ஜெனிவா அரங்கும்… நவநீதம்பிள்ளையின் ஊடறுப்பும்

  • Prem
  • February 26, 2019
42shares

எருது தன் ரணத்தை நினைக்க பறவை தன்பசியை நினைக்கும் என ஒரு பழமொழி உண்டு. அதாவது எருது தனது வலிமிகுந்தரணத்தைச் சுமந்தாலும் அந்த ரணத்தில் தனது பசியைத்தீர்க்க முனையும் பறவையோ அந்த ரணத்தை கொத்தித்தின்னும் என்பதே இந்தப்பழமொழியின் கருத்தியல்.

இதேபோலவே ஜெனிவா பலெ தெ நஷியோன் அரங்கில் உலக மனித உரிமைபேரவையின் இன்னொரு புதியஅமர்வு ஆரம்பிக்க சிலமணிநேரத்துக்கு முன்னர் தமிழர்தாயகம் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மீண்டும் ஒரு முறை நீதிகோரியபோது இந்தக்கருத்தியல்தான் நினைவூட்டப்பட்டது.

ஆம்! தமிழர்களுக்கு இது வலிமிகுந்த ரணம் ஆனால் பூகோளஅரசியல் சூட்சுமங்களின் நியதியில் இது ஒரு சுயலாப பசியாறும் போக்குத்தான்.ஆயினும் தமது வலிமிகுந்த ரணத்தை வெளிப்படுத்த தவறாத தமிழினம் மீண்டும் ஒருமுறை அறவழியில் போராடியது

இதனடிப்படையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரை மையப்படுத்தி நீதிகோரப்பட்ட அறவழிப்போராட்டங்களால் வடக்கின் எல்லா மாவட்டங்களும் முடங்கியிருந்தன. கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்தின் முன்றலில் ஒரு கவனவீர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது

கடந்த 2017 இல் இதேநாளில் இதேஆலய முன்றலிலே ஆரம்பமான இந்த அறவழிப்போராட்டத்தடம் கடந்த 2 வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதியைகோரிவந்த துன்பியல் தடமாகப்பதிவானது.

ஆயினும் இன்றுவரை இந்தஅறவழி கோரிக்கைகளுக்கு பதில்கிட்டவில்லை. மாறாக இப்போது அந்தத்தடம் 3 வது ஆண்டுக்குள் நுழைந்துள்ளது.

பொதுவாகவே 2009 க்குப்பின்னர் ஒவ்வொரு முறையும் ஐ.நா மனித உரிமைப்பேரவை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் போது தமது இனத்தின் மீதான பெரும் உதிரப்பழிக்குரிய அறவழி அதிர்வுகளை ஈழத்தமிழினம் தாயகம் புலம்பெயர் தேசங்களென வெளிப்படுத்திவருகிறது.

அதேபோல எதிர்ப்புறத்தே சிங்களதேசத்தின் அதிகாரமையமும் தனது தரப்பில் சில தில்லாலங்கடி அதிர்வுகளை கிளப்புவதும் எதிர்பார்க்கத்தக்கதொருவிடயம்

ஈழத்தமிழினத்தைப் பொறுத்தவரைஅவர்களின் இந்த நீதிகோரல்பூகோளஅரசியல் நிலவரங்களுடன் உரசியபடியே செல்கிறது. இதனால் தமிழர்தாயகம் இன்று மீண்டும் ஒரு முறை தனக்குரிய நீதியை கோரினாலும் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு வழங்கப்படக்கூடிய காலஅவகாசத்தை இந்த நீதியான குரல்கள் எந்தளவு ஊடறுக்கக்கூடும் என்பது ஒரு முக்கியமான வினாவாகவே தொக்கி நிற்கின்றது.

ஏனெனில் தமிழரின் உதிரப்பழியை மையப்படுத்திய இந்தஅதிர்வுகள் கூட்டுக்களவாணித்தனப்பாங்குடன்தான்அனைத்துலக அதிர்வுகளாகவும் வெளிப்படுவது வழமையானது. இதனால்தான் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மீண்டும்கால அவகாசம் வழங்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வடக்குப் பயணத்தின் போது கிளிநொச்சியில் வைத்து மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை முன்வைத்தார்.

அதன்பின்னர் இதனை மையப்படுத்தி தனது எதிர்வினையை வெளிப்படுத்திய சுமந்திரன் ரணிலின் இந்தக்கருத்தை தமிழ்மக்கள்மீதான போர்குற்றங்களை சிறிலங்கா ஏற்றுக்கொண்டதான ஒரு தோற்றப்பாடாகவும் உருவாக்கியிருந்தார்.

ஆனால் ரணில் இந்த மறப்போம் மன்னிப்போம்; கருத்து சிறிலங்கா போர்குற்றங்களை ஏற்றுக்கொண்டதான ஒரு தோற்றப்பாடே அல்ல. மாறாக தமிழர்களுக்கு அபிவிருத்தி என்ற கரட்துண்டைக்காட்டியபடி நகரமுனைந்த ஒரு நகர்வு மட்டுமே.

இந்தநிலையில் தமிழர்தரப்பில் சுமந்திரன் போன்ற அரசியல் முகங்கள் ரணிலின் மறப்போம். மன்னிப்போம் கருத்தின் பின்னணியில் உள்ள தில்லாலங்கடியை புரிந்தும் புரியாமல் விட்டாலும் ஐ.நாவின் முன்னாள் மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கச்சிதமாக புரிந்துகொண்டிருப்பதை அவரது அண்மையகருத்து புலப்படுத்தியுள்ளது.

ரணிலின் மறப்போம் மன்னிப்போம் கருத்தியலில் நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த முக்கியமான வாக்குறுதிகள் எவையும் இல்லையென கடுமையாக விமர்சித்துள்ள நவநீதம்பிள்ளை, ஜெனிவாத்தீர்மானத்தின் ஊடாக சிறிலங்கா அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும், தற்போது அது பின்னோக்கிச் செல்ல முயல்வதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

அத்துடன் இன்னொரு முக்கிய விடயமாகதென்னாபிரிக்காவின் நல்லிணக்கப்பொறிமுறையை கொழும்பு தவறாக அர்த்தப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதியான நவநீதம்பிள்ளைதென்னாபிரிக்க நல்லிணக்கப்பொறிமுறை தென்னாபிரிக்க அரசியல் சூழ்நிலைக்கு உருவாக்கபட்டதென்பதால் அது ஒரு பூரண முறை என்பது அர்த்தபபடுத்தல் இல்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தென்னாபிரிக்க வன்முறைகளை 2009இல் தமிழர்தாயகத்தின் மீதான உதிரப்பழியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் தமிழர்தாயகப்பகுதியில் பாரிய படுகொலைகள் காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பலமடங்குஅட்டூழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் என்ற யதார்த்த்தை அவர் சொல்லியுள்ளார் .

தமிழர் தாயகம் தனக்குரிய நீதியை இன்று மீண்டும் ஒருமுறைஅறவழியில் கோரியநிலையில் தென்னாபிரிக்காவின் முன்னாள் நீதிபதி சக ஐ.நாவின் முன்னாள்மனிதஉரிமை ஆணையாளர் என்ற இரட்டைத்தகுதிநிலையில் நவநீதம்பிள்ளை சொன்ன விடயங்களை ஓட்டக்கூத்தன்பாட்டுக்கு இரட்டைத்தாள்பாள்! என்ற பாணியில் வியாக்கியானப்படுத்தும் சுமந்திரன் போன்ற அரசியல் முகங்கள் உள்வாங்குவதே உசிதமானது.

இதையும் தவறாமல் படிங்க