ஊருக்கெல்லாம் சாத்திரம் சொல்லும் பல்லி கழுநீர்ப் பானையில் விழுந்த கதை!

  • Prem
  • July 02, 2019
66shares

ஊருக்கெல்லாம் சாத்திரம் சொல்லுகிற பல்லி கழுநீர்ப்பானையில் விழுந்ததாம்! அது போல. தமிழ்தேசியக்கூட்டமைப்பு கட்டமைப்பில் பெரும் வகிபாகத்தைக் கொண்டுள்ள தமிழரசுக்கட்சி நேற்று நடந்து கொண்டமை நிருபிக்கப்பட்டுள்ளது.

கழுநீர்ப்பானையில் விழுந்த இந்த ஊருக்கு சாத்திரம் சொல்லும் பல்லிகள் ஒரு விடயத்தைப்புரிந்துகொள்ளவேண்டும். என்னதான், தேசிய மாநாடுகளைக்கூட்டி தீர்மானங்களை பட்டியலிட்டுநிறைவேற்றினாலும் அதிகாரத்தின் ஊற்றுக்கண் எப்போதும் மக்களிடமே உள்ளது.

என்ன எடுத்த எடுப்பிலேயே தமிழரசுக்கட்சி மீதான விமர்சனம் ஆரம்பிக்கப்படுகிறதே என உங்களுக்கு நினைக்கத்தோன்றும். ஆனால் அவ்வாறான ஒரு வாய்பை தமிழரசுக்கட்சிதான் வழங்கியிருக்கிறது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம்மண்டபத்தில், தமது 16ஆவது தேசிய மாநாட்டை தமிழரசுக்கட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை சற்று தடல்புடலாக ஒப்பேற்றியது. தந்தை செல்வாவின் சிலைக்கு அஞ்சலி. மீண்டும் ஒரு முறை கட்சியின் தலைவராக மாவை. சேனாதிராஜாவின் மீள்நியமனம். உணர்ச்சி மிகுந்தஉரைகள். அவ்வாறான உரைகளுக்குப் பின்னர் வந்த வரிசையாக தீர்மானங்களின் நிறைவேற்றங்கள் என களைகட்டல்கள் இருந்தன.

அதுவும் ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் இறையாண்மை, சுய நிர்ணய உரிமை, மனிதஉரிமைவாழும்உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசியஇனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும்வகையில் அரசியல்தீர்வுஅமைய வேண்டும் என நீட்டிமுழக்கி முன்வைக்கபட்ட அரசியல்தீர்வு குறித்த தீர்மானம்.

அதற்கும் அப்பால், தமது 16ஆவது தேசியமாநாடு இடம்பெற்ற மூன்று மாதகாலத்துக்குள், ரணில்அரசாங்கம் தமிழ்மக்களுக்கு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தவேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்த தவறினால்மக்களை அணிதிரட்டிஜனநாயகவழி போராட்டமுனைப்பு என அரதப்பழசான தந்ரோபாய எச்சரிக்கை. என பல விடயங்கள் வந்தன.

ஆனால் அதிகாரத்தின் ஊற்றுக்கண் என்பது எப்போதும் மக்களிடமே உள்ளது. என்ற புரிதலையும் இதே நாள் நினைவுபடுத்தியுள்ளது. குறிப்பாக அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்தும் கலை அல்ல அது மக்களுக்குரிய சேவை என்ற யதார்த்தத்தை தமிழரசுக்கட்சி புறந்தள்ளியதால் தான் அதனால் சுலபமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்;டத்தையும் சுலபமாக புறந்தள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் இதில் பெரும்முரண்நிலையாதெனில், ரணில்அரசாங்கத்துக்கு மூன்று மாதகாலஅவகாசம் வழங்கி தமிழ்மக்களுக்கு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்தத்தவறினால் ஜனநாயக வழிப்போராட்டமென செய்திவிடுத்த அதே தமிழரசுக்கட்சி தமது மாநாட்டு மண்டபத்து வெளியே நின்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கணக்கில் எடுக்கவில்லையென்றவிடயம்தான்.

இதனைவிட இன்னொரு வேதனைக்குரிய விடயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடியமக்கள் மதுபோதையில் இருப்பதாக தமிழரசுக்கட்சியின் தொண்டர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு அமைந்தது.

இவ்வாறான குற்றச்சாட்டு குப்புறத்தள்ளிய குதிரை குழியை பறித்த கதைக்கு ஒப்பானது

ஏனெனில் தமிழரசுக்கட்சி ஒரு மாநாட்டை நடத்தும் வேளை அந்த மாநாட்டுக்கு அதன் தலைவர்கள் எல்லாம் வரும்நிலையில், அந்த சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி தமது குறைகளை சொல்ல மாநாடு இடம்பெறும் இடத்துக்கு அருகாமையில் நின்று நீதிகோரும் ஒரு மக்கள் கூட்டம் போராடுவதென்பது நூறுவீதமான ஜனநாயக உரிமைசார்ந்தது.

இதனைத்தானே கடந்த ஒப்டோபரில் மைத்திரி ரணிலை பதவிவிலக்கியபோது, கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்களில் சுமந்திரன் போன்ற தமிழரசுக்கட்சியின் முக்கியமுகங்களும் செய்திருந்தனர்.

சிங்களவர்களின் அரசியல்அதிகாரம் சார்ந்த போராட்டங்களிலேயே இவ்வாறு பங்கெடுக்க தமிழரசுக்கட்சியின் முகங்களுக்கு ஜனநாயக உரித்து இருந்தால், தமது சொந்தத் தாயகத்தில் போராடிய மக்களுக்கும் தமிழரசுக்கட்சியின் மாநாட்டின் பின்னணியில் ஒருசெய்தியைக்கூறுவதற்கு அதே ஜனநாயக உரிமை உள்ளது.

ஆனால் வவுனியாவில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக உரிமையை அறவழியில் கணக்கில் எடுத்து நேரில் சென்று ஆறுதல் சொல்லவேண்டிய தமிழரசுக்கட்சி உயர் முகங்கள் தமது சொந்த மக்களின் போராட்டத்தைக்கண்டு அஞ்சிஒதுங்கி மாநாட்டு மண்டபத்துக்கு சிறிலங்கா காவற்துறையின் பாதுகாப்பை பெற்றமை கவலைக்குரிய ஒருவிடயமே

ஆனால் என்ன விந்தை! தமது சொந்த மக்களின் போராட்டத்துக்கு ஆறுதல் கூறாமல் தமிழரசுக்கட்சி உள்ளுரில் அஞ்சிஒதுங்கி போதாக்குறைக்கு குடிகாரர்கள் போராடுவதான பழியையும் போட்ட அதேசமகாலத்தில் தான் உலக அரங்கில் கீரியும் பாம்புமாக கருதப்பட்ட வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும்; அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம்ப்பும் இணைந்து நடந்து வரும்காட்சிகளும் வெளிப்பட்டன.

டொனால்ட் ரம்ப் கூட தென்கொரிய எல்லையைத்தாண்டி வடகொரியாவுக்குள் சம்பிரதாயபூர்வமாக கால்வைத்துமிருந்தார்.

எதிர்காலத்தில் நெருங்கிய தொடர்பில் இருக்க இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்குரியதாக கருதப்படும் இந்தநகர்வை அற்புதமான ஒரு வரலாற்று நிகழ்வு என்று வட கொரிய அரசு ஊடகம் புகழ்ந்திருக்கிறது.

மதிப்புக்குரிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களே!

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா அவர்களே!

சிங்களவர்களின் அரசியல்அதிகாரம் சார்ந்த போராட்டத்துக்கே கைகொடுக்கும் சுமந்திரன் அவர்களே!

தேசியம் குறித்து பேசும் சிறிதரன் அவர்களே! மற்றும் தமிழரசுக்கட்சியின்; பெரிய தலைவர்களே!

போராட்டத்தில் ஈடுபட்டமக்களை திரும்பிப்பார்க்காமல் அகல்வது இல்லையென்றால் குடிபோதையில் அவர்கள்; போராடுவதான பழியை போடுவது அதிகாரத்தின் ஊற்றுக்கண் இருக்கும் மக்களை புறந்தள்ளுவது மட்டுமல்ல கண்ணாடி வீட்டுக்குள் கல் எறிவதற்கும் ஒப்பானது