13 ஆம் திருத்தம் நனைகிறதே என ராஜபக்சக்கள் அழும் கதை!

  • Prem
  • August 15, 2019
78shares

இலங்கைத்தீவில் உள்ள மதங்கள் மார்க்கங்களை பின்பற்றும் மாந்தர்களுக்கு சமகாலத்தில் எந்தளவுக்கு அவர்களுக்கு உரிய மத நம்பிக்கைச்சுதந்திரம் இருக்கக்கூடும்? தமிழர்களைக்கேட்டால் இதுகுறித்த துன்பியல் கதைகளை பக்கம் பக்கமாக சொல்வார்கள். ஆயினும் இது தொடர்பாக கள ஆய்வுகளுக்காக ஐ.நாவின் முக்கிய முகம் ஒன்று இலங்கையில் குதித்துள்ளது. இன்று 15 ஆந் திகதி முதல் சுமார் 12 நாட்களுக்கு இலங்கையில் முகாமிடவுள்ள ஐ.நா விசேட அறிக்கையாளர் அகமட் சஹீட் தனது 12 நாட்களுக்குரிய களஆய்வுகளில் இலங்கைத்தீவில் மதசுதந்திரத்துக்கான உரிமைகள் சமகாலத்தில் எவ்வாறு இருக்கின்றதென்பதை நாடிபிடித்து அறிந்துகொள்வார்.

இதனை ஜெனிவாவிலுள்ள ஐ.நா மனிதஉரிமை வட்டாரங்கள் கூறுகின்றன. அகமட் சஹீட் அங்கு இங்கு என எங்குமே செல்லவேண்டியதில்லை. கன்னியாபிள்ளையார் கோவிடிக்கு அல்லது முல்லைத்தீவு செம்மலை பிள்ளையார் கோவிலடிக்கு செல்லலாம்.

அதேபோல உயிர்த்தஞாயிறன்று தாக்கப்பட்ட தேவாலயங்கள் அதுவும் இல்லையென்றால் அந்த தாக்குலுக்குப்பின்னர் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாமிய மதவழிபாட்டு இடங்கள் மீது ஒரு கண்வைத்தால் இலங்கையின் சமகால மத நம்பிக்கைச்சுதந்திரங்களின் லட்சணம் தெரியக்கூடும்.

இதற்கு மறுபுறத்தே இலங்கைத்தீவின் ஒற்றையாட்சியில் ஒற்றைத்துருவமாக என்றென்றும் நின்;று மேலாண்மை புரிந்துவரும் பௌத்தம் மீது தமது அரசியல் சங்கற்ப்பங்களை செய்யும் முகங்களும் உன்னிப்பை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில் தமிழ்மன்னனான எல்லாளனை வென்ற களிப்புடன் துட்டகெமுனு கட்டிய அனுராதபுரத்தின் ருவான் வலிசாய மற்றும் அதக் சுற்றாடலில் 2 நாட்களுக்கு சுற்றித்திரிந்த ராஜபக்சர்களும் தமது அதிகாரவேட்கைக்கான புதியபயணத்தை தொடர்கின்றனர்.

இதேபோல நல்லைக்கந்தன் முன்னால் சிறிலங்காவின் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க உட்பட் படையக்குழாம் மேலங்கியற்று பவ்வியப்பட்டு நின்று பூசை புனஸ்காரங்களை செய்த காட்சிகளுக்கும் இடமிருக்கத்தான் செய்கிறது.

ஆகமொத்தம் இலங்கையில் நானாவித காட்சிப்படுத்தல்களுக்கு இடமிருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் இப்போது ஆடுநனைகிறதே என ஓநாய் அழுதபாணியில் தேர்தலை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தையும் மையப்படுத்தி தமிழர்களுக்காக ஒரு காட்சிப்படுத்தல் இடம்பெற்றுவருகிறது.

13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்ற தோரணையில் தற்போது சிங்கள அரசியல்முகங்கள் பேசிவருகின்றன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் மகிந்த கோட்டாபாய மற்றும் ஐ.தேகவில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க போன்றவர்கள் 13ஆவது திருத்தம் குறித்து பேசியுள்ளனர்.

13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, காவற்துறை அதிகாரங்களை தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என முல்லைத்தீவில் நேற்று முன்தினம் காமினி திசாநாயக்காகவின் வாரிசான நவீன் திஸாநாயக்க கூறியிருக்கிறார். யானை முகாமில் இருந்து நவீன்திஸாநாயக்க இதனைக்கூறமுன்னர் கடந்த மாதம் சுண்ணாகம் கந்தரோடையில் வைத்து ரணில்விக்கிரமசிங்க தமிழர்களுக்கு கூறிய செய்தியில் இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத்தீர்வு வழங்கப்படும் என்ற விடயம் இருந்தது.

யானைகளில் ரணில் இவ்வாறு கூறியநிலையில்; பொதுஜன பெரமுன என்ற தாமரை மொட்டில் இருந்து அரசதலைவர் போட்டிக்களத்துக்கு வேட்பாளராக குதித்த கோட்டபாயவும் அவரது சகோதரயோ மகிந்தவும் கூட 13 குறித்து பேசியுள்ளனர்.

தமது தரப்பு ஆட்சிக்கு வந்தால், 13 பிளஸ் என்ற திட்டத்தை வழங்குவதாக கடந்த வாரம் கூறிய மகிந்த தனது ஆட்சிக் காலத்தில், வடமாகாண சபைக்குப்போக்குவரத்துக் கட்டுப்பாடு, குற்றத்தடுப்பு தொடர்பான காவற்துறை அதிகாரங்களை வழங்க இருந்ததாகவும் ஆனால் அற்கிடையே தனது பதவிபோச்சே! என்றார்.

அவர் வழங்கிய இந்த மகிந்த சிந்தனையை அவருக்கு முன்னால் இருந்த வரதராஜபெருமாள் டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ்க்கட்சிகளின் தலைகளும் செவிமமடுத்திருந்தன.

ஆனால் வடமாகாண சபைக்கு காவற்துறை அதிகாரங்களை வழங்க இருந்தேன் என மகிந்த கூறுவது தமிழர்கள் புளகாங்கிதம் அடையும் வகையிலான கருத்து அல்ல. இது ஒரு சுத்துமாத்துக்கருத்து அதாவது காவற்துறை அதிகாரத்தை மாகாண அளவில் வழங்காமல் விழிப்புக்குழுப்பாணியில் அதனை சுருக்கி கவுண்டமணி செந்தில் வாழைப்பழ பகடி போல அதுதான் காவற்துறை அதிகாரம் என சொல்கிறார்கள்

ஆக மொத்தம் ஆடுநனைகிறதே என…. மன்னிக்கவும் 13 ஆம் திருத்தம் அழுகிறதே என சிங்களத்தின் தேர்தல் அரசியல் வாதிகள் அழுவது தெரிகிறது ஆனால் இன்று இன்னும் இரண்டு வருடங்களில், தமிழருக்கு தீர்வு என கதைசொல்லும் யானைப்பாகனும் ஆட்சிக்கு வந்தால் சேட்டின்லி 13 பிளஸ் எனப் பசப்பும் லோட்டஸ்மானும் முறையே தத்தமது பதவிக்காலத்தில் இவ்வாறான தீர்வுகளுக்காக என்ன செய்தனர்? முன்னவர் கூட்டமைப்பின் ஆதரவுடன் கடந்த நான்காண்டு காலத்தில் பதவியில் இருக்கிறார். பின்னவர் தனது ஒன்பது ஆண்டு காலஆட்சியில், வழங்காத ‘13 பிளசை இப்போது கரட்துண்டாக தமிழருக்கு காட்டுகிறார்.

ஆனால் கலியாணமே இல்லாமல் சீமந்தத்துக்கு வழிகாட்டுவது போல தமிழருக்குரிய அற்பதீர்வை வழங்ககூடிய பங்குகொண்ட இதே 13 ஆம்திருத்தத்தின் அடிப்படைத்தளத்தை நிராகரிக்கும் ராஜபக்சர்கள் இப்போது தேர்தல் கண்ணாமூச்சியாக 13 பிளஸ் குறித்து அவதானமாக பேசுகிறார்கள்.

ஏற்கனவே சட்டமாக்கபட்ட காணிஅதிகாரப்பகிர்வு இன்றுவரை நடைமுறைப்படுத்தாத நிலையில் இப்போது கூட காணி அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்கினால் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அது தடையாகிவிடுமென கோட்டபாய கடந்தவார இறுதியில் தில்லாலங்கடித்தனமாக பேசியிருப்பதையும் இங்கு நினைவூட்டிக்கொள்ளவேண்டும்.

எது எப்படியோ, தேர்தல் நெருங்கும் காலகட்டங்களில் எல்லாம் இவ்வாறு இனப்பிரச்சினைத் தீர்வுப்பசப்பல்களும், 13 பிளஸ்களின் தூசுதட்டல்களும் காணிகாவற்துறை அதி-காரங்கள்; தூசு தட்டப்படுவதும், தேர்தல் முடிவடைந்த பின்னர் உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பே என்ற செய்திகள் தமிழ்மக்களுக்கு சொல்லப்படுவதும் தமிழர்களுக்கு பரீட்சயப்பட்ட தந்திரங்கள்தான்.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்