சிறிலங்கா அரசதலைவர் தேர்தல் -நவம்பர் 16 இல்! வாராதுவந்த திகதியும் ரணிலின் அரசியல் தீர்வுக்கதையும்!!

  • Prem
  • September 18, 2019
71shares

இலங்கைத்தீவில் பரபரப்பாக பேசப்படும் அரசதலைவர் தேர்தல் களத்தில் ஒரு வழியாக- வாராது வந்த மாமணியாக தேர்தல்திகதி இன்;று அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்தவிடயத்தில் இதுவரை பொத்திப்பொத்தி வைத்த திகதியை அவிழ்;த்து விட்ட சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அரசதலைவர் தேர்தல்எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

இதற்குரிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல்படி, அரசதலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் அடுத்தமாதம் 7 ஆம் திகதி இடம்பெற்று வாக்களிப்பு நவம்பர் 16 இல் இடம்பெறவுள்ளது

அப்பாடா ஒரு வழியாக தேர்தல் திகதி வந்துவிட்டது! இனியென ஆஹா ஓஹோ என அரதப்பழசான சில வாக்குறுதிகளை இன்றும் தீவிரமாக கேட்கும் பாக்கியதை மஹா கனம் பொருந்திய மக்களுக்கு கிட்டிக்கொள்ளக்கூடும்.

மஹா கனம் பொருந்திய மக்கள் என்ற இந்த அடைமொழி ஏதோ கேலிக்குரிய அடைமொழி அல்ல. மக்களாட்சித்தத்துவத்தின்படி மக்களே எஜமானர்கள் என்பதால் இது யதார்த்தமானதுதான்.

ஆனால் அவ்வாறான பெறுமதியுடைய மக்களுக்கு அரசியல்வாதிகள் வழங்கும் உறுதிமொழிகள் எவ்வளவு தூரம் துரிதமாக மல்லினப்படுத்தப்படுகின்றன என்பதற்கு அதே உறுதிமொழிகள் மீண்டும் மீண்டும் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் உறுதிப்படுத்திவிடுகின்றன.

அந்தவகையில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் இலங்கை மக்களுக்கு இரண்டு உறுதிமொழிகள் இப்போது நினைவூட்டப்பட்டுள்ளன. ஒன்று தமிழர்களுக்குரிய தீர்வு குறித்தது இரண்டாவது நிறைவேற்று அதிகாரமுடைய அரசதலைவர்முறை பிடுங்கல் பற்றியது.

முதலாவது விடயத்தை ரணில் பேசியிருக்கிறார். இரண்டாவது விடயத்தை கருஜயசுரிய பலமாக கூறியுள்ளார்.

தனது தலைமையில் மீண்டும் ஒரு அரசாங்கமொன்று அமையுமாயின் ஒரு வருடகாலத்துக்குள் அலிபாபா கதையில் வருதைபோல, அண்டா கா கசம் அபூகா ஹ{கும் திறந்திடு சீசேம் பாணியில் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்காப்பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உறுதிமொழி வந்துள்ளது.

இந்த உறுதிமொழியை தமிழ் தேசிய கூட்டமைப்புடனான நேற்று (17 ஆந்திகதி) சந்திப்பின் போது ரணில் வெளியிட்டார். ஏற்கனவே இவ்வாறாக 2015 இன் நல்லாட்சியால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியில் நம்பி- கைவைத்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தமிழர்களுக்கு 2016 பொங்கலுக்குள் தீபாவளிக்குள் அரசியல்தீர்வு வந்துவிடுமென சொன்னார்.

ஆனால் இறுதியில் இவையாவும் நிறைவேறாதமை கண்டு தமிழர்கள் எரிச்சலில் பொங்கியமைதான் மிச்சம்!

ஆயினும் சற்றும் தளராத ரணில் விக்கிரமாதித்தரோ மீண்டும் தேர்தல் ஆதாயமரத்தில் ஏறி ஒரு வருடகாலத்துக்குள் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான முயற்சி என்ற வேதாளத்தை இரா.சம்பந்தனின் பைக்குள்யே போட்டுள்ளார்.

அதுவும் ஒரு வருடத்தில் அரசியல் தீர்வு அல்ல மாறாக அதனை முன்வைப்பதற்கான முயற்சி என மட்டும் ரணில் கூறியிருப்பதை நன்றாக அவதானிக்க வேண்டும்.

ரணிலின் இந்த உறுதிமொழியில் சில மாங்காய் அடிப்புக்கள் உள்ளன.

குறிப்பாக சஜித் பிரேமதாசாவுக்குரிய வேகத்தடையை போடக்கூடிய சிறுபான்மை வாக்குவங்கியின் முக்கிய ஒரு சறுக்குக்கட்டையாக அவர் தமிழ்தேசியக்கூட்டமைப்பை நோக்கிக்கொள்வது அதன் மூலம் வெளிப்படுகிறது

தன்னை மீறிய செல்வாக்கு சஜித்துக்கு சென்று விடக்கூடாது என்பதால் தமிழ்பேசும் தனது பங்காளிக்கட்சிகளை வைத்து இந்தத் திட்டத்தை கச்சிதமாககையாள ரணில் முனைவது தெரிகிறது.

இதனால்தான் இனப்பிரச்சனைக்குரிய தீர்வு என்ன என்றவிடயத்தில் சஜித்தெளிவாக கூட்டமைப்புக்கு ஏதும் கூறாத நிலையில் ஒருவருடகால அவகாசம் வைத்து கூட்டமைப்புக்கு ரணில் நேற்றுக்கூறியுள்ளார்.

அதாவது தமிழ்பேசும் கட்சிகளின் அபிலாஷைகளை நிறைவேற்ற சஜித் தயங்கினாலும் நான் ரெடி எனக்கூறும் ரணில் அதன் ஊடாக யானையின் வேட்பாளராக சஜித்தா கருஜெயசூரியவா இல்லை நானே நானா என்றவிடயத்தில் கூட்டமைப்பு ஒரு தெரிவை எடுக்கும் வகையில் நிலைமையை மாற்றியுள்ளார்

ஆகமொத்தம் கூட்டணிக்கட்சிகளின் உறவை வைத்து ரணில் சஜித்துக்கு பொறிவைக்கமுனைந்தாலும் இந்தப்பொறி ரணிலையும் பூமாராங் தடியாக தாக்கக்கூடியது என்பதுதான்இங்கு விசயமே.

இப்போது இரண்டாவது விடயமான நிறைவேற்று அதிகாரமுடைய அரசதலைவர் முறை ஒழிப்புக் குறித்துப்பார்க்கலாம். இலங்கைத்தீவுக்கு 1978ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார அரசதலைவர் முறையை அறிமுகம் செய்த அரசியல்குள்ளநரி புண்ணியவான் ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கு நேற்று 113 வதுபிறந்தநாள்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராக அன்று இருந்த ஜே.ஆர நிறைவேற்று அதிகார முறையை அறிமுகம் செய்த போது, அதன் ஊடாக பெண்ணை ஆணாக அல்லது ஆணைப்பெண்ணாக மட்டுமே தன்னால் மாற்ற முடியாது ஆனால் ஏனைய அனைத்தையும் தன்னால் செய்ய முடியும் என எள்ளலாக சொன்னார்.

அப்போது சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையில் எதிர்க்கட்சியாக இருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி இந்தஅதிகாரமுறைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது.

ஆனால் சிறிமா பண்டாரநாயக்க எதிர்த்தஅதேமுறையில் அவரது வாரிசான சந்திரிகாவும் ஆட்சி செலுத்தி அதனை அகற்றாமல் கடந்து சென்றதே நடந்தது. எனினும் இந்த நிறைவேற்று ஆட்சிக்கணகணப்பு கிட்டமுன்னர் 94 இல் அரசதலைவர் தேர்தல்களத்தில் ஒரு வேட்பாளராக களமிறங்கிய சந்திரிக்கா சொன்னது வேறு.

நிறைவேற்று அதிகாரம் மீளெடுக்கப்படும் என்ற வாக்குறுதியை முதன்முறையாக வழங்கிய சந்திரிகா அதற்கும் ஒருபடிமேலேபோய் நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்படும் என எழுத்துவடிவில் கூட பிரகடனம் செய்தார்.

ஆனால் அந்த 94 தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரிக்கா, 2000 ஆண்டு வரை இரண்டு முறை அரசதலைவராக பதவி வகித்தபோதிலும் நிறைவேற்று முறையைஅசைக்கவில்லை. அதற்குப்பின்னர் 2005 இல் களமிறங்கிய விடாது கறுப்பு மகிந்த இந்த முறையை மீளெடுப்பதாக கூறி போட்டியிட்டார். அவரும் இரண்டு முறை பதவி வகித்தபோதிலும், நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்கவில்லை.

அதற்குப்பதிலாக 18ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த மகிந்த, இரண்டு முறைமட்டுமே ஒருவர் அரசதேர்தலில் போட்டியிடலாம் என்ற வரையறையை நீக்கி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்ற மாற்றத்தை புகுத்தினார். இவ்வளவும் ஜேயாரின் நிறைவேற்று அதிகாரம் சம்பந்தப்பட்டது

இப்போது தனக்குரிய 113 வது பிறந்தநாளை தனது கட்சிவாரிசுகள் கொழும்பில் உள்ள ஜயவர்தனா மையத்தில் நினைவுகூர்ந்த போது நிகழ்வில் அதில் விளக்குக்கொழுத்திய முக்கிய முகமான கருஜெயசூரியாவும் தான் அரசதலைவராக வந்தால் நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிப்பதே தனது முதல் வேலை என சொல்வதைக்கேட்டு கடுப்பாகியிருப்பார்.

ஆனால் இவ்வாறு ஏற்கனவே நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிப்பதே தமது முதல் வேலை எனக்கூறிப்பதவியில் இருந்தவர்கள் அந்த அதிகார முறையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை என்பதை நினைத்தால் அவர் ஜேயார் கூலாக கூடும்.

ஆக மொத்தம் நிறைவேற்று அதிகாரமுறையை ஒழிக்கும் தேர்தல் காலக் கதையும் பேச்சுப்பல்லக்கு தம்பி கால்நடைதான்.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!

கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!