ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அறிமுகப்படுத்திய தற்கொலைதாரி! மட்டக்களப்பு குண்டு வெடிப்பு குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்!!

2769shares

மட்டக்களப்பில் நடைபெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவமானது, பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்றுக்கும் இந்த தற்கொலைத் தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாமா என்கின்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதும், இந்த தாக்குதல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஆங்காங்கு முஸ்லிம் இனத்தவர்களே கைதுசெய்யப்பட்டு வருவதும், இந்தச் சம்பவத்தை முஸ்லிம் குழு ஒன்றை நோக்கிய நிலையில் பார்த்தேயாகவேண்டிய நிர்ப்பந்தத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வருகின்றது.

மட்டக்களப்பு தற்கொலைத்தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக ஒரு வாரம் முன்பு காத்தான்குடி பாலமுனை பகுதியில் ஒரு பாரிய வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கடந்த ஏப்ரல் 13ம் திகதி இரவு பாலமுனை கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் வைத்து குண்டு ஒன்றை இனந்தெரியாத நபர்கள் சிலர் பரீட்சித்து பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

காத்தான்குடி பாலமுனை பகுதியில் இடம்பெற்ற பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று தொடர்பில் சி.ஐ.டி பொலிஸார் இரகசிய விசாரணைகளை கடந்த 16ம் திகதி ஆரம்பித்திருந்ததாக உயர்மட்ட பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் தற்போது மட்டக்களப்பிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதானது, இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்புள்ளதா என்கின்ற கேள்வியை இயல்பாகவே ஏற்படுத்தி நிற்கின்றது.

கடந்த 13ஆம் திகரி இரவு 11 மணியளவில் கடும் மழைக்கு மத்தியில் இந்த வெடிப்புச் சம்பவம் பாரிய சத்தத்துடன் இடம்பெற்றிருந்தது.

ஸ்கூட்டி பைக் ஒன்றில் வெடிபொருட்களை வைத்து வெடிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த மோட்டார் சைக்கில் சிதறிக்கிடந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆனால் இது வெடிகுண்டு ஒன்றை பரிசோதிக்க நடத்தப்பட்ட ஒத்திகை நடவடிக்கையா என்று விசேட பொலிஸ் குழு தடங்களையும் சேகரித்து ஆராய்ந்து வந்த நிலையிலேயே நாடு முழுவதும் இந்த வெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ரிமோட் கண்ட்ரோல் ஒன்றின் உதவியுடன் பாலமுனை வெடிப்பு சம்பவம் நடந்திருக்கலாமென கருதும் பொலிஸார், குறித்த பைக் வேறு ஒருவர் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதையும் கண்டறிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சிறிலங்கா ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் விசேட விசாரணைகளை நடத்துமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனெவிரத்னவுக்கு ஜனாதிபதி ஏற்கனவே பணிப்புரை விடுத்திருந்தார்.

ஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு நாட்களுக்குள் இந்த நாட்டில் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று விட்டது.

அதாவது மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்தி குழுவினரே கடந்த 13 திகதி தாழங்குடா பாலமுனை பகுதியில் த‌ங்களது வெடிபொருட்களை பரீட்சித்து பார்த்திருக்கலாம் என;ற சந்தேகம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது.

தற்கொலை குண்டு தாரி ஓட்டமாவடியைச் சேர்ந்த உமரா?

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை நடத்திவர் ஓட்டமாவடியைச் சேர்ந்த உமர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தேவாலயத்திற்கு முன் நின்ற நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தோலில் பை ஒன்றைச் சுமந்து வந்த வாலிபர் ஒருவர் தேவாலயத்திற்கு முன் நின்று கொண்டு அங்கிருந்தவர்களிடம் எப்போது ஆராதணை நடைபெறும் என்று கேட்டுள்ளார்.

அப்போது சிலர் அவரை உள்ளே அழைத்துள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த குறித்த நபர் எனக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வரும் அதன்பின்னர் தான் நான் உள்ளே வருவேன் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிலர் அவரை விசாரணை செய்துள்ளனர்.

அப்போது தானனுடை பெயர் உமர் என்றும் தான் ஓட்டமாவடியில் இருந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல முஸ்லிம்கள் குறித்த தேவாலயத்திற்கு வருகை தருவதால் இவர் குறித்து பெரிதும் சந்தேகப்படாத பாஸ்டர் ஒருவர்.

தனது ஊழியர்களிடம் இவரை அழைத்துச் சென்று கதைக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்றுள்ளார்.

பின்னர் உள்ளே செல்ல முயற்சித்த குறித்த நபருடன் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில்தான் குறித்த நபர் குண்டை வெடிக்க வைத்திருக்கலாம் என்று சம்பவ இடத்தில் நின்ற சிலர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தற்கொலைதாரி என சந்தேகிக்கப்படும் நபர் தேவாலயத்திற்குள் செல்லும் சீ.சீ.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளதன. அதில் தோல் பையுடன் தலையில் தோப்பி அணிந்து இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

(அதேவேளை, தற்கொலைதாரி தனது உண்மையான பெயரைத்தான் மற்றவர்களுக்கு கூறியிருப்பாரா என்ற சந்தேகத்தையும் இலகுவில் புறந்தள்ளிவிடமுடியாது.)

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் முரண்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகள்!

மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முஸ்லிம் அடிப்படைவாதக் குழு ஒன்றின் வேலை என்கின்ற சந்தேகக்கோணத்தில் பார்க்கையில், தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் ஏன் சீயோன் தேவாலயத்தை தேர்ந்தெடுத்தார்கள்? என்ற கேள்வி எழுவது நியாயம்.

மட்டக்களப்பில் பெருமளவு மக்கள் கூடும் பல தேவாலயங்கள் இருந்த போதும் ஏன் சீயோன் தேவாலயத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?

இந்தக் கேள்வியை சீயோன் தேவாலய ஊழியர்கள் சிலரிடம் எழுப்பிய போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெறும் ஆராதணைகளுக்கு சில முஸ்லிம் குடும்பங்கள் வந்து போவது வழமையாக இருந்துள்ளது.

குண்டு தாக்குதல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நோயினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பம் ஒன்று குறித்த தேவாலயத்திற்கு வருகை தந்த போது அவர்களை பின் தொடர்ந்து வந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் முஸ்லீம்களை மதம் மாற்றுவதாக கூறி தேவாலய பாஸ்டருடன் முரண்பட்டுள்ளனர்.

இதன்போது எங்கள் தேவாலயத்திற்கு எல்லா மதத்தினரும் விரும்பியே வருகிறார்கள் அவர்களின் குறைகளை தீர்ப்பது எமது கடமை என பாஸ்டர் அவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி உள்ளார்.

இவ்வாறு பல முஸ்லிம் குடும்பங்கள் குறித்த தேவாலயத்திற்கு வந்து போயுள்ளனர். இந்த விடயம் சில முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஒரு பகையாகவே இருந்துள்ளது.

அதனால்தான் தாக்குதல் தாரிகள் சீயோன் தேவாலயத்தை தாக்குதல் இலக்காக தெரிவு செய்திருக்க கூடும் என்று சீயோன் தேவாலய ஊழியர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.

அடுத்ததாக, 'சியோன்' என்ற பெயர் யூதர்களின் இஸ்லாமிய ஒழிப்பின் ஒரு அடையாளமாக உலகம் முழுவதும் பார்க்கப்பட்டு வருகின்றது.

இது கூட 'சீயோன் தேவாலயம்' தாக்குதல் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க