தினரின் தாக்குதலில் நான் காலில் படுகாயமடைந்தேன்.

ஆண்களில் எங்கள் உறவினரான வாய்பேச முடியாத அண்ணையை இராணுவத்தினர் கண்களை கட்டி விட்டு ஓடச்சொன்னார்கள். அவர் உடனே ஓடி வந்து மிகுதிப்பேருக்க என்ன நடக்குது என்று மலைப்பகுதியில் இருந்து பார்த்தார்.

இராணுவத்தினர் எல்லாரையும் அடிப்பதையும் வெட்டுவதையும் துப்பாக்கியால் சுடுவதையும் பார்த்த இவர் கண்ட காட்சி இவரை கதிகலங்க வைத்தது. என்ர அப்பா அப்போது இறக்கவில்லையாம் அப்படியே காயத்துடன் தான் இருந்தவர் எங்கட உழவு இயந்திரத்திலேயே எல்லோரையும் போட்டு இராணுவம் எரித்துவிட்டது. அத்தோடு அறுவடை முடிந்த பின்பு நாங்கள் அக்கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு தானமாக நெல் கொடுப்பது வழமை. அன்றும் தானம் பெறவந்த பல மக்கள் இதில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இச்சம்பவத்தை மறைந்திருந்து வாய்பேச முடியாத அண்ணையே ஊருக்குள் வந்து சொன்னார். ஆனால் அவருடன் பழகிய எங்கள் உறவினர்களுக்கே அவர் அங்கு என்ன நடந்தது என்று செய்து காட்டிய பின்தான் விடயம் ஊருக்குள் தெரியவந்தது.

இப்பொழுது அப்பாவையும் மற்றவர்களையும் போட்டு எரித்த உழவு இயந்திரத்தின் எரிந்த பாகங்கள் இப்படுகொலையின் சாட்சியாய் எங்கள் வீட்டில் உள்ளது.

காயமடைந்து அக்கரைப்பற்று வைத்திய சாலையில்தான் சிகிச்சை பெற்றேன். அவ்வைத்தியசாலை தற்பொழுது சிறிலங்கா இராணுவத்தின் அதிரடிப்படை முகாகமாக மாற்றப்பட்டிருக்கிறது" என்று தனது கடந்தகால வடுக்களை எமக்குத் தெரிவித்தார்.

உடும்பன்குளம் படுகொலைச் சம்பவம் உபுள் செனவிரட்ண என்ற அதிரடிப்படை பொறுப்பதிகாரியின் திட்டமிடலில் லெப்டினன் சந்திரபால என்ற இராணுவ அதிகாரியே முன்னின்று நடத்தியவராவார்.

கிழக்கின் அநேகமான படுகொலைச் சம்பவங்களுக்கு உபுள் செனவிரட்ண என்ற அதிரடிப்படை பொறுப்பதிகாரியே காரணகர்த்தாவாக இருந்துள்ளார். சிறிலங்கா சிறப்ப அதிரடிப்படையின் நட்சத்திர நாயகனாக வர்ணிக்கப்பட்டு வந்த உபுள் செனவிரட்ண அதிரடிப்படையினர் மத்தியில் பிரபலமாணவராகத் திகழ்ந்து வந்தார்.

இவர் 2004 ஆம் சுனாமிப் பேரழிவில் அகப்பட்டு மனிதாபிமான முறையில் புலிகளால் மீட்கப்பட்டவர். பின்னர் 2006 அம் ஆண்டு கண்டியில் கிளைமோர்த் தாக்குதல் ஒன்றில் கொலை செய்யப்பட்டார்.

கார்த்திகேசு சுரேன் என்வரால் 2007ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் எழுதப்பட்டு அவரது அனுமதியுடன் இங்கு மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க