பாகிஸ்தானுடனான மோதல் போக்கு, மோடியின் தேர்தல் வெற்றிக்கு உதவுமா?

9shares

அரசியல்வாதி உண்மையைச் சொல்லும்போது நம்ப முடியாததாக இருக்கிறது என அமெரிக்க அரசியல் ஊடகவியலாளர் கின்ஸ்லே கூறியிருக்கிறார்.

கடந்த வாரம், இந்தியாவை ஆளும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி சரியாக இதைத்தான் செய்திருப்பதாகத் தெரிகிறது.

இந்தியாவும், பாகிஸ்தானும் நடத்திய விமான தாக்குதல்களால், வரவிருக்கும் பொதுத் தேர்தலில், கர்நாடகாவில் தங்கள் கட்சிக்கு 22 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என பி.எஸ். எடியூரப்பா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியுள்ள கருத்துகள், நேர்மையானவை என்ற நிலையில் குறிப்பிடத்தக்கவை.

எதிர்க்கட்சிகள் உடனடியாக இதைப் பிரச்சனை ஆக்குவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டும் உள்ள நிலையில், அணு ஆயுதம் உள்ள இரு நாடுகளுக்கு இடையில் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சி பதற்றத்தை அதிகரிக்க முயற்சி செய்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக இது இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடிப்பதற்கு மோடியின் பாஜக முயற்சி செய்து வருகிறது.

எடியூரப்பாவின் வெளிப்படையான பேச்சு, பாஜகவையும் கூட சங்கடத்தில் ஆழ்த்தியிருப்பதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அரசு முடிவு எடுத்தது ''நமது நாட்டைப் பாதுகாப்பதற்கும், நமது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடந்ததே தவிர, சில தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக நடைபெறவில்லை,'' என்று மத்திய அமைச்சர் வி.கே. சிங் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தேர்தல் ஆதாயங்களுக்காக ஏறத்தாழ போர் சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்வதை எந்த அரசியல் கட்சியும் ஒப்புக்கொள்ளாது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் சமீபத்தில் பதற்றம் அதிகரித்த நிலையிலும், நரேந்திர மோடி தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார்.

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களில் தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய நரேந்திர மோடி, நாடு பாதுகாப்பானவர்களின் கைகளில் இருக்கிறது என்றும், ''தீவிரவாதத் தாக்குதல்களை இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது,'' என்றும் பேசினார்.

மறுநாள் காலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஜெட் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் தப்பிய இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் வர்த்தமானை பாகிஸ்தான் சிறை பிடித்தது. அந்த விமானியை இரண்டு நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் விடுதலை செய்தது.

இந்தியாவின் வான்வழி தாக்குதல் ஒரு ''முன்னோடித் திட்டம்'' மட்டுமே என்றும், இன்னும் நிறைய தாக்குதல்கள் நடைபெறும் என்றும் அறிவியல் நிபுணர்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி கூறினார்.

அதே சமயத்தில், இந்தத் தாக்குதலில் எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவல் தெரியவில்லை என்று பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகள் கூறியுள்ள போதிலும், பாலகோட் தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்று அவருடைய கட்சியின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

நரேந்திர மோடி துப்பாக்கிகள் ஏந்தியவாறு, ராணுவ வீரர்கள் புடைசூழ இருப்பதைப் போன்றும், போர் விமானங்கள் மற்றும் நெருப்பின் நிறத்தில் குண்டுவெடிப்புக் காட்சிகளையும் கொண்ட பாஜக சுவரொட்டிகள் நாடு முழுக்க ஒட்டப்பட்டுள்ளன.

''தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் மேடைகளில் ராணுவ வீரர்களின் படங்களைப் பயன்படுத்துவது உண்மையிலேயே அசௌகரியமானதாக உள்ளது. இதைத் தடை செய்தாக வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக, நிச்சயமாக ராணுவ சீருடைகளுக்கு களங்கம் ஏற்படுத்தப் படுகிறது'' என்று இந்திய தொலைக்காட்சி செய்தியாளரும், கட்டுரையாளருமான பர்கா தத் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

பகைமை நிலையை அரசியலாக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, தனது வார்த்தைகளைக் காப்பாற்றவில்லை என்று நம்புவதால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

``அரசியல் லாபங்களுக்கு அப்பாற்பட்டு தேசப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்,'' என்று கடந்த வாரம் எதிர்க்கட்சிகள் அறிக்கை விடுத்தன.

'அற்பதனமான அரசியல் ஆதாயம்'

ஆனால், சமீபத்திய பிரச்சனை நரேந்திர மோடிக்கு அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா? வேறு வகையில் சொல்வதாக இருந்தால், தேசப் பாதுகாப்பு விஷயம் தேர்தல் பரப்புரை அம்சமாக மாறுமா?

தன்னுடைய பிரசாரத்தில் தேசப் பாதுகாப்பு அம்சத்தை முக்கியமானதாக நரேந்திர மோடி பேசுவார் என்று பலரும் நம்புகின்றனர்.

காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முன்பு வரையில், நரேந்திர மோடி, கொஞ்சம் விமர்சனங்களுக்கு உட்பட்டவராக இருந்தார்.

மூன்று மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியிடம் அவருடைய கட்சி ஆட்சியை இழந்தது. விவசாயிகள் மற்றும் வேலையில்லா பிரச்சனைகள் பாஜகவின் வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தல்களாக இருந்தன.

இப்போது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் தன்னை ''வலிமை மிக்கவராக'' நரேந்திர மோடி காட்டிக் கொள்வதால் அவருடைய வாய்ப்பு பிரகாசமாக மாறியுள்ளது என்று பலரும் நம்புகின்றனர்.

''தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக, போரை பயன்படுத்துவது, அற்பத்தனமான அரசியல் ஆதாயங்களுக்காக தேசப் பாதுகாப்பை பயன்படுத்துவது மோசமான அணுகுமுறைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பலன் கிடைக்குமா, கிடைக்காதா என்று எனக்குத் தெரியவில்லை,'' என்று அரசியல்வாதியும், தேர்தல்களை ஆராயும் சமூகவியலாளருமான யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் தேர்தல்களில் ஆளும் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு தேசப் பாதுகாப்பு விஷயம் உதவுமா என்பதற்கான ஆதாரங்கள், கலவையாகவே இருக்கின்றன.

கடந்த காலங்களில் இந்தியாவில் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டபோது, ''நாட்டின் தேர்தல்களில் அது பாதிப்பு ஏற்படுத்தவில்லை'' என்று அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் உள்ள பேராசிரியர் அசுடோஷ் வர்ஷேனே கூறியுள்ளார்.

1962ல் (சீனாவுக்கு எதிராக) நடைபெற்ற போர், 1971-ல் (பாகிஸ்தானுக்கு எதிராக) நடைபெற்ற போர் ஆகியவை பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு நடந்தன.

1965ல் இந்தியாவும் பாகிஸ்தானும் போரிட்டபோது, தேர்தல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் இருந்தது.

2001ல் இந்திய நாடாளுமன்றத்தில் மீது தாக்குதல் நடந்ததால், இரு நாடுகளும் போரின் விளிம்பு வரை சென்றன. அது பொதுத் தேர்தல்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்றது.

2009 தேர்தல்களுக்கு ஐந்து மாதங்கள் முன்னதாக, 2008ல் மும்பையில் தாக்குதல்கள் நடந்தன. தேசப் பாதுகாப்பை தேர்தல் பிரசாரமாக ஆக்காமல், அப்போதைய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது.

இப்போது விஷயங்கள் மாறியிருக்கலாம். காஷ்மீரில் பெப்ரவரி 14 ஆம் திகதி நடந்த தாக்குதல்களும், அதன்பின் நடந்த விமான தாக்குதல்களும் ''முந்தைய தேசப் பாதுகாப்பு நிகழ்வுகளைவிட அதிக அளவில் தேர்தல் ரீதியாக குறிப்பிடத்தக்கவை,'' என்று பேராசிரியர் வர்ஷனே கூறுகிறார்.

அதிகம் ஒரு சார்பு கருத்து ஏற்பட்டுள்ள நாட்டில் பொதுத் தேர்தல்களுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன என்பது முதலாவது விஷயம். தேசப் பாதுகாப்பு என்பது பெரிய அளவில் முக்கியத்துவமானது என்று நகர்ப்புற நடுத்தர மக்கள் கருதுகிறார்கள்.

மிக முக்கியமாக ''மத்தியிலுள்ள ஆட்சியின் இயல்பு'' முக்கியமான ஒரு விஷயமாகக் கருதப்படுகிறது என்று டாக்டர் வர்ஷனே குறிப்பிடுகிறார்.

''காங்கிரசைவிட இந்திய தேசியவாதிகள் எப்போதும் தேசப் பாதுகாப்பில் கடுமையாகவே இருந்து வருகிறார்கள். மேலும் பிராந்திய கட்சிகளிடம் தேசப் பாதுகாப்பு விஷயம் பெரிதாக பேசப்படுவதில்லை. அது அரிதாகவே பேசப்படுகிறது. மாநிலக் கட்சிகள் சாதி மற்றும் மாநில அடையாளங்களைக் கொண்டு செயல்படுகின்றன,'' என்று அவர் கூறுகிறார்.

வலிமை மிக்கவராகக் காட்டிக் கொள்வது, வலுவான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திக்க அடிக்கடி நரேந்திர மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவை வாக்காளர்களில் ஒரு பகுதியினரிடம் நல்லெண்ணத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்று பிரவுன் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியலாளர் ஹனு ஜோஷி கூறுகிறார்.

''வட இந்தியாவில் நான் பணியாற்றியபோது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்திருக்கிறது என்ற எண்ணம் மக்களிடம் தொடர்ந்து ஊன்றப்பட்டு வந்ததை காண முடிந்தது. பால்கோட் தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகளால் இந்த எண்ணம் வலுப்பட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிகள், வாக்காளர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறேன்,'' என்கிறார் ஜோஷி.

கேமெஜி சர்வதேச அமைதி அறக்கட்டளையில் தெற்காசிய நிகழ்வுகள் துறையின் இயக்குநரும், மூத்த அறிஞருமான மிலன் வைஷ்ணவ் போன்ற மற்றவர்களும் இதேபோன்ற கருத்தை தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுக் கொள்கை என்பது ''பெரிய விஷயமாகப்'' பார்க்கப்படுவதில்லை என்றாலும், ''தேர்தல்கள் வரும் சூழ்நிலை, பாகிஸ்தான் அமைதி காப்பது, கடுமையாக திருப்பித் தாக்கியதற்காக மோடி அரசாங்கம் பெருமையாக காட்டிக் கொள்வது ஆகியவற்றால், பிரசாரத்தில் இது முக்கியமான ஒரு விஷயமாக மாறும் என்று எதிர்பார்க்கிறேன்,'' என்று வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஆனால், இதனால் பொருளாதாரம் மற்றும் விவசாயிகளின் துயரங்கள் போன்ற விஷயங்கள் புறந்தள்ளப்பட்டு விடாது,

குறிப்பாக, கிராம மக்களிடம் இவை விலகிவிடாது என்று டாக்டர் வைஷணவ் நம்புகிறார். ''ஊசலாட்டத்தில் இருக்கும் வாக்காளர்களிடம், குறிப்பாக நகர்ப்புற தொகுதிகளில் உள்ளவர்களிடம் இது பாஜகவுக்கு அதிகம் உதவிகரமாக இருக்கும்.''

''2019 தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்யாதவர்கள் இருந்தால், உணர்வுபூர்வமான இந்தப் பிரச்சனை அவர்களை ஆட்சியாளர்களின் பக்கமாக திருப்பும் நிலையை ஏற்படுத்தும்,'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

தேசப் பாதுகாப்பு விஷயத்தை முன்வைக்கும் மோடியின் உத்தியை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கும்.

தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் முக்கியமான வடமாநிலங்களில் பாஜகவின் வாய்ப்புகளில் சிறிது பாதிப்பை ஏற்படுத்துவதாக இந்த மோதல்கள் இருந்தாலும், வெற்றிக் கோடு வரை கொண்டு செல்வதற்கு இது உதவியாக இருக்கலாம். ஆனால் அரசியலில் ஒரு வாரம் என்பது கூட நீண்ட காலமாகவே கருதப்படுகிறது.

நன்றி பிபிசி

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்