'ஜெனீவா' தமிழர்களுக்கான நீதியின் கதவுகள் திறக்குமா ?

25shares

ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான செயற்வழிப்பாதையில் ஐ.நா மனித உரிமைச்சபை ஒரு களமாகவுள்ள நிலையில், சபையின் 40வது கூட்டத் தொடர் பெப்ரவரி 25ம் நாள் தொடங்கி நான்கு வாரங்களுக்கு இடம்பெற இருக்கின்றன.

சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகால அவகாசம் இக்கூட்டத் தொடரோடு நிறைவுற இருக்கின்ற நிலையில், சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைச்சபை அங்கத்துவ நாடுகள் அடுத்த என்ன முடிவினை எடுக்க இருக்கின்றது என்ற எதிர்பார்ப்பு பலமாக காணப்படுகின்றது.

சிறிலஙக்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் ஊடாகத்தான், நடந்தேறிய பாரிய மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்காவை பொறுப்புக்கூற வைக்க முடியும் என்பதோடு, தமக்கான பரிகாரநீதி கிடைக்குமென ஈழத்தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கோ 'ஜெனீவா' ஒரு பெரும் தலையிடியாகவே உள்ளது என்பதனையும் உணரமுடிகின்றது. காரணம் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தில் தான் ஒத்துக் கொண்ட விடயங்கள், பெரும் பட்டியலாக நிறைவேற்றாத நிலையில், அதன் நடைப்பாடுகள் தொடர்பில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் சிறிலங்கா உள்ளது.

இப்புறச்சூழலில் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரை மையப்படுத்தி சிறிலங்கா தொடர்பிலான விடயங்கள் மீண்டு பேசுபொருளாக அனைத்துலக அரங்கில் மாறியுள்ளது.

குறிப்பாக தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட 'அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அமைப்பு' வெளியிட்டுள்ள ஆதார ஆவணமொன்று இவ்விடயத்தில் முக்கியத்துவம் உள்ளமாக காணப்படுகின்றது. சிறிலங்காவின் புதிய இராணுவத் தலைமை அதிகாரியயாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பிலான போர்க்குற்றச்சாட்டுகளைக் உள்ளடக்கிய ஓர் ஆதார ஆவணமா இதுவுள்ளது.

இதில் குறிப்பாக 'அனைத்துலக நீதிமன்றங்களில் அல்லது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ வழக்கு தொடுப்பதற்கு உரிய ஆவணங்களுக்கு மேலாக போதுமான போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் , மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா விவகாரத்தில் காணப்படுவதாக' அந்த அமைப்பு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணத்தினை வெளிக்கொணர்ந்த அமைப்பு, சிறிலங்கா தொடர்பில் உப-மாநாடுகளை ஜெனீவாவில் ஒவ்வொரு கூட்டத் தொடர்களின் போதும் நடத்தி வருகின்றது. இதில குறிப்பாக வவுனியா ஜோசப் முகாம் தொடர்பிலான முன்னைய ஆவணம் மிக முக்கியமானது.

மறுபுறம், தமிழர் தாயகத்தின் மன்னாரில் புதைகுழியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் விவாகரம் ஜெனீவாவில் முக்கியபேசு பொருளாக மாறவுள்ளது.

குறிப்பாக தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே என்ற கேள்வி, அவர்களது உறவினர்களால் தொடர்சியாக சிறிலங்கா அரசினை நோக்கி முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சம்பவங்களோடு இப்புதைகுழியில் கண்டெடுக்கப்படும் மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

இவ்விவாகரத்தில் ஐ.நா, தனது பகுப்பாய்வாளர்களை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டுமென ஐநா மனிதவுரிமை உயர் ஆணையர் மாண்பு மிசேல் பச்சலே அம்மையாhர் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றினை எழுத்தியுள்ளார்.

1998ம் ஆண்டு செம்மணியிலும், 2014ம் ஆண்டு களுவாஞ்சிக்குடியிலும் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டுப்புதைகுழிகள் சிறிலங்கா அரசினால் அழித்தும் சிதைத்துமாக்கப்பட்டதுபோல், இந்தச் சான்றுகளையும் எலும்புக்கூடுகளையும் சிறிலங்கா அழித்து விடுவார்கள் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எலும்புக் கூடுகள் உட்பட சேகரிக்கப்படும் சான்றுகள் அனைத்தையும், புதைகுழி இடம்பெற்ற பகுதியையும் எதிர்காலப் பன்னாட்டு வழக்குத் தொடுப்புக்குச் சான்றாக உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துப் பகுத்தாய்ந்து, அழியாது காத்திட ஆவன செய்யுங்கள் என ஐ.நா ஆணையாளிரிடம் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை காணாமல்லாக்கப்பட்டவர்களது உறவினர்கள், தொடர்சியாக முன்னெடுத்து வரும் போராட்டங்கள் சிறிலங்காவுக்கு விடாது கறுப்பாகவே காணப்படுகின்றது.

இத்தகையதொரு புறச்சுழலில் ஜெனீவாவில் சிறிலங்கா விவகாரம் அடுத்த கட்டமாக எதனை நோக்கி நகரப்போகின்றது என்ற கேள்வி பலமாக காணப்படுகின்றது.

சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தினை வழங்காது, பொறுப்புக்கூறல் விவகாரத்தினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தாயகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் தமிழர்களிடத்தில் பலமாக காணப்படுகின்றது.

இதனை நோக்கித்தான் தாயகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்களும் செயற்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஐ.நா மனித உரிமைச்சபையில் அமெரிக்கா விலகியுள்ள நிலையில், பிரித்தானியாவே சிறிலங்கா விவகாரத்தினை கையாளப்போகின்ற தலைமை நாடாக சபையில் மாறியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கும் பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கொடுக்கின்ற வகையில் பிரித்தானிய பராளுமன்ற உறுப்பினர்களை தொடர்சியாக சந்தித்து வருவதோடு, கையெழுத்து போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறிலங்காவுக்கு மேலதிககால அவகாசத்தினை வழங்க தாங்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்றும் சிறிலங்காவுக்கு ஜெனீவாவில் கடும் அழுத்தத்தினை வழங்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு மங்கலாக காணப்படுகின்றது.

சிறிலங்காவின் காணப்படுகின்ற நிலையற்ற ஓர் அரசியல் சூழலும் சமகாலத்தில் காண்படுகின்ற நிலையில், கிடைக்கின்ற வாய்ப்புக்களை தமது நலன்களுக்கு ஏற்றவகையில் கையாள ஒவ்வொரு தரப்பும் முனைகின்றது.

இதில் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கின்ற நீதிதான், முழு இலங்கைக்கும் நிலையான அமைதியினைத் தரும் என்பதனை மறுதரப்புக்கள் உணருமா ?

- சுதன்ராஜ்

இதையும் தவறாமல் படிங்க