வடக்குவீதி மேளச்சமாவும்! கூட்டமைப்பு வித்துவான்களின் பிரேரணையும்!!

  • Prem
  • July 29, 2019
59shares

இலங்கைத்தீவில் தேர்தல் அறிகுறிகளை டமாரப்படுத்தும் முரசறைதல்களின் கிண் ஒலிகள் அதிகரித்துவிட்டது. சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி மைத்திரி இன்னமும் அதிகாரபூர்வமாக அரசதலைவர் தேர்தல் குறித்து உறுதியான ஒரு முகூர்த்தத்தை வெளியிடவில்லை.

ஆயினும் சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழுத்தலைவர் மகிந்த தேசப்பிரியவோ இந்த மூகூர்த்தம் குறித்து டிசம்பர் மாதத்தில் பருமட்டான நாட்களை மட்டும் இதோ அதோ எனக்காட்டுகிறார்

ஆயினும் தேர்தல் அறிகுறிகளைக்காட்டும் வகையில் கட்சிகளின் முரசறைதல்கள் வெளிவருகின்றன. அந்தவகையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன எனப்படும் தாமரை மொட்டுடன் 10 அரசியல் கட்சிகள் Memorandum ofUnderstanding எனப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றுக்குள் தங்களைப் புகுத்தியுள்ளன.

இந்த 10 கட்சிகளில் சில கட்சிகள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிராத கடிதத்தலைப்பு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் வந்தது வரை லாபமென மகிந்த அவற்றையும் இணைத்திருக்கிறார். இதில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணிபோன்ற (தமிழ்)கட்சிகளின் துக்கடாக் காட்சிகளும் இருந்தன.

தென்னிலங்கையின் தேர்தல் கட்டியங்கள் மற்றும் காட்சிகள் எல்லாம் இவ்வாறு பேஷாக இருக்க தமிழர் அரசியல்தளத்தின் முதன்மை இயந்திரம் எனச்சிலாகிக்கப்படும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் வியூகங்கள் கூட எதிர்பார்த்தபடியே நகர்கின்றன.

அந்தவகையில் அதற்கு தற்போது சிறிஜெயவர்த்தனபுர நாடாளுமன்னற அரங்கில் அரசியலமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை என்ற வடக்கு வீதிச் சமாசமாவில் தற்போது கூட்டமைப்பு வெளுத்துவாங்கியிருக்கிறது.

பொதுவாக கோவில் உற்சவங்களில் சாமி சுற்றிவரும் போது வடக்கு வீதியில் இடம்பெறும் மேளக்கச்சேரிக்கு என தனியான ஒருவிறுவிறுப்பு இருக்கும். சாமி இருப்புக்கு வருவதற்கு முன்னர் இடம்பெறும் இந்த சமாவில் தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் எல்லாம் வரிசை கட்டி நின்று தமது வாசிப்புத்திறமையை வெளுத்து வாங்குவார்கள்.

அவ்வாறுதான் சபை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை என்ற அடையாளத்தில் கூட்டமைப்பு வித்துவான் முகங்கள் வெளுத்துவாங்கியிருந்தது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரணில்அரசாங்கத்துக்கு ஆயுதப்போராட்டம் குறித்த செய்தி, தமிழர்களுக்கு தீர்வு வழங்குவதற்கு 3 மாதகால கெடுபோன்ற அதிர்வுகளை வெளிப்படுத்திய இரா.சம்பந்தன் சுமந்திரன் ஆகிய முகங்கள் இப்போது சபை ஒத்திவைப்பு பிரேரணையில் ஆக்ரோசமான முழங்கங்களை முன்வைத்துள்ள. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் இந்த ஆக்ரோச முழக்கங்கள் வெளிப்பட்;டன.

தமிழ்தேசியக்கூட்டமைப்பை பொறுத்தவரை அது ரணில் தரப்புக்கு காட்டும் ஆதரவு தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருப்பது தெரிந்த விடயம். இதனால் எங்கே இந்த நிலைமை தமது வாக்குவங்கியில் பெரும் அடியை வழங்கிவிடுமோ என்ற அச்சத்துக்கு ஆளாகியிருக்கக்கூடிய கூட்டமைப்பின் தலைமைத்துவ முகங்கள் இப்போது சிறிலங்கா அரசாங்கத்தின் அரசியல் தீர்வு இழுத்தடிப்பு குறித்து பேசுகின்றன.

அந்;தவகையில், கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இரா. சம்பந்தன் அரசியல் தீர்வில் அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு செய்யுமானால் சர்வதேச ரீதியில் இலங்கை புறக்கணிக்கப்பட்டு விடுமென எச்சரித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பு மூலமே தமிழர்கள் ஆளப்படுகின்றனர்!

வடக்கு,கிழக்கில் பௌத்த சூழல் அதிகரிக்கின்றது!

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு பத்து வருடங்களாகியும்இதுவரை அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை!

அரசியல் தீர்வு மேலும் இழுத்தடிக்கப்பட்டால் நாடு பெரும் அழிவை எதிர்கொள்ள நேரிடும்!

தமிழ் மக்கள் மேலும் பொறுத்திருக்க மாட்டார்கள். சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராக இருந்துவிட முடியாது!

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாட்டில் எந்த முன்னேற்றமும் இடம்பெறாது என பலவிடயங்களை தனது நீண்ட உரையில் இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

ஆனால்; இரா.சம்பந்தனின் இந்த உரையை இடித்துரைப்பை சலிப்பை செவிமடுப்பதற்கு அவரேஅடிக்கடி காத்தருளி கைதூக்கிவிட்ட அதே அரசாங்கத்தில் இருந்து முகங்களில் இருந்து ரணில் உட்பட்ட எந்த முக்கிய முகங்களும் அரங்கில் இருக்கவில்லை. ரணில் பெரியண்ணன் வீடான இந்தியாவில் சாமி தரிசனம் செய்யக்கிளம்பியிருந்தார்

யானைகளின் முக்கிய முகங்கள் காய்வெட்டிய

இந்தவிடயத்தை முதல்நாளில் வியாழேந்திரன் குத்திக்காட்டியதால் மறுநாளில் இந்தவிடயத்தில் ரோசம் கொண்ட சுமந்திரன் ரணில் தரப்பை கொhஞ்சம் வாங்கினார்.

இதற்கிடையே இரா.சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்ட விடயங்கள் தமிழர்கள் வஞ்சிக்கபட்ட நிலையை வெளிப்படுத்தும் யதார்த்த பட்டியாலாக இருந்தததை ஏற்கலாம்.

ஆனால் இதனை அவர் இந்த விடயங்களை சொல்லிய நேரம் காலம் கடந்த நேரம். ஒரு பேச்சுக்காக இப்போது தமிழர்களுக்குரிய அரசியல் தீர்வை வழங்க ரணில் நூறுவீதம் விரும்புகிறார்(!?) என வைத்துக்கொண்டால் கூட புதிய அரசியல்அமைப்பு என்ற இந்த விடயத்தில் அவரால் எதனையும் செய்யமுடியாது.

இந்த யதார்த்ததை தெரிந்து கொண்டும் அரசியல் தீர்வில் அரசாங்கம் மேலும் இழுத்தடிப்பு செய்யுமானால் என இரா. சம்பந்தன் கமா போட்டு எச்சரிப்பதில் அடைவுகளுக்குரிய பலன் ஏதும் இல்லை. ஏனெனில் அவர்தான் முன்னர் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இடையில் நல்லாட்சி தீர்வு தந்துவிடும் என தமிழர்களுக்கு செய்தி கூறியவர். ஆனால் அவர் அவ்வாறு கூறினாலும் கொழும்பில் தில்லாலங்டிகள் குறித்து தெரிந்து கொண்ட சாமானியத்தமிழர்கள் அரசியல் சாணக்கிர் எனக் கூறப்படும் இரா. சம்பந்தனைவிட இதெல்லாம் நடக்காது என ஆருடம் கூறினார்கள். இப்போது அந்த ஆருடம்தான் பலித்திருக்கிறது.

இதனை விடாதுகறுப்பு தரப்பான மகிந்தாவாதிகள் கூட கூட்டிக்காட்டத் தவறவில்லை. அந்த வகையில் இரா.சம்பந்தனின் உரைக்குரிய எதிர்வினையாக மகிந்த மற்றும் அவரது தரப்பின் எள்ளல் பதில்களும் வந்தன. 4 வருடங்களும் நல்லாட்சியுடன் ஷேமமாக இருந்து எதனையும் காணாதநிலையில் இறுதிநேரத்தில் ஏன் துள்ளுகின்றீர்கள் என்ற பாணியில் மகிந்த கூட எள்ளியிருக்கிறார்.

ஆகமொத்தம் கடந்த ஜனவரி மாதத்தில் அசுமாத்தியமற்றுப்போன புதிய அரசியலமைப்பு தொடர்பாக இப்போது திடுக்கிட்டு விழித்து தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முன்வைத்த ஒத்திவைப்புவேளைப்பிரேரணை நினைவூட்டியிருக்கலாம்.

ஆனால் காலம் கடந்துவிட்ட நிலையில் ஒலித்த இந்த பேசுபொருள் பேச்சுப்பல்லக்கு தம்பிகால்நடை என்ற பழமொழியை மட்டுமே நினைவூட்டியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!