அரசியலமைப்பு தற்குறிகளும்! பலாலிவிமானநிலைய பெயர்ப்பலகை அரசியலும்!!

  • Prem
  • October 21, 2019
59shares

இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒக்டோபர் 21 ஆந்திகதியாகிய இன்று இற்றைக்கு 6 மாதங்களுக்கு முன்னரும் ஒரு துன்பியல் சம்பம் நடந்தது. 32 ஆண்டுகளுக்கு முன்னரும் ஒரு துன்பியல் பதிவு இடம்பெற்றது.

சரியாக கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஏப்ரலில் இதேநாளான 21 இல் ஐ.எஸ் அமைப்பின் உயிர்த்தஞாயிறு கந்தக நாசகாரத்தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன. அதேபோல 32 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஒக்டோபர் 21 இல் அமைதிப்படை என்ற அடையாளத்துக்குரிய இந்தியப்படையினர் யாழ்போதனா வைத்தியசாலையில் நடத்திய குருரமான தாக்குதலில் வைத்தியர்கள் தாதியர்கள் உட்பட்ட பணியாளர்களும் பலியான நாளும் இதுதான்

இவ்வாறான முக்கிய துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்ற அதேதீவில் இப்போது அந்த துன்பியல் காலங்களின் நினைவூட்டல்களுடன் சிறிலங்காவின் முதன்மைத்தலையாரியின் தெரிவுக்குரிய தேர்தல் களப்பரபரப்புகள் நகர்த்தப்பட்டுவருகின்றன. ஆயினும் தமிழர் தரப்பை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எவ்வாறான முடிவை எடுப்பது என்ற துல்லியமாக திசைவழியோ அல்லது பேசுபொருளோ தெரியவில்லை.

ஆயினும் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான முடிவை எடுப்பது என்பது தொடர்பான தமது முடிவு எதிர்வரும் 24ஆம் திகதி வெளியிடப்படும் என கூட்டமைப்பின் முகங்கள் கூறுகின்றன.

இந்தவாரம் இடம்பெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் முடிவில் எந்த வேட்பாளரைஆதரிப்பது இல்லையென்றால் இந்ததேர்தலில் எப்படி செயற்படுவது என்ற முடிவு எடுக்கபடுமெனவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தம் மலிந்தால் சந்தைக்கு வரும் என்பதே இந்த விடயத்தில் இப்போதைக்கு கூறவும் முடியும். ஆனால் தெற்கிலோ நிலைமைகளுக்கு ஏற்ப திட்டமிட்டபடி களநிலவரங்களை கையாளும் தினுசு தினுசான யுக்திகள் கையாளப்படுகின்றன.

அந்த வகையில் பலாலியில் கடந்த 17ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையை மையப்படுத்திய புதிய இனவாதப்பேசுபொருள் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக தெற்கில் இருந்து புறப்படும் சமூக வலைத்தளங்களில் இது இப்போது சூடுபிடித்திருக்கிறது.

இலங்கைத்தீவில் உள்ள சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசில்; சிங்கள மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பெயர்ப் பலகைகளில் எப்படி தமிழ்மொழிக்கு முன்னுரிமை வழங்கப்படலாம் என்பதே இப்போது சிங்களக்கடும்போக்காளர்களின் தலையாய பிரச்சனையாக மாறியுள்ளது.


தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடத்தில் தமிழ்மொழிக்கு முதலிடம் வழங்கப்படுவதில் இந்த மாதனமுத்தா சீடர்களுக்கு என்னதான் பிரச்சனையோ தெரியவில்லை. ஆனால் சிறிலங்காவில் முக்கிய தேர்தல்களம் ஒன்றுவரும் நிலையில் இவ்வாறான ஒரு பேசுபொருளை வலிந்துஉருவாக்கி அதன் மூலமாக நாடு பிரிக்கப்பட்டு விட்டதா? சிங்கள மஹா ஜனதாவே என கூக்குரல் இடுவதன் மூலம் பருந்தேசியவாத வாக்குவங்கியை உசுப்பேற்ற இவர்கள் முனைவது பகிரங்கம்.

ஆனால் இவ்வாறான ஐயோ சிங்கள மொழிப்பெருமையின் வடைபோச்சே வாய்ப்பன் போச்சே என சாதாரண பெயர்ப்பலகை ஒன்றை மையப்படுத்தி சமூக வலைத்தளங்களில் போலித்தேசபக்தி குய்யோ முறையோ போடும் மாதன முத்தாக்கள் தமிழரின் கோவில் வளாகத்தில் காவியுடை தரித்த ஒருவரின் பிணத்தை எரிக்கும் போது

இல்லையென்றால் சிறிலங்காவின் அரசியலமைப்பில் எந்த ஒரு அட்சரம் கூடஇல்லாத சீனர்களின் மன்டரின் மொழி தெற்கின் சில இடங்களில் உள்ள பெயர்ப்பலகைகளில் இருந்தாலும் கப்சிப்பாக இருந்து விடுவார்கள்.


ஏன் காத்தான்குடி போன்ற பகுதிகளில் அரபு மொழிக்கு முன்னுரிமை வழங்கிய பெயர்ப் பலகைகள் பளிச்சிட்டதும் இதேதீவில்தானே? ஆனால் வடமாகாணத்தின் மொத்தச்சனத்தொகையில் பெரும்பான்மை வகிபாகத்தைக்கொண்ட பூர்வீக மக்கள் பேசும் மொழி ஒரு பெயர்ப்பலகையில் இரண்டுசாண் ஏறினால் குத்துதே குடையுதே கதைதான்.

இதற்கும் அப்பால்சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு தாமே கோபுரம் தாங்கிப்பூதங்கள் என மார்தட்டும் இந்த கடும்போக்கு மாதன முத்தாக்கள் அதே அரசியலமைப்பில் கூறப்பட்ட ஒரு முக்கிய விடயத்தை கணக்கில் எடுக்கவும் தயாராகவும் இல்லை.

சிறிலங்காவின் அரசியலமைப்பின்படி சிங்கள மொழி அரசகரும மொழி அதேபோல தமிழும் அரசகருமமொழியெனவும் ஆங்கிலம் இணைப்பு மொழியெனவும் கூறப்படுகிறது. அதாவது இலங்கைத்தீவு முழுவதும் சிங்களமும், தமிழும் நிர்வாக மொழிகளாக உள்ளன.

ஆயினும் வடக்கு கிழக்கு தவிர்ந்த இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் சிங்களம் நிர்வாக மொழியாக இருத்தல் வேண்டுமெனவும் வடக்கு மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழ்மொழி நிர்வாகமொழியாக பயன்படுத்தப்படுதல் வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாகாணத்தின் மொத்தச் சனத் தொகையின் விகிதாச்சாரத்தைக் கருத்திற்கொண்டு சிங்களம், அல்லது தமிழை இடப்பரப்பிற்கான நிருவாக மொழியாகப் பயன்படுத்த சிறிலங்காவின் அரசதலைவர் பணிப்புரை விடுக்கலாம் எனவும் அரசியலமைப்பின் மொழிகள் தொடர்பாக ஷரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை பலாலிவிமான நிலைய பெயர்ப்பலகையில் தமிழ்முன்னுக்கு வந்துவிட்டதே என மாரடிக்கும் மாதனமுத்தாக்கள் கணக்கில்எடுக்கவும் தயாராக இல்லை.

ஆகமொத்தம் பெயர்ப்பலகையில் சிங்கள வடைபோச்சே என குரல் கொடுப்பவர்கள் யாமே காவலர்கள் என கோஷிக்கும் கடும்போக்காளர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பைக்கூட சரியாக வாசித்தறியாத தற்குறிகளும் தாமே என்பதை தம்மைத்தாமே நிருபித்துவருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!