பொசோன் போயாவுடன் நீராவியடிப் பிள்ளையார்!

  • Prem
  • June 18, 2019
122shares

அரிசிப்பொரியோடு திருவாதிரை என்பது ஒருபழமொழி. இந்தப்பழமொழியை எவ்வளவுதூரம் சிறிலங்காவின் பௌத்தபிக்குகள் அறிந்திருப்பார்களோ தெரியாது. ஆனால் அவர்களில் ஒரு வகிபாகம் அரிசிப்பொரியோடு திருவாதிரை போல பொசோன் போயாவுடன் நீராவியடிப்பிள்ளையார் என்பதை நேற்று நிருபிக்க முனைந்துள்ளது.

பொதுவாக, பூரணை தினங்கள் உலகளாவிய பௌத்தர்களுக்கு முக்கியமானவை. ஆயினும் பொசோன் பூரணை தினம் என்ற அடையாளம் சிங்களப்பௌத்தத்துக்கு தனித்துவமானது. ஏனெனில் இலங்கைத்தீவில் முதல் முறையாக பௌத்தம் நுழைந்ததான புராதன வரலாற்றையே ஆனி மாத பொசோன் பூரணையாக சிங்களப்பௌத்தர்கள் கொண்டாடுகின்றார்கள்.

கி.மு. 328இல் அசோகசக்கரவர்த்தியின் வாரிசுகளும் பௌத்த துறவிகளுமான மகிந்ததேரரும் சங்கமித்தையும் இலங்கைக்குச்சென்று மிஹிந்தலை காட்டில் வேட்டையாடிக்கொண்டு நின்னற இலங்கை மன்னனான தேவநம்பியதீசனைச்சந்தித்து அவனுக்கு பௌத்தம் குறித்து உபதேசித்து அவனை பௌத்தனாக மாற்றிய தினமே பொசோன் என சிங்களப்பௌத்தர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறு மகிந்ததேரரும் சங்கமித்தை பிக்குணியும் வழங்கிய பௌத்த போதனையை கேட்டு மனம்மாறிய தேவநம்பியதீசன் மிருகங்களை வேட்டையாடுவதை துறந்து தனது பல்லாயிரக்கணக்கான குடிமக்களுடன் பௌத்த தர்மத்தை தழுவியதாகவும், சங்கமித்தை இலங்கைக்கு கொண்டு வந்த அரச மரத்தின் கிளையே இன்று சிறிமகாபோதியாக நிற்பதாகவும் சிங்கள பௌத்த கதைகள் கூறுகின்றன.

ஆனால் கி.மு. 328இலேயே மன்னன் தேவநம்பியதீசன பௌத்த போதனையால் மனம்மாறி; மிருகங்களை வேட்டையாடுவதை துறந்தாலும் அவர்களின் நீட்சியில் வந்த சிறிலங்காவின் ஆட்சி அதிகார ஜனாதிபதித்துமாக்கள் தமிழர்களை வேட்டையாடியமை வேறுகதை.

அந்த வகையில் சிறிலங்காவுக்கு ஒரு முக்கியமான அடையாளமாக இருக்கும் இந்த பொசோன் கடந்த ஞாயிறன்று கடந்தது. வழமைபோலவே அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல மதுபானசாலைகளும் கடந்த 13 ஆந்திகதிமுதல் மூடப்பட்டன. அதேபோல பொசொன் நோன்மதி தினத்தில் அனுராதபுரம் மிஹிந்தலை நகரங்களும் மின்னொளி அலங்காரங்களில் மிளிர்ந்தன.

ஆனால்

ஆசையே துன்பங்களுக்கு அடிப்படைக்காரணம் தீமைதவிர்த்து நன்மை செய் எனக்கூறிய கௌதமபுத்தரின் உயரிய போதனைவந்ததாக கூறப்படும் அதே பொசோன் நாள் வழிபாடுகளுக்காக தெற்கில் இருந்து அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலைக்குச் சென்ற பௌத்தபிக்குகள் மற்றும் மக்களின் ஒரு வகிபாகம் அப்படியே முல்லைத்தீவுக்குச் சென்று அங்குள்ள செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலய முன்றலில் செய்த பொசோன்; சிறப்பு என்ன?

சுpறிலங்காவின் தேசிய உரிமைகள் இயக்கத்தின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரரும் குருகந்த ரஜமஹா விகாரை விகாராதிபதி கொலம்ப மேதாலங்கரும் அரங்கேற்றிய இந்த நகர்வுகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களாக காட்சிப்படுத்தப்பட்டன.

ஆனால் உலகுக்கு பொசொன் செய்தி கூறிய மைத்திரி ரணில் அரசாங்கமோ தமிழர்களின் நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தை மையப்படுத்தி பின்னப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு விடயத்தில் வேடிக்கை பார்த்தது.

இந்தசர்சைக்குரிய இடத்தில் இரண்டுதரப்பினருமே வழிபாடுகளை மேற்கொள்ளமுடியும் என நீதிமன்றம், தீர்ப்பு வழங்கினாலும் இங்கு பௌத்த தரப்பில் அடாவடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவின் புதிய பௌத்தஅவதார் பாத்திரமான ரத்ன தேரர் கடந்த வெள்ளியன்று யாழில் தனக்குரி கொடி குடை ஆலவட்ட மதிப்புக்களை பெற்று வடக்குகிழக்கில் பலவந்தமாக முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று நல்லபிள்ளைத்தனம் காட்டினாலும் நீராவியடி பிள்ளையாருக்கு உள்ள நெருக்குவாரங்களை தமிழர்கள் கண்டு கொள்கின்றனர். ரத்னதேரருக்குரிய கொடிகுடை ஆலவட்ட காட்சிப்படுத்தலில் முன்வரிசையில் இலங்கை சிவசேனை காவிமுகமான மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பிரசன்னமும் தெரிந்ததையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

தமிழ்மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் துண்டாடும் கனகச்சிதங்களின் ஒரு வடிவமாக இதனை எடுத்துக்கொள்ளலாம்

இதில் இன்னொரு ஆச்சரியமாக, பௌத்தர்கள் இந்துக்களை அழிப்பதிலும் இந்து ஆலயங்களைத் தரைமட்டமாக்குவதிலும் மதமாற்றத்திலும் ஈடுபடுவதாக 2016இல் குற்றஞ்சாட்டிய அதே மறவன்புலவு சச்சிதானந்தம் இன்று ரத்தன தேரரை கண்டவுடன் எழுந்து நின்று மரியாதை செலுத்துபவராக, ஞானசார சண்டியரின் பொதுபலசேனாவை ஆதரிப்பவராக மாறிய விடயம் தெரிகிறது.

இவ்வாறான ஒரு நிலையில் தான் தமிழர்களுக்கு முஸ்லீம்களுக்கும் இடையில் சிண்டு முடிதலை செய்வதற்காக தமிழ்மக்களை பூனைப்பாதமாக பயன்படுத்த முனையும் தெற்கின் தந்திரங்களில் ஒன்றாக அத்துரலியர் இப்போது காட்சியளிக்கிறார்.

கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் ஐ.எஸ் அமைப்பு நடத்திய கந்தக நாசகாரத்தை பட்டயமாக பிடித்தபடி முஸ்லீம் மக்களுக்கு எதிராக தமிழ் மக்கள் உணர்வுகளை தூண்டிவிட அவரது பூனைப்பாத வியூக பிரயோகிப்புத்தெரிகிறது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தனது உண்ணாநிலை போராட்ட அரங்கக்காட்சியை நடத்திமுடித்த அவர் தனத காட்சியின் முடிவில் கடந்த ஒரு தசாப்பத்துக்கு முன்னர் மாவில்லாற்றில் தான் ஆரம்பித்த பயணம் தமிழர்கள் மீதான போர் வெற்றியுடன் முடிவடைந்தமை போல், தனது புதிய உண்ணாநிலை போராட்ட அரங்கக்காட்சியும் வெற்றிபெற்றதாக எகத்தாளமாக கூறினார்.

அதன் பின்னர் வவுனியா யாழ்பாணம் என கடந்த வாரம் திக் விஜயம் செய்த அவர் பௌத்தமும் – இந்து மதமும் நெருங்கிய தொடர்புகளைக்கொண்ட மதங்கள் என்பதால் வடக்குகிழக்கில் வாழும் தமதுசகோதர(?) இந்துமக்கள் புத்தர்சிலைகளை வைப்பதை எதிர்த்தால் அதனை நாம் மதிக்கவேண்டும். பௌத்த தர்மத்தை வியாபிக்கச்செய்ய புத்தர்சிலைகளைத்தான் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனபதே அத்துரலியரின் பூனைப்பாத தந்திரம்.

ஆனால் அவர் அவ்வாறு வடக்குகிழக்கு பௌத்த மயமாக்களை குறித்த எதிர்ப்பை யாழில் கடந்த வெள்ளியன்று பப்படாவாக காட்டினாலும் பொசொன் தினத்தில் நீராவியடிப்பிள்ளையார் ஆலய முன்றலில் பிக்குகள் நடத்திய போராட்டத்தின் ஊடாக அவரது தந்திரம் பல்லிளித்து விட்டது.

எது எப்படியோ பொசொன் செய்திகளை தமிழ்மக்கள் உள்வாங்கினார்களோ இல்லையோ சிங்களப்பௌத்தர்களின் பூனைப்பாத தந்திரங்கள் குறித்து மிகத் தெளிவான சில செய்திகளை தமிழமக்கள் உள்வாங்கவேண்டும்.