வேற்றுமொழிகள் எமது பேச்சுமொழியாக வேண்டாம்!

  • Shan
  • February 21, 2019
167shares

இன்று உலக தாய்மொழி தினமாகும். வையகமெங்கும் பரந்து-விரிந்து வாழும் மக்கள் தமது தாய்மொழியினைப் போற்றுவதாய் இன்றைய நாளினை கொண்டாடுகின்றனர்.

தமிழர்களாகிய நாம் எமது மொழியின் பெயரால் எமக்கான பரந்துபட்டதும், நீண்டு விரிந்ததுமான தொன்ம வரலாற்றுத் தடத்தினைப் பெற்றிருப்பது மிகவும் சிறப்பான விடயமாகும்.

தமிழ் மொழியைப் பொறுத்தவரை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் அதிகமான மக்களால் பேசப்படும் மொழியாக இருக்கின்றது. தவிர தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜித் தீவுகள் முதலானவற்றில் சிறிய அளவில் பேசப்பட்டுவருகின்றது.

இதற்கும் மேலாக தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலும் தமிழ் மொழி அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

நாம் ஏன் தமிழ் மொழி பேசவேண்டும்?

உலகில் தோன்றிய ஆயிரக்கணக்கான மொழிகள் வழக்கிழந்து மறைந்துபோயுள்ள நிலையில் சில நூற்றுக்கணக்கான மொழிகளே உலகம் முழுவதும் உயிர்ப்போடு பேசப்பட்டுவருகின்றன. அவற்றில் எமது தாய்மொழியும் முக்கியமாக அடங்குவது கவனத்திற்குரியது.

செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி உள்வாங்கப்பட்டிருப்பது மிகவும் கவனத்திற்குரிய விடயமாகும்.

உலகில் அதிகமான மொழிகள் பேச்சுவழக்கிலும், எழுத்து வழக்கிலும் உள்ள நிலையில் தமிழ்மொழி தனக்குரிய பழைமையான பண்புகளால் செம்மொழியாக விளங்குகின்றது.

ஒரு மொழி செம்மொழியாக கருதப்படுவதற்கு அதன் உள்ளார்ந்த மரபு ரீதியில் கால நீட்சிகொண்ட இருப்பு அவசியமாகின்றது. குறிப்பாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த மொழியாகவும் இலக்கியத் தரம் வாய்ந்த படைப்புக்களைக்கொண்ட மொழியாகவும் இருபது செம்மொழிக்கான தகுதியினை மெருகூட்டுகிறது.

செம்மொழித் தகுதியாக மிக முக்கியமான இரண்டு விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன.

1இலக்கியப் படைப்புக்கள்

2.கலைப்படைப்புக்கள்

இவை இரண்டும் தமிழியின் செம்மையை விளக்குவதற்கு போதுமான தரவுகளாக இருப்பதாலேயே செம்மொழிக்கான தகுதிகளாக எடுக்கப்படுகின்றன.

தமிழைப் பொறுத்தவரை பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மொழியாக இருப்பதுடன் ஏராளமான இலக்கியப் படைப்புக்களையும் கட்டடக்கலை சிற்பக்கலை போன்ற கலைப்படைப்புக்களையும் கொண்டதாக விளங்குகின்றது.

சங்ககால மற்றும் சங்கமருவியகால இலக்கியங்கள் தமிழின் வீச்சுக்கும் மூச்சுக்கும் அடி நாதமாக இருக்கும் இலக்கியப் படைப்புக்களாகும்.

தமிழுக்கென்று தனித்துவமான இலக்கிய மரபு மட்டுமன்றி இலக்கண மரபும் காணப்படுகின்றது. தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூலாக அகத்தியம் காணப்படுகின்றது. இது குறுமுனி என அழைக்கப்பட்ட அகத்தியர் என்னும் ஞானியினால் ஆக்கப்பட்டதனால் அகத்தியம் என அழைக்கப்பட்டதாக மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அகத்தியம் முழுமையாக கிடைக்கப்பெறாவிட்டாலும் இன்று நாம் பழந்தமிழ் இலக்கண நூலாக கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னோடி நூலாக அகத்தியத்தைக் காண்கிறோம்.

தமிழில் காப்பியங்கள், பேரிலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், புதுக் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், விமர்சனங்கள் என இலக்கிய வகைப்பாடு நீள்கின்றது. இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் தமிழ் மொழியில் இன்றுவரை எண்ணற்ற படைப்புக்கள் நாளாந்தம் வந்துகொண்டே இருப்பது ஒரு மொழியின் விழித்திருக்கும் தன்மைக்கு மிகசிறந்த எடுத்துக்காட்டாகும். ஆனாலும் இவை மட்டும் போதுமா எனும் கேள்வி நம்மிடத்தில் சாதாரணமாகவே எழுகின்றது.

இன்று தமிழ்மொழி இந்தியாவின் தமிழகத்திலும் இலங்கையின் வடகிழக்கு மாகாணங்களிலும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் தமிழ் மக்களால் கரிசனையோடு பேசப்பட்டுவருகின்றமை கண்கூடு. ஆனாலும் ஏனைய பகுதிகளில் தமிழ் மொழியினைப் பேசும் தமிழ் மக்கள் வேற்றுமொழிக் கலப்பினை அதிகம் உள்வாங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் மலையகம், கொழும்பு போன்ற பகுதிகளில் தனித் தமிழ்ச் சனத்தொகை அடர்த்தி உள்ள இடங்களைத் தவிர்த்து ஏனைய இடங்களில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மொழியினையே அன்றாட வழக்கு மொழியாக பிரயோகித்துவருவதைக் காணமுடிகிறது. இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை போன்ற சிங்கள எல்லைக்கிராமங்களில் வாழும் மக்கள் இந்த பாரிய மொழிமாற்ற ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விடயம் சிறிய பிள்ளைகளிலிருந்தே ஆரம்பிக்கின்றது. குறிப்பாக அயல் பிரதேசங்களில் தமிழ் பள்ளிகள் இல்லாமையினால் சிங்களப் பாடசாலைகளிலேயே சேரவேண்டிய நிர்ப்பந்தம் இவ்வாறான மக்களிடத்தில் காணப்படுவதனால் சிங்கள மொழியினையே அன்றாட வழக்காக பேசவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றியுள்ளது.

இதேவேளை இலங்கையிலிருந்து புலம்பெயர் தேசங்களுக்கு சென்ற மக்களின் முதல் மற்றும் இரண்டு தலைமுறையினர் தமிழ் மொழியினை இறுக்கமாக கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும் என்ற உணர்வுடன் இருப்பதைக் காணக்கூடிய அதேவேளை சில இளையவர்கள் மத்தியில் அந்த உணர்வில் அதீத ஆர்வம் மங்கி வருவதையும் காணக்கிடைக்கின்றது. அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய பாடசாலைகளிலேயே வேற்றுமொழி மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்பதனால் இந்த நிலைமை உருவெடுத்திருக்கிறது. ஆனாலும் சில இளையொ தமிழ் மொழியினைப் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் தமது பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கும்போதே தமிழ் மொழியில் பேசி தமிழின் பழம்பெரும் பெருமைகளை கலந்துரையாடுவதன்மூலம் மேற்கண்ட பிரச்சினையை தணிப்பதற்கான சில வழிமுறைகளாக விளங்கலாம். தமிழர்கள் என்ற ஓர்மத்தோடு தமிழர்களோடு தமிழில் பேசினாலே தமிழ் பேச்சுமொழி என்றைக்குமே உயிர்ப்புடன் இருக்கும்.

உலகில் தோன்றிய பண்டைய மொழிகளில் உயிர்ப்புடன் இருக்கும் மொழிகளில் ஒன்றாக எமது தமிழ்மொழி இன்றளவும் உயிர்ப்புடன் பலகோடி மக்களால் பேசப்படும் நிலையில் இருக்கின்றது. இதன் பெறுமதி என்பது சாதாரணமான ஒன்றல்ல. தொடர்ந்தும் எம்மொழி செம்மொழியாக இருப்பது மட்டுமல்ல உயிர்மொழியாக.... உணர்வுமொழியாக.... அழகு மொழியாக விளங்கவேண்டும்.

ஆயிரமாயிரம் ஞானிகளாலும், அறிஞர்களாலும், ஆன்றோர்களாலும், வீரர்களாலும் கட்டிக்காத்த மொழி எத்தனை யுகங்கள் கடந்தும் உயிர்வாழவேண்டும் என்ற உணர்வு தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டியது இன்றியமையாததாகும்.

தமிழை வளர்க்கவேண்டுமெனில் எந்தவொரு பொது இடங்களென்றாலும் எந்தவொரு உயர்வான நிலைக்குச் சென்றாலும் தமிழர்களுடன் தமிழில்தான் கதைப்பேன் என்ற ஓர்மத்தை நாங்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ளவேண்டும். தமிழ் அவமானமல்ல அது எம் இனத்தின் அடையாளமாகும்!

இதையும் தவறாமல் படிங்க