நம்பிக்கையில்லா பிரேரணை வாக்களிப்பு! ஜேர்மனியில் இருந்து கூட்டமைப்புக்கு முக்கிய செய்தி!

  • Prem
  • July 11, 2019
148shares

இலங்கைத்தீவில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமகால பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ள ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை அதிர்வுகளுக்கும் ஜேர்மனியின் இரும்பு வேந்தர் எனவர்ணிக்கப்படும் ஓடோ வொன் பிஸ்மாக்கின் முக்கிய கருத்துக்கும் இடையில் யாதொரு நேரடித்தொடர்பும் இல்லை.

ஆனால் ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வெளிப்படுத்தக்கூடிய முடிவு குறித்து ஓடோ வொன் பிஸ்மாக்கின் ஒரு செய்தி இருக்கக்கூடும்.

உலகின் தலைசிறந்த அரசறிவியலாளர்கள் குறித்து அறியக்கூடிய ஆர்வத்தைக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவேளை கொண்டிருந்தால், ஓடோ வொன் பிஸ்மாக்கின் கருத்து பொருந்தக்கூடும்

அன்றைய நாட்களில் துண்டு துண்டாக சிதறிக்கிடந்த ஜேர்மனிய தேசங்களை ஒருங்கிணைத்த தலைவர் என்ற தகுதிநிலையிலும் ஒரு கைதேர்ந்த அரசறிவியலாளராகவும் , அரசியல் என்பது சாத்தியப்பாட்டுக்குரிய ஒரு கலை என பிஸ்மாக் கூறுகிறார்.

ஒருவேளை தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு எவ்வாறு வாக்களிப்பீர்கள் என நேற்று வினவியிருந்தால் வினவியிருந்தால் அது குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. வாக்கெடுப்பு நடைபெறும் இன்று (11 07 19) பகல் கட்சித்தலைமை அது குறித்து முடிவு எடுக்கும் எனக்கூறி சமாளித்து விடுவார்.

எனினும்ஜே.வி.பி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த ரணில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாகவே கூட்டமைப்பு வாக்களிக்கும் என்ற கருத்தையே உங்களில் அநேகமானவர்கள் கொண்டிருக்கக்கூடும். ஆக மிஞ்சிப்போனால் சிலவேளைகளில் வாக்கெடுப்பில் இருந்து ஒதுங்கியிருக்கலாம்.( அதுவும் ஒருவகை அரச ஆதரவு நிலைப்பாடு)

யானைகளின் தலைமைப்பாகனான ரணில் விக்கிரமசிங்க, தமிழ்தேசியக்கூட்டமைப்பை நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, கடந்த சிலநாட்களுக்கு முன்னர் பாலமோட்டை பகுதியில் தமிழ் ஊடகர்களிடம் மூக்கால் அழுத வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் ஆதரவாகத்தான் வாக்;களிக்கக்கூடும்.

அதேபோல ரணில்அரசாங்கம் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை எனவும் அதற்காக மூன்று மாதகாலஅவகாசம் வழங்கி அது தவறினால்மக்களை அணிதிரட்டும் போராட்டம் வெடிக்கும்(!?) என எச்சரிக்கை விடுத்த தமிழரசுக்கட்சியின் உயர் முகங்களும் ஆதரவாகவே வாக்களிக்கக்கூடும்.

ஆனால் ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்தபின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா குறிப்பிட்டகருத்துக்களை இங்கு அவதானிக்கவேண்டும். தற்போதைய ரணில் அரசாங்கத்துக்கு பதிலான புதிய அரசாங்கமொன்றை நியமிக்கும் தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். குறிப்பாக

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனப்படும் ஐ. எஸ்ஸின் கந்தகநாசகாரத்தை தடுக்க முடியாமல் போன இந்தஅரசாங்கத்துக்கு, நாடு குறித்தும் அதன் குடிமக்கள் குறித்தும் பொறுப்பேற்க எந்த உரிமையும் இல்லையென இடம்வலமாக வாங்கினார்.

ஐ. எஸ்ஸின் கந்தக நாசகாரம் குறித்து, அது இடம்பெற முன்னரே இந்தியப் பெரியண்ணன் வீடு உட்பட்ட அனைத்துலக புலனாய்வு அமைப்புகளின் ஊடாக தகவல்கள் கிட்டியும் அதனைத்தடுக்கத்தவறியமை, அதன்பின்னர் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கத்தவறியமை என ஆறு முக்கிய விடயங்களை பட்டியலிட்ட ஜே.வி.பி அந்தக்காரணங்களின் அடிப்படையில் ரணில் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

ஆகையால் இவ்வாறான சில காரண காரியங்களின் அடிப்படையில் இந்த அரசாங்கத்தை நம்பிக்கையில்லா பிரேரணை ஊடாக விடைகொடுத்து அனுப்பும் வாய்ப்பு நாடாளுமன்றத்துக்கு உள்ளது.

இதனடிப்படையில் இந்தவிடயத்தில் எதிர்க்கட்சிகள் சரியாகச்செயற்பட்டால், அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையை வெற்றியடையச் செய்யமுடியும் எனவே ஜே.வி.பி நம்பி…..கை வைக்கிறது

தற்போதைய நிலவரப்படி நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதாக மஹிந்த மேற்பார்த்த ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது அதேபோல முன்னைய பங்காளித்தரப்பாக இருந்த ரணில்அரசாங்கத்துக்கு எதிரான முடிவை எடுப்போம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தனது கையை நீட்டியிருக்கிறது.

மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஆளும் தரப்பில் உள்ள முஸ்லிம் பங்காளிகளான சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ், மக்கள் கொங்கிரஸ் ஆகியனவும் மனோ கணேசன் மேற்பார்த்த தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதால் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கப்படும் என்ற நம்பிக்கை ரணில் யானையின் தும்பிக்கையில் உள்ளது

இவ்வாறான ஒரு யதார்த்தமான பின்னணியில் தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் பிரேரணைக்கு எதிராக ஏன் வாக்களிக்க முடியாது என்ற ஒரு வினாவை எழுப்பினால் ரணில் அரசாங்கம் வீட்டுக்குப்போனால் அடுத்து மகிந்த அரசாங்கம் வந்துவிடுமே என்ற ஒரு அச்சத்துக்குரிய காரணத்தை தமிழ்அரசியல்பரப்பில் பழமும் தின்று விதையையும் போட்டதாகக்கூறப்படும் கூட்டமைப்பின் முகங்கள் முன்வைக்கக்கூடும். கூட்டமைப்பு முன்வைக்கும் மகிந்ததரப்பின் மீள்வருகை குறித்த இந்தக்காரணத்தில் ஒரு தொழினுட்பக்காரணம் இருக்கக்கூடும். ஏனெனில் மகிந்ததரப்பின் மீள்வருகையென்பது இலங்கைத்தீவின் பேரினவாதத்தின் மறுமலர்ச்சிக்கான அடையாளமாக மாறும் என்ற அச்சநிலையை புறந்தள்ள முடியாது.

அதனை ஆதாரப்படுத்துவது போல எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் தமது தரப்பால் நிறுத்தப்படும் வேட்பாளரை தெரிவு செய்யும் அதிகாரம் எனக்கே உண்டு அந்த அதிகாரத்தின் அடிப்படையில் வெற்றியடைக்கூடிய காரம் -மணம் -குணம் நிறைந்த வேட்பாளரை யானே தெரிவு செய்வேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுன பணியகத்தில் நேற்று மகிந்த முழங்கியுள்ளார்.

எனினும் அரசியலாளர் ஓட்டோ வொன் பிஸ்மாக் கூறும் அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒரு கலை என்ற கருத்தியலும் சமூகத்தின் இயக்கத்தை தீர்மானிக்கும் ஒரு கருவியே அரசியல் என்றவிடயமும்

மக்களில் இருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் மக்களுக்கு தேவையான பொது விடயங்களை செய்யவேண்டிய நிலையும் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு இப்போது ரணில் அரசாங்கம் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையில் அவசியமாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
loading...