விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் குடுமிப்பிடி! திரளாத..திரள்நிலை!!

  • Prem
  • August 02, 2019
120shares

கிடக்கிறது கிடக்கட்டும் கிழவியைத்தூக்கி மணையிலே வை! என்பதாக, எந்த முனையில் எது கிடந்தாலும் அது அப்படியே கிடக்கட்டும் நமக்கு குடுமிப்பிடிதான் முக்கியம். அதனால் அதனைத்தூக்கி மணையிலே வை என்பதாக தமிழர்களின் அரசியல் கூர்மதிநுட்ப லட்சணம் தெரிகிறது.

சிறிலங்காவின் பேரினவாத ஒக்டோபஸ் கூந்தல்கள் தினுசு தினுசான வியூகங்களுடன் தமிழர்களின் முற்றங்களை வளைத்துப்பிடித்து சம்மணம் போட்டு இருந்தாலும் தமிழ்மக்களின் சில்லறைக்காச்சுமூச்சுகள் ஒயவும் இல்லை தமிழ் மக்களின் அரசியல்பேறுகளை வெளிப்படுத்தும் தெளிவான சமிஞ்சைகள் வரவும் இல்லை.

சிறிலங்காவின் எதிர்வரும் தேர்தல்களம் உட்பட்ட தரிசன நிலைகளை எதிர்கொள்ள தமிழ்மக்களுக்கு அடிப்படையில் எது அவசியம் அதற்குரிய வியூகத்தை எவ்வாறு வகுக்கவேண்டும் என்பதை தெளிவாக உரைக்க தமிழர் தரப்பில் ஒரு திரள்நிலை இல்லை.

ஏற்கனவே திரள் நிலையுற்றதரப்பு மீதான நம்பிக்கையீனத்தால் புதிதாக திரளக்கூடும் என எதிர்பார்க்கபட்ட விக்னேஸ்வரன்- கஜேந்திரகுமார் கூட்டணிகூட அதாவது தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் முரண்படுவதாக கூறிஅதிலிருந்து எகிறிய, தமிழ்த்தேசியமக்கள் முன்னணியும் தமிழ்மக்கள் கூட்டணியும் இப்போது தீவிர குடுமிப்பிடி சண்டைக்குள் சிக்கியது தெரிகிறது.

இதனால், பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம் என்ற பாடலில் வருவதை போன்ற ஒரு வெறுமை நிலைதான் இந்ததரப்புக்களால் கிட்டியுள்ளது. இவர்கள் உருவாக்ககூடியகூட்டணி தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குச் சவாலான ஓரு அணியாக மாறினால் கூட்டமைப்பும் கொஞ்சம் வழிக்குவரும் என எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது ஏமாற்றமே எஞ்சியுள்ளது.

ஆனால் மறுபுறத்தே தமிழர்களை நெருக்குவாரத்துக்குள் உள்ளாக்கும் தெற்கின் நகர்வுகள் தமிழர்களின் முற்றங்களில் வீரியமடைகின்றன. கோத்தாவை சிறிலங்காவின் முதன்மைத் தலையாரியாக முன்னகர்த்தப்பிரியப்படும் தரப்புக்கூட ஆஹா வந்திரிச்சு! அமெரிக்கக்குடியுரிமை மீளெடுப்பு ஆவணம் வந்திரிச்சு எனக் குசிப்பட்டு களம் இறங்கத் தயார்ப்பட்டுவிட்டனர். அதற்குத்தோதாக கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை மீளெடுப்பு ஆவணம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவும் அறிக்கையிட்டுள்ளது.

இதற்கிடையே கோத்தா வருவார் பின்னே! நாம வருவோம் முன்னே!! என்ற கோதாவில் வடக்கில் தாமரை மொட்டுஅடையாளத்தில் மகிந்தாவாதி பட்டாளம் இந்தவாரம் தரையிறங்கியுள்ளது. தாமரை மொட்டுக்குரிய பணியகங்களை திறந்து தமிழமக்கள் முன்னால் தமது அரசியல் கடையை பரப்பும் இந்த முகங்கள் முன்னரொரு முறை தமிழர்களுக்கு ரணில் சொன்ன மறப்போம் மன்னிப்போம் சுருதிக்கு ஒப்பாக கதை கூறியுள்ளனர். தமிழர்கள் கடந்தகால கசப்புகளை மறந்துவிட்டு தமக்கு வாய்ப்பொன்றை வழங்கவேண்டும் என மஹிந்தானந்த அளுத்கமகே சுசில் பிரேமஜயந்த சனத் நிசாந்த பெரேரா போன்ற முகங்கள் பவ்வியப்பட்டன. அதிலும் மஹிந்தானந்த அளுத்கமகே தனது தலை மகிந்தவைவிட மேலாக தமிழ் பேசிஅசத்தி விடாது கறுப்பு மஹிந்தவால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு வழங்க முடியும் என்ற பூச்சுற்றல்களை செய்தமை வேறுவிடயம்.

அதாவது யானை, பூனை, கை, தாமரைமொட்டு, லொட்டு லொசுக்கு என எந்த அரசியல் வஸ்தாதுகளாயினும், தெற்கிலிருந்துவந்தால் மறப்போம் மன்னிப்போம், தமிழ் மக்களுக்கு பழசை தொடர்ந்தும் பேசிப்பயனில்லை போன்ற கதைகள்தான்.

இந்தவாரத்தின் ஆரம்பத்தில் வடக்குக்குச்சென்ற மகிந்தவின் புதல்வன் நாமல் முன்னாள் அரசியல் கைதிக்கு வீடு கொடுப்பது போன்ற கரட் துண்டுகளை நீட்டிய நிலையில் இப்போது சுசில் பிரேம ஜயந்த மஹிந்தானந்த போன்ற முகங்கள் களமிறங்கிவிட்டன. இவர்களின் களமிறக்கத்தின் ஊடாகதமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியகட்சிக்கும் இடையிலான உறவுகள் பேசுபொருளாக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யானையில் சவாரி செய்யும் வீட்டுக்காரரால் இல்லையென்றால் வீட்டுக்காரரால் போசித்து காப்பாற்றப்படும் யானையால், தமிழ் மக்களுக்கு அரசியல்தீர்வும் வராது அபிவிருத்தியும் கிட்டாது என மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்களால் கிளிநொச்சியில் ஏகடியம் பேச முடிகிறது.

இனியென்ன மகிந்தமுகாம் பட்டாளம் கொழும்பு திரும்ப அவர்களுக்கு சளைக்காத வகையில் யானைக்கூட்டத்தின் முகங்களும் வடபுலத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் அனுசரணையுடன் அதகளப்படக்கூடும். ஆனால் இந்தமுறை அவ்வாறான அதகளத்தில் ஒரு சிக்கல் இருக்கக்கூடும்.

ஏனெனில் கடந்த 2015இல் இடம்பெற்ற சிறிலங்காவின் முதன்மைத் தலையாரிக்குரிய தேர்தல்களத்தில் மைத்திரி-ரணில் தரப்புக்கு எந்த நிபந்தைகளையும் விதிக்காமல் ஆதரித்த கூட்டமைப்பு அதன்பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதே தாமே எனப்பெருமை பேசியது.

ஆனால் இப்போது நிலைமை மாறி எதிர்மறை நிலையை அது எதிர்கொள்கின்றது. இதனால் நல்லாட்சி தம்மை ஏமாற்றி விட்டதான மாற்றுப்பல்லவியை கூட்டமைப்பு தொட ஆரம்பித்துள்ளது.

விதிவிலக்காக கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகப்பிரிவை தரமுயர்த்திய பெருமையை கூட்டமைப்பு சொல்ல முனைந்தாலும் கல்முனைத்தமிழ்ப்பிரிவு பிரதேச செயலகத்துக்காக நியமிக்கபட்ட நிரந்தரகணக்காளர் என்ற விடயம் கூட முழுமையான சாதனையாக மாறவில்லை. நிரந்தரக்கணக்காளர் நியமிக்கப்பட்டார் என்ற செய்தி கூறப்பட்டாலும் இந்தவிடயம் சுபமாக முடியவில்லை.

ஏனென்றால், கணக்காளரை நியமித்துவிட்டால் மட்டும் கல்முனை தமிழ்ப்பிரிவு தரமுயராது மாறாக அதற்கு நிதிஒதுக்கப்படவேண்டும். ஆனால் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏற்கனவே ஒப்பேற்றப்பட்டுவிட்டதால் இனிமேல் இதற்குரிய நிதிஒதுக்கீடு செய்யப்படவேண்டுமானால் அதற்குரிய விசேடமான ஒதுக்கீட்டுத்தொகைக்குரிய அனுமதியை நாடாளுமன்றத்தில் பெறவேண்டும். ஆனால் இனிமேல் இது சாத்தியமா?

ஏனெனில் தமிழ் முஸ்லிம் தரப்புகளை கையாளுவதில் கழுவிய மீனில் நழுவிய மீனாக ரணில்தரப்பு இருக்கிறது அதனால் கல்முனைக்குரிய ஒரு விசேடமான ஒதுக்கீட்டுத்தொகையை ஒதுக்க நாடாளுமன்றத்தில் நகருமா? இதற்கும் துல்லிய விடை தெரியவில்லை.

இந்தநிலையில் எதிர்வரும் தேர்தல் களத்தை எதிர்கொள்வதற்கான புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக யானைகளுக்குள் நிலவும் பிச்சல் பிடுங்கல்கள் தீர்க்கப்படக்கூடும். ஏனெனில் இந்தவிடயத்தில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற யானைகளின் செயற்குழுவில் இருவேறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தால் செயற்குழுக்கூட்டத்தின் முடிவு கசாமுசாவாகியது.

இந்த புதியகூட்டணிக்குரிய உத்தேசயாப்பின்படி அந்தக்கூட்டணிக்குரிய தலைவர்பதவி, ஐ.தே.கவுக்கும் பொதுச்செயலாளர் பதவிகூட்டணிக்கட்சிக்கு வழங்கப்பட திட்டமிடப்பட்டது.

ஆனால் புதிய கூட்டணியின் அதிகாரம் ஐ.தே.க வசமே இருக்க வேண்டுமென அதன் உறுப்பினர்கள் செயற்குழுவில் போர்க்கொடிஉயர்த்தியதால் கசாமுசா வலுவடைந்தது.

ஆனால் இவையாவும் தெற்கின் உள்ளக கசாமுசாக்கள் மட்டுமே! எனினும் தமிழர்களைக் கையாளும்விடயத்தில் மட்டும் ரணிலோ மகிந்தவோ மைத்திரியோ மறப்போம் மன்னிப்போம் கதைகள்தான்.

இதையும் தவறாமல் படிங்க
அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!