சிறிலங்காவின் இன்றைய ஸ்பெஷலும்! லண்டன் பிரெக்ஸிற்றும் !!

  • Prem
  • September 10, 2019
44shares

அடாது மழைபெய்தாலும் விடாது நடத்தப்படும் நாடகம் போல உலக நாடாளுமன்றங்களின் தாய் என்ற வர்ணிப்புக்குரிய வெஸ்ற் மினிஸ்டர் வளாகத்தின் பிரெக்சிற் நாடகம் நேற்றைய நள்ளிரவைத்தாண்டி இன்று அதிகாலை வரை நடத்தப்பட்டது. அதன் முடிவு 5 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை வலிந்து ஒத்திவைக்கும் பொறிஸ் ஜோன்சனின் நகர்வுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. ஆனால் இந்த ஒய்வுவரை பெரும் பரபரப்புக்காட்சிகள் இடம்பெற்றன. நாடாளுமன்றத்தை வலிந்து ஒத்திவைக்கும் பொறிஸ் ஜோன்சனின் அறிவிப்பு பகிரங்கப்பட்டவுடன் அவையில் கூச்சல் எழுந்தது சபாநாயகர் ஜோன்பேர்கோவின் ஆசனத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுற்றிவளைத்து எதிர்ப்புத்தெரிவித்தனர் கென்சவெட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறும் போது உங்களுக்கு வெட்கம் என்ற வகையில் கொட்டொலியை பாட்டாக இசைத்தனர்.

ஆகமொத்தம் இன்று அதிகாலை முதல் 5 வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆனால் இது ஒரு ஜனநாயக ஒவ்வாமை என்பதை சாடும்வகையில் நாடாளுமன்ற ஒத்திவைப்பு நகர்வை அரசியல் மேலாதிக்க நகர்வாக வர்ணிக்கவும் சபாநாயகர் ஜோன்பேர்கோ தவறவில்லை.

இனி தொழினுட்பரீதியாக அடுத்தமாதம் 14 ஆந்திகதி வரை வெஸ்ற் மினிஸ்டர் வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தக்கூடிய பிரெக்சிற் வார்த்தை மல்யுத்தங்களை காணமுடியாது. ஆனால் ஒக்டோபர் 14 ஆந்திகதிதான் இனி நாடாளுமன்றம் கூடமுடியும் என்றாலும் பிரெக்சிற்றை மையப்படுத்திய அதிர்வுகள் பிரித்தானிய அரசியலில் விடாது கறுப்பாக சுற்றிச்சுழலவே செய்யும்.

நேற்று பிரெக்சிற்றை மையப்படுத்தி இடம்பெற்ற முக்கியமான பரபரப்பான நகர்வுகளில் வெஸ்ற் மினிஸ்டர் அரங்கின் ஜனநாயகத்தை பாதுகாக்க நாடாளுமன்ற சபாநாயகர் ஜோன்பேர்கோ இறுதிவரை முயன்றார். ஆயினும் பொறிஸ் ஜோன்சனின் நாடாளுமன்ற இடைநிறுத்த அஸ்திரம் வலுப்பெற்றதும தனது பதவிவிலகல் அறிவிப்பை வெளிப்படுத்தினார்.

அடுத்தமாதம் 14 ஆந்திகதி மஹாராணி எலிசபெத்தின் உரையுடன் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஆரம்பித்த பின்னர் அந்தமாதத்தின் இறுதியுடன் தான் பதவிவிலகுவதான ஜோன்பேர்கோவின் அறிவிப்பு வந்தது.

இவ்வாறான பரபரப்பான அறிவிப்புக்களின் பின்னணியில் பிரித்தானியாவில் அடுத்தமாதம் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்தும் வகையில் நாடாளுமன்றத்திடம் அங்கீகாரம் பெறமுனைந்த பொறிஸ்ஜோன்சன் முனைப்பும் இரண்டாவது முறையாக தோற்கடிக்கப்பட்டது. இதனால் நோ-டீல் எனப்படும் ஒப்பந்தம் பிரெக்சிற்க்கு எதிர்ப்புத்தெரிவித்து கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சட்டரீதியாக வலுப்பெற்றது. இந்தத்தீர்மானத்துக்கு றோயல் அசென்ற் எனப்படும் மஹாராணி எலிசபெத்தின் அங்கீகாரம் கிட்டியிருப்பதால் இதனை நடை முறைப்படுத்தவேண்டியபொறுப்பு பிரதமர் என்ற வகையில் பொறிஸ்ஜோன்சனின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அடுத்தமாதம் 31 ஆந் திகதிக்கு இடையில் பிரெச்சிற்குறித்து ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் பிரெக்சிற் காலக்கெடுவை மேலும் பின்னகர்த்துமாறு பொறிஸ்ஜோன்சன் தான் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுக்கவேண்டும். ஆனால் தற்போதை நிலைவரை மேலதிக காலஅவகாசத்தை கோரவே மாட்டேன் அதற்குப்பதிலாக எனக்கு நானே குழியை வெட்டுவது உசிதம் என்ற வீராப்புடன் பொறிஸ்ஜோன்சன் அடம் பிடிக்கிறார். ஆனால் பொறிஸ்ஜோன்சன் பிரெக்சி;ற் விடயத்தில் இவ்வாறு கடும்போக்கு மற்றும் குளறுபடிகளுடன் நடந்து கொள்வதற்கு அவரது மூத்த ஆலோசகர் டொமினிக் கமிங்ஸின் தவறான ஆலோசனைகளே காரணம் என கென்சவேட்டிவின் கிளர்ச்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அவரை பதவிவிலக்கும் படியான கோரிக்கைகள் தற்போது வலுத்துவருகின்றன. ஆனால் பிரெக்சிற்றில் அடுத்து என்ன நடக்கும் என்ற வினாவுக்கு இதுவரை ஆங்கிலக்கால்வாயின் இக்கரையில் அல்லது அக்கரையில் பதில் இல்லை.

இது இலங்கைத்தீவின் இறுதிக்குடியேற்ற எஜமான நாட்டின் நிலவரங்கள் அதேபோலவே இலங்கைத்தீவிலும் அரசதலைவர் தேர்தலை மையப்படுத்திய சிலபரபரப்பு நகர்வுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்தவகையில் சிறிலங்கா ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் நேற்றுநள்ளிரவிலிருந்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குரிய வகையில் மைத்திரியின் அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

ஊடகஅமைச்சர் ருவான் விஜயவர்த்தனாவுடனான முரண்பாடுகளை அடுத்து மைத்திரி ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை தனது கரங்களில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ளார். அண்மையில் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்கு புதியதலைவர் ஒருவரை ருவான் விஜயவர்த்தனா நியமதித்த பின்னர் உருவாக மைத்திரி எதிர் ருவான் முரண்பாடுகள் தற்போது ரூபவாஹினியை மைத்திரியின் கரங்களுக்குள் அமுக்கியுள்ளது.

இந்த நிலையில் இதுவரை முடிவுகாணப்படாது இழுபடும் ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் தெரிவுகுறித்து ஒரு முடிவு காண்பதற்காக இன்றுமாலை அதன்தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சபாநாயகர் கருஜயசூரிய ஆகிய மூவருக்கும் இடையில் இன்று அலரிமாளிகையில் பேச்சுக்கள்இடம்பெற்றுள்ளன. இந்தப்பதிவு எழுதப்படும் வரை இந்த சந்திப்பில் எடுக்கபட்ட முடிவுகள் தெரியவரவில்லை. யானைகளின் வேட்பாளராக அறிவிக்கப்படப்போவது என்கிற எதிர்பார்ப்பு ஏறுமுகத்தில் இருந்து இறங்குமுகத்துக்கு இறங்கி யாரையாவது அறிவித்து தொலையுங்கள் என்ற மனவோட்டம் உருவாகியுள்ள நிலையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஒருவேளை இந்தச்சந்திப்பில் வேட்பாளர் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டால் அதனை செய்திகளின் வாயிலாக நீங்கள் அறிய முடியும்

ஆனால் இறுதிவரை கூட ரணில் ஜனாதிபதியானால் சஜித் பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என ருவான் விஜேவர்தன போன்ற முகங்கள் கூறி சஜித்துக்குரிய பிரகாச வாய்ப்புகளை கிரகணப்படுத்தியதையும் அதேபோல கட்சியின் தலைவரான ரணில் போட்டியிடாவிட்டால் பிரதித்தலைவராக சஜத்த போட்டியிட கட்சியின் யாப்பில் இடமுண்டு என்ற சஜித் ஆதரவு குரல்களும் ஒலித்துள்ளன.

இதற்கிடையே சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு கூட்டமைப்பின் வருங்காக சஜித் ஆதரவு நிலைக்கு கட்டியம் கூறியிருப்பதையும் அவதானிக்கவேண்டும். ஆகமொத்தம் சிறிலங்காவின் அரசியல்களத்தின் இன்றைய ஸ்பெஷலாக இப்போது ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர் யார் என்ற விடயமே இருக்கிறது.


இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?