செம்மலையில் எரிந்தது பௌத்த சிதையா? நல்லிணக்கமா?

  • Prem
  • September 23, 2019
156shares

இலங்கைத்தீவில் உள்ள இரண்டு தேசிய இனங்களும் நாட்டின் சட்டம் பொதுவானது என நல்லாட்சிக்காரர்கள் தலையில் அடித்து அடித்து கூற முனைகின்றனர்.

ஆனால் இந்தக்கதையெல்லாம் தமது சிங்களபெருந்தேசியவா பௌத்த பெரும்பான்மைக்கு பொருந்தாது என பௌத்த சண்டியக் குழாம்கள் இன்று முல்லைத்தீவில் வெற்றிகரமாக காட்டியுள்ளன.

மறுபுறத்தே இதன் உபரிவிளைவுகளாக மணிவண்ணன், சுகாஸ் போன்ற தமிழ்சட்டவாளர்களின் உடல்களிலும் சிங்களவர்களின் அடி விழுந்தது.

இலங்கைத்தீவுவாழ் தமிழ்மக்களுக்கு சிறிலங்கா நீதித்துறையின் நடைமுறை எவ்வாறு கூன் விழுந்து அவலட்சணமாக காட்சியளிக்கிறது என்பதை மேதாலங்கார கீர்த்திதேரரின் உடலத்தின் மீதான இந்தக்காட்சிகள்; சாட்சிப்படுத்திவிட்டன.

ஆகமொத்தம் தமிழர்களின் மத உணர்வுகளை துச்சமென மிதித்து முல்லைத்தீவின் செம்மலை நீராவியடிப்பிள்ளையார் ஆலயவளாகத்தில் இன்று தீயிடப்பட்டது வெறுமனவே ஒரு பிக்குவின் சிதைமட்டுமல்ல. இலங்கையில் அற்ப சொற்பமாக இருக்கும் நல்லிணக்கத்துக்கும் சேர்த்துத்தான் நாசகாரதீயிடப்பட்டது


இனியென்ன? மனோகணேசன் போன்ற சிறிலங்காவின் தேசிய நல்லிணக்க அமைச்சக முகங்கள் இது குறித்து சீற்றத்துடன் துக்கித்துக்கொள்ளக்கூடும் சமதானத்துக்கு விழுந்த சாட்டையடி என சலித்துக்கொள்ளக்கூடும்

இதேபோலவே தமிழ்தேசியக்கூட்டமைப்பு முகங்களும் அரசியல் ரீதியில் ஆ ..ஊ என சீற்றப்பட்டுக்கொள்ளும்;. அதன்பின்னர் இந்தவிடயத்தை எதிர்வரும் தேர்தலுக்கான ஒரு உணர்வுகர துருப்புச்சீட்டாக மட்டும் பயன்படுத்தக்கூடும்.

ஆனால் இதே கூட்டமைப்பின் பெரிய சட்டச்சட்டவாளர்கள் , சிறிலங்காவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மைத்திரியால் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக குழப்பங்களுக்காக உடனயொக உச்சநீதிமன்றத்தின் வாசல்படிஏறி போராடி ரணிலை நல்லாட்சிக்காக மீண்டும் கொலுவிருத்தியதையும் இங்கு நினைவூட்டலாம்.

ஆனால் அவ்வாறாக கொலுவேற்றப்பட்ட நல்லாட்சியில் தான் தமிழர் தாயகப்பகுதியில் இருப்பதால் சிறிலங்கா நீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமென மிதித்து பௌத்த கடும்போக்கு முகங்கள் இந்த வெற்றிகரமான காட்சிப்படுத்லை செய்துள்ளன.

அதுவும் சற்றேறக்குறைய சமகாலத்தில் கொழும்பின் பிரதான நீதவான் நீதிமன்றம் என்ற சிறிலங்காவின் நீதித்துறை மையத்தில் இருந்தும் அதேபோல வடக்கில் உள்;ள இன்னொரு நீதித்துறை மைய்யமான முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இருந்துஏககாலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளின் நடைமுறை எவ்வாறு ஒரு கண்ணில் வெண்ணெய்யையும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் வைத்திருக்கின்றது

சிறிலங்காவின் மிகப்பெரிய நிதிமோசடி வழங்குகளில் ஒன்றாக இருக்கும் எவன்கார்ட் வழக்கு என்ற முக்கிய அடையாளத்தில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் இந்நாள் அரசதலைவர் வேடபாளருமான கோட்டாபய ராஜபக்ஷ உட்பட்ட 8 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்

மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12 ஆம் திகதி வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கொழும்பு பிரதான நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பளித்தது. ஆனால் மறுபுறத்தே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்கமறுத்து பௌத்த சண்டியர் குழாம்கள் இறுதிவரை அடாவடி செய்து அந்தத்தீர்ப்பைத் தூசித்து துச்சமென மிதித்து தமது இலக்கை பூர்த்திசெய்துள்ளன.

இவையாவும், முல்லைத்தீவு, நீராவியடிப்பிள்ளையார் கோவில்வளாகத்தில் குருகந்த ராஜமஹா விகாரை என்ற பெயரில் அடாவடியாக ஒரு விஹாரையை அமைத்து, அதன் முலம் தமிழர்களின் பூர்வீகத்துக்கு சவாலைவிடுத்து மேலாண்மை அதிகாரத்தை உருவாக்கி சர்ச்சைகளைஏற்படுத்திய மேதாலங்கார கீர்த்திதேரர் என்ற பிக்கு மரணத்தின் பின்னர் உருவான நகர்வுகள் இவை.

நீத்தாரை இழிவுசெய்வது தமிழினத்தின் மரபுஅல்ல. அந்தவகையில் புற்றுநோய காரணமாக கடந்த 21 ஆம் திகதி மஹரகம வைத்தியசாலையில் மரணமடைந்த மேதாலங்கார கீர்த்தி தேரரை விட்டுவிடுவோம்.

ஆனால் அவரதுஉடலத்தை மையப்படுத்தி தமிழர்களுக்கு தமது மேலாண்மையைக் காட்டிக்கொள்வதற்கு தமது பௌத்தசிங்கள பாராக்கிரமத்தொடைகளை தட்டிய ஞானசாரதேர அன்ட் கோ உட்பட்ட பௌத்த அன்ட் கோக்கள் இறுதிவரை அடாவடிகள் செய்து தமிழருக்கு செய்தி சொல்லியுள்ளமையே முக்கியம்

இதில் எதிர்வரக்கூடிய சிறிலங்காவின் அரசதலைவர் தேர்தல்தென்பகுதியில் விரவியுள்ள சிங்களப்பெருந்தேசிய வாக்குவங்கியை உசுப்பேற்றி அதனை தாங்கள் நினைக்கும் முகங்களுக்குப்பெற்றுக்கொடுக்கும் நுட்பம் இருப்பதையும் மறைக்கமுடியாது.

கொழும்பில் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் சடலத்தை, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தை அண்டி தகனம் செய்தே தீருவதென பௌத்த அன்ட் கோக்கள் அடம்பிடித்ததால் எழுந்த வினைகள் இவை

ஆலயவளாகம் ஒன்றில் ஒரு உடலத்தை எரியூட்டுவது அல்லது அடக்கம் செய்வதை சைவசமயம் ஏற்பதில்லை. இதனால் இதனை ஒரு மதத்தை அவமதிக்கும் செயலாக கருதிய நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகம் இதற்குரிய எதிர்வினைகளை எடுத்தது.

இதையடுத்து, நீராவியடிப்பிள்ளையார் கோவில்வளாகத்தில் தகனம் செய்வதற்கு, இடைக்காலத்தடைவிதித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி லெனின் குமார் இன்று இந்தவிடயத்தில் இறுதித்தீப்பை வழங்கினார்

இந்த வழக்கு விசாரணைகாக அதிகளவு சிங்கள சட்டதரணிகளும் பெருமளவான பௌத்தபிக்குகளும் திபுதிபுவென நீதிமன்றத்தில் குவிந்தனர்.

இறுதியாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலத்தை ஆலய வளாககத்தி எரியூட்டமுடியாது. அந்தஇடத்தில் இருந்து சற்று அப்பால் உள்ள இராணுவமுகாமுக்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு கூறப்பட்டது.

ஆனால் நீதிமன்றம் இவ்வாறு ஒரு உத்தரவைப்பிறப்பித்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அந்த உடலத்தை பிள்ளையார் ஆலய வளாக குளத்துக்கருகே தகனம் செய்தே தீருவோமென ஞானசார தேரர் அன்ட் கோ அடம்பிடித்ததால் இன்று முற்பகல் அங்கு பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டது.

நீதிமன்றம் தனது உத்தரவை எழுத்துமூலமாக வழங்க முன்னரே உடலை பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்துவிடவேண்டும் என்ற முனைப்பில் இயங்கி இந்தக்குழாம்கள் தமது இலக்கில் வெற்றிபெற்றன.

இதன்பின்னர்தான் ஆலய வளாகத்தில் தீயிடப்பட்ட பிக்குவின் சிதையில் இருந்து மேலெழுந்த புகை விரவிய காட்சியை தமிழர்கள் கண்ணாரக் கண்டுகொண்டனர்.

ஆம் இனி தமிழருக்காக சஜித்தேவன்கள் வந்தாலும் இது பிக்குவின் சிதையில் எஞ்சிய சாம்பலை போல தமிழர்களின் முற்றங்களின் நல்லிணக்கமும் எஞ்சும்

கிரேக்கர்களுக்கு வேண்டுமானால் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை எழக்கூடும். ஆனால் தமிழர்களை பொறுத்தவரை தமது முற்றங்களின் நல்லிணக்கம் எழக்கூடும் என்பது வெறும் மாயநிலையே.

இதையும் தவறாமல் படிங்க
உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலகம் கொரோனாவால் திணறுகிறது- வட கொரியாவிற்குள் நடக்கும் மர்மம் என்ன? மீண்டும் ஒரு அதிரடியை நிகழ்த்திய கிம் ஜான்

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

உலக வல்லரசுகளையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா! ஸ்ரீலங்கா அரசின் புதிய திட்டம் வெற்றி

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?

சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?