விடாக்கண்டன் சஜித்!.. கொடாக்கண்டன் ரணில்!! 6 ஆந்திகதி முடிவு

  • Prem
  • September 02, 2019
121shares

சிறிலங்காவில் இருந்து அரசதலையாரி மைத்திரி பிரதம தலையாரி ரணில் ஆகிய தலைகள் வெளிநாடுகளுக்கு போவதும் வருவதும் அவ்வப்போது அவதானிக்கப்படும் ஒரு விடயம்.

ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இரண்டாம் திகதி மேற்கொண்ட மாலைதீவு பயணம் சற்று வித்தியாசமான ஒரு உற்றுநோக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பதை எதிர்வரும் 6 ஆந்திகதிவரை அடித்துச்சொல்லலாம்.

இது ரணிலின் பயணத்தை மையப்படுத்திய உற்றுநோக்கலோ அல்லது மாலைதீவின் முதன்மைத்தலையாரி இப்ராஹீம் மொஹமட்சோலியுடனான அவரது அதிகாரபூர்வ சோலிகளாகக்கூடிய இருதரப்பு உறவுகள், புதிய கூட்டாண்மை வாய்ப்புக்களுக்குரிய தேடல்கள் இல்லையென்றால் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்து பரிமாற்றங்கள் குறித்த அவதானமோ அல்ல.

இதற்கு மாறாக ரணில் தனது மாலைதீவுப்பயணத்தை முடிந்தபின்னர் அவரது தரப்பில் களமிறக்கப்படும் அரசதலைவர் வேட்பாளரை பெயரிடவுள்ளதாக அரசல் புரசலான கதைகள் வெளிவந்துள்ளன.

இதனால் ரணிலின் 3 நாட்களுக்குரிய மாலைதீவுப்பயணம் எப்போது முடிவடையும் 6ஆம் திகதி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு சஜித் பிரேமதாசாவின் தரப்பில் எகிறியிருக்கக்கூடும்.

ஆக மொத்தம் இதுவரை திறக்கப்படாமல் இருக்கும் ரணில்தரப்பின் வேட்பாளர் குறித்த பண்டோரா பெட்டி இந்தவாரத்தில் திறக்கபட்டு அதிலிருந்து வேட்பாளர் முகம் ஒன்று பகிரங்கப்படக்கூடுமெனவே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தமுகம் நிச்சயமாகவே சஜித்பிரேமதாசா தானா என்ற விடயத்தில் மட்டும் இதுவரை உத்தரவாதம் ஏதுமில்லை.

மாறாக ரணிலைத்தான் களமிறக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவேறு புதியஇடைச்செருகல் செய்திகள் வந்துவிட்டன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் ரணில் விக்கிரமசிங்கதான் கட்சியின் வேட்பாளர் என பேச்சுகள் எழுந்தபோது யானைகளின் பிரதேசத்தலைவர்கள் அதனை மறுதலித்து பிளிறியமையும் வேண்டாம் வேண்டாம் என தலைகளை அசைத்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எது எப்படியோ, சிறிலங்காவின் சமகாலத்தேர்தல் களத்தைப்பொறுத்தவரை தற்போது ரணிலின் ஐக்கியதேசியக்கட்சித்தரப்பும் மைத்திரியின் சிறிலங்கா சுதந்திரக்கட்சித்தரப்பும் தான் வேட்பாளர் விடயத்தில் வெவ்வேறு நிலை சவால்களை எதிர்கொண்டுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக்கட்சித்தரப்பை பொறுத்தவரை தாமரை மொட்டில் என்று கோட்டபாய களம் இறங்கினாரோ அன்றே சுதந்திரக்கட்சி முகாம் சோபை இழந்து விட்டது. அதன் பின்னர் எஸ்.பி.திசாநாயக்க டிலான் பெரேரா ஆகியோர் மொட்டுடன் தம்மை சங்கமித்துக்கொண்டதும் இன்னும் நிலைமை சிக்கலானது.

இதற்கும் அப்பால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற முகங்களான விஜித் விஜிதமுனிசொய்சா, லக்ஷமன் செனவிரத்ன, இந்திக பண்டார ஆகியவர்களும் மொட்டுக்கு ஆதரவளித்தனர்.

இவ்வாறாக சுதந்திரக்கட்சிகரங்கள் தாமரைமொட்டை பிடிக்கப்பிடிக்க விழிபிதுங்கிய மைத்திரிஅணி, அரசதலைவர் தேர்தல்களம் தொடர்பாக தமது தரப்பின் செயற்;திட்டங்களை பகிரங்கமாக்க முன்வந்தது.

இதற்கிடையே தமது கட்சியில் இருந்து விலகிதாமரை மொட்டு போன்ற ஏனைய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமதுதரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சித்தலைமை தீர்மானித்துள்ளதான வெருட்டல்களும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிடமிருந்து வந்திருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.

இவ்வாறான ஒரு நிலையில்தான் நாளை(03.09.19) இடம்பெறவுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் மைத்திரியால் அரசதலைவர் வேட்பாளர் குறித்த முடிவுகள் எடுக்கபடுமென இன்று கூறப்பட்டது.

ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் மைத்திரி என்ன வியுகங்களை வகுத்தாலும் தமது தரப்பில் கோட்டபாய ராஜபக்சதான் வேட்பாளர் அதில் எந்தவித மாற்றங்களும் இல்லை என தாமரை மொட்டு கூறியுள்ளது

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இதனை கூறிய மகிந்தாவாதியான கெஹலிய ரம்புக்வெல சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தமது தரப்பு பேச்சுக்களை நடத்தினாலும் மொட்டின் அதிகாரபூர்வ வேட்பாளர் கோத்தபாய என்பதில் எந்தவித மாற்றங்களும் இல்லை என்றார்.

எதுஎப்படியோ ஒப்பீட்டு ரீதியில் சிறிலங்காவின் அரசதலைவர் வேட்பாளரின் களமிறக்கத்தைப்பொறுத்த வரை ஐக்கிய தேசியக் கட்சி, நெருக்கடியை சந்தித்துவருகிறது தேர்தலுக்கு தோராயமான இன்னமும் இரண்டரை மாதங்கள் இருக்கும் போதிலும் யானையால் இதுவரை தனது வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை.

ஆயினும் ரணிலின் தலைமைக்கு மறைமுக சவால் விடுக்கும் வகையில் சஜித் பிரேமதாஸ, தனது களமிறக்கத்தில் தீவிரமாக இருக்கிறார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், அவரை ஆதரிக்கும் தோற்;றப்பாடு தெரிகிறது. ஆனால் யானைகளில் சஜித் ஆதரவு போக்கு தென்பட்டாலும் ரணில் இன்றுவரை சஜித்தின் திட்டத்தை முறியடிக்கும் குயுத்திகளிலும் ஈடுபடாமலும் இல்லை.

கட்சியை பொறுத்தவரையும் நாடளாவிய நிலையிலும் சஜித் தான் களமிறக்கபடவெண்டும் என்ற நிலைப்பர்டு இருந்தாலும் ரணில் மார்க் குயுத்தி தொடர்கிறது. அந்தவகையில் அவரே வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற இடைச்செருகல் கதைகள் இப்போதும் புதிதாக வலம் வருகின்றன.

ஆனால் இது ஒரு தற்கொலைக்கு சமனான முடிவு என்பதில் ஐயமில்லை. ஏனெனில் சஜித்தான் வேட்பாளர் என்ற கருத்து வலிந்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது ரணிலே நினைத்தாலும் அதற்கு மாற்றான யூ வடிவத் திருப்பத்தை எடுக்க முடியுமா என்பது தான் ஒரு முக்கியமான வினா.

இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்