மகிந்த தரப்பு களமிறக்கவுள்ள அந்த மனிதன் யார்? சாணக்யனா? சண்டைக்காரனா?

124shares

பாரசீக- அரேபிய - இந்திய இலக்கியங்கள் மற்றும் நாட்டார் கதைகளின் கலவையாக இருப்பது ஆயிரத்தோரு இரவுகள் கதைகளின் தொகுப்பு. அந்தத்தொகுப்பில் அலிபாபாவும் நாற்பது திருடர்கள் என்ற கதையும் வரும் இந்தக்கதை தமிழ்மொழிபெயர்ப்பில் நூல்வடிவிலும் திரைப்படங்களாகவும் உள்ளன. இதில் சென்னை மொடர்ன் தியேட்டர்ஸின் தயாரிப்பில் எம்ஜிஆர் நடிப்பில் 1956-; வெளியாகி வெற்றிபெற்ற அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின் ஊடாக ஒரு கிட்டியிருந்த பிரபலமான திறவுச்சொல் அண்டா கா கசம் அபூகா குகும் திறந்திடு சீசேம்! ஆகமொத்தம் திறந்திடு சீசேம் என்ற இந்த கடவு திருடர்களின் குகையை திறக்கும் ரகசியக்குறியிடாக இருந்தது.

இந்த, திறந்திடு சீசேம்! பின்னணியைப்போல இலங்கைத்தீவின் சிறிலங்காவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் அரசதலைவர் தேர்தலுக்குரிய வேட்பாளர்களின் திறந்திடு சீசேம்! காலம் நெருங்கிவருகிறது. அந்தவகையில் இந்தவார இறுதிமுதல் இவ்வாறான திறந்திடு சீசேம்களை காணமுடியும். பொதுஜனப்பெரமுன எனப்படும் தாமரைமொட்டு கூறியது கூறியது போலவே அந்தத்தரப்பின் வேட்பாளர் யார் என்பதை அறிவதற்குரிய இறுதி திறந்திடு சீசேம் சொல்லப்பட்டால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 11ம் திகதி அந்தமுகம் யார் என்பதை செய்திகள் வாயிலாக நீங்களும்அறியமுடியும்.

ஏனெனில் தமதுதரப்பின்; வேட்பாளர் ஓகஸ்ட் 11 ஆந்திகதி அறிவிக்கபடுவார் என தாமரை மொட்டு கூறியிருக்கிறதது. இதேபோல ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியும் தமது தரப்பின் வேட்பாளர் 18ந் திகதி அறிமுகம் செய்யப்படுவார் என அறிவித்திருக்கிறது. ஆனால் ஒப்பீட்டு ரீதியில் இவ்வாறான மற்றும் பலர் நடிக்கும் பாணி முகங்கள் சுரத்தை ஏற்படுத்தப்போவதில்லை. யானை மற்றும் தாமரைமொட்டுக்குத்தான் பிரதான போட்டி அமையக்கூடும்.

இதனடிப்படையில் ஞாயிறன்று முதலாவது மாநாடு ஒன்றை நடத்தவுள்ள தாமரைமொட்டு அன்றுதான், அதிகாரபூர்வமாக கட்சியின்தலைவராக மஹிந்தவை நியமிக்கவுள்ளது. அவ்வாறாக தாமரைமொட்டுக்குத் தலையாக நியமிக்கபடும் மகிந்ததான் தமது தரப்பின் வேட்பாளரை அறிவிக்கவுள்ளார்.

இவ்வாறு எல்லாம் நடந்தால், இந்தவாரஇறுதியில் மகிந்தஅணி என்ற கீரைக்கடையில் இருந்து களமிறக்கப்படக்கூடியமுகத்தை அறியக்கூடியதாக இருக்கும். ஆயினும் மகிந்த கீரைக்கடையின் எதிர்கடையான யானைக்கடையில் இருந்துகளம் இறக்கப்படக்கூடிய முகம் குறித்த அசுமாத்தியங்கள் இதுவரைதெரியவில்லை.

தமது தரப்பின் வேட்பாளரைஅறிவிக்கும் வகையில் இறுதியான முடிவுஒன்றை எடுக்கமுடியாமல் ஐக்கியதேசியக்கட்சி தடுமாறுவது ஊரறிந்தவிடயம்.

ஆனால் அரசதலைவர் வேட்பாளரை மையப்படுத்திய இந்தத்தாமதத்துக்குரிய சப்பைக்கட்டல்கள் மட்டும் வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியை உருவாக்க இந்த மாதத்தில் சுபநேரம் இல்லாததால் அடுத்த மாதம் வரை அதனை பிற்போட்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா போன்றவர்களின் சப்பைக்கட்டுக்காரணங்கள் வந்துள்ளன.

தமது தரப்பில் உள்ள இழுபறியை சில ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்துக்காட்ட முயற்சிப்பதாக விசனப்பட்ட அவர், வேட்பாளர் தெரிவில் காணப்படும் அனைத்து முரண்பாடுகளையும் களைந்து சிறந்த ஒரு வேட்பாளரை தமதுதரப்பு நியமிக்கும் எனவும்கூறினார். யானைகள் மேற்பார்த்தஅணியில் இருந்து சஜித்பிரேமதாச அல்லது கருஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என்ற ஊகங்கள் உள்ளன.

இதில் சஜித் களம் இறக்கப்படவேண்டுமென்ற குரல்கள்தீவிரமடைந்தாலும் யானைகளின் உள்ள சில உச்சமட்டமுகங்கள் சஜித்பிரேமதாச குறித்த முடிவில் உச்சுக்கொட்டுவதால் இழுபறிதொடர்கின்றது. குறிப்பாக சஜித் குறித்து ரவி கருணாநாயக்க போன்ற முகங்கள் கடுகடு காட்டுகின்றன.

பொதுவாகவே யானைகளின் உச்சமுகங்கள் சஜித்தைவிட கரு ஜயசூரியவையே விரும்புகின்றன. யானைகளின் தலைமைத்துவத்துக்கு சஜித் பிரேமதாஸ குறிவைப்பதால் அவரை, அரசதலைவராக கொலுவிருத்தினால், அடுத்ததாக அவர் கட்சியின் தலைமைத்துவத்தைத்தான் நிச்சயமாக கைப்பற்ற முயல்வார் என்பதை அறியாத அரசியல்“பபா” அல்ல ரணில்.

இதற்கும் அப்பால் உள்ள இன்னொரு மேட்டுக்குடி யதார்த்ததைக் கூறினால் சஜித்தை அரச தலைவராக்கி அழகு பார்க்க ரணில் விரும்பவே மாட்டார். இதனால் யானைகளின் உச்சமுகங்களின் தெரிவாக கருஜயசூரியாவே இருக்கலாம். ஆனால் ஐதேகவில் உள்ள இரண்டாம்மட்டத்தலைகளுக்கும் சாமானிய சிங்கள மக்களுக்கும் சஜித் பிரேமதாஸ மீது தான் ஈர்ப்புஅதிகமென்பதும் வெளிப்படையான விடயம்.

ஐ.தே.க வின் வரலாற்றில் ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் காலத்திலும் இவ்வாறு ஒரு நிலை 1988இல் ஏற்பட்டிருந்தது. ஜே.ஆர் தனக்கு அடுத்து ஜனாதிபதி பொருத்தமான வேட்பாளராக காமினி திஸநாயக்கவையே நோக்கினார். ஆனால் கட்சிக்குள் செல்வாக்குப் பிடியை வைத்திருந்த பிரேமதாஸவே இறுதியில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றார். இதே ஐ.தேகவில் அன்று பிரேமதாச இருந்தார். இன்று அவருக்குப்பதிலாக ரணிலுக்கு குடைச்சல் கொடுக்கும் அவரது அரசியல் வாரிசாக சஜித் உருவாகியுள்ளார்.

சஜித்தைப்பொறுத்தவரை தனக்குப்பின்னால் உள்ள ஆதரவுமுகங்களின் நகர்வு ஒருகட்டத்தில் கட்சியில் கிளர்ச்சியாக உருவானால் அந்த கிளர்ச்சியின் முடிவு அநேகமாக தன்னைத்தான் இறுதியில் வேட்பாளராக நிறுத்தும் வகையில் முடிவடையும் என திடமாக நம்புகிறார்

இதேசமகாலத்தில் மறுபுறத்தே மகிந்தஅணியும் தனது நகர்வுகளை தீவிரப்படுத்துகிறது. அதன் அடிப்படையில் தாமரை மொட்டின் விசேட ஊடக மாநாடு ஒன்று கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் பங்கெடுத்த மெதமுலன குடும்பத்தின் முக்கிய அடையாளமும் சிறிலங்காபொதுஜனபெரமுனவின் தேசியஅமைப்பாளருமான பசில்ராஜபக்ஷ சிலவிடயங்களைச் சொல்லியிருக்கிறார்.

குறிப்பாக எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்தவுக்கே அரசதலைவர் வேட்பாளரைத்தீர்மானிக்கும் அதிகாரம்உள்ளதாக குறிப்பிட்டார். அத்துடன் கோட்டபாய கடுமையானவர் இல்லை என்பதால்; அவரைக்கண்டு அச்சமடையத்தேவையில்லை எனவும் கோத்தா தனது அமெரிக்ககுடியுரிமையை மீளெடுத்ததான சங்கதியை கூறியிருப்பதையும் அவதானிக்கவேண்டும்.

அதாவது தமது தரப்பில் கோத்தாகளம் இறக்கப்படும் சாத்தியத்தை பசில் சூசகமாக சொல்லியதாக இதனைஎடுத்துக்கொள்ளலாம். ஆகமொத்தம்; சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தல்களத் திருவிழா பரபரப்புகளின் அதகளம் ஆரம்பித்துவிட்டதை நிச்சயமாகவே ஆதாரத்துடன் சொல்லலாம். இதில் இந்தவார இறுதியில் அண்டா கா ஹசம் அபூகா குகும்! கோத்தபாயவுக்கு சீசேம் திறந்திடக்கூடும்!

இதையும் தவறாமல் படிங்க