நாமலின் கல்யாணமும்…இலங்கைத்தீவின் அரசியல் வாய்ப்புக்களும்!

  • Prem
  • September 12, 2019
177shares

இலங்கைத்தீவில் கிட்டிய வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வது இல்லையென்றால் தவறவிட்டுக்கொள்வது குறித்த பேசுபொருட்களும் அவைகுறித்த சில காட்சிகளும் தொடர்ந்தும் பகிரங்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான காட்சிகள் உள்ளுரிலும் தென்படுகின்றன. ஜெனிவாவில் உள்ள மனிதஉரிமை அரங்குபோன்ற மையங்களிலும் தெரிகின்றன.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையாக அடையாளப்படுத்தப்பட்டுவரும், தமிழ்மக்களுக்குரிய அரசியல் தீர்வு விடயத்தில் கடைசிபஸ் என விளிக்கப்படும் இறுதிவாய்ப்பையும் தவறவிட்டோம் என அலரிமாளிகையில் தேர்தலுக்கான ஞானத்தை ஐ.தே.க யானைகள் பிளிறின.

அத்துடன் இனிவரும் காலத்தில் அவ்வாறானநிலை தீர்க்கப்படும் என்;பதை சொல்லாமல் சொல்லி தமிழர்களே யானைக்கு வாக்களித்துக்கொள்ளத் தயாராகுங்கள் என்ற வளையத்தை யானைகளின் பேராசிரியர் ஆசு மாரசிங்க எறிந்திருக்கிறார்

அதாவது, 2015 இல் இடம்பெற்ற அரசதலைவர் தேர்தலின் போது தமிழர்களுக்கு வழங்கியவாக்குறுதிகளில் பிரதானமான இருந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பது என்றவிடயமும் நிறைவேற்று அதிகார அரசதலைவர் முறைமையை பிடுங்கிக்கொள்வது என்ற விடயத்தையும் தவறவிட்டோமே என வாய்ப்புக்களின் தவறவிடுதல்களை மையப்படுத்திய கண்கெட்ட பின்னரான சூரிய நமஸ்காரம் வந்திருக்கிறது.

ஆனால் இதேசமகாலத்தில் இதே அரசாங்கம் தான் தமிழ்மக்களை மையப்படுத்தி அனைத்துலக அரங்கால் வழங்கப்பட்ட வாய்ப்புகளை மையப்படுத்தி ஜெனிவா போன்ற அரங்கங்களில் தினாவெட்டாக சிலிர்த்துக்கொள்கிறது.

தமிழ்மக்களின் உதிரப்பழிக்கு காரணமாக சுட்டுவிரல் நீட்டப்பட்ட சிறிலங்காவின் முக்கிய படைய முகமான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா இராணுவ தளபதியாக நியமித்தமை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவை கவலைகொண்டிருந்தது.

தமிழ்மக்களின் உதிரப்பழி குறித்து பாரியகுற்றச்சாட்டுகளைச் சுமக்கும் படைய முகமே இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நகர்வு நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளில் குப்புறத்தள்ளிய குதிரை, குழியை பறித்தகதைக்கு ஒப்பானது என்ற கவலைவெளியிடப்பட்ட நிலையில்

இந்தக்கதையெல்லாம் கொழும்பு அதிகார மையமான எங்களிடம் செல்லாது அப்பனே எனக்கூறும் கொழும்பு

உள்நாட்டு முடிவுகள் தொடர்பான வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது! சவேந்திரசில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட நகர்வு சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசின் இறையாண்மைக்கு உட்பட்ட நகர்வு! என சில காரண காரியங்களை இறுக்கமாக நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது.

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் பிரதிநிதி அஸீஸ் இதனை ஜெனிவா அரங்கில் பகிரங்கப்படுத்தியிருந்தார். ஆகமொத்தம் தமிழ்மக்களின் உதிரப்பழிக்குரிய பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை துச்சமென தூக்கியெறிந்து, அவ்வாறான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நகர்வுளை நாட்டின் நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் விடயங்கள் என்ற வரையறைக்குள் அரசாங்கம் அடக்கிக்கொள்கிறது.

இதில் உள்ள முக்கிய விடயம் யாதெனில் ஐ.நாவின் இவ்வாறான பொறுப்பு கோரும் நகர்வுகள் இயற்கைநீதிக்கான கொள்கைகளுக்கு முரண் என சிறிலங்கா அரசாங்கம் துள்ளிக்கொள்ளும் நகர்வு அவதானிக்கபட்டுள்ளது.

வாய்கிழிய நல்லாட்சி குறித்து பேசிக்கொள்ளும் இந்தஅரசாங்கம் குற்றம் சார்ந்த ஒரு குற்றச்சாட்டுக்கு இயற்கை நீதிசார்ந்து பதிலளிக்கவேண்டிய தரப்பாக உள்ளது.

ஆனால் அவ்வாறு செய்யாமல் தமிழ்மக்களின் உதிரப்பழிக்குரிய பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை கோருவதை இயற்கை நீதிக்கு முரண் என்கிறது. என்னே முரண்நகை இது.

சரி ஜெனிவாவை விடுங்கள். சவேந்திர சில்வாகுறித்த கவலைகளை விடுங்கள். தமிழர்களுக்கு தவறவிடப்பட்ட அரசியல்தீர்வு குறித்த கதையையும் விடுங்கள்

இலங்கைத்தீவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து கிட்டியபொருளாதார சீர்திருத்தங்களுக்கு வழங்கப்பட்ட அரிய வாய்ப்பை இந்த அரசாங்கம் தவறவிட்ட உண்மையை உலகின் பிரபலமான பொருளாதார நிபுணர் கலாநிதி ரஸீன் சாலி பகிரங்கப்படுத்தியுள்ளார். சிறிலங்கா மத்தியவங்கியின் 69ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றியபோது நெத்திக்குநேரே இதனைக்கூறியவர் இவ்வாறாக தவறவிடப்;பட்ட பொருளாதார சீர்திருத்த வாய்ப்புக்காரணமாக பிரகாசமான வாய்ப்புகளாக அடையாளப்படுத்தப்பட்ட அரசியல் மாற்றங்கள் கூட தலைகீழாக மாறும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

தவறவிடப்பட்ட வாய்ப்புகளால் சிலவிடயங்கள் தலைகீழாக மாறக்கூடிய அபாயம் குறித்து அவர் எச்சரித்துக்கொள்ளும் நிலைமை ராஜபக்சர்களின் மீள்வருகை குறித்த கட்டியங்களையும் உள்ளடக்கியுள்ளதென்பதையும் கூறிக்கொள்ளலாம்.

கிட்டியவாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வதில் ராஜபக்சகுடும்பம் இப்போது களையாக செயற்படுகிறது. தனக்குப்பின்னர் பிறந்த சகோதரயோக்கள் எல்லாம் திருமணபந்தத்தில் இணைந்தாலும் இதுவரை அதனைச்செய்யாமல் காலம் கடத்திய மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல ;ராஜபக்ச கூட அந்தவாய்ப்பை பயன்படுத்தி கல்யாணம் கட்டிக்கொண்டார்.

கொழும்பு, கங்காராமை விஹாரையில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளின் பின்னர், மெதமுலன குடும்பத்தின் தங்காலை கார்ல்டன் வதிவிடயத்தில் திருமணம் இடம்பெற்றது. இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் தனது காதலியான லிமினி வீரசிங்ஹவை திருமணபந்தத்தில் இணைத்த நாமலை தனது சகோதரயோவான கோட்டபாயாவுக்குப்பின்னர் அரச தலைவராக அழகுபார்க்கும் திட்டத்துடன் தான் மகிந்தவும் இன்று சம்பந்தி சமேதராக நின்றிருக்கக்கூடும்

மறுபுறத்தே கிட்டிய வாய்ப்புக்களை தவறவிட்ட விமர்சனத்தை நாற்புறமும் பெற்றுள்ள ரணில்தரப்பு தமது முகாமில் இருந்து சஜித்தை வேட்பாளராக களமிறக்குவதில் நிபந்தனைகளை அடுக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு நடந்த ரணில்- சஜித் பேச்சுககளுக்குப்பின்னர் வாய்திறந்த சஜித், அரசதலைவர் பதவிதனக்கு வழங்கப்பட்டால் கட்சியின் தலைவராகவும், பிரதமராகவும் ரணில் இருப்பதில் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார். இதுபோலவே மறுபுறத்தில் கருத்துரைத்த ரணில்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட அரசஆதரவு மற்றும் பங்காளிக்கட்சிகளின் ஆதரவை சஜித்பெற்றால் அவருக்கு வேட்பாளர் பதவியை வழங்குவதில் தனக்கு பிரச்சினைஇல்லை எனக்கூறினார்.

ஆகமொத்தம் கிட்டியவாய்ப்புக்களை பயன்படுத்துவதில் ஒருவேளை கடைசிப்பேருந்துகளைப் பிடிக்க சிறிலங்காவின் அரசியல்முகங்கள் முயன்றாலும் தமிழர்களை மையப்படுத்திய விடயங்களில் மட்டும் இது நகரவே மாட்டேன் என அடம்பிடிப்பது தான் சிறிலங்காவின் அக்மார்க் அடையாளமாக தெரிகிறது.

இதையும் தவறாமல் படிங்க