காஷ்மீர் Blitzkrieg ! ஈழத்தமிழர்களுக்குஎன்ன செய்தி? தகிக்குமா? தணியுமா?

  • Prem
  • August 05, 2019
141shares

இலங்கைத்தீவின் பெரியண்ணனான இந்தியா டெல்லியில் உள்ள தனது சன்சத் பவனில் (நாடாளுமன்ற வளாகம்) இருந்து இன்று வெளிப்படுத்திய கடும்போக்கான ஒரு அதிரடிக்கும் அயல்கரையில் உள்ள சின்னத்தம்பி வீட்டுக்கும் இடையில் நேரடித்தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் சிலவேளைகளில் சின்னத்தம்பியின் கோட்டே சிறிஜயவர்த்தனபுர வளாகத்தில் இருந்து மாதனமுத்தா பாணியில் சிந்திக்கக்கூடிய சிங்களக்கடும் போக்காளர்களுக்கு இது ஒரு உத்வேகத்தை வழங்கக்கூடும்.

ஏனெனில் 2009 க்குப்பின்னர் இலங்கையில் தமிழர்களுக்கு என்னதான் பிரச்சனை? அந்தத்தீவில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் இல்லாததால் அவர்களுக்கு அரசியல்தீர்வு எதற்கு?

அட அரசியல் தீர்வைவிடுங்கள்? இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தத்தால் உருவான 13 ஆம் திருத்தம் கூட எதற்கு என கூக்குரல் இடுபவர்களின் கடும்போக்கு வாய்களுக்கு இன்று இந்தியாவிலும் உலகஅரங்கிலும் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய காஷ்மீர் பிரச்சனை மெல்லுவதற்கு கிடைத்த அவலாக மாறலாம்.

இந்தியாவின் சுதந்திரதினம் எதிர்வரும் 15 திகதி வரவுள்ள நிலையில் ஏறக்குறைய 10 நாட்களுக்குமுன்னர் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் அரசியல்உரிமைமீது மிகப்பெரிய பிளிற்ஸ்கிறிக் (Blitzkrieg) ரக மின்னலடித்தாக்குதலை டெல்லி நடத்தியுள்ளது.

டெல்லியின் இந்த மின்னலடி ஊடாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை சிறப்புத்தகுதி நிலையை வழங்கிய இந்தியஅரசியல் அமைப்பில் உள்ள சில சட்டப்பிரிவுகள் மீளெடுக்கப்படும் வகையிலான கோர்வை நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. மாநிலங்களவையில் இந்த நகர்வை எதிர்த்து கடும்அமளிகளை செய்தாலும் டெல்லி இதனை செய்துள்ளது.

இந்த நகர்வின் அதனடிப்படையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை தரும் அரசமைப்புச்ட்டத்தின் பிரிவு 370 ஐ நீக்குவதற்கான பிரேரணை! அந்தமாநிலத்துக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றுவதற்கான பிரேரணை! ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் அரசியலமைப்பின் 35 பிரிவைநீக்குவதற்கான பிரேரணை! அந்த மாநிலத்தை இரண்டாகப்பிரித்து ஜம்மு காஷ்மீர் என்ற ஒரு ஒன்றியபிரதேசமாகவும்> லடாக் என்ற இன்னொரு பிரதேசமாகவும் உடைப்பதற்குரிய பிரேரணை! அடுத்தடுத்து மின்னலடிப்பு பிரேரணைகள் வந்தன.

இந்த மின்னலடிப்புகளின் இறுதியில் இன்று மாலை இந்தப்பிரேரணைகள் யாவும் பேஷாக மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டன.

அந்தவகையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமைகளைப் பறிக்கும் வகையில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த உத்தரவு மற்றும் காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப்பிரித்து இரண்டு ஒன்றிய (யூனியன் )பிரதேசங்களாக மாற்றுவதற்கான பிரேரணை ஆகியன நிறைவேற்றப்பட்டன. (ஆதரவாக 125 வாக்குகள் எதிராக 61 வாக்கள்)

இந்தநகர்வுகளை செய்வதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரில் இந்தியா தனது துருப்புக்களைக் அதீதமாக குவித்ததும் காஷ்மீரின் முக்கியமான அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலில்வைத்ததும மககளவையில் காஷ்மீர் உறுப்பினர்கள் அமளிகளை செய்ததும் இதற்குரிய எதிர்வினைகள்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி உட்பட்ட தலைவர்கள் இன்றை நாளை இந்திய ஜனநாயகத்தின் கரிநாளாக அடையாளப்படுத்தியுள்ளனர்.

இன்று வெளிப்பட்ட இந்தகடும்போக்கான அதிரடிகள் எதிர்வரும் நாட்களில் மிகப்பெரிய இரசாயனத் தாக்கங்களையும் மாநிலங்களுக்கு இடையிலான கூட்டாட்சித்தத்துவத்திலும் பெரும்தாக்கத்தை செலுத்தப்போவது திண்ணம்.

இதற்கும் அப்பால் இந்தநிலைமை அணுவாயுதசகோதர எதிரிநாடுகளான இந்தியாவையும் பாகிஸ்தானையும் காஷ்மீரை மையப்படுத்தி பெரும் கொதிநிலையில் வைக்கப்போகின்றது

இதனடிப்படையில் இந்தியா காஷ்மீர் வி;டயத்தில் பெரும் ஆபத்தான ஆட்டத்தை ஆடுவதாக எச்சரித்துள்ள பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர்மக்களுக்கு தொடர்ந்தும் அரசியல் ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் ஆதரவு தெரிவிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசுஎடுத்த இந்த அதிரடியின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீர்மாநிலம் இரண்டாகப்பிரிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியன இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாக அதாவது யூனியன் பிரதேசங்களாகப் போகின்றன.

காஷ்மீரின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான எதிர்வினையாக இருந்தாலும் இந்தியா இவ்வாறு அதிரடியாக அவசரமாக நகர்ந்தமைக்கு அதன்தரப்பில் ஒரு காரணம் இருக்கக்கூடும்.

ஏனெனில் அமெரிக்கஅரசதலைவர் டொனால்ட் ரம்ப் என்ற ஒரு கருவியுடன் காஷ்மீர் பிரச்சனையில் கொஞ்சம் அனுசரணைக் குடைச்சலை வழங்க இம்ரான்கான் மேற்பார்த்து இஸ்லாமாபாத் வியூகம் அமைத்தது.

இந்த வியூகத்தை கூட்டிக்கழித்துப் பார்த்துத்தான் டெல்லி இந்த ஆபத்தான ஆட்டத்தை கொஞ்சம் அவசரமாக நடத்தியிருக்கக்கூடும்.

ஒருவேளை காஷ்மீர் மீதான இந்த செயற்திட்டத்தை திட்டமிட்டது போல பாஜக நகர்த்தினால் எதிர்காலத்தில் தமிழகம்கூட இரண்டு ஒன்றியப்பிரதேசங்களாக உடைக்கப்படாது என்பதற்கு யாதொரு உத்தரவாதமும் இல்லை.

காஷ்மீரின் இந்த எதிர்வினை அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தைச் செலுத்தக்கூடும் என்றஅச்சத்தில் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சரி இந்திய அளவிலும் உலகஅளவிலும் பெரும் பேசுபொருளாக மாறிய இந்தவிடயத்தின் வரலாற்றுப்பார்வையின் மீதான பார்வையைச்செலுத்தலாம்.

1947 இல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்காலத்தில் ஜம்மு காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அதன் இறுதி மகாராஜாவான ராஜா ஹரி சிங் விரும்பிய போதிலும் ஒரு கட்டத்தில் சில நிபந்தனைகளுக்கு பின்னர் இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர்; மாநிலத்தை இணைக்க உடன்பாட்டார்.

இதன்பின்னர் இந்திய அரசியலமைப்புசட்டத்தில்> 370 ஆம் பிரிவு உருவாக்கபட்டு ஜம்முகாஷ்மீருக்கு சிறப்புத்தகுதி நிலை வழங்கப்பட்டது. இந்த 370 பிரிவானது, டெல்லிக்கும், ஜம்மு காஷ்மீருக்குமான உறவின் ஒரு எல்லைக்கோடாக பார்க்கப்பட்டது

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 இன் படி> இந்தியாவின் பாதுகாப்பு> வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பாடலை தவிர ஏனைய விடயங்களில் ஜம்மு காஷ்மீருக்கு என ஒரு சட்டவாக்கம் செய்யப்படவேண்டுமானால், மத்திய அரசு ஜம்மு காஷ்மீரிடமிருந்து அதற்குரிய அனுமதியை பெற வேண்டும்.

இதேபோல ஏனைய மாநிலங்களை கலைப்பது போல ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப்பொறுத்தவரை அதனைக்கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத்தலைவருக்கு இல்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயம்.

இந்த நகர்வுகளின் அடிப்படையில் 1951 இல் அதற்கான சட்டமன்றம் கூட்டப்பட அனுமதியளிக்கபட்டது. இதற்குப்பின்னர் 1956 நவம்பரில் காஷ்மீருக்குரிய அரசியலமைப்பு வரையப்பட்டு மறுவருடமே அதற்குரிய சிறப்புத்தகுதி நிலை நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 35-ஏ காஷ்மீரிகளுக்கு சில சிறப்பு தகுதிகளை வழங்கியுள்ளது. 35-ஏயின் படி காஷ்மீர் மக்களே அதன் நிரந்தர குடிகளாக கருதப்படுகின்றனர். இதனால் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மக்கள் காஷ்மீரில் எந்தவொரு அசையா சொத்தையும் வாங்க முடியாது அதேபோல மாநில அரசின் நலத்திட்டங்களால் பயனடையவும் முடியாது.

இவ்வாறு எல்லாம் இருந்த சிறப்புத்தகுதிகள் இன்றைய தீர்மானங்கள் மூலம் அதிரடியால் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் அதிர்வுகள் இனிவரும் நாட்களிலும் தொடரப்போகிறது. அப்போது தான் இது உண்மையில் நெருப்பு ஆட்டமா? இல்லை தணியும் ஆட்டமா? என்பது தெரியவரும்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!