ஞானசாரர் “மார்க்” ...கோல் ஆட குரங்கு ஆடும் வித்தை!

  • Prem
  • July 09, 2019
71shares

கோல் ஆட குரங்கு ஆடும் என்பார்கள்! அந்தவகையில் கண்டி போகம்பர மைதானத்தில் கடந்தவார இறுதியில் ஒரு ஆட்டம் தெரிந்தது. ஒரேநாடு. ஒரேமக்கள். ஒரே சட்டம் என்ற தொனிப்பொருளில் பொதுபலசேனா அன்ட் கோ தமது பொதுச்செயலாளர் என்ற அடையாளத்தில் உள்ள ஞானசார தேரரின் தலைமையில் பேரணி-மாநாடு- தீர்மானங்கள் என இந்த ஆட்டத்தை அசகாயச்சூரத்தனமாக நடத்தி ஓய்ந்தது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மைத்திரியின் பொதுமன்னிப்பில் விடுதலையான ஞானசார தேரர் என்ற இந்த பௌத்தசண்டியர் தன்னை ஒரு சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்கும் வகையில் சிறையில் இருந்து வெளிவந்தார்.

இந்தளவுக்கும் அவருக்கு நீதிமன்ற அவமதிப்புக்குற்றத்துக்காக ஆறு வருடக் கடூழியச்சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் என்னே ஆச்சரியம் ஆறு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கபட்டவர் ஆகமொத்தம் ஒன்பதே ஒன்பது மாதங்களில் அதுவும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கொதிநிலை உருவாகிய பின்னணியில் விடுதலையானார்.

இதற்கிடையே பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே பாணியில் ஞானசாரரை விடுதலைசெய்யக்கோரி இப்போது முன்னாள் ஆளுநர்களாகிவிட்ட அந்நாள் ஆளுனர்களான அஷாத்சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் வேறு கோரிக்கை விடுத்ததையும் இங்கு கோடிட்டுக்காட்டவேண்டும்.

இவ்வாறான பின்னணியில் சிறையிலிருந்து விடுதலையானவர் முதலில் என்ன சொன்னார்? தான் பௌத்தக் கடமைகளிலும், தியானத்திலும் ஈடுபட்டு வாழ்நாளைக் கழிக்கப்போகிறேன் என ஆசாடபூதித்தனம் காட்டினார். பின்னர் அப்படியே 360 பாகைக்குத்திருப்பியவர் போராடிக்களைத்து ஓய்வெடுக்கவே விரும்பிய தன்னை சிங்கள பௌத்தஇளைஞர்கள் விடுவதாக இல்லை என சலித்துக்கொண்டார்.

அத்துடன் தான் சிறையிலிருந்து விடுதலையான நாளில் இருந்து நாளைக் கூட, நிம்மதியாகக் கழிக்க முடியாதளவுக்கு நாட்டின் நிலைமை மிக மோசமாகக் காணப்படுவதால் எதிர்காலச்சந்ததியினருக்கான தனது தனிப்பட்ட சுகதுக்கங்களைத் துறந்துபௌத்த சங்கங்களைக்கூட்டிக்கொண்டு போராடப்போவதாக அறைகூவினார்.

அந்த அiகூவலுக்குப்பின்னர் பொதுபலசேனா அன்ட் கோ கடந்வார இறுதியில் ஒரு ஆட்டத்தை கண்டியில் நடத்தியது. இந்த ஆட்டம் மறுபுறத்தே கண்டிநகரில் முஸ்லிகளை அச்சப்படுத்தி அவர்களின வாழ்வியலை முடக்கியது. வணிகநிலையங்களை மூடவைத்தது.

இந்த அரங்கில் உரையாற்றிய சண்டியர் ஞானசாரர் தனி சிங்கள இராச்சியத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தை கண்டியிலிருந்தே ஆரம்பிப்போம் என்றார். நாட்டில் உரிய தலைவர் ஒருவர் இல்லையென கவலைகொண்டார். உலமா சபையுடனான சகல பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் அதிகாரிகளும் உடனடியாக நிறுத்த வேண்டுமெனப்பொங்கினார். இலங்கைத்தீவில் உண்மையான உரித்துடைய சிங்கள பௌத்தர்கள் இன்று வாடகை குடியிருப்பாளர்கள் போல வாழ்வதாகவும் மாய்மாலம் காட்டினார்.

இதற்கும் அப்பால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தோற்கடிக்கும் பொறுப்பை நாட்டிலுள்ள பிக்குகளிடம் ஒப்படையுங்கள் என சரவெடி கொளுத்தும் அறைகூவலை விடுக்கவும் அவர் தவறவில்லை. இலங்கைத்தீவு வாழ் பிக்குகள் தமது கைகளில் உள்ள தர்மம் என்ற பெயரையுடைய வாளினால் அடிப்படைவாதம் என்ற விசப்பாம்பை வெட்டித்துண்டாடி அழிப்பார்கள் என்ற செய்தி இந்த ஞானசாரர் மார்க்சரவெடிக்குள் இருந்தது.

இதனைவிட பௌத்த பிக்குகள் தமக்குள் இருக்கும் பீடபேதம், காவிநிற பேதம் போன்ற இத்தியாதிகளை ஒருபுறமாகவைத்துவிட்டு தேசிய பொறுப்பை ஏற்க வேண்டும் போன்ற செய்திகளை விடுத்தவர் ஒரு கட்டத்தில் தமிழர்களுக்கும் ஒரு செய்தியை சொன்னார்.

இலங்கை ஒரு சிங்கள நாடு எனக் கூறியதற்காக தமிழ் சகோதரர்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது என்றவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக போராடி நாட்டை பாதுகாக்க தமிழ் சகோதரர்களும் தங்களுடன் ஒன்று சேரவேண்டும் எனவும் அழைத்தார்.

ஆகமொத்தம் பொதுபல சேனா அமைப்பு கண்டி தலதா மாளிகையை அண்மித்து காட்சிய ப்படுத்திய இந்த போகம்பர காட்படுத்தலானது ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப்போல கோல் ஆட குரங்கு ஆடும் ஒரு ஆட்டமே!

குறிப்பாக கடந்த ஏப்ரல் மாத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று ஐ.எஸ்ஸின் கந்தக நாசகாரம் வெளிப்பட்டபின்னர் உருவாகியுள்ள ஒரு மோசமான சூழ்நிலையின் பின்னணியில் இது ஒரு தேர்தல் பரிவட்டம்கட்டும் ஆட்டம்.

நேற்று கண்டியில் காட்சிப்படுத்தப்பட்ட பொதுபல சேனாவின் வகையறா தொகையறாக்கள் தேர்தல் நெருங்க நெருங்க தீவிரம் பெற்று ஆட்டம் காலிறுதி அரையிறுதி ஆட்டங்களைக் கடக்கும் அதன் பின்னர் இறுதிச்சுற்றில் ராஜபக்ச அணிசர்ப்பு முகத்துக்கு சிங்கள பௌத்த வங்கியை திரட்சிப்படுத்த உதவக்கூடும்.

ஏனெனில் ராஜபக்ஷக்களின் ஆட்சிக்காலத்தில் ஞானசாரர் மேற்பார்த்த பொதுபல சேனா ஆரம்பிக்கப்பட்டது. பொதுபலசேனாவுக்குரிய காலி பிராந்தியப் பணியகத்தை, திறந்து வைத்தவரே அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷதான். ஆகையால் சிறிலங்காவின் பெருமுகாம் கட்சிகளும் தங்களுக்குரிய எதிர்கால வாக்கு வங்கியின் திரட்சியையும் மனதில் நிறுத்தி இந்தஞானசார ஆட்டத்தை ரசிக்கவே செய்வார்கள்.

இந்த இடத்தில் இலங்கை ஒரு சிங்கள நாடு எனக் கூறியதற்காக தமிழ் சகோதரர்கள் கோபித்துக்கொள்ளக்கூடாது என்ற அவரது செய்தியும் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான தமது சாட்டை சுழற்றிலில் தமிழர்களும் ஒன்று சேரவேண்டும் என்ற அழைப்பும் ஆசாடபூதித்தனமானது.

ஏனெனில் ஒருபுறத்தே தமிழர்களுக்கு இலங்கையில் வாழும் உரிமை இருந்தாலும், அவர்கள் இலங்கையின் பூர்வீகக் குடிகள் அல்ல் என்று ஞானசாரர் குரல் ஒலிக்கிறது.

பொதுவாகவே இலங்கைத்தீவில் பௌத்தம் அல்லாத ஏனைய மதங்;கள் மீது வன்முறைகளைத் தூண்டிவிட்ட தடம் ஞானசார அன்ட்கோவுக்கு உரியது. அதற்குரிய ஆதரங்கள் இன்றும் கன்னியா வென்னீர் ஊற்று பிள்ளையார் கோவில் முதல் நீராவியடி பிள்ளையார் கோவில் வரை பல இடங்களில் உள்ளன.

ஆகையால், அவ்வாறான யதார்த்தங்களின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான கத்தி எடுக்க தம்முடன் தமிழர்களும் தயாராக வேண்டும் என்ற அழைப்பும் அபாயகரமானது ஆசாடபுதித்தனமானது.

வேண்டுமானால் ஞானசாரர் கூறும் தனிச்சிங்கள ராஜ்யக் கருத்தியலுக்கு ஒப்பாக தமிழர்களும் தம்மிடம் முன்னர் இருந்த தமிழ ராஜ்யங்கள் குறித்துப்பேசினால் இலங்கை இரண்டு தேசங்களின் தீவாகிவிடும்.

இதனைவிடுத்து தம்முடன் தமிழர்களும் இணைய வேண்டும் என்ற ஞானசார அபாயகரமானதாகவே தமிழ்மக்கள் எப்போதும் நோக்குவார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
loading...