சிங்கள பௌத்தவாக்குவங்கி வியூகத்தில் கோத்தபாயா!

  • Prem
  • August 12, 2019
56shares

ஒன்றுக்கு ஒன்று வெளிப்படையான காரணங்கள் இல்லாத சில நிகழ்வுகள் தற்செயலான நிகழ்வுகளாகி விடுகின்றன. இதனை ஆங்கிலத்தில் Co- incidence எனச்சொல்வார்கள்.

அதுபோல சிறிலங்காவின் ஜனாதிபதி மந்தரயவுக்குரிய அரசதலைவர் போட்டிக்களத்தின் முதலாவது வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச பகிரங்கப்பட்ட நகர்வுக்கும் இலங்கைத்தீவின் காலநிலைக்கும் நேரடியான தொடர்பு ஏதும்இல்லை. ஆனால் Co- incidence ஆக இன்று இலங்கையில் கடும் காற்று மழை இடிமின்னல் கடற்கொந்தளிப்பு என ஒரு நிலைமை இருந்தது.

இந்த நிலைமையானது தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் மாயாஜால மன்னனாக இருந்த விட்டலாச்சாரியாவை நினைவூட்டியது. விட்டாலாச்சரியா படங்களிலும் இவ்வாறான காட்சிகள் இருக்கும். மந்திரவாதியின் உச்சாடனப்படுத்தலுடன் அமானுசய சக்திவெளிவரும் போது அந்த இடத்தில் சூறைக்காற்று ஒளிபளிரடிப்புகள் என அதகளங்கள் எல்லாம் வரும்.

ஆகமொத்தம், சிறிலங்கா பொது ஜனபெரமுனவின் அதிகாரபூர்வ வேட்பாளராக கோத்தபாய நியமனம்பெற்றநகர்வின் பின்னணியில் இலங்கைத்தீவை சிப்பிலியாட்டிய கடும் காற்று இடிமின்னல் ஆகியன தற்செயல் நிகழ்வாக அதாவது Co- incidence ஆக இருக்கக்கூடும். ஆனால் நேற்று கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் எதிர்பார்த்தது போலவே அதற்குரிய எதிர்வினைகள் வருந்தன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய தாமரைமொட்டில் இருந்து கோட்டபாய களமிறக்கப்பட்ட நகர்வு முற்கூட்டியே எதிர்பார்க்கமுடியாத பெரும் ஆச்சரியமான ஒரு நகர்வு அல்ல. அவர்தான் களம் இறக்கப்படுவார் என்பது ஏற்கனவே பரவலாக ஊகிக்கபட்ட ஒரு விடயம். (கடந்த பத்தியிலும் இது குறிப்பிடப்பட்டிருந்தது)

அந்தவகையில் தனது அண்ணன் மகிந்தவிடமிருந்து வேட்பாளர் என்ற செய்தியைபெற்ற கோத்தபாய இன்று அவருடனே அநுராதபுர ருவன்வெலி மஹாவிகாரைக்கு சென்று அதன் முன்றலில் ஆசிபெற்றிருக்கிறார்.

சிங்களபௌத்தர்களின் மகாதூபமாக இருக்கும் இந்த ருவன்வெலிசாய முன்;றலுக்கு உடனடியாகவே அவர் சென்றதில் தமிழர்களுக்கு ஒரு பிரத்தியேகமான செய்தி இருக்கவும் கூடும்

இந்த செய்தி நேற்று பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் வைத்து தமிழருக்காக கோட்டாபய சொன்ன செய்தியை விட இந்தச்செய்தி முக்கியமானது.

ஏனெனில் அனுராதபுரத்தில் இருந்து நாற்பது வருடகாலமாக இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான எல்லாளனைப் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனாக உருவாகிய துட்டகெமுனு நிர்மாணித்த ருவான்வெலிசாய தாதுகோபுர முன்றலுக்கு கோத்தா உடனடியாக சென்றுள்ளார். இது எதிர்வரும் தேர்தல்களத்தில்; தன்னை ஒரு சிங்கள பௌத்தகாவலனான அடையாளப்படுத்தவுள்ள அவரது வியூகத்தின் மிக முக்கியமான அடையாளம். எதிர்வரும் நாட்களில் இது அச்;சொட்டாக ஆதாரப்படக்கூடும்.

வடக்குத்தமிழர்கள் இதுவரை எதிர்நோக்கி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தான் நடவடிக்கை எடுப்பதாக கோத்தா கூறியிருக்கிறார்

இதேபோல 365 நாட்களும் அவதானத்துடன் இருக்கக்கூடிய தலைவர் ஒருவர் நாட்டுக்குத் தேவை. இதனால் கோத்தா தேவை என அவரது சகோதரர் மகிந்த செய்தி கூறியிருக்கிறார்.

இவ்வாறன செய்திகளை அவர்கள் சொன்னாலும் அவர்கள் இருவர் மீதும் தமிழர்களின் பெரு உதிரப்பழிக்குரிய பொறுப்புகள் கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கும் அப்பால்> கோட்டாவின் அரசதலைவர் பெருவிருப்பு வியூகத்தில் அவரது அரசியல் எதிர்ப்பாளர்கள் கடுமையான வினாக்களைத்தொடுத்துள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ஷவால், இலங்கைமக்களின் எதிர்ப்பார்ப்பை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனக்கூறும் ஜே.வி.பி ஆகிய மக்கள் விடுதலை முன்னணி இலங்கைத்தீவை மீண்டும் குடும்ப ஆட்சிக்குள் தள்ள வேண்டுமா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும் எனக்கூறுகிறது

இதேபோல தாமரைமொட்டு கோத்தா தமது யானைக்கு சவால் அல்ல எனக்கூறும் ரணிலின் வலதுகரத் தளபதியான அமைச்சர் ரவிகருணாநாயக்க கோத்தாவுக்கு சவாலாக சிங்களபௌத்த மக்களின் வாக்குகளைப்பெறக்கூடிய ஒருவரையே தமது தரப்பிலும் வேட்பாளராக களம்இறக்குவோம் எனச்சூரைக்கிறார்.

ஆனால் சஜித்தை புறம்தள்ளும் அவரைப்போன்ற ஐ.தே.க வின் உச்சமட்ட முகங்களால் அதன் அடிமட்டத்தொண்டர்களிடம் கொந்தளிப்பு உருவாக ஈரம்பித்திருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

இதற்கும் அப்பால் கோட்டாவை களமிறக்கியது பயங்கரம் என அச்சப்படும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, சிறிலங்கா சுதந்திரக்கட்சியாக இருந்தாலும் >தானாவது கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாவது? என எள்ளல்செய்து ராஜபக்சக்களின் மெதமுலனக் குடும்பத்தின் அதிகாரப்பேராசை குறித்தும் பிடிசாபம் கொடுத்தார்.

கூட்டிக்கழித்துப்பார்த்தால் கோட்டாவின் வருகை அதிர்வுகளையும் வியூகங்கள் குறித்த சில கணக்குகளையும் உருவாக்கியிருக்கிறது. ஒருவேளை சிறிலங்கா பொது ஜனபெரமுனவுடனான பேரங்கள் படியாமல் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் தனக்குரிய ஒருவேட்பாளரைக்களம் இறக்கினால் சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தலகளம்; ஐக்கியதேசியக்கட்சி, சுதந்திரக்கட்சி, பொதுஜனபெரமுன என மும்முனைப்போட்டியாக மாறக்கூடும். ஏனைய கட்சிகளில் இருந்து இறங்குபவர்கள் உதிரிகளே

இவ்வாறு ஒருமும்முனைப்போட்டிக்களம் உருவானால் இதில் எவ்வாறு தமிழ்பேசும் மக்கள் உட்பட்ட வாக்குவங்கிகளுக்குரிய வகிபாகம் இருக்கக்கூடும்.

பொதுவாகவே இலங்கைத்தீவின் வாக்குவங்கியின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைப்பார்த்தால் அந்த குறுக்குத்தோற்றம் இனமத தேசிய அடிப்படையில் தெளிவாகத்தெரியும். இந்த கட்டமைப்பின் பின்னணியில்தான் கட்சிசார்ந்த வாக்குவங்கியையும் நோக்கிக்கொள்ள வேண்டும். கட்சியின் ஆதரவுநிலை வாக்குவங்கியில் தாக்கத்தைச் செலுத்தினாலும் இனம்மதம்சார்ந்த இல்லையென்றால் இடம்சார்ந்த அதாவது புவியியல்சார் குடிப்பரம்பலுக்குரிய வாக்குவங்கி என்ற முக்கியவிடயம் இலங்கையில் இன்னமும் பலமான பேசுபொருள்தான்.

இதனால்தான் இவ்வாறு இருக்கக்கூடிய மையப்புள்ளியை தாண்டி தமிழ் இலங்கையின் வடமுனையில் ஒரு சிங்களமுகமோ அல்லது தென்கோடி மாத்தறையில் ஒரு தமிழ்முகமோ வெற்றிபெறுவதற்கு இருக்கக்கூடிய சவால் யதார்த்தமானது.

சரி, அவ்வாறாயின் 2015 அரசதலைவர் தேர்தலில் எவ்வாறு தமிழ்பேசும் வாக்கு வாங்கி மைத்திரி என்ற சிங்கள முகத்துக்கு வாக்குகளை வழங்கியது என்ற தர்க்க வினாவை நீங்கள் எழுப்பக்கூடும். உங்கள் வினாவில் யதார்த்தமும் உண்டு. நியாயமும் உண்டு.

சிங்கள பௌத்தவாக்குவங்கியை பொறுத்தவரை கட்சிரீதியில் இரண்டு கூறாக பிரிந்து நின்று அதில் எந்த ஒரு தரப்புக்கும் அறுதிப்பெரும்பான்மை வராத இடத்தில் மட்டும் தமிழ்பேசும் வாக்குவாங்கி அந்த இடத்தில் தாக்கத்தைச் செலுத்தலாம்.

மறுபுறத்தே ஒருவேளை சிங்களபௌத்த வாக்குவங்கி தேசியவாதத்தில் ஒன்றுபட்டு திரண்டு நின்றால் அந்த இடத்தில் வெற்றியைதீர்மானிப்பதில் தமிழ் பேசும் வாக்குவங்;கி இரண்டாம்பட்சமாக மாறக்கூடும். இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த வாக்குவங்கியை பொறுத்தவரை அதில் சற்றேறக்குறைய 75 வீதம் சிங்கள வாக்குகளுக்கு உரியது. அந்த 75 வீதத்தில் தோராயமாக 70 வீதம் பௌத்த வாக்குவங்கி.

இதனால்தான் இவ்வாறான வாக்குவங்கியை சுவிகரித்துக்கொள்ளும் அவாவுடன் அனுராதபுரத்தில் எல்லாளனைத்தோற்கடித்த துட்டகெமுனு நிர்மாணித்த ருவான்வெலிசாய விகாரை முன்றலில் கும்புடுபோட்ட கோத்தபாயவின் காட்சிதெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் பறிபோனது வேலை! பெற்ற பச்சிளம் குழந்தையை விற்ற கொடூரம்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி