தமிழரசுக்கட்சின் ஆதரவு சஜித்துக்கு உதவியா..உபத்திரவமா?

  • Prem
  • November 05, 2019
68shares

தெற்காசியநாடுகளில் கோலோச்சிக்கொள்ளும் அரசியல்முறையில், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியன கிலோ என்ன விலை ரகம் தான். இதில் இலங்கைத்தீவுக்கு விதிவிலக்கு ஏதும்இல்லை.

சரி தெற்காசியநாடுகளை விட்டுத்தள்ளுங்கள். இலங்கைத்தீவில் தற்போது இடம்பெற்றுவரும் சிறிலங்காவின்தேர்தல்களத்திலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியன பல்லிளித்தே வருகின்றன.

அந்தத்தீவில் யார்ஆட்சிக்கு வந்தாலும் முறைகேடுகளை செய்யத் தயங்காத கட்சிகளுக்கு குறைவிருப்பதில்லை. ஊழல்களை செய்யும் கட்சிகளும் தொலைந்தான பதிவுகளும் இல்லை. அதுபோல அந்தத்தீவின் உண்மையான அரசியல் பிணியை அறுத்தெறிந்துநாட்டை நிர்வகிக்க கூடிய அரசியல் முறையொன்றை பிரயோகிக்ககூடியதரப்புகளையும் தெரியவில்லை..

ஆனால் அரசியல்முறையில், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புக் கூறலும் வலுவாக இருப்பதற்கு மக்களிடம் கேள்விகேட்கும்உரிமையின் வலு இருக்கவேண்டும். ஆனால் சாமான்ய மக்கள் அந்தஉரிமையும் இந்தத்தேர்தல் களத்தில் பெரிதாக பிரயோகித்ததாக தெரியவில்லை.

ஆயினும் இவ்;வாறு மெச்சிக்கொள்ள முடியாத சில யதார்த்தங்கள் இருந்தாலும் அதற்கு அப்பால் மக்களின் கேள்வி கேட்கும்உரிமையின் வலு எழுப்பாமலேயே ஆதரவு எதிர்ப்பு நிலைப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் யாதுமாகி நின்றாலும் பிரதான பங்காளிக்கட்சியாக இருக்கும்; இலங்கைத்தமிழரசுக்கட்சி கொஞ்சம் அன்ன நடை போக்குக்காட்டிவிட்டு தனது ஆதரவு நிலைப்பாட்டை சஜித் பிரேமதாசாவின் அன்னச்சின்னத்துக்கு வழங்கியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுகூட்டத்தில் சஜித்பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாகவும் கட்சியின் முக்கியமுகமான சுமந்திரன் கூறியுள்ளார்.

எனினும் தமிழரசுகட்சி, தமிழ்தேசியகூட்டமைப்பில் ஒரு அங்கத்துவகட்சியாக இருப்பதால் புளொட் மற்றும் ரெலோ ஆகிய இரண்டுகட்சிகளின் தலைவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டே தலைவர் சம்பந்தன் இதனை அறிவிப்பார் எனவும் ஒரு சம்பிரதாய கதையையும் சுமந்திரன் எறிந்திருக்கிறார்.

ஆனால் சஜித்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசு கட்சிஎடுத்துள்ள முடிவு கவலையளிப்பதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருப்பது வேறு கதை.

சஜித்பிரேமதாசாவுக்கு தமிழரசுக்கட்சி வழங்கும் ஆதரவு பெரும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல இவ்வாறு தான்; இறுதியில் இடம்பெறுமென்பது ஆரம்பத்தில் இருந்தே ஊகிக்கபட்ட ஒருவிடயம். ஆகையால் சஜித்துக்கு தமிழரசுக்கட்சிகாட்டிய பச்சைக்கொடி ஆச்சரிய வர்ணமல்ல. அவ்வாறு செய்யாமல் இருந்தால் தான் அது ஆச்சரியத்துக்கு உரியதாக இருந்திருக்ககூடும்.

ஆனால் முல்லைத்தீவில் சஜித்பிரேமதாசாவின் கூட்டம் முள்ளியவளை முதல் முல்லைத்தீவு வரை கடுமையான பாதுகாப்புடன் நடத்தப்பட்ட நிலையில் அந்தக்கூட்டம் இடம்பெறுவதற்கு முதல்நாள் அவருக்குரிய ஆதரவை தமிழரசு கட்சிவெளிப்படுத்திய நகர்வு காலநேரம் பார்த்து எடுத்த ஒரு நகர்வாகவே தெரிகிறது.

ஆயினும் தாம் வழங்கிய ஆதரவுநிலைப்பாட்டுக்கு காரணத்தை வழங்கிய சுமந்திரன் சிறிலங்காவின் அரசதலைவரின் முன்னணி வேட்பாளர்களான சஜித் மற்றும் கோட்டபாய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை ஏறெடுத்துநோக்கியபோது சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்ட அறிக்கையே ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்னதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்..

பிரதான வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் சஜித் மற்றும் கோட்டபாய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கைகளையே தாம் ஆய்வுசெய்யதாக குறிப்பிட்டதன் மூலமாக அனுரகுமார திசாநாயக்காவின் விஞ்ஞாபனத்தை அவர் கச்சிதமாக காய்வெட்டியிருக்கிறார்.

இல்லையென்றால் அனுரகுமாரதிசாநாயக்காவின் தேர்தல் விஞ்ஞாபனத்தைவிட சஜித்பிரேமதாசாவின் விஞ்ஞாபனத்தில் என்ன சாதகங்களை; கண்டுகொண்டீர்கள் என்ற ஒரு தர்க்கரீதியான வினாவை எழும்பினால் அது கூட்டமைப்புக்கு சங்கடமாக இருந்திருக்கும்ஆனால் சஜித்துக்கு ஜே என்ற தமிழரசுக்கட்சியின் இந்தமுடிவு உடனடியாகவே சுவற்றில் அடித்த பந்தாக திருப்பியனுப்பிய வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமிழர்களைதொடர்ச்சியாக ஏமாற்றும் நடவடிக்கைகளையே கூட்டமைப்பு தொடர்ந்தும் செய்வதான குற்றச்சாட்டையும் தொடுத்துள்ளனர்

எது எப்படியோ சஜித்தை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி அறிவித்துவிட்டது ஆனால் தமிழரசுக் கட்சி மேற்பார்த்த கூட்டமைப்பின் இந்த வெளிப்படையான ஆதரவை தெற்கின் தீவிர சிங்கள-பௌத்த வாக்கு வங்கி எப்படி நோக்கும் என்பதில்தான் கூட்டமைப்பின் இந்த ஆதரவு உதவியா உபத்திரவமா என்பது சஜித்தரப்புக்கு அமையக்கூடும்

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றுள்ள சஜித்தை தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளை வழங்க கூடிய ஒரு முகமாக காட்ட கடும்போக்கு முகங்கள் தமது பழைய தந்திரோபாயத்தை பிரயோகிக்க முனைந்தால் என்ன நடக்கும் என்ற ஒரு விடயம் தான் இதில் உள்ள சுவாரசியமான விடயம்.

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு  கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்

யாழ்.மாவட்ட மக்களுக்கு கட்டளைத் தளபதியின் முக்கிய தகவல்