சிறிலங்காவின் தேர்தல் களம்! தமிழர்களின் அரசியல் வங்குரோத்துத்துக்கு முதல் வெற்றி!

  • Prem
  • November 08, 2019
94shares

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது!எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்! இது மகாபாரதத்தில் பாண்டவர் அணியிலிருந்த கிருஸ்ணரால் அர்ச்சுணனுக்குகூறப்பட்டதாக குறிப்படும் கீதா உபதேசத்தின் ஆரம்பவரிகள். அத்தினாபுரம் அரியணையின் உரித்துக்காக பாண்டவ கௌரவப்பங்காளிகள் குருச்சேத்திர களத்தில் போரிடமுன்னர் இந்த உபதேசம் நடந்தது.

இப்போது சிறிலங்காவின் ஜனாதிபதி மந்தரய என்ற நிறைவேற்று அதிகாரமையத்தில் கொலுஇருக்கவேண்டிய உரித்துக்காக சஜித் எதிர் கோட்டாபாய பங்காளிகள் மோதும் களத்துக்குத்திரும்புங்கள்.

அந்தக்களத்துக்காக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று விடுத்த விசேட அறிக்கையை நோக்கினால் அதிலும் தமிழர்களுக்குரிய ஒரு உபதேசிப்பு நிலையை அவதானித்துக்கொள்ளலாம்

கோட்டாபாயவை காய்வெட்ட எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது!சஜித்துக்கு ஆதரவளிக்க எது நடக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கிறது! தமிழர்கள் வாக்களிக்ககோர எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். இதனைத்தான் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது என்ற விடயத்தை அதிகாரபூர்வமாக இன்று அறிக்கையிட்ட இரா.சம்பந்தனின் விசேட அறிக்கையின் செய்தி கூறுகிறது.

ஏன் கோட்டாபாயவுக்கு வாக்களிக்க கூடாது! ஏன் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்குரிய சில காரணகாரியங்களை இரா.சம்பந்தனின் அறிக்கை கூறுகிறது.

மஹிந்தராஜபக்ஸ அரசாங்கம் பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டில் வாழ்வதற்கு ஏதுவான சூழலை தமிழ்மக்கள் உள்ளிட்ட சகலமக்களுக்கும் வழங்கதவறியமை பிரதானதவறு என கூறும் அந்தஅறிக்கை கோட்டாபயராஜபக்ஸ மற்றும் அவரோடு ஆட்சிஅதிகாரத்தில் இருந்த முகங்களின் கடந்த காலச் செயற்பாடுகள் கவலையளிப்பன எனவும் சுட்டிக்காட்டியது.

ராஜபக்சக்களிடம் எதேச்சதிகாரம் தான்தோன்றித்தனம் ஜனநாயகத்தின் மீதான துச்சநிலை ஆகியன உள்ளன என உள்ளது உள்ளபடியே சில குற்றச்சாட்டுக்களையும் அந்த அறிக்கை சொன்னது.

இதனை உறுதிப்படுத்துவது போல மகிந்தவாதியான எஸ்.பீ. திசாநாயக்கவின் பாதுகாவலர்கள் நேற்று இரவு; தாம் பயணித்த வாகனத்தை வழிமறித்த சிலர் மீது துப்பாக்கி பிரயோகத்தையும் செய்துள்ளனர்

இவ்வாறான நிலையில்தான் சஜித் பிரேமதாசவுக்கு சில புகழாரங்களை அளவுக்கு அதிகமாகவே அடுக்கி அவரதுகொள்கைகளிலும், நிகழ்ச்சித்திட்டங்களிலும் வடக்கு, கிழக்குவாழ் தமிழ்மக்கள் நம்பி...கை வைத்து அன்னச்சின்னத்தில் போட்டியிடும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சஜித்பிரேமதாசவுக்கு ஆதரவுகோரி இரா.சம்பந்தனின் அறிக்கையில் அடுக்கபட்டுள்ள புகழாரங்கள்அளவுக்குஅதிகமாகவே தோன்றுகின்றன. இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்ற காரணங்களுடன் மைத்திரிக்கு வாக்களிக்கக்கோரியதும் ஆனால் அதன்பின்னர் பெற்றுக்கொண்ட அடைவுகள் என்ன என்பதும் இந்த இடத்தில் நினைவூட்டக்கூடியது.

சஜித்பிரேமதாசா குறித்த கூட்டமைப்பின் புகழாரங்கள் இவ்வாறு கூறப்படுகின்றன. சஜித் பிரேமதாச ஜனநாயகத்தில் பற்றுறுதி கொண்டவர். சர்வாதிகாரப் போக்கிற்கு அப்பாட்பட்டவர்! சட்டவாக்கத்துறை- காவற்துறை -ஆயுதப்படை சேவை ஆகியவற்றின் மீது பற்றுறுதிபூண்டவர்!! ஐக்கியமான பிரிபடாத, பிரிக்கமுடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு உத்தரவாதம் அளிக்க கூடியவர். மனித உரிமைகள் மீது பற்றுறுதி கொண்டவர்! நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை மிகுந்தவர் சகல மதங்களையும் மதித்து அவற்றுக்கு சமஉரிமையை வழங்குபவர்!

என இந்தப்புகழாரங்கள் அடுக்கப்பட்டுள்ளன. உண்மையில் இரா.சம்பந்தன் கூறும் இவ்வளவு புகழாரங்களையும் யாராவது ஒரு சஜித்பிரேமதாசவுக்கு முன்னால் நின்று கூறினால் சத்தியமாக இவ்வளவு புகழாரங்களுக்கு உரியவன் நானா? நம்பமுடியவில்லை... இல்லை என சஜித் தன்னைத்தானே ஒருமுறை கிள்ளிப்பார்த்திருக்கவும் கூடும்.

தமிழ் அரசியல் பரப்பின் மிக மூத்த அரசியல் வாதியெனவும் சாணக்கியர் எனவு கூறப்படும் இரா .சம்பந்ததே தனது அறிக்கையில் இவ்வாறு சஜித்துக்கு புகழாரங்களைச் சூட்டுவது தமிழ்த் தேசிய அரசியலின் அதியுச்ச வங்குரோத்து நிலையின் அடையாளமே

ஆகமொத்தம் வடக்கு, கிழக்குவாழ் தமிழ்மக்களே சஜித்தில் நம்பிக்கை வைத்து அன்னச்சின்னத்துக்கு வாக்களித்துக்குகொள்ளுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வெ அதிகாரபூர்வ அறிக்கைவெளிவந்துவிட்டது.

இதற்குள் இவ்வாறான ஒருஅறிக்கைவெளிவருவதற்கு முன்னர், சஜித்துக்கு ஆதரவு அளிப்பதற்காக தமதுதரப்பில் மிகவும்இரகசியமாக சுமார் 6 மணித்தியாலங்கள் வரை ஒரு கூட்டம்; இடம்பெற்றதாக ரெலோவும் கதைகூறியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதுவும் சஜித்பிரேமதாசா வேட்பாளராக அறிவிப்படமுன்ரே அவர் மன்னாருக்கு சென்றபோது வருங்கால ஜனாதிபதி அவர்களே வருக வருக என வாய்விட்டுச்சொல்லிஅழைத்த செல்வம் அடைக்கலநாதன், தான் இப்போது சஜித்துக்கு ஆதரவுஅளிப்பதா இல்லையா என்பதை முடிவு எடுக்க மிகவும்இரகசியமாக சுமார் 6 மணிநேரம் கூடிப்பேசினோம் என்கிறார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைப்பொறுத்தவரை அது ஐக்கிய தேசியக்கட்சியை விட வேறு எந்ததரப்புக்கும் ஆதரவு வழங்கக்கூடிய தெரிவை எடுக்க வாய்ப்பில்லை என்பதை சாமானியர்களும் அறிந்துள்ள பின்னணியில் 2009க்குப்பின்னரான கடந்த பத்தாண்டுகாலமாக கையறுநிலையில் உள்ள தமிழ்மக்களுக்கு எந்தத்தார்மீகத்தின் அடிப்படையில் இவ்வாறு புனைகதைகள் கூறப்படுகின்றன என்பதே வினா

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சஜித் ஆதரவு நிலைப்பாட்டைப்பொறுத்தவரை அது ஜனநாயகத்தின் அடிப்படையில் இருக்கலாம் அது இல்லையென்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குரியஅமைப்பின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா இன்று தனது கிளிநொச்சி ஊடகச்சந்திப்பில் சாடியதுபோல இது சுகபோக மற்றும் தன்னலம் சார்ந்த முடிவாககூடஇருக்கலாம்.

இவ்வாறாக எந்தஅடிப்படையில் இந்தமுடிவு இருந்தாலும் வடக்கு, கிழக்குவாழ் தமிழ்மக்களே சஜித்துக்கு வாக்களியுங்கள் அதனால் கோரமுடியும் அதில் பிரச்சனையில்லை

ஏனெனில் தமிழர்தாயகஅரசியலகளமும்; ஆறுகட்சிகளின் பேச்சுவார்த்தை ஐந்து கட்சிகளின் கூட்டணி, 13 அம்சக்கோரிக்கை என நானாவித காட்சிப்படுதல்களுடன் இறுதியில் சஜித்துக்குரிய நிபந்தனையற்ற ஆதரவு என ஷேமமாக முடிக்கபட்டுள்ளது

ஆனால் 2009 மே மாதத்துக்குப்பின்னர் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருந்து கூட்டமைப்பே முடிவுகளை எடுத்துவருகின்றது. இந்த நிலையில் இலங்கைத்தீவின் வரலாற்றில் சிங்களத்தலைவர்கள் எவ்வாறு சமாதானத் தேவதைகளாவும், நல்லாட்சிநாயகர்களாகவும் தமிழர்தரப்பால் காட்சியளிக்க வைக்கபட்டு புகழாரங்களை பெற்றிருந்தார்கள். அதன்பின்னர் அவ்வாறான தலைவர்கள் தமிழர்களுக்கு செய்ய கைங்கரியங்களும் எவ்வளவு பிரசித்தமானவை என்பதை கூட்டமைப்பு அறியாததல்ல.

ஆயினும் அவ்வாறான பட்டறிவுகள் இருந்தும் சஜித்பிரேமதாசா மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை ஆரங்களைச் சூட்டி கையறுநிலையில் உள்ள தமிழ்மக்களுக்கு அவரை ஒரு உச்சகதாநாயனாக அடையாளப்படுத்துவது அரசியல் தவிச்சமுயலடிப்பு சக தமிழ்த் தேசிய அரசியலின் அதியுச்ச வங்குரோத்து நிலையாகவே இருக்கக்கூடும்

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?

லண்டனில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றவர் ஸ்ரீலங்கா வாசி?