கரன்னாகொடவின் புதியகௌரவ பதவியும்! தமிழர்களுக்கு ஒருபோதும் வரமுடியாத நீதியும்!!

  • Prem
  • August 07, 2019
63shares

நீர் அடித்து நீர்விலகுமா? விலகாது என்பதாக ஒரு செய்தியை சொல்லிவிட்டு சிறிலங்காவின் முதன்மைத்தலையாரி மைத்திரி கம்போடியாவுக்கு பறந்துவிட்டார். கம்போடிய மன்னர் நோரோடாம் சிஹாமோனியின் அழைப்பில் இந்தப்பறப்பு இடம்பெற்றதாக மைத்திரியின் ஊடகப்பிரிவு கூறுகிறது

அவர் சொல்லிய அந்தச்செய்தி மூலம் சிறிலங்காவின் ஓய்வுப்பெற்றமுன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஒப் தி பிலீற் (Admiralof the Fleet )எனப்படும் கடலணியின் கௌரவ அட்மிரலாகியுள்ளார். இது நடைமுறைப்பதவியல்ல ஏனெனில் அட்மிரல் வசந்தகரன்னாகொட ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார். அதனால் இதனை Honoraryrank எனப்படும் படைத்துறையின் உச்ச மதிப்பளிப்பு வடிமாக கொழும்பு அதிகாரமையம் வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா படைத்துறையின் ஓய்வுபெற்ற முகங்களான அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கும் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலகவுக்கும் இந்த அடையாள கௌரவ பதவியுயர்வு கடந்த 5 ஆந்திகதி மைத்திரியால் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் “இத்தால் சகலரும் அறியவேண்டியது யாதெனில்… பாணியில் அதுகுறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வந்தது.

ஆனால் தற்போது Admiralof the Fleet ஆக மாறியுள்ள அட்மிரல் வசந்தகரன்னாகொடவுக்கு வழங்கப்பட்ட இந்த மதிப்பு தமிழ் மக்களின் உதிரப்பழிமீதான பொறுப்புக்கூறல் கடப்பாட்டுக்கு எதிரான ஒரு செய்தியாக கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் அட்மிரல் வசந்தகரன்னாகொட கடற்படைத்தளபதியாக இருந்த காலத்தில்தான் கொழும்பு மற்றும் அதன் சுற்றாடல் பகுதிகளில் 2008ஆம் ஆண்டளவில் 5 மாணவர்கள் 11 தமிழ், முஸ்லீம்இளைஞர்கள் சிறிலங்கா கடற்படையில் இருந்து சில வக்கிரம்மிகுந்த சூத்ரதாரிகளால் வெள்ளை வாகனங்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர். அவலமும் குருரமும் நிறைந்த இந்த விடயத்தில் அப்போதைய கடற்படைத்தளபதி என்ற வகையில் வசந்தகரன்னாகொட மீது பலமான சுட்டுவிரல் நீட்டப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 2015இல் நல்லாட்சி என்ற ஒரு தில்லாலங்கடி அடையாளத்தில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றபோது இவ்வாறான உதிரப்பழிகளுக்கு எல்லாம் நீதி கிட்டும் என்ற வகையில் சில போக்குக்காட்டல்கள் இடம்பெற்றன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை வசந்த கரன்னாகொட கைதுசெய்யப்படுவார். உள்ளே தள்ளப்படுவார் என்பது போன்ற கதைகளும் ஊடக உலாவந்தன.

ஒருகட்டத்தில் சிறிலங்காவின் நான்காம் மாடியென வர்ணிக்கப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வைத்து இரண்டு தடவைகள் அவர் விசாரணையில் வறுத்து எடுக்கப்பட்டதாக செய்திகள் கூறப்பட்டன.

2005ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை வசந்த கரன்னாகொட கடற்படை தளபதியாக இருந்தபோது அவருக்கு கீழ் இயங்கிய இரகசிய கடற்படைப்பிரிவு ஒன்று தான் இவ்வாறான கடத்தல்கள் மற்றும் காணமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாக சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவுகூட நீதிமன்றத்திலும் அறிவித்திருந்தது.

கொழும்பு துறைமுகப்பகுதியிலும்> திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ரகசிய சித்திரவதை முகாம்களில் கடத்தப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டு கடுமையான உடல் துன்புறுத்தல்ளுக்கு உட்படுத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதாவது நாசகாரமுறைகளை பயன்படுத்தி கப்பம் பெறும் நடவடிக்கைகளில் தனக்குகீழ் உள்ள கடற்படையினர் ஈடுபட்டவிடயம் அப்போது தளபதியாக பணியாற்றிய வசந்த கரன்னாகொடவிற்கு தெரிந்திருந்தது. எனினும், அவர் அதனைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என நீதிமன்றத்தில் கிசுகிசுத்த சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுத்துறை வசந்த கரன்னாகொட இந்தவிடயத்தில் தலையிட்டிருந்தால் 11 இளைஞர்களின் உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம் எனவும் ஒப்புக்குச்சப்பாக அழுகாச்சி செய்தி கூறியது.

இதனடிப்படையில் வசந்தகரன்னாகொட கைதுசெய்யப்படுவார். இலங்கைத்தீவின் நீதித்துறையின் சுதந்திரத்தை தமிழர்களும் மனித உரிமைஆர்வலர்களும் இனிவரும் காலத்தில் மெச்சிக்கொள்வார்கள் என்ற ஆசை கொண்டவர்களின் நிலை ஏமாற்றமானது.

இப்போது அவ்வாறாக குற்றச்சுட்டுவிரல் நீட்டப்பட்ட முகத்துக்குத்தான் ஒய்வுக்குப்பின்னர் Admiralof the Fleet மதிப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் மீதான உதிரப்பழிக்கு பொறுப்புக்கூறவேண்டிய முன்னாள் ராணுவத்தளபதி சரத்பொன்சேகா எவ்வாறு முன்னர் பீல்ட் மார்சலாக அடையாளப்படுத்தப்பட்டு அழகுபார்க்கப்பட்டாரோ அதேபோல இப்போது வசந்த கரன்னாகொட Admiralof the Fleet ஆக அழகு பார்க்கப்படுகிறார்.

அதாவது இலங்கைத்தீவில் அரசியல் அதிகாரமற்ற> உதவியற்று கையறுநிலையில் உள்ள தமிழ்மக்களை ஒருபோதும் கொழும்பு பாதுகாக்கவும் போவதில்லை நீதியும் வழங்கப்படப்போவதில்லை என்ற செய்தி கூறப்பட்டுள்ளது.

2014 இறுதியில் நல்லாச்சிக்குரிய நாயகர் என்ற வகையில் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று கொலுவிருந்த அதேமைத்திரி இப்போது சற்றேறக்குறைய தனத பதவியின் இறுதிக்காலத்தில் இந்த நகர்வை செய்திருக்கிறார்.

இனியென்ற மைத்திரி வழங்கமறுத்த நீதியை புதிய தேவனான உருவாகக்கூடிய சஜித்பிரேமதாசா வழங்குவார் என்ற உசுப்பேற்றல்களுடன் இன்னொரு முறையும் சூடு கண்ட தமிழ்வாக்காளர்களை சஜித் என்ற அடுப்பங்கரையை நாடவைக்கக்கூடும்.

ஆனால் எந்த தேவன்கள் வந்தாலும் எந்த அசுரர்கள் வந்தாலும் தமிழர்களுக்குரிய சட்டமும் நீதியும் பக்கச்சார்பாகவேஇயங்கிக்கொள்ளும்

தமிழர்கள் மீது பாரிய குற்றங்களைச்செய்யும்அதிகாரிஒருவர் சிங்கள அடையாளத்தை கொண்டிருந்தால் அவர் பாதுகாப்பையும் மதிப்பையும் பெறமுடியும். சிறிலங்காவின் Admiralof the Fleet கரன்னாகொட விடயத்தில் இதுதான் நிருபிக்கபட்டுள்ளது.

சட்டத்தின் முன்னர் அனைவரும் சமன் என்றார் அமெரிக்கத்தலைவர் தியோடோர் ருஸ்வெல்த். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே சிறிலங்காவில் ரணில் போன்ற அரசியல் முகங்கள் வக்கணையாக பேசிக்கொள்ளும் Rule of law எனப்படும் சட்டத்தின்ஆட்சி கோட்பாட்டில் தலையான விடயமாகும்.

அதாவது சட்டத்தின் முன்னர் அனைவரும் சமன் என்ற இந்தக்கருத்தியலானது சட்டம் அனைவருக்கும் வித்தியாசம் இன்றி சமமாக பிரயோகிக்கப்படுவதை உறுதிசெய்கின்றது.

இதன் அடிப்படையில் மகாகனம் பொருந்தியவர்கள்- சாமானியர்கள் என்ற வேறுபாடின்றி இல்லையென்றால் பணம் படைத்தவர்கள் பஞ்சப்பராரிகள் எனவோ அல்லது அதிகாரம் படைத்தவர்கள் அதிகாரமற்றவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் சட்டம் பிரயோகிக்கப்படவேண்டும்

ஆனால் இந்த கருத்தியலை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசின் முதன்மைத்தலையாரி மைத்திரி போன்ற சக்திவாய்ந்த முகங்கள் முதல் சட்டத்தின் ஆட்சியே தமக்கு முக்கியம் என வக்கணை பேசும் ரணில் போன்ற அரசியல் முகங்கள்வரை மிக கடுமையாக துஷ்பிரயோகம் செய்தே வருகின்றன.

இதனால் தான் இலங்கைத்தீவில் சட்டத்தின் ஆட்சி கருத்தியல் Admiralof the Fleet கரன்னாகொடவிடயத்திலும் மகிந்த கோட்டபாய போன்ற ராஜபக்ஷ முகங்கள் உட்பட்ட பல அதிகாரம்மிக்க முகங்களின் விடயத்தில் தொடர்ந்தும் பிழைத்துவருகிறது.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

சற்றுமுன் தேசிய பட்டியல் வேட்பாளரை அறிவித்தார் கஜேந்திரகுமார்!

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

எவரும் அழுத்தம் தரவில்லை - சசிகலா திடீர் பல்டி

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்

ஸ்ரீலங்காவில் மீண்டும் ஊரடங்கா? வெளிவந்த தகவல்