ரணில் -மைத்திரி “மரண” இழுபறி! சபாஷ்! சரியான போட்டி.

  • Prem
  • June 28, 2019
54shares

சபாஷ் சரியான போட்டி இது தமிழ்த்திரைத்துறையில் பெரும் வில்லனாக நின்றவரான பி.எஸ் வீரப்பா பேசிய நச்சென்ற வசனங்களில் ஒன்று. 1957 இல் வெளிவந்த வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினியின் நடனத்துக்கு போட்டியாக வைஜயந்திமாலா நடனம் ஆடும்போது அந்தப்போட்டியைப் ஆரவாரமாக குதூகலிக்கும் வீரப்பா, சபாஷ்! சரியான போட்டி என சொல்வார்.

இப்போது இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மைத்திரிக்கும்- ரணிலுக்கும் எழுந்துள்ள போட்டியும் இவ்வாறான ஒரு சபாஷ்! சரியான போட்டி நிலையைத்தான் உருவாக்கியுள்ளது.

இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை நடைமுறைபடுத்தும் உத்தரவில் யான் கைச்சாத்திட்டுவிட்டேன். ஆகையால் விரைவில் போதைப்பொருள் சாம்ராஜ்யத்தின் குற்றவாளிகள் நான்கு பேரின் கழுத்துகளில் தூக்குக்கயிறுகள் இறுகும் என்றார்.

1976 ஆம் ஆண்டுக்குப்பின்னர் சிறிலங்காவின் ஆட்சிக்கொலுவில் இருந்த அரச தலையாரிகள் எவரும் மரணதண்டனை உத்தரவில் ஒப்பமிடவில்லை என்பதால் 43 வருடங்களுக்குப்பின்னர் மரணதண்டனையை நிறைவேற்றும் ஆவணத்தில் ஒப்பமிட்ட மைத்திரியின் நகர்வுகள் பலமான அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில மீண்டும் ஒரு முறை மைத்திரின் முடிவுகளை ஊடறுத்து அவரது நிறைவேற்று அதிகாரக் கையை இறுக்கிய ரணில் தரப்பு யானைகளின் தும்பிக்கை இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த தாம் இணங்கப் போவதில்லை என பிளிறியிருக்கிறது.

அத்துடன் நாகரீகமடைந்த நாடு ஒன்றுக்கு மரண தண்டனை முறைமை பொருந்தாது என்பதால், எந்தக்; காரணங் கொண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு, தாம் இணங்கப்போவதில்லையென பிளிறும் யானைகள், சிறிலங்காவில் அரசாங்கத்தை நடத்தும் ஐக்கிய தேசிய முன்னணியாகவும், நாட்டின் பிரதான கட்சியாகவும் இதனை யாம் அறிக்கையிடுகின்றோம் என மைத்திரிக்கு ஒரு பஞ்ச் அடியையும் வழங்கியுள்ளது.

இப்போது கூறுங்கள்! பத்மினிக்கும் வைஜயந்திமாலாவுக்கும் இடையிலான போட்டி நடனத்தின் போது சபாஷ்! சரியான போட்டி என ஆரவாரமாக குதூகலிக்கும் வீரப்பாவின் நிலைபோல இந்தநிலை உள்ளதா?... இல்லையா?

மரணதண்டனை குறித்த யானைகள் முகாமின் நிலைப்பாடு நிச்சயமாக மேற்குலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களை ஆர்கசிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனால் உலக கிண்ண துப்பாட்டப்பொட்டியில் சிறிலங்கா அணிக்கு புள்ளிகள் கிட்டுகின்றதோ இல்;லையோ ரணில் தரப்பின் வெளியரங்க ராஜதந்திர ஸ்கோர்போட்டில் புதிய புள்ளிகள் விழுந்துள்ளன.

இதேபோல யானைகள்தரப்பு இந்த விடயத்தில் தன்னைக்கட்டுப்படுத்தமுடியாது யானே அரசதலைவர் என முரண்டுபிடிக்கும் மைத்திரிபால் சிறிசேனா ஒருவேளை மரண தண்டனையை நிறைவேற்ற முனைந்தால், மீண்டும் ஒரு அரசியல் இழுபறிக்கு நிச்சயமாகவே கொழும்பில் இடமிருக்கும்.

இதற்கிடையே மரணதண்டனையை நடைமுறைப்படுத்தும் நகர்வுக்கு இடைக்கால தடைஉத்தரவு ஒன்றைப்பிறப்பிக்குமாறு கோரி சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நகர்வும் வந்துள்ளது.

அதேபோல மறுபுறத்தே மரணதண்டனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் அன்ரனியோ குற்றசுக்கு தொலைபேசியில் விளக்கமளித்து விட்டேன் எனக்கூறிய மைத்தரியின் செய்தியும் வந்துள்ளது.

ஆனால் இங்கு மரணதண்டனை நடைமுறைப்படுமோ இல்லை அது கைவிடப்படுமோ என்ற பிரச்சனையை விட இலங்கைத்தீவின் மூலோபாயப்பபிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பும் வகையில் முக்கிய மையங்கள் முன்னுக்குப்பின்னாக நடந்து கொள்வது தீராத பிணியாக மாறியுள்ளது.

உதாரணமாக சிங்கள அன்னையருக்கு கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக சிங்களக்கடும்போக்காளர்கள் ஆய் ஊய் எனக்கத்திய மகப்பேற்று வைத்தியர் ஷாபிஷியாப்தீனுக்கு எதிராக, எந்த ஒரு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை என சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையே நேற்று நீதிமன்றில் அறிவிக்கின்றது. ஆனால் மறுபுறத்தே அவர் உள்ளே தான் உள்ளார்.

இதேபோல இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் உட்பட இரண்டாயிரத்து 389 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் உண்மையில் எத்தனை பேருக்கு இந்தக்குண்டுத்தாக்குதல்களுடன் உண்மையாகவே தொடர்பு இருக்கக்கூடும்? என்பதும் துல்லியமாக விடைதெரியவேண்டிய ஒரு

ஆனால் முன்னர் தமிழர்களுக்கு நேர்ந்த கதிபோல முஸ்லிம்களுக்கும் இப்போது நிலைமை வந்தாலும் தமிழர்தரப்பும் இந்தவிடயத்தில் முஸ்லிம்களு;ககாக அதிக அனுதாபத்தை காட்;முடியாதவகையில் கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகத்தை மையப்படுத்தி விடயம் மாறிவிட்டது

கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலக விடயத்தில் முஸ்லிம்கள் காட்டும் இறுக்கமும் அதற்குத்தோதாக இதற்குள் புகுந்துகொண்ட பௌத்த பிக்குகளும் விடயத்தை சிக்கலாக்கியுள்ளனர்.

தமிழ் பிரதிநிதியான சுமந்திரனை துரட்சி செய்வதற்குப்பின்நிற்காத தமிழ்த் தரப்புகள் மறுபுறத்தே ஞானசாரர் அத்ரலியர் போன்ற கடும்போக்கு முகங்களை தமக்குரிய ஆபத்பாந்தவர்களாக நோக்கும் (இந்து- பௌத்த இணைவு ?) அபத்தம் உருவாகிவிட்டது.

மறுதலையாக கல்முனையில் தமிழ் மக்களுக்கென தனியான பிரதேச செயலகம் ஒன்று உருவானால், தமது பிரதான வணிக நகரமான கல்முனை நகரமும் கணிசமான முஸ்லிம் குடியிருப்புகளும் தமிழர்களின் எல்லைக்குள் சென்றுவிடும் என்ற ஒரேயொரு காணத்தை தவிர இதற்காக முஸ்லிம்கள் தமது வீராப்பைக்காட்ட ஒரு காரணம் இல்லையென்பதும் இன்னொரு அபத்தம்

ஆகமொத்தம் இவ்வாறான அபத்தங்களின் நீட்சியானது, கன்னியாவிலும், முல்லைத்தீவு நீராவியடியிலும் தமிழர்களின் இருப்புக்கு ஆப்பு வைக்கும் அதே பௌத்த காவிகளை கல்முனை போன்ற இடங்களில் ஆபத்பாந்தவன்களான உருவாக்கிவிட்ட விபரீதங்களே வழங்கியுள்ளது.